பார்லி.,யில் நேற்று | Dinamalar

பார்லி.,யில் நேற்று

Updated : ஆக 11, 2017 | Added : ஆக 10, 2017
Share

விளையாட்டில் தோல்வி ஏன்

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், விஜய் கோயல் சார்பில், உள்துறை இணையமைச்சர், கிரண் ரிஜிஜு அளித்த பதிலில் கூறியதாவது:
சர்வதேச விளையாட்டுகளில், நம் வீரர்கள் அதிக வெற்றிகளை குவிக்க முடிவதில்லை. அதற்கு, சர்வதேச போட்டிக்கு அவர்கள் தயாராகாதது, தேவையான வசதிகள் இல்லாதது, போதிய உள்நாட்டு போட்டிகள் நடத்தப்படாதது, போன்றவை காரணமாக உள்ளன. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், நிர்வாகம் இல்லாதது மிகப் பெரிய காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

பேராசிரியரான அமைச்சர்

ஊரக மின்வசதிகள் குறித்த கேள்விக்கு, லோக்சபாவில், மின்துறை அமைச்சர், பியுஷ் கோயல், நீண்ட நேரம் பதிலளித்தார். அப்போது, சபாநாயகர் குறுக்கிட்டு, "உங்கள் பெயரை மாற்ற வேண்டும். துறை தொடர்பான கேள்விக்கு, மிகவும் விரிவாக, மிக நீண்ட நேரம் விளக்கம் அளித்ததால், உங்களை, பேராசிரியர் என்றே அழைக்கலாம்," என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் மின்சாரம்

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், "வரும், 2018 மே மாதத்துக்குள், அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வீடுகளுக்கும், 2022, ஆக., 15க்குள், மின் இணைப்பு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது," என, மின்துறை அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்தார்.

232 ஜவுளி ஆலைகளுக்கு பூட்டு

லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், "இந்த ஆண்டு, ஜூன் மாத நிலவரப்படி, நாடு முழுவதும், 682 ஜவுளி ஆலைகளும், அதிகபட்சமாக, தமிழகத்தில், 232 ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில், 752 ஆலைகள் உள்பட, நாடு முழுவதும், 1,399 ஜவுளி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன," என, ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

சினிமாவில் பெண்களுக்கு மரியாதை

விளையாட்டு வீரர்களின் செயல்பாடு குறித்த விவாதத்தின்போது, திரிணமுல் காங்கிரஸ், எம்.பி.,யும், நடிகையுமான, சதாப்தி ராய் பேசுகையில், "சினிமா, விளையாட்டுத் துறை உள்பட அனைத்து துறைகளிலும், பெண்களுக்கு எதிரான பேதத்தை அகற்ற வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்," என்றார்.

மழைநீரை சேமிக்க வசதிகள்

"நாடு முழுவதும் உள்ள, 36 வானிலை ஆராய்ச்சி நிலையங்களின் புள்ளிவிபரங்களின்படி, சில இடங்களில் அதிக மழையும், சில இடங்களில் குறைந்த மழையும் பெய்துள்ளது. மழையின் அளவு வேறுபடும் நிலையில், கிடைக்கும் மழைநீரை சேகரித்து வைக்க, நாடு முழுவதும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன," என, நீர்வளத்துறை அமைச்சர், உமா பாரதி, லோக்சபாவில் தெரிவித்தார்.

115 அரசியல்வாதிகள் மீது வழக்கு

ஊழல் வழக்குகளின் நிலவரம் குறித்த கேள்விக்கு, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர், ஜிதேந்திர சிங், ராஜ்யசபாவில் கூறியதாவது:சி.பி.ஐ.,யால் விசாரிக்கப்பட்ட, 115 அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மீதான, 6,400 வழக்குகள், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. ஜூன் மாத நிலவரப்படி, 14 அரசியல்வாதிகள், 487 அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது, 339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த, இரண்டு ஆண்டுகளில், 1,800 வழக்குகளில் தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு

"வட கிழக்கு மாநிலங்களில், ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது வெள்ளம் ஏற்பட்டு, மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில், அரசு ஈடுபட்டுள்ளது. மாநில அரசுகளின் உதவியோடு, இதற்கான திட்டம் நிறைவேற்றப்படும்," என, உள்துறை இணயமைச்சர் கிரண் ரிஜிஜு, லோக்
சபாவில் தெரிவித்தார்.

யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ., மாற்றமா

உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒரே அமைப்பை உருவாக்கும் திட்டம் உள்ளதா என, ராஜ்யசபாவில் கேள்வி கேட்கப்பட்டது. "அது போன்ற எந்த ஒரு திட்டமும் தற்போது இல்லை," என, மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர், மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.

கொலையா? பலியா?

லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, காங்., - எம்.பி., கவுரவ் கோகோய் பேசுகையில், 'மழை வெள்ளத்தில் சிக்கி, 750 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்' என்று ஹிந்தியில்
குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 'வெள்ளத்தில் சிக்கியவர்களை, பலியாகினர் என்று கூற வேண்டும். கொலை செய்யப்பட்டனர் என்று கூறக் கூடாது' என்று திருத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X