தள்ளாடும் தண்டனை சட்டங்களும், நீதிமன்றங்களும்!

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (3)
Share
Advertisement
 தள்ளாடும் தண்டனை சட்டங்களும், நீதிமன்றங்களும்!

கொலை போன்ற கொடிய குற்றம் செய்பவனை, ஆட்சியாளன் தண்டிப்பது, பயிர்களின் ஊடே முளைத்திருக்கும் களையை வேருடன் பிடுங்கி, அகற்றி, பயிர்கள் நன்கு வளர்வதற்கு உதவுவதற்கு சமம்என்கிறது, திருக்குறள்.மன்னராட்சியில், மன்னரே எல்லா உரிமைகளையும், அதிகாரங்களையும் உடையவர். மக்களாட்சி நடக்கும் நம் நாட்டில், நீதித் துறையின் கட்டுப்பாட்டில் தான், மற்ற துறைகளும் இயங்குகின்றன.மக்களாட்சியில் எல்லாரும் சம உரிமைகளை உடையவர்கள் என்றாலும், ஒருவருடைய செயல்பாடு, மற்றவரின் உரிமைகளை பாதிக்காதவாறு வரைமுறைப்படுத்தவே, சட்டங்களும், அவற்றை செயல்படுத்த நீதிமன்றங்களும்உள்ளன.நம் நாட்டின் நீதித்துறையின் தண்டனை சட்டங்கள், '100 குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது' என்ற அடிப்படையில் இருப்பதால், பல கொடுங்குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர்.'நேரடியாகப் பார்த்த சாட்சிகள் இல்லை; ஆகவே, குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, விடுதலை செய்யப்படுகிறார்' என்பது நீதிபதிகளின் தீர்ப்பாகிறது.அந்த குற்றத்தை வேறு யார் செய்தது என, நிரூபிக்கப்படாமலேயே, பல வழக்குகள் முடிக்கப்படுகின்றன.கொலை குற்றவாளி, ஜாமினில் வெளி வரும்போது, அவனை பற்றி ஆராய்ந்தால், அதற்கு முன், பல வழக்குகளில் ஜாமின் பெற்றவனாக இருப்பது தெரிய வரும்.தண்டனை சட்டங்களின் தளர்ச்சியால் தான் இவ்வாறு நடக்கிறது என்பதுதெளிவாகிறது.பணபலம் உள்ளோர், கொலை போன்ற கொடுங்குற்றங்கள் செய்தாலும், தண்டனையில் தப்பி விடுவதை, பல வழக்குகளின் தீர்ப்புகள் உணர்த்துகின்றன.ஏழை, எளியோருக்கு நீதி கிடைப்பதில்லை. ஊரில் எல்லாருக்கும் தெரிந்த கொலையாளி, நீதிமன்றத்துக்கு மட்டும் தெரியாமல் போனதை, அனுபவ ரீதியில்பார்த்திருக்கிறோம்.சிவில் சட்டங்கள், 'உழுதவனுக்கு நிலம் சொந்தம்; குடியிருப்பவனுக்கு வீடு சொந்தம்' என்ற நிலையில் உள்ளன. பணத் தேவைக்காக ஒருவரிடம், பயிர் செய்யும் படி நிலத்தை ஒப்படைத்தால், பயிர் செய்பவரே, நிலத்தை உரிமை கொண்டாட சட்டம் வழி காட்டுகிறது.அது போல, வீடு இல்லாதோருக்கு இரக்கப்பட்டு, வாடகைக்கு வீட்டை ஒப்படைத்தால், வீட்டின் சொந்தக்காரருக்கு வீடு தேவைப்படும் போது, குடியேறியவர் வெளியேற மறுக்கிறார்.'எனக்கு வேறு வாடகை வீடு கிடைக்கும் வரை, வீட்டை விட்டு வெளியேற மாட்டேன்' என்கிறார்.வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி, சிக்கனமாக வாழ்ந்து, வீடோ, நிலமோ வாங்கிய நபர், இரக்கப்பட்டு ஒருவரின் அனுபவத்திற்கு விட்டால், அனுபவிப்பவருக்கே அது அனுபவ பாத்தியம் என்றால், நம் சட்டங்களை என்னசொல்வது!ஓட்டை சட்டங்களால், ரவுடிகளும், அடாவடி அக்கிரமக்காரர்களும் கொண்டாட்டம் அடைகின்றனர். அதனால், சண்டை சச்சரவுகள், ஏன், கொலைகளும் கூடநடக்கின்றன.சிவில் வழக்குகள், 40, 50 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கின்றன. இதனால், ஏழைகளால் வழக்கின் செலவினங்களை தாக்குப்பிடிக்க முடியாமல், வாழ்வாதாரம்பாதிக்கப்படுகிறது.சட்டங்கள் தான் இப்படி என்றால், சில வழக்கறிஞர்களின் செயல்பாடுகளோ, மிக மோசமாக உள்ளன; பணம் கறப்பதிலேயே கண்ணும், கருத்துமாக உள்ளனர்.வழக்கை விரைந்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளாமல், இழுத்தடிக்கப்படுகின்றன; கால தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதியாகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தில், 2002ல் தலைமை நீதிபதியாக இருந்தவர், 'முடங்கியிருக்கும் வழக்குகளை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்' என, முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரின் நடவடிக்கைகளை எதிர்த்து, வழக்கறிஞர்கள், 60 நாட்கள் தொடர்ந்து, நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.வழக்குக்காக அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, மிக அதிகமாக வாங்குகின்றனர். உதாரணமாக, டில்லி முதல்வர், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, கெஜ்ரிவால், தன் மீதான வழக்கு ஒன்றில் ஆஜராக, பிரபல வழக்கறிஞர் ஜெத்மலானியைஅமர்த்தியிருந்தார்.அவருக்கு, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் பேசப்பட்டிருந்தது. இந்த விவகாரம், அந்த வழக்கறிஞர் வாயாலேயே வெளியேவந்தது.முன்பெல்லாம், ஊர்களில் ஏற்பட்ட வரப்பு, வாய்க்கால், வாரங்கால் தகராறுகள், ஊர் நாட்டாண்மை முன்னிலையில் பேசி, முடித்து வைக்கப்படும்.பெரும்பாலும், ஊர் கோவிலில் வழக்கு விசாரிக்கப்படும். சாட்சி சொல்பவர், சாமி முன் சத்தியம் செய்து, சாட்சி சொல்வார். குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டால், ஒன்றிரண்டு தேங்காய் அல்லது, 1 படி எண்ணெயை, கோவிலுக்கு கொடுக்கும் படி அபராதம் விதிப்பர்.அத்துடன் அவ்வழக்கு முடிவுக்கு வந்து விடும். கொலை, கொள்ளை போன்ற பெரிய வழக்குகளை மட்டும் நீதிமன்றத்துக்கு விட்டு விடுவர்.ஆனால் இப்போது, சிறு வழக்குகள் கூட, நாட்டாண்மை முன் பேசி முடிக்க முடியாது. அவ்வாறு செய்தால், அதை, 'கட்டபஞ்சாயத்து' என கூறி, நாட்டாண்மை மீது, காவல் துறையால் வழக்குபோடப்படுகிறது.சிறு வழக்குகளுக்குக் கூட, நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.கிராமங்களில் ஒரு உவமை சொல்வதுண்டு. 'இருவரின் நிலங்களுக்கு இடையே, வரப்பில் வளர்ந்த பனை மரத்திற்கு இருவரும் உரிமை கொண்டாடினர். இதற்காக நீதிமன்றம் சென்று, நீதிமன்ற செலவுக்காக, பனை மரம் வளர்ந்த நிலங்களை விற்று, வீணாய் போயினர்' என்பதாகும் அது.பல வழக்குகள், கீழ் நீதிமன்றங்களில், வாதியின் சார்பாக தீர்ப்பாகி, பிரதிவாதியால் மேல் நீதிமன்றத்துக்கு முறையீடு செய்யப்பட்டால், பிரதிவாதியின் சார்பாகதீர்ப்பாகிறது.உதாரணமாக, முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நீதிபதி தண்டனை வழங்கினார்; மற்றொரு நீதிபதி தண்டனையை ரத்து செய்தார்.அப்போது, முதல் நீதிபதி, வழக்கை நன்கு ஆராய்ந்து தீர்ப்பு சொல்லவில்லையா என, எண்ண வேண்டியுள்ளது.இது போன்ற வழக்குகளால், பொதுமக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து விடுகிறது.எல்லா நீதிமன்றங்களும், ஒரே சட்டத்தை தான் பின்பற்றுகின்றன. ஆனால், தீர்ப்பு மட்டும் வேறு வேறாக எப்படி?சாட்சி சொல்வோர், ரவுடிகளுக்கு பயந்து, பிறழ்சாட்சியாக மாறுகின்றனர் அல்லது தற்கொலை கூட, செய்து கொள்கின்றனர். இதற்கெல்லாம், சட்டங்களின் தளர்ச்சியே காரணம்.கொடுங் குற்றவாளிகளுக்கும், லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களுக்கும், அபராதத்துடன், சவுக்கடி போன்ற, உடலில் வலி தரக்கூடிய தண்டனைகள் வழங்கப்பட்டால், குற்றம் செய்ய, மற்றவர்களும் பயப்படுவர்.தண்டனை சட்டங்கள் பற்றிய அலட்சியத்தால் குற்றங்கள் நடக்கின்றன. கொடிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என, கொடி பிடிக்கும் அரசியல்வாதிகளின் பின்புலத்தை பார்த்தால், அவர்கள், கோடீஸ்வரர்களாக இருப்பர்.நம், எம்.பி.,க்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோடீஸ்வரர்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.'ஜனநாயகத்தின் தாய்' என, சொல்லப்படும் பிரிட்டன் நாட்டில், காலத்தின் நடைமுறைக்கு தக்கவாறு, சட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன; அது போல, நம் நாட்டிலும் செய்ய வேண்டும்.நம் நாட்டில், ஏழை முதல் எல்லாரும் பயமின்றி வாழ, கீழ்கண்டவாறு சட்டங்கள் உருவாக்க வேண்டும்.* திட்டமிட்ட கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு, மரண தண்டனை தர வேண்டும்* கொள்ளை, ஏமாற்று, ஊழல் போன்ற பொருளாதாரக் குற்றங்களுக்கு அபராதத்துடன், சவுக்கடி தண்டனை வழங்க வேண்டும்* சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்* நீதிபதிகள் தவறான தீர்ப்பு வழங்கியிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், அரசு பணமும், காலமும் வீணாகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. அரசுக்கு வழக்கு செலவு, 12 கோடி ரூபாய்* சிறு வழக்குகள், ஆறு மாதத்திற்குள், கொலை போன்ற வழக்குகள் ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்* குற்றப்பத்திரிகைகள், அதிகமான பக்கங்களில் தயாரிக்கப்படுகின்றன. 50 பக்கங்களுக்குள் குற்றப்பத்திரிகை இருக்க வேண்டும்* நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய, வழக்கறிஞர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.பிரதமர் மோடி, கடந்த ஆண்டில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது போல, தண்டனை சட்டங்களை தடாலடியாக மாற்றி, பார்லிமென்ட் ஒப்புதலுடன்கடுமையாக ஆக்கி இருந்தால், ஏராளமான குற்றங்கள் குறைந்திருக்கும்.மதிப்பு மிக்க மனித உயிர்களும், மனித உணர்வு களும் மதிக்கப்பட்டிருக்கும்.மொபைல் எண்: 9585666105 - வெ.கருப்பையா -சமூக ஆர்வலர்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
26-ஆக-201714:16:19 IST Report Abuse
Darmavan இரண்டு மூன்று முறை குற்றம் செய்தவனுக்கு பெயில் என்பதே கொடுக்க கூடாது.... ஒருவனின் குற்றங்களை மொத்தமாக பார்க்கவேண்டும் ஒழிய தனித்தனியாக கூடாது... மொத்தம் ஒரே விதமான குற்றம் என்று பார்ப்பதைவிட குற்றத்தின் தன்மைக்கேற்ப சட்டம் தண்டனை இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
karthikeyan - singapore,சிங்கப்பூர்
18-ஆக-201708:59:26 IST Report Abuse
karthikeyan சரியான கருத்து அருமை அய்யா . சட்டங்கள் கடுமை ஆனதாக மாற்றப்பட வேண்டும் தண்டனை மிக கடுமையானதாக இருந்தால் மட்டுமே பயப்படுவர் , குற்றம் குறையும் . பார்ப்போம் சட்டம் மாறுமா ?
Rate this:
Cancel
Jabberwock - Chennai,இந்தியா
14-ஆக-201702:37:16 IST Report Abuse
Jabberwock அருமையான கட்டுரை .நன்றி திரு கருப்பையா அவர்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X