மாற்றங்கள் செய்யும் மாயங்கள்: என்பார்வை| Dinamalar

மாற்றங்கள் செய்யும் மாயங்கள்: என்பார்வை

Added : ஆக 15, 2017
 மாற்றங்கள் செய்யும் மாயங்கள்: என்பார்வை

இன்று நாம் வாழும் இந்த உலகம் பரபரப்பானது. விண்ணுலகம், மண்ணுலகம் தாண்டி நாம் வாழ்வதோ அவசர உலகில். இதில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் நடந்து கொண்டு வருகின்றன. இந்த மாற்றங்களினால் வளர்ச்சி யும் உண்டு; வீழ்ச்சியும் உண்டு. ஏற்றமும் உண்டு; இறக்கமும் உண்டு. சில மாற்றங்கள் பிரமிப்பூட்டுகின்றன. சில மாற்றங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. அதனால் தான் உலகில் எல்லாம் மாறினாலும் மாற்றம் ஒன்று தான் மாறாதது.


மாற்றம் மானிட தத்துவம்கவிஞர் கண்ணதாசன் கூட, ''மாற்றம் என்பது மானிட தத்துவம், மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்,'' என்றார். கவிஞர் வாலியும் கூட காலத்திற்கு ஏற்ப தன்னுடைய பாடல்களை மாற்றியமைத்து எழுதி தன்னை புதுப்பித்து கொண்டே இருந்தார். ஒரு சினிமா பாடல் கூட, 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம்
மாற்றங்கள், அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,' என, குறிப்பிடுகிறது.அன்று ஒரு இடத்தில் ஒரு விபத்து நடந்து விட்டது என்றால், ஐயோ விபத்தா என எல்லோரும் பயந்தனர். இடைப்பட்ட காலங்களில் விபத்து நடந்து ஒருவர் இறந்து விட்டால், ஐயையோ ஒருவர் இறந்து விட்டாரே என தன் வீட்டில் நடந்தது போல
கவலைப்பட்டனர். தற்காலத்தில் ஒரு விபத்து நடந்து ஐந்து பேர் இறந்து விட்டனர் என்றால், ஐயையோ ஐந்து பேர் தான் இறந்திருக்கிறார்களா என சலித்து கொள்ளும் சூழலில் இன்றைய மாற்றங்கள் போனதுடன், கூட செல்பியும் எடுக்கப்படுகின்றன.


குறையும் மனிதர் எண்ணிக்கை


இந்தியாவில் இருபதாண்டுகளில்இந்தியர்களின் எண்ணிக்கையை விட கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. அலைபேசிகளின் பெருக்கம் கூடி உள்ளது. கட்டடங்களின் வளர்ச்சி பிரமாண்டமாக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கைபன் மடங்காகி விட்டது.


காலம் தோறும் மாற்றங்கள்அன்று ஐம்பது ரூபாயை மிச்சப்படுத்த முப்பது நிமிடம் நடந்து போனார்கள். இன்று முப்பது நிமிடங்களை மிச்சப்படுத்த ஐம்பது ரூபாய் கொடுத்து ஆட்டோவில் போகிறார்கள். அந்தளவுக்கு வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தன் தேவைகளுக்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ''உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு,'' - இது கண்ணதாசன் காலம். ஆனால் இன்றோ உனக்கும் மேலே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நீயும் உயரு. இது கம்ப்யூட்டர் காலம்.அன்று மனிதன் காடுகளில் வாழ்ந்தான். இன்றைய மனிதன் ஏ.டி.எம்.,கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு, சிம் கார்டு, ஆதார் கார்டு என கார்டுகளில் வாழ்கிறான்.ஒரு காலத்தில் ஜன்னல் வழியேயும், அஞ்சல் வழியேயும் காதல் நடந்தது. இன்று அலைபேசியில் தொடங்கி, ரீசார்ஜில் நிற்கிறது. அன்று எங்காவது வெளியில் கிளம்பும் போது பூனை குறுக்கே சென்றால், கெட்ட சகுனம், போகும் காரியம் உருப்படாது என்பர். ஆனால் இன்றோ பூனை குறுக்கே போனால் அதுவும் எங்காவது அவசரமா வெளியே போகுதுன்னு அர்த்தம் என்ற எளிதான மனநிலைக்கு மாறி விட்டோம்.ஒரு கவிஞர் எழுதுகிறார்...'பூனை குறுக்கே சென்றதுவெட்டிக் கொன்றான்-பாவம்பூனைக்கு சகுனம் சரியில்லை'


குடும்பங்களில்காணும் மாற்றங்கள்


இன்றைய வாழ்க்கைச் சூழலில் குடும்பங்களில் அன்றைய நிலையை ஒப்பிடும் போது ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அன்று வீடுகள் எல்லாம் உடைந்து இருந்தன. குடும்பம் என்பது ஒற்றுமையாக கட்டுக்கோப்பாக உடையாமல் இருந்தது. இன்று வீடுகள் உடையாமல் இருக்கின்றன.குடும்பங்கள் உடைந்து இருக்கின்றன. பாக்கு வெட்டி, பம்பரம், பல்லாங்குழி, முறம், உரல், உலக்கை, அம்மிக்கல் போன்ற நாம் பயன்படுத்தும் பொருட்கள் காணாமல் போய் விட்டன. சில நினைவுச்சின்னங்கள் அடையாளத்துக்காக இருப்பது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கூட்டுக்குடும்பங்கள் இருக்கின்றன.அன்று குடும்பங்களில்
ஒருவருடன் ஒருவர் மனம் விட்டு பேசினார்கள். ஆனால் இன்றோ பேசுவது குறைந்து விட்டது. அன்று வீட்டில் கணவனை தேடி யாராவது வந்தால் வீட்டிலிருக்கும் மனைவி, ''அவுங்க வெளியில் போயிருக்காங்க. சாயங்காலம் வாருங்க,'' என்பர். இடைப்பட்ட காலத்தில் கணவனை தேடி யாராவது வந்தால் மனைவி, ''அவரு வெளியில் போயிருக்காரு. இரவு தான் வருவாரு,'' என்பார். இன்று யாராவது கணவனை தேடி வந்தால், ''அதுவா அது எங்கு போயிருக்கு, எப்ப வரும்னு தெரியாது,'' என்பர்.


அறிவியலில் காணும்மாற்றங்கள்


நாளும் ஒரு கண்டுபிடிப்பு, தினமும் ஒரு புதுமை என பல அதிசயங்களை அறிவியல் தந்து வருகிறது. அன்று ஒரு விஷயத்தை போனில் பேசும் போது நேரில் பேசலாம் என கூறுவர். இன்று நேரில் பேசும் விஷயங்களை கூட போனில் பேசலாம்
என்கின்றனர்.அன்று கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு. இன்று கற்றது கம்ப்யூட்டர் அளவு; கல்லாதது இன்டர்நெட் அளவு என சென்று கொண்டிருக்கிறது.காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும்
விளையாட்டு. இது பாரதி காலம்.இன்று காலை எழுந்தவுடன் பேஸ்புக், பின்பு கனிவு கொடுக்கும் வாட்ஸ்அப், மாலை முழுவதும் டுவிட்டர் என மாறிக் கொண்டுஇருக்கிறது.அன்று மாதா, பிதா, குரு, தெய்வம்இன்று மாதா, பிதா, குரு, கூகுள், தெய்வம் என்றாகி விட்டது.வாழ்க்கை ஆண், பெண் இணைந்து வாழ்வது, இன்று ஆன்லைன், பென்டிரைவ் இல்லாத வாழ்க்கை கிடையாது.
'நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்'-இப்படி கவிஞர் கண்ணதாசன் கூறியது போல, இன்றைய அறிவியலில் பல வியக்கத்தக்க மாற்றங்கள் நடந்து வருகின்றன.அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம், மிக்சி வந்தது. ஆட்டு உரல் மாவு ருசி அதிகம். கிரைண்டர் வந்தது. உலையில் வைத்த சாதம் ருசி அதிகம். குக்கர், காஸ் அடுப்பு வந்தது. பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம், குளிர்சாதனப் பெட்டி வந்தது.


குழந்தைகளிடம்காணும் மாற்றங்கள்அன்று எதுவும் சாப்பிட கிடைக்காத என் பெற்றோர், பின்பு எது கிடைத்தாலும் சாப்பிட்ட நாங்கள், இன்று எது கிடைத்தாலும் சாப்பிடாத என் குழந்தைகள் என ஒருவர் வேதனையுடன் கூறினார். பாக்கெட் உணவுகளின் ஆதிக்கத்தால் இயற்கை உணவுகளை விரும்பி உண்பது, குழந்தைகளிடம் குறைந்து
வருகிறது.அன்று குழந்தைகள் பாட்டி வீட்டில் பிறந்ததால் அடிக்கடி பாட்டி வீட்டுக்கு சென்றனர். இன்று குழந்தைகள் பெரும்பாலும் மருத்துவமனையில் பிறப்பதால் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்கின்றனர்.அன்று குழந்தைகளை அம்மா, நிலாவைக் காட்டி துாங்கவைத்தார். பின்பு 'டிவி' யில் பிடிச்ச பாட்டை போட்டு துாங்க வைத்தார். இன்று 'அலை பேசியை பிடுங்கி அடுப்பில் போய் போடுகிறேன், துாங்குகிறியா,
இல்லையா' என கேட்குமளவுக்கு அலைபேசிகளில் குழந்தைகள் மூழ்கி துாங்காமல் உள்ளனர்.


மாற்றங்களும், வேடிக்கைகளும்


மாற்றங்களினால் பல வேடிக்கைகள் அனைத்து வகையிலும் நடந்து வருகின்றன. ஒரு தந்தை வேதனையுடன் கூறினார்.எங்க தாத்தா சைக்கிள் ஓட்டினார்எங்க அப்பா ஸ்கூட்டர்
ஓட்டினார்நான் கார் ஓட்டுகிறேன்-ஆனால்என் மகன் நாங்கள்வைத்திருந்ததை எல்லாம் விற்று வாழ்க்கை ஓட்டுகிறான்திருமண வீடுகளில் பந்தல் போட்டு வரவேற்ற காலங்கள் மாறி விட்டது. வாசலில் பொம்மைகள் வரவேற்கும் காலமாகி விட்டது.
நகரத்தில் வாழ ஆசைப்பட்டு, புறாக்கூடு போன்ற சிறிய வீட்டில் வாழ்கிறான். கிராமத்தில் அவனுக்கு சொந்தமான மிகப்பெரிய விஸ்தாரமான வீட்டில் புறாக்கள் கூடு கட்டி வாழ்கின்றன.எது எப்படி இருப்பினும் மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியது தான். நல்ல மாற்றங்களை நாம் வரவேற்போம். நமது பண்பாடு, கலாசாரத்திற்கு அப்பாற்பட்ட மாற்றங்களை புறந்தள்ளுவோம். உலகம்மாறினாலும், உள்ளம் மாறாமல் நல்
எண்ணங்களுடன் நம் லட்சியத்தை அடைவோம்.-ச.திருநாவுக்கரசுபட்டிமன்ற பேச்சாளர்மதுரை98659 96189

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X