சம்பள உயர்வு எம்.எல்.ஏ.,க்களுக்கு அனாவசியம்!| Dinamalar

சம்பள உயர்வு எம்.எல்.ஏ.,க்களுக்கு அனாவசியம்!

Added : ஆக 19, 2017 | கருத்துகள் (1)
Share
  சம்பள உயர்வு எம்.எல்.ஏ.,க்களுக்கு அனாவசியம்!

சமீபத்தில் நடந்து முடிந்த, தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில், எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திஅறிவித்துள்ளது தமிழக அரசு.பாவம்... குடும்பம் நடத்த முடியாமல், எம்.எல்.ஏ.,க்கள் கஷ்டப்படுகின்றனரா... சம்பளம், 55 ஆயிரத்திலிருந்து,1.05 லட்சம் ரூபாயாகஉயர்த்தப்பட்டுள்ளது.'இது போதாது' என சிலர், 'மூன்று லட்சம் வேண்டும்' என்றும், 'ஆறு லட்சமாக உயர்த்த வேண்டும்' என்றும் சிலர், கோரிக்கை வைத்தனர்.அது போல, தொகுதி படியை, ஒரு லட்சம் ரூபாயாகஉயர்த்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.அண்டை மாநிலமானகர்நாடகாவில், 60 ஆயிரம், கேரளாவில், 40 ஆயிரம் ரூபாயே, எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளமாக உள்ளது.வடகிழக்கில் உள்ள, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில், முறையே, 20 மற்றும் 15ஆயிரம் ரூபாய் மட்டுமே.சம்பளம், படி என, மாதம், ஒன்றே கால் லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் நம், எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும்எப்படி பணியாற்றுகின்றனர் என்பதை வாக்காளர்களாகிய நாம் அறிவோம்.முதல்வர்களாக இருந்த காமராஜர் காலம் முதல்,எம்.ஜி.ஆர்., காலம் வரைசட்டசபையில் ஓரளவுஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை ஆகியோர் காலங்களில், சட்டசபையின் செயல்பாடு கண்ணியமாகவும், பயனுள்ளதாகவும்இருந்தது.அப்போதும், அனல்பறக்கும் விவாதங்கள் நடந்தன.ஆனால், சிறிதும் அநாகரிகமாக இருந்ததில்லை.ஆளும் தரப்பிலும்,எதிர் தரப்பிலும் இருந்த,எம்.எல்.ஏ.,க்கள் தங்களது உரையில் நிதானத்தையும், கண்ணியத்தையும்கடைபிடித்தனர். ஆளும் தரப்பினரும்,எதிர்க்கட்சி உறுப்பினர்களின்கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டனர்.கருணாநிதி மற்றும்எம்.ஜி.ஆர்., முதல்வர்களாக இருந்த போது, 1984 வரை சபையின் செயல்பாடு ஓரளவுதிருப்திகரமாகவே இருந்தது;சில கூட்டத்தொடர்கள்சுவாரசியமாகவும் இருந்தன.எம்.ஜி.ஆர்., முதல்வராக பதவியேற்றதும், நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத் தொடரில், நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்து பேசிய, அப்போதைய நிதியமைச்சர்,ஆர்.நெடுஞ்செழியன்தமிழகத்தின் கடன் சுமையைசுட்டிக்காட்டி, 'இவ்வளவு கடன் சுமை எப்படி வந்ததுஎன, ஆண்டவனுக்கேவெளிச்சம்' என்றார்.உடனே, எதிர்க்கட்சி தலைவராயிருந்த கருணாநிதிஎழுந்து, 'மாண்புமிகு அமைச்சர்,'ஆண்டவன்' என, என்னைத்தான் குறிப்பிடுகிறார்.சபாநாயகர் அனுமதியளித்தால், இந்த, 'ஆண்டவன்' கடன் சுமை பற்றி விளக்கம்அளிப்பான்...' என்றதும்,சபையில் சிரிப்பலை எழுந்தது.அது போல, நிறைய சுவாரசியமான விவாதங்கள் நடைபெற்ற காலம் அது. ஆனால், இப்போது நடைபெறும்சட்டசபை கூட்டத்தொடர்கள்,கேலி கூத்தாகி விட்டதால், சுவாரசியத்திற்கு பதில்,எரிச்சலையே வரவழைக்கிறது.காமராஜர், பக்தவத்சலம்,எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை மற்றும் கருணாநிதி, உறுப்பினர்களின் தொகுதிபிரச்னைகளுக்கு பாகுபாடின்றிமுக்கியத்துவம் கொடுத்தனர்.'மாற்றான் தோட்டத்துமல்லிகைக்கும் மணம் உண்டு என்ற கருத்தை எடுத்துரைத்து, எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும்' என, தன் சகாக்களுக்கு அறிவுரை கூறியவர், அண்ணாதுரை.என்ன தான் கருத்துவேறுபாடு இருந்தாலும், எதிர்மறை கொள்கை இருந்தாலும், சட்டசபையின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதில்உறுதியாக இருந்தனர்.இந்த நிலைமை,எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலம் வரை இருந்தது. அதன்பின், சட்டசபையில் கருணாநிதி, ஜெயலலிதா, நேருக்கு நேர் அமர்ந்த போது தலைகீழாக மாறிப் போனது.ஆளும் தரப்பினர் சபைக்கு வருவதை, துதி பாடுவதற்கும், மேஜை தட்டுவதற்கும் தான் என, கருதினர். அது போல, எதிர் தரப்பினர், கோஷங்கள் போடுவதற்கும், சபாநாயகரை முற்றுகையிடுவதற்கும், வெளிநடப்பு செய்வதற்கும் மட்டுமே, சபைக்கு செல்வதை கடமையாக கொண்டனர்.சபாநாயகரின் கடமையோ, எதிர்க்கட்சிகளை வெளியேற்றி, சபையை நடத்துவது மட்டுமே என்றானது.சபைக்கு சம்பந்தமே இல்லாமல், விதிகளுக்கு முரணாக, ஆளும் தரப்பினரும், எதிர் தரப்பினரும், ஒருவரை ஒருவர் கடுஞ்சொற்களால் விமர்சித்தல், கைகலப்பில் ஈடுபடுதல் அவ்வப்போது சகஜம்.பட்ஜெட் உரையைபிடுங்கி கிழித்தல், சபாநாயகர்இருக்கையில் அமர்தல் போன்ற விரும்பத்தகாதசம்பவங்களால், கண்ணியமும்,கட்டுப்பாடும் காற்றில் கரைந்து, சபை நிகழ்ச்சிகள்யாவும் பொதுமக்களின்ஏளனத்திற்கு உள்ளாயின.அந்த நிலைமைஇன்றளவும் தொடர்ந்த படி தான் இருக்கிறது.சபையின் மாண்புபற்றியோ, பொதுமக்களின் ஏளனம் மற்றும் விமர்சனம்பற்றியோ உறுப்பினர்களுக்கு எவ்வித கவலையும்கிடையாது.அரசு அலுவலகங்கள்,தனியார் நிறுவனங்களில்பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வோ, சம்பள உயர்வோ வழங்குவதற்கு முன், அவர்களின் பணித்திறன்,செயல்திறன், நேர்மை ஆகியவை பரிசீலிக்கப்படுகிறது.இவற்றில் ஏதாவது ஒன்று இல்லை என்றாலும், பதவி உயர்வு நிறுத்தப்படுகிறது. ஆனால், எம்.எல்.ஏ.,க்கள், தேர்தலில் நிற்பதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை. அதற்கு பதில்,பண பலம் உள்ளவரா, தொகுதியில் செல்வாக்கு மிக்கவரா, அவர் சார்ந்த ஜாதியின் ஓட்டுகள் எத்தனை என, மூன்றும் பரிசீலிக்கப்படுகிறது.கடமையை சரி வரசெய்யாமல், மக்கள் பிரச்னைகளை தீர்க்க முற்படாமல், சபையின் கண்ணியத்தையும்காப்பாற்றாமல், ஏதோ,'பிக்னிக்' போவது போல, 'இன்னோவா, பார்ச்சூனர்' போன்ற சொகுசு காரில் வந்திறங்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கு, எதற்காக இரட்டிப்பு சம்பள உயர்வு?தொகுதி பக்கமே செல்லாதஅவர்களுக்கு தொகுதி படியே அனாவசியம்... இதில்இரட்டிப்பு வேறு!தொகுதி படி பெறும்,எம்.எல்.ஏ.,க்கள் எத்தனை பேர், தொகுதிகளுக்கு சென்று பிரச்னைகளை தீர்த்து வைத்திருக்கின்றனர்... குறைந்தபட்சம் அவர்கள் தொகுதியின்பிரச்னை என்ன என்றாவதுகாது கொடுத்து கேட்டதுண்டா?அப்படி செய்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.மேஜையை தட்டுவதற்கும், வெளிநடப்பு செய்வதற்கும், 'நீயா... நானா' என, போட்டி போடுவதற்கா, மக்கள் வரிப்பணத்தில் இருந்து சபைகூட்டத்தொடர் நடத்தப்படுகிறது?சில நிறுவனங்களில், 30 ஆண்டுகள், மாடாய் உழைத்து, ஓடாய் தேய்பவர்களுக்கே மாதம், 10 ஆயிரம் ரூபாய் தான் ஓய்வூதியமாக கிட்டுகிறது.ஆனால், இவர்கள், மூன்று ஆண்டுகள், எம்.எல்.ஏ.,வாக இருந்து விட்டாலே போதும். 8,000 ரூபாய் பென்ஷன். அது தவிர, இலவச குடும்பமருத்துவ வசதி, இன்னும்பிற சலுகைகள்.மக்களுக்காக ஒரு துரும்பை கூட, கிள்ளிப் போடாத, எம்.எல்.ஏ.,க்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கி, ஏராளமான சலுகைகள் காட்டுவதும்,மக்கள் வரிப்பணம் பாழாவதும் ஏற்புடையசெயலா?தவிர, இப்போது,எம்.எல்.ஏ.,க்களாக இருப்போர், சோற்றுக்கே வழிஇல்லாத பரம ஏழைகள் இல்லை. சம்பளம் வாங்கி, குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்ற, சாதாரண மாத ஊதியக்காரர்கள் இல்லை.இவர்களில், 99 சதவீதம் பேர், கோடிகளில் புரள்பவர்கள். தன் சொந்த பெயரிலும், 'பினாமி' பெயரிலும், சொத்துகளை குவித்தவர்கள்; மேலும் மேலும் குவித்து வருபவர்கள்.பெரும்பாலான,எம்.எல்.ஏ.,க்கள், கல், மணல் குவாரிகளுக்கு, 'டெண்டர்' எடுத்து நடத்தும் ஏஜன்டுகள். பலர், ஆம்னி பஸ் முதலாளிகள்; ரியல் எஸ்டேட் அதிபர்கள்; டிப்பர் லாரி உரிமையாளர்கள்; மது ஆலை அதிபர்கள் அல்லது அதன் பங்குதாரர்கள்.முதல்வராக காமராஜர்,பக்தவத்சலம் இருந்த காலத்தில்,எம்.எல்.ஏ.,க்கள் சாதாரண விடுதிகளில் தங்கினர்; சைக்கிளில் சென்றனர்; எளிமையாகஇருந்தனர். மக்களால்எளிதில் பார்த்து, அவர்களிடம்மனுக்கள் கொடுக்க முடிந்தது.எம்.எல்.ஏ.,க்களும்தொகுதி பக்கம் அடிக்கடி சென்று, மக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.அப்போதெல்லாம்,தொகுதி சட்டசபை அலுவலகம்திறந்தே இருக்கும். மனுக்களுடன்மக்கள் கூட்டம், அவர்களை சுற்றி இருக்கும். அதெல்லாம் ஒரு பொற்காலம்.இப்போது எந்த தொகுதி சட்டசபை அலுவலகம்திறந்துள்ளது... எப்போதாவதுஅத்திப்பூத்தார் போல, ஓரிரு முறை திறப்பதை தவிர, பெரும்பாலான நாட்கள்பூட்டியே கிடக்கிறது.எம்.எல்.ஏ., பதவி என்பது குதிரை பேரத்திற்கு ஈடாகிவிட்டது என்பதை, சமீப கால நிகழ்வுகளால் அறிகிறோம். காஞ்சிபுரம் மாவட்டம்,கூவத்துாரில் தங்க வைக்கப்பட்ட,அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களைதான் நாம் அறிவோமே!அதே பாணியில் தான், குஜராத், காங்., - எம்.எல்.ஏ.,க்கள், 'சகல' வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டதை நாடறியும்.ஓட்டுக்கு எப்போது பணம் வாங்கினோமோ, அப்போதே நம் ஜனநாயக மரபு செத்துவிட்டது. இந்த ஜனநாயக படுகொலைக்கு நாமே தான் காரணம். அது மட்டுமின்றி, நம் வளர்ச்சியை நாமே குழிதோண்டி புதைத்தும் விட்டோம்.என்றைக்கு நம் ஓட்டுரிமை விற்பனை ஆயிற்றோ, அன்றே நாம் இறந்து விட்டோம். இப்போது நடை பிணமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.வேட்பாளர் யாராக இருந்தாலும், எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரின்நேர்மையை வைத்தேஓட்டளிக்க வேண்டும். தமிழக வரலாற்றில் ஒரு முறை கூட, சுயேச்சை வேட்பாளரை நாம் வெற்றி பெற வைத்ததில்லை.கட்சியோ, சின்னமோ பார்க்காமல் வேட்பாளரை பார்த்தே ஓட்டளிக்க முன்வர வேண்டும். குற்றப் பின்னணி உள்ளோரையும், கோடீஸ்வர வேட்பாளர்களையும்,எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்தெடுக்கக் கூடாது.சட்டசபைக்கு கோடீஸ்வர, எம்.எல்.ஏ.,க்களை அனுப்புவதை தவிர்த்து, மக்கள் குறை கேட்கும், எம்.எல்.ஏ.,க்களை அனுப்ப வேண்டும். அப்போது தான், சட்டசபை, மக்கள் குறை தீர்க்கும் இடமாக மாறும். இல்லையேல், எம்.எல்.ஏ.,க்களின் பொழுதுபோக்குபூங்காவாகவே இருக்கும்.இ-மெயில்: Narayanan60@gmail.com - வ.ப.நாராயணன் -சமூக ஆர்வலர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X