மறுவாழ்வுக்கு உதவும் இழப்பீடு; தேவை விழிப்புணர்வு

Added : ஆக 24, 2017
Advertisement
மறுவாழ்வுக்கு உதவும் இழப்பீடு; தேவை விழிப்புணர்வு

'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழி இன்றும் வழக்கில் உண்டு. ஏதாவது ஒரு வகையில் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள இழப்பீடோ, நிவாரணமோ அவசியம். 1947ல்ஆங்கிலேயர் அரசு பாதுகாப்பு மற்றும் தபால் போன்றவை தவிர பிற துறை அரசு அலுவலர் செய்யும் தவறால் பாதிக்கப்பட்டோர் தகுந்த இழப்பீடு கேட்டு வழக்கு தொடரலாம் என சட்டம் இயற்றப்பட்டது.

இந்தியாவில் அரசு ஊழியர்கள் செய்யும் அஜாக்கிரதையான செயல்களால் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு வேண்டினால், அரசு ஊழியர் தன் கடமையை செய்யும் போது ஏற்படும் தவறுகளுக்கு, அரசை பொறுப்பு ஏற்க வைக்க முடியாது என்ற நிலை நீண்ட காலம் நிலவியது. பிறகு அவ்வாறு பாதிக்கப் பட்டவர் உரிமையியல் கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என நிலை உருவானது. பீகாரை சேர்ந்த ரூடூல்சா என்பவர் குற்ற வழக்கில்
விடுதலை செய்யப்பட்ட பிறகும் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தொடரப்பட்ட ஆள்கொணர்வு நீதி பேராணையில் அவரை உடனடியாக விடுதலை செய்தது மட்டுமின்றி, சட்ட விரோத காவலுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டது.

மனித உரிமை மீறலே இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் சிவில் வழக்கை கீழமை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நீதி பேராணை மனு தாக்கல் செய்ய முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அதை நிராகரித்த நீதிபதி அரசு அலுவலர் மக்களின் அடிப்படை உரிமையையும் சுதந்திரத்தையும் பறிக்கும் போது, அவருக்குரிய இழப்பீடு வழங்காமல் சிவில் நீதிமன்றத்திற்கு வழக்கு தொடுக்கும்படி கூறி அலைக்கழிப்பது மனித உரிமை மீறல். உரிமை பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ நீதி பேராணை மூலம் இழப்பீடு பெறலாம் என உத்தரவிடப்பட்டது. 1980 களுக்கு பின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் பல்வேறு சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியது. காவல் துறை மற்றும் சிறை பாதுகாவலில் ஏற்படும் மரணங்கள் மற்றும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், சட்ட விரோத காவலில் வைத்து சித்ரவதை செய்வது போன்ற மனித உரிமை மீறல்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு, தற்போது பல்வேறு துறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்
வழங்கப்படுகிறது.

அரசு பொறுப்பு : பொது இடங்களிலுள்ள மின்ஒயர்கள் மற்றும் மின் உபகரணங்களை முறையாக பராமரிப்பது மின்வாரியத்தின் கடமை. அவர்களின் அலட்சியமான கவனக்குறைவான நடவடிக்கைகளால் மனிதர்களோ அல்லது விலங்குகளோ மரணம் அடைந்தாலோ, காயமடைந்தாலோ அந்த சம்பவத்திற்கு மின் வாரியத்தின் கடைசி நிலை ஊழியர் காரணமாக
இருந்தாலும், மழை காற்று போன்றவற்றால் விபத்து நேர்ந்தது என விளக்கமளித்தாலும், அதற்கு மின்துறையை நிர்வகிக்கும் அரசே பொறுப்பு ஏற்று நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கிஇருக்கிறது.

அரசின் அரசியலமைப்பு கடமை : நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவ உதவிகள் செய்வது அரசு செய்யும் தர்ம காரியமல்ல. அது அரசு தன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்படி செய்ய வேண்டிய கடமை. அக்கடமையிலிருந்து தவறும் போது, பாதிக்கப்பட்டோர் இழப்பீடு பெற உரிமை உடையவர்கள் ஆகின்றனர். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி சிகிச்சை மறுக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது மட்டுமின்றி, நவீன சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.பெண்ணுக்கு

43 லட்சம் ரூபாய் இழப்பீடு : கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுக்கு பதில் அஜாக்கிரதையாக நைட்ரஜன் ஆக்சிட் வாயுவை செலுத்தியதால் உயிரிழந்த பெண்ணுக்கு 43 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகும் குழந்தை பிறப்பது, டாக்டர்கள் இல்லாத போது செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதால் இறப்பவர்கள், அவசர சிகிச்சை தேவைப்படும் போது டாக்டர்களும், உயிர் காக்கும் மருந்துக்களும் இல்லாமல் இருப்பது போன்ற நிலைகளில், அரசு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, பல்வேறு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரி விடுதி ஒன்றில், சட்ட விரோதமாக புகுந்த சில நபர்களால் தாக்கப்பட்ட ஒரு மாணவி உயிரிழந்தார். அப்போது, விடுதிக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டியது, கல்லுாரி நிர்வாகத்தின் கடமையாகும். அதிலிருந்து தவறியதால், இறந்த மாணவியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததால், உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு, அரசு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கியது மட்டுமின்றி, தலைமை ஆசிரியர் மீது குற்றவழக்கு தொடர வேண்டும் என்றும் அரசின் பள்ளி கட்டடங்களை முறையாக பராமரிப்பதும், பள்ளி மாணவர்களின் உயிர்களுக்கு
உத்தரவாதம் அளிப்பதும் ஆசிரியரின் கடமை. அதிலிருந்து தவறும் போது அரசு அதற்கு பொறுப்பு ஏற்று இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகள் : பாதாள சாக்கடைக்காக ரோட்டில் தோண்டப்பட்டிருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து, முதுகு எலும்பு பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடர்ந்தார். அப்போது சாலையில் பள்ளம் தோண்டினால் உரிய எச்சரிக்கை அறிவிப்பு வைத்து கவனமாக செயல்பட
தவறியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு உள்ளாட்சி அமைப்பே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், உள்ளாட்சி சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகள் சாலைகளை பராமரிக்கும் போதும் மற்றும் அதன் கடமையை செய்யும் போதும் கவனமுடன் மக்களை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். அவ்வாறு தனது கடமையை செய்ய தவறியதால், பாதிக்கப்பட்டவருக்கு 18 லட்சம் ரூபாய் வட்டியுடன் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பம் தந்த நித்யா வழக்கு : அரசு தன்னுடைய கடமையை செய்ய தவறுவதால், அரசு அதிகாரிகளால் நேரடியாக மட்டுமில்லாமல், சில நேரங்களில் தனிப்பட்ட நபரால் ஒரு நபருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மக்கள் நலனை பாதுகாக்க கூடிய தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ளது. இவ்வழக்கில் பள்ளிக்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த மாணவி, திருட்டு மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மோதி உயிர் இழந்தார். அதிர்ச்சியுற்ற மாணவியின் தந்தையும் மரணமடைந்தார். சிறுமியின் தாயார், ''மணல் கடத்தலை தடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். சட்ட விரோதமாக நடந்த மணல் கடத்தலை தடுக்க தவறியதாலேயே மணல் கடத்தல் வாகனம் மோதி மாணவி உயிர் இழந்தார். எனவே அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,'' என நீதிமன்றத்தில் வேண்டினார். இவ்வழக்கு தனிநபரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து போல தோன்றினாலும், நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த கடமையிலிருந்து அதிகாரிகள் தவறியதால் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்காததாலும், மரணம் ஏற்பட்டது.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை, சுதந்திரம், உரிமையை பாதுகாப்பது அரசு கடமையாகும். இதிலிருந்து தவறியதால், அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வட்டியுடன் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசுகள் நடவடிக்கை : மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளன. குற்றவியல் நடைமுறை சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களின்படி, பாதிக்கப்பட்டோர் நல நிதி உருவாக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோர், தனி நபர் தாக்குதலால் காயங்களோ, மரணங்களோ ஏற்பட்டு பாதிக்கப்படுவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற வழி செய்கிறது. இழப்பீட்டை பெற சட்டப்பணிகள் ஆணைக்குழு, கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம் மனு அளிக்கலாம்.

விழிப்புணர்வு பெறுவோமா : ஒவ்வொரு தனி மனிதனும், கண்ணியமாக உயிர் வாழ பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. அதிலிருந்து அரசின் பிரதிநிதிகள் தவறும் போது, அதற்கான உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என பல்வேறு சட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மிகச் சிலரே நியாயம் வேண்டி நீதிமன்றங்களை அணுகும் நிலை உள்ளது. இதனால் தான் கவனக்குறைவான போக்கும், நாம் என்ன
செய்தாலும் நம்மை கேட்க யார் இருக்கிறார்கள் என்ற இறுமாப்பும் அதிகரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டோர் தவறு செய்பவர்களுக்கு தண்டனை வாங்கி தருவது மட்டுமின்றி அரசிடமிருந்து உரிய இழப்பீடு பெறவும், அந்த இழப்பீட்டை தவறு செய்த அதிகாரிகளிடமிருந்து அதை
வசூலிக்கவும் நடவடிக்கை எடுத்தால் இந்நிலை மாறும்.

- முனைவர் ஆர்.அழகுமணி
வழக்கறிஞர்
மதுரை. 98421 77806

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X