பீரங்கி குண்டை மார்பில் தாங்கிய துப்பாக்கிக்கவுண்டர்| Dinamalar

பீரங்கி குண்டை மார்பில் தாங்கிய துப்பாக்கிக்கவுண்டர்

Added : ஆக 25, 2017 | கருத்துகள் (2)
பீரங்கி குண்டை மார்பில் தாங்கிய துப்பாக்கிக்கவுண்டர்

தர்மபுரி மாவட்டம் கன்னக்குலம் கிராமத்தில் கி.பி., 18 ம் நுாற்றாண்டின் இறுதியில் பிறந்தார் உதயப்பெருமாள் கவுண்டர். துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி, வெடிகுண்டு, தோட்டா தயாரிக்கவும், பயிற்சி பெறுவதற்காக வெள்ளையர் படையில் சேர்ந்து 15 ஆண்டுகள் பயிற்சி எடுத்தார். இதனால் 'துப்பாக்கிக்கவுண்டர்' என அழைக்கப்பட்டார். சுதந்திர வேட்கையை சக வீரர்களுக்கு ஊட்டினார். இதையறிந்த வெள்ளையர்கள் துப்பாக்கிக் கவுண்டரை கொலை செய்ய சதி திட்டம்
தீட்டினர். தன்னை கொல்ல வந்த பிரிட்டிஷ் சிப்பாய்களை சுட்டு வீழ்த்தி விட்டு
தப்பினார். பின் சிவகங்கை சீமை வீரமங்கை வேலுநாச்சியாரை விருப்பாச்சி கோட்டையில் சந்தித்தார்.''சிவகங்கை சீமைக்கு கவுரி வல்லப உடையன தேவர் தான் என சுவீகார புத்திரன். அவரை தேடி கண்டுபிடித்து இந்த ஓலையை கொடுக்க வேண்டும்,'' என துப்பாக்கிக்கவுண்டருக்கு கட்டளையிட்டார் ராணியார்.மறவமங்கலமும் மருது சகோதரர்களும்
பெருமழையால் மறவமங்கலம் கண்மாய் உடைந்தது. கண்மாய் உடைப்பை
துப்பாக்கிக் கவுண்டர் சரி செய்தார். ஆபத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றினார். பெரியமருது, ''யார் ஒருவர், இந்த கடல் போன்ற கண்மாயில் நீந்தி அக்கரைக்கு செல்கிறார்களோ, அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்,'' என போட்டி அறிவித்தார். சிவகங்கை சீமைப்படையில் சேர
இது தான் சரியான தருணம் என்று உணர்ந்த துப்பாக்கிக்கவுண்டர், கண்மாயில் குதித்து அக்கரைக்கு சென்று மீண்டும் திரும்பினார். அவரின் திறமையை பெரியமருது கண்டு வியந்தார். துப்பாக்கிக்கவுண்டர் தன்னை பற்றி பெரியமருதுவிடம் விளக்கினார். ''என்ன பரிசு வேண்டும்,'' என கேட்டார். ''பரிசு வேண்டாம்; என்னை சிவகங்கை சீமை படையில் சேர்த்து கொண்டால் போதும்,'' என்றார். சிவகங்கை சீமை படையில் துப்பாக்கிப்படை பிரிவை ஏற்படுத்தி துப்பாக்கிக்கவுண்டரை படைத்தளபதியாக நியமித்தார் பெரியமருது. திருப்பாச்சேத்தி அம்பலக்காரராகவும் அறிவித்தார்.வெட்டரிவாள் படை தளபதி ஊர் பிரச்னைகளை பேசி தீர்க்க தனது வீட்டின் அருகில் 'சவுக்கை' எனும் பொது மண்டபம் அமைத்தார். அந்தப்பகுதி இன்றும் 'கவுண்டவலவு' என அழைக்கப்படுகிறது. திருப்பாச்சேத்தியில் துப்பாக்கிக்கவுண்டர் 'வெட்டரிவாள் படையை'
ஏற்படுத்தினார். போர் வீரர்களுக்கு தேவையான அரிவாள், வேல்கம்பு, ஈட்டி, வாள், கட்டரிவாள் போன்ற பல ஆயுதங்களை தயாரிக்க அரிவாள் பட்டறைகளை அதிகளவு திறந்தார்.
இதன் காரணமாகவே திருப்பாச்சேத்தி அரிவாள் புகழ் பெற்றது. பத்தாயிரம்
வீரர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சியை அளித்தார். இதற்காக சத்திரபதிகோட்டையை அமைத்தார். சேலம் மாவட்டம் ஓமலுார் தாரமங்கலத்தில் துப்பாக்கி தொழிற்சாலையை ரகசியமாக நிறுவி தேவையான துப்பாக்கி, வெடிகுண்டுகளை தயாரித்தார்.

வேலுநாச்சியாரின் மறைவு : சுகவீனமாக இருந்த வேலுநாச்சியார் 1796 டிச., 25 ல் வீரமரணம் அடைந்தார். வேலுநாச்சியார் தன்னிடம் கொடுத்த ஓலையை தனது இடுப்பில் வைத்து கொண்டு, அதை தடவிப்பார்த்து கொண்டே, ''அன்னையே தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றிட தெய்வமான தாங்களே உதவிட வேண்டும்,'' என மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே வெள்ளையருக்கு எதிராக, மருது சகோதரர்கள் போர் தொடுக்கும் நாளை எண்ணிக்கொண்டிருந்தார்.
வேலுநாச்சியார் மறைவுக்கு பின், சுவீகார புத்திரன் கவுரிவல்லபர் தொடர்ந்து அறந்தாங்கி பகுதியில் பதுங்கி வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அவரை துப்பாக்கிக்கவுண்டர் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தார்.

சிறையில் மாறுவேடம் : சிவகங்கை சீமைக்கும் திருநெல்வேலி சீமையின் ஊமைதுரைக்கும் நல்ல நட்புறவு இருந்தது. திருநெல்வேலி சீமையில் வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்து துாக்கிலிட்டனர். கட்டபொம்மன் குடும்பத்தாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கிருந்து தப்பி வந்த ஊமைதுரை, மருது சகோதரர்களிடம் அடைக்கலமானார்.
பெரியமருது, சின்னமருது முடிவின்படி துப்பாக்கிக்கவுண்டர் தலைமையில் தேவையான படை வீரர்களுடன் சிறைக்கு சென்று கட்டபொம்மன் குடும்பத்தாரை மீட்க
துப்பாக்கிப்படை, வெட்டரிவாள் படைகளுடன் புறப்பட்டார். சாமியார் போல் வேடமணிந்து மாறுவேடத்தில் சிறைக்குள் புகுந்தனர். அங்கு தமது வேடத்தை கலைத்து வீரர்களாக உருமாறினர்.
சிறையில் துப்பாக்கியை வைத்தும், நாட்டு வெடிகுண்டுகளை வைத்தும் திடீரென தாக்குதல் நடத்தினர். பிரிட்டிஷ் படையை திக்குமுக்காடச் செய்து கட்டபொம்மன் குடும்பத்தினரை காப்பாற்றி சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததால், வெள்ளையர்களை எதிர்க்க வேண்டிய கட்டாயம் மருதிருவருக்கு ஏற்பட்டது.

திருப்பாச்சேத்தி கொரில்லா போர் : திருப்புவனம் திருப்பாச்சேத்தி வழியாக 1801 ஜூன் 7 ல் மேஜர் கிரே தலைமையில் பிரிட்டிஷ் படை வருவதை அறிந்த துப்பாக்கிக்கவுண்டர், படைகளை திரட்டி கொண்டு திருப்பாச்சேத்தி மேற்கே மறைந்திருந்து 'கொரில்லாப் போர்' முறையில் திடீர்
தாக்குதல் நடத்தினார். இதில் மேஜர் கிரேயை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். தளபதிகள் நாகின், லெப்டினன்ட் ஸ்டுவர்டு ஈட்டியால் தாக்கப்பட்டு காயம்அடைந்தனர். 15 பேர் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ் படை புறமுகிட்டு ஓடியது. இந்த தாக்குதல் குறித்து 'வெலஸ்' எனும் வெள்ளையர் தளபதி தனது டைரியில் குறிப்பு எழுதி வைத்துள்ளார். வெற்றி மாலை சூடிய துப்பாக்கிக்கவுண்டரின் வீரத்தை போற்றும் வகையில் திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் சிலை வைத்து அகமகிழ்ந்தார் பெரியமருது.

கர்னல் அக்னியூ கோபம் : திருப்பாச்சேத்தி போர் குறித்து அறிந்த கர்னல் அக்னியூ, ''மருது படையை அழிப்பதே எனது முதல் வேலை,'' என்று சிறுவயல் நோக்கி தனது படையுடன் புறப்பட்டார். இதையறிந்த சிவகங்கை படையினர் சிறுவயலில் இருந்து காளையார்கோவில் கோட்டைக்கு சென்றனர். சிறுவயல் வந்த அக்னியூ தலைமையிலான படை ஏமாற்றம் அடைந்தது.
மருது சகோதரர்கள் தமது படையை துப்பாக்கிக்கவுண்டர் தலைமையில் காட்டு பகுதிக்குள் அனுப்பினர். கொரில்லா பேர் முறையில் பிரிட்டிஷ் படையை தாக்கினர். அக்னியூவை துப்பாக்கியால் குறிபார்த்து சுட்டார். எதிர்பாராதவிதமாக குதிரை ஒரு அடி பின்னுக்கு எடுத்து வைக்க, சீறி வந்த தோட்டா அக்னியூ ஆசையாக வளர்த்த வெள்ளைக் கரடியின் மீது பாய்ந்து இறந்தது. கடும் கோபம் கொண்ட அக்னியூ பீரங்கியை துப்பாக்கிக்கவுண்டர் பக்கம் திருப்ப உத்தரவிட்டார். நொடிப்பொழுதில் வேறுதிசை சென்று தப்பினார் துப்பாக்கிக்கவுண்டர்.

கவுரி வல்லபருடன் சந்திப்பு : தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த அந்த சமயத்தில், சிவகங்கை சீமைக்கு உரிமை கோரிய கவுரிவல்லபரை மன்னராக அறிவித்த பிரிட்டிஷார், அவரை தங்களுடன் வைத்து கொண்டனர். வெறுப்படைந்த துப்பாக்கிக்கவுண்டர், கவுரி வல்லபர் யார் என தெரியாததால், முதலில் அவரின் குதிரையை சுட்டு வீழ்த்தினார். தமிழ் மன்னர் போன்ற தோற்றத்தில் இருக்கிறாரே, யார் இவர்? என அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர் தான் கவுரிவல்லவர் என அறிந்ததும், நிராயுத பாணியாக நின்ற கவுரிவல்லவரிடம், வேலுநாச்சியார் கொடுக்க சொன்ன ஓலையை ஒப்படைத்தார்.

வீரமரணம் : கடந்த 1801 ல் சிறுவயலில் இருந்து காளையார் கோவில் வரை பீரங்கிகளை கொண்டு வருவதற்காக பிரிட்டிஷார் சாலை அமைத்தனர். அப்போது நடந்த போரில் இருதரப்பிலும் உயிர் சேதம் அதிகமானது. 1801 அக்டோபர் 1ம் தேதி பிரிட்டிஷ் படை முன்னேறி காளையார்கோவில் அடைந்தது. வியூகம் அமைத்து காளையர்கோவில் கோட்டையை தாக்கினர். பதிலுக்கு சீமைப்படை ஆக்ரோஷமாக தாக்கியது. சீமைப்படைக்கு கட்டளையிட்டு கொண்டிருந்த துப்பாக்கிக்கவுண்டர் மீது அக்னியூ பீரங்கி தாக்குதல் நடத்தினார். தனது மார்பில் பீரங்கி குண்டுகளை தாங்கி துப்பாக்கிக்கவுண்டர் வீரமரணம் அடைந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன்
சின்னமலை, வெள்ளைமருது, சின்னமருது, பூலித்தேவன், சுந்தரலிங்கம் போன்ற
மாவீரர்களின் வரிசையில் மாவீரர் உதயக்குமார் கவுண்டர் (எ) துப்பாக்கிக்கவுண்டரும் ஒருவராக போற்றப்படுகிறார்.

- மரு.ராமகிருஷ்ணன்
கவுண்டபுரம் டிரஸ்ட் தலைவர்
திருப்பாச்சேத்தி. 88702 13343

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X