கற்பித்தலிலும் மாற்றம் வேண்டும்!

Updated : ஆக 27, 2017 | Added : ஆக 26, 2017 | கருத்துகள் (1)
Advertisement
மாநில பாடத்திட்ட வடிவமைப்பு குழு, கல்வியாளர் அனந்த கிருஷ்ணன் தலைமையில், புதுமையான பாடத்திட்டத்தை வடிவமைத்து வருகிறது; வரைவு பாடத்திட்டம் விரைவில் வெளியாக உள்ளது. இது, தமிழக கல்வித் துறையில் புதிய மாற்றத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'இப்போது முதல் வகுப்பில் சேரும் மாணவர், பிளஸ் 2 படித்து வெளியேறும் போது, அப்போதைய அரசியல்,
உரத்த சிந்தனை, uratha sindhanai

மாநில பாடத்திட்ட வடிவமைப்பு குழு, கல்வியாளர் அனந்த கிருஷ்ணன் தலைமை
யில், புதுமையான பாடத்திட்டத்தை வடிவமைத்து வருகிறது; வரைவு பாடத்திட்டம் விரைவில் வெளியாக உள்ளது.

இது, தமிழக கல்வித் துறையில் புதிய மாற்றத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'இப்போது முதல் வகுப்பில் சேரும் மாணவர், பிளஸ் 2 படித்து வெளியேறும் போது, அப்போதைய அரசியல், தொழில்நுட்பம், பொருளாதார மாற்றங்களில் உள்ள சவால்களை சந்திக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் இருக்கும்' என, இந்த குழு தெரிவித்துள்ளது.

அது போல, வழக்கமான பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு, 32 வகையான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும், மாணவர்கள் மாறி இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்கக் கூடியது தான். எத்தனையோ ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க அரசு முன்வந்துள்ளது. இது, தமிழக கல்வித்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என, உறுதியாக நம்பலாம்.

புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் எளிதாக எடுத்துச் செல்ல, கற்பித்தல் முறையிலும் மாற்றம் வேண்டும்; அதில், பாடத்திட்ட வடிவமைப்பு குழு கவனம் செலுத்த வேண்டும்.

பாடத்திட்டத்தில் மாற்றம்செய்வது, அரசின் இதயமான, கல்வித் துறையின் வேலை. ஆனால், கற்பித்தல் முறை மாற்றங்களை வகுப்பறைகளில் அமல்படுத்துவது, ஆசிரியர்களால் மட்டுமே முடியும் என்பதால், ஆசிரியர் சமுதாயத்தை, வடிவமைப்பு பணியில் ஒருங்கிணைத்து செல்ல வேண்டியது அவசியம்.

இப்போதைய கற்பித்தல் முறைக்கு மாற்றாக, புதிய பயிற்றுவிப்பு முறையை பின்பற்றினால், கல்வி முறையில் உன்னத வளர்ச்சியை எட்டலாம்.அது, எத்தகைய முறையாக இருக்கலாம் என்பதை பார்ப்போம்.ஆசிரியர்கள் ஆதிக்கம் அதிகமில்லாத, மாணவர்கள் ஈடுபாட்டுடன் பங்கு கொள்ளும் புதிய கற்பித்தல் முறையை, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாணவனின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு துணை புரிவது; அவனது சமூக சிந்தனைகளை துாண்டி, சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபட வழிகாட்டுவது என்ற இரண்டு முக்கிய குறிக்கோள்களை மையமாக வைத்து, இந்த வழிகாட்டுதல் முறை அமைகிறது.

முக்கால் நுாற்றாண்டுக்கு முன், அமெரிக்காவில் இம்முறை பிரபலமடைந்திருந்தது.துவக்கத்தில், தொழில்களை தேர்ந்தெடுக்க உதவிய இம்முறை, காலப்போக்கில், மாணவர்களின் ஆளுமை, வளர்ச்சி, கல்வி, உடல் நலம், உளநலம், சமூக வாழ்வு ஆகியவற்றிற்கும் வழிகாட்டுவதாக விரிவடைந்தது.இந்த முறை, மூன்று முக்கியப் படிகளை கொண்டுள்ளது. முதல் நிலையில், பள்ளிகள், மாணவனின் ஆற்றலையும், குறைகளையும் தீர ஆராய்ந்து அறிகிறது.

அடுத்த நிலையில், மாணவனின் ஆற்றலுக்கு தக்கவாறு, அதில் அவன் வளர்ச்சி அடைய உதவுகிறது. மூன்றாவதாக, மாணவன் தானே, தன் ஆற்றலை அறிந்து, அதற்கேற்ப நடந்து கொள்ளவும், தனக்கு ஏற்படும் பிரச்னைகளை தானே சிந்தித்து தீர்த்து கொள்ளவும், முழுமையான பயிற்சிகளை வழங்குகிறது.இம்முறையில், ஆசிரியர்கள்ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கும், ஆற்றலுக்கும்ஏற்றவாறு வழிகாட்டுதல்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆசிரியர்களின் ஆற்றல்களை ஆய்ந்து, அவர்களைப் பணியில் நியமிக்கும் பொறுப்பு, தலைமை ஆசிரியருக்கு கொடுக்கப்படும்.'மாரிசன்' முறை எனப்படும், மற்றொரு கற்பித்தல் முறையில், மாணவனுக்கு எளிதில் கிடைக்கும் ஒரு பொருளை அல்லது அவனது அனுபவத்தில் பெற்ற ஏதாவது ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து, வகுப்புகள் நடக்கும்.

ஏற்கனவே அறிந்துணர்ந்த பொருளையோ, நிகழ்ச்சியையோ முதன்மைப்படுத்தி வகுப்புகள் நடத்தப்படுவதால், ஆனந்தமாகவும், அதிக ஆர்வத்தோடும் வகுப்புகளில் மாணவர்கள் பங்கு கொள்ள முடியும்.பார்த்து, கேட்டு, அனுபவித்த பொருளோடு அல்லது நிகழ்ச்சியோடு கற்க வேண்டிய பாடங்களை, ஒப்பிட்டு படிக்க முடியும் என்பதால், மனதில் எழும் சந்தேக வினாக்களுக்கு, வகுப்பிலேயே பதில் கிடைத்து விடும்;

கற்றதால் பெற்ற அறிவு, மனதில் நீண்ட நாளுக்கு தங்கி விடும்.கடந்த, 1926ல் அமெரிக்க கல்வியாளர், மாரிசன், அறிவியல் பாடங்களை கற்பிக்கும் நோக்கத்துடன், புதிய கற்பித்தல் முறையை அறிமுகம் செய்தார். அதில், மாணவன் செய்ய வேண்டிய வேலையை, ஆசிரியர்கள் முதலில் கூறி விடுவர்.

அதன்பின், மாணவர்கள் தனியாக செய்ய வேண்டிய வேலையையும், குழுவாக செய்ய வேண்டிய வேலையையும், கூடிப்பேசி திட்டமிடுவர். பின், ஒவ்வொரு மாணவனும், தான் செய்த வேலையை, சக மாணவர்கள் செய்த வேலைஉடன் ஒப்பிட்டு, ஆசிரியர்கள் கொடுத்த வேலையின் அர்த்தத்தையும், நோக்கத்தையும் புரிந்து கொள்வர்.அடுத்து, அனைத்து மாணவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து, தங்களின் விவாதப்பொருள் குறித்து, சந்தேகத்திற்கு இடமின்றி விவாதிப்பர். அப்போது, செய்யப்பட வேண்டிய வேலை, முழுவதும் செய்யப்பட்டு விட்டதா, இல்லையா என்ற விபரம், மாணவர்களுக்கு தெரிந்து விடும்.

இறுதியாக, மாணவர்கள் கற்ற அறிவை சோதிக்கும் பொருட்டு, ஆசிரியரால் தேர்வுகள் நடத்தப்படும்.அது போலவே, வித்தியாசமான ஒரு கற்பித்தல் முறை, சமூக நாடக முறை. கலை வழி கற்றல் என்ற இந்த முறையில், பாடங்களை நடத்தினால், எந்த காலத்திலும், மாணவருக்கு பாடத்தின் விபரம், பொருள் மறக்காது.இம்முறையில், ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது, அப்பாடங்களில் வரும் கதாபாத்திரங்களாக நடிக்க, மாணவர்களை கேட்டுக் கொள்வர்.

இதற்கென, தனியாக உரையாடல் எழுதுவது இல்லை; பயிற்சி பெறுவதும் இல்லை; கற்பனை குதிரையை தட்டி, மாணவர்கள் எவற்றை நடித்து, உரையாட விரும்புகின்றனரோ, அவற்றிற்கெல்லாம் அனுமதி அளிக்கின்றனர்.நாடகம், 5 - 15 நிமிடம் வரை நடக்கும். நாடகம் முடிந்ததும், மாணவர்கள் தங்கள் கருத்துக்களை கூறும் படி, ஆசிரியர்கள் கேட்பர். பின், அக்கருத்துக்கள் குறித்து விவாதம் நடைபெறும்.

மூன்றாவதாக, சமூக வாழ்வு பயிற்சி எனப்படும் முறையில், வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்ச்சிகளை, வகுப்புகளில் நடத்திக் காட்ட சொல்லி, மாணவர்கள் அறிவை வளர்க்க வழிகாட்டலாம்.இம்முறை, பிறர் உரிமைகளை மதித்தல், தன்னம்பிக்கை, விவாதிக்கும் திறமை, பேசும் திறமை போன்ற நற்பண்புகளை மாணவர்களிடம் வளர்க்க உதவுகிறது.

மேலும், எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்வது என்ற
அனுபவ அறிவை, மாணவர்கள் பெற உதவும்.இம்முறை, இரண்டு வழிகளில் கையாளப்படும். ஒன்று, நிகழ்ச்சிகளை நாடகம் போல் நடத்தி, அனுபவம் பெற செய்தல். இரண்டு, எடுத்து கொண்ட நிகழ்ச்சி குறித்து, மாணவர்களுடன் கலந்து பேசி, அறிவு பெற துாண்டுதல், இம்முறையிலும் மாணவர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

எந்த அனுபவ நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; அதை எப்படி நடத்த வேண்டும் என்ற திட்டங்களை மாணவர்களே தீட்டுவர். பின், குழுவாக அமர்ந்து, அது குறித்து விவாதிப்பர். விவாத மேடைக்கு மாணவர் ஒருவரே தலைமை தாங்குவார்; ஆசிரியர் அருகிலிருந்து வழிகாட்டுவார்.

கடந்த, 1920ல், ஹெலன் பார்க் ஹர்ஸ்ட் என்ற அமெரிக்கப் பெண், டால்டன் முறையை வடிவமைத்தார். இம்முறையில், ஒவ்வொரு கல்வியாண்டும், 20 நாட்கள் கொண்ட மாதங்களாக பிரிக்கப்படும்.படிக்க வேண்டிய பாடங்கள், பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு மாதத்தில் எத்தனை பாடங்கள் நடத்த வேண்டும்; மாணவர்கள் படிக்க அட்டவணை தயாரிக்கப்படும்.இதில், ஆசிரியர் கூறுவதும்,மாணவர்கள் ஏற்பதும், ஒப்பந்தம் போல விளங்குவதால், இருவரும் அதில்,
கண்ணும், கருத்துமாக இருப்பர்.

கேள்விகளுக்கு விடை காணுதல், தேசப்படங்கள் அல்லது வரைபடங்கள் வரைதல்,
கட்டுரைகள் எழுதுதல், பிரச்னைகளை தீர்வு செய்தல் போன்ற, கற்க வேண்டிய பொருள்களை, 'ரிக்கார்டு ஒர்க்' போல, மாணவர்கள்செய்து வர, ஆசிரியர்
அறிவுறுத்துவார்.ஆசிரியர் மற்றும் மாணவரால் திட்டமிடப்பட்டு, முடிவு செய்யப்பட்ட ரிக்கார்டு ஒர்க், 20 நாட்களுக்கு ஒரு முறை, ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதற்காக மாணவர்கள், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது கூடிப்பேசி, ரிக்கார்டு வொர்க் அல்லது அசைன்மென்ட்டை தயார் செய்கின்றனர்.
மாத முடிவில், மாணவர்களின், ரிக்கார்டு ஒர்க்கை ஆசிரியர் வாங்கி, அவற்றை திருத்தி, மதிப்பெண் வழங்குவார்.
புதிய கற்பித்தல் முறையில், பிரச்னைத்தீர்வு என்ற முறை, சற்று வித்தியாசமானது. இம்முறையில், மாணவர்களால் விடை கூற முடியாத ஒரு பிரச்னையை கூறி, விடை காணுமாறு ஆசிரியர் கூறுவார்.
பிரச்னையை தெளிவாக வகுத்து, அதை ஆய்ந்தறிந்து, விடைகளை காண வேண்டும். விடைகளில் பொருந்துவதை தேர்ந்தெடுத்து, விடை சரி தானா என, சோதித்து பார்த்து, முடிவு செய்யப்படும்.
இத்துடன், குழுவாகவும், தனித்தும், மாணவர்களை சுற்றுலா மற்றும் பொதுச்சேவை மையங்களுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள தேவைகள், செயல்பாடுகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற கல்வி முறைகளில் சிறந்த அம்சங்களை ஒன்றிணைத்து , புதிய கல்வி முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.
புதிய பாடத்திட்டத்துடன், புதிய கற்பித்தல் முறையும் அமலாகும் போது, எதிர்கால மாணவர் சமுதாயம், உலக சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அறிவுத்திறன் படைத்தவர்களாக மாறுவர் என்பதில் சந்தேகம் இல்லை.
இ-மெயில்:
brightdvk@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Pu - mumbai,இந்தியா
29-ஆக-201716:23:04 IST Report Abuse
Raj Pu இவ்வளவு விரிவான புரிதல் வேண்டியத்தில்லை, மத்திய அரசு இந்திய மெடிக்கல் கவுன்சில் உச்சநீதிமன்றங்கள் தனியார் சிறப்பான கல்வி அளிக்கும் டீம் டு நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் தேர்வுகள் நீட் தேர்வுக்கு எதிர்கொள்ளும் வகையில் 9 ம் வகுப்பு முதல் கணிதம் பயோலொஜி பாடங்களில் cbse பாடத்திட்டங்கள் புகுத்தி, அவர்கள் போலவே வகுப்பறை தேர்வுகள் மட்டுமே கணக்கிட்டு போட்டி தேர்வுகள் மட்டும் இலக்ககாக செயல்படுவோம் ஏனென்றல் மேல்கல்விக்கு அந்த மதிப்பெண்களும் இந்த கட்டுரை ஆசிரியர் கூறும் அறிவு கணக்கில் கொள்ளப்படுவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X