25 ஆண்டுகள் முந்தைய முதிய ஆர்.இ.சி., மாணவர்கள் மீண்டும் இணைந்த ஆனந்தம் | Dinamalar

25 ஆண்டுகள் முந்தைய முதிய ஆர்.இ.சி., மாணவர்கள் மீண்டும் இணைந்த ஆனந்தம்

Added : ஜூன் 13, 2010
Advertisement

பசுமை மாறாத பழைய நினைவுகளின் சந்தோஷமாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த கல்லூரியில் மாணவர்கள் இணைந்த அந்தநாள். பல தேசங்களிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் கடல் கடந்து வந்து நேசத்தை பரிமாறிக்கொண்டன ஒரு கூட்டுப்பறவைகள். ஆர். இ.சி., முன்னாள் சாதனையாளர்கள் சந்தித்த தருணம் என்றும் மறக்க முடியாதது. இன்றைய என். ஐ.டி., தான் ( நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ) அன்றைய ஆர்.இ.சி., (ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ் ) . இந்தப்பறவைகள் அனைத்தும் ஒன்றாய் திரிந்து படிப்பு வேட்டையாடியது இங்கேதான். திருச்சி- தஞ்சை பிராதனச்சாலையில் மொத்தம் 840 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து இருக்கும் அந்தக்கல்லூரியை ஆர். இ. சி., என்று சொன்னால் தான் வழி காட்டுவார்கள். கால் நூற்றாண்டுக்கு முன்பு படித்து முடித்து வெளியே சென்ற முன்னாள் மாணவர்களின் ( ரெக்டியன்ஸ் ) வெள்ளி விழா சந்திப்பே அந்த சங்கமம்.


1979 லிருந்து 1984 ல் சிவில், மெக்கானிக், கெமிக்கல் இன்ஜினியரிங்,என 7 பிரிவுகளில் படித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 220 மட்டும்தான். இவர்கள் படித்த காலத்தில் தொலைபேசி கூட இருந்ததில்லை. ஒரு மாநிலத்தில் இருப்பவர்களை ஒன்று சேர்ப்பதே கடினம். கண்டங்கள் கடந்து இருந்த நண்பர்களுக்கு இ.மெயில் உள்பட பல்வேறு வழிகளில் தகவல்கள் பறந்து சென்றன. ரீ யூனியன் பற்றிய விவரம் அடங்கிய ஒரு விளம்பரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


அந்த இனிய நாள் ஜூலை 18 : எல்லோரும் இணைய வேண்டிய அந் த இனிய நாள் ஜூலை 18. தகவல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் அன்றைய தினத்தில் திருச்சி சங்கமம் ஓட்டலில் பாதிக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மகராஷ்ட்டிரா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், காஷ்மீர், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றும் நண்பர்களும் வந்திருந்தனர். வந்தவர்களில் 50 க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். ஒருவருக்கொருவர் ஏய் , நீ கோபால் தானா ? என கையை தொட்டு உறுதி செய்து கொண்டனர். மகிழ்ச்சியில் அனைவரும் ஆரத்தழுவி கொண்டனர். பின்னர் அங்கிருந்து 3 பஸ்களில் புறப்பட்ட நண்பர்கள் குழுவினருக்கு என். ஐ. டி., வளாகத்தை அடைந்ததும் பட்டாசு வெடித்து , பேண்டு வாந்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் மணி சுந்தரம் ( வயது 82 ) கம்பீரமாக, புன்னகை மாறா முகத்துடன் காரில் இருந்து இறங்கியதும் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். என்ன எல்லோரும் மறந்து விட்டீர்களா என நலம் விசாரித்த போது அனைவரும் அவரிடம் காலில் விழுந்து ஆசி பெற்றனர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவிகள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். பிச்சியப்பன் வரவேற்றார். இவர் பேசும் போது முதல்வர் மணி சுந்தரத்தின் இளமை கால கம்பீரத்தோற்றத்தை சிவாஜி கணேசனுடன் இணைத்து வர்ணித்தார்.


வாலு, மொட்டை என பட்டப்பெயர்களில் அழைத்து மகிழ்ச்சி: தொடர்ந்து அறிமுகவுரை நடந்தது .ஒவ்வொருவராக அறிமுகமாகிக் கொண்டிருந்தபோது மண்டி, பட்டாளம். வாலு, மொட்டை என பட்டப்பெயர்களை நண்பர்கள் நினைவூட்டி உரத்த குரலில் அழைத்தபோது அரங்கம் கல, கலத்தது.

தொடர்பு கொண்டவர்களாக இருங்கள் : விழாவில் பேசிய என். ஐ. டி., இயக்குனர் சிதம்பரம் பேசுகையில் , இந்தியாவில் 20 என். ஐ. டி.,உருவாகியுள்ளன. இன்னும் புதுச்சேரி, கோவாவிலும் துவங்கப்படவுள்ளன. தற்போதைய திருச்சி கல்லூரியில் மாணவர்கள் , பேராசிரியர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கு ஆராய்ச்சி, சிறப்பான கல்வி வழங்க உங்களைப்போன்ற முன்னாள் மாணவர்களின் ஆலோசனைகள் எங்களுக்கு தேவைப்படுகிறது. நீங்கள் எப்போதும் எங்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருங்கள் என்றார்.


மணிசுந்தரம் உருக்கமான பேச்சு: தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் ( ஆர். இ. சி., ) மணிசுந்தரம் பேசுகையில், பல ஆண்டுகள் கழித்து நாம் இன்று சேர்ந்திருப்பது பெரும் மகிழ்வை தருகிறது. பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு கூடி படிப்பதால் தேசிய ஒருமைப்பாடு தானாக உருவாகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ. ஐ. டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும். பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஒரு சேர கல்வி கற்பதால் சாதி, மத, இன, வேறுபாடு களையப்படுகிறது. அந்தக்காலத்தில் 360 செலுத்தி படித்தோம் ஆனால் இன்று குழந்தைகள் படிப்பிற்கே 25 ஆயிரம் செலவழிக்க வேண்டியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் குறைந்த செலவில் தரமான கல்வி கிடைத்தது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. கல்விக்கூடங்கள் வியாபார ஸ்தலமாக மாறி விட்டது கல்வி, வேலை ஆகியவற்றின் பிரதிநித்துவ வேறுபாடுகள் களையப்பட வேண்டும். இதற்கென அமைதிப்புரட்சி ஏற்பட வேண்டும் என்றார்.


மீண்டும் ஒரு இளமை: நிகழ்ச்சியில் முன்னாள் பேராசிரியர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி , நடராஜன், சண்முகசுந்தரம், குமரேசன். வெங்கட்ரமணி, பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி , முத்துப்பாண்டி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆர். இ. சி., முதல் அணி ( பேட்ஜ்) மாணவர் கார்த்திகேயன் கவுரவிக்கப்பட்டார். 1979- 84 ம் ஆண்டு மாணவர் சங்க தலைவர் ராஜா நன்றி கூறினார். பார்ன் அரங்கில் மதிய உணவு விருந்து பரிமாறப்பட்டது. முன்னாள் முதல்வர் மணிசுந்தரம் மற்றும் மாணவர்கள் இணைந்து குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரியை சுற்றிப்பார்த்தனர். ராகிங் செய்யப்பட்ட இடம். கிரிக்கெட் மைதானம், பழைய நூலகம், ஆராய்ச்சி கட்டிடங்கள் , விடுதி அறை என பார்த்து முந்தைய நினைவுகளை அசைப்போட்டனர். இந்த அனுபவம் மீண்டும் ஒரு இளமைப்பருவத்தை தந்ததாக அனைவரும் உணர்ந்ததை பார்க்க முடிந்தது.

சந்திராயன் குழுவில் ஒருவர்: 25 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றிய கடைநிலை ஊழியர்கள் பலரும் முன்னாள் மாணவர்களை விசாரித்து மனம் மகிழ்ந்தனர். இந்தக்காலத்தில் படித்த இந்த மாணவர்கள் பலர் அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா , சிங்கப்பூர் , கத்தார் உள்ளிட்ட நாடுகளில் முக்கிய பொறுப்புகளிலும், தொழிற்சாலைகள் நடத்தியும் வருவதாக அனைவரும் தங்களது நிலையை பகிர்ந்து கொண்டனர்.சந்திராயனை வெற்றிக்கரமாக விண்ணிற்கு அனுப்பிய குழுவில் ஜெகன் என்பவரும் இடம் பெற்றிருந்தார் என்பது கூடுதல் மகிழ்ச்சியான விஷயம்.


Advertisement


வாசகர் கருத்து

kader thoothukudi - DAMMAM,சவுதி அரேபியா
07-பிப்-201313:16:19 IST Report Abuse
kader thoothukudi சத்தியமாக உண்மையிலே எனது மனதிலிருந்து கண்ணீர் வந்தது உங்களுடைய படங்களை பார்த்த சந்தோஷத்தில். இதை போல் என்னால் என் நண்பர்களை பார்க்க முடியவில்லையே என்று ..................
Rate this:
Share this comment
Cancel
உஷா வ ஐயர் - ahmedabad,இந்தியா
12-அக்-201000:54:42 IST Report Abuse
உஷா வ ஐயர் இந்த கட்டுரை படித்ததும் என் கணவர் தனது கல்லுரி நாட்களை பற்றி சொல்லியது நினைவில் வருகிறது.இப்போதும் சுவையான நாட்கள் அவருக்கு இந்த கல்லூரியில் படித்த நாட்கள் தான். வேலை பளு காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.திரு.மனிசுந்தரம் மாணவர்கள் இடையே பிரபலம் என்று சொல்லுவார்அவர். இந்த செய்தி படித்து விட்டாரா என்று தெரியவில்லை.நான் அமெரிக்கா வில் தற்சமையம் இருக்கிறேன். உடனே அவரை இந்த செய்தி படிக்கும் படி சொல்கிறேன். செய்திக்கு மிக நன்றி .
Rate this:
Share this comment
Cancel
Mayavarathaan - Mahe,ஸ்லேவாக்கியா
03-ஆக-201011:15:43 IST Report Abuse
Mayavarathaan இவர்கள் எல்லாம் ஒன்றாக கூடியது ரொம்ப மகிழ்ச்சி. என்ன இவர்கள் இணைந்து செய்ய திட்டம் போட்டு இருக்கிறார்கள்? படிக்கும் இன்றைய மாணவர்களுக்கு எதாவது நல்ல ஒரு ப்ராஜெக்ட்/திட்டம் ஆரம்பித்து நிதி உதவி அளிக்கலாமே? மாயவரத்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X