சிறப்பான வாழ்வுக்கு சிறுசேமிப்பு | Dinamalar

சிறப்பான வாழ்வுக்கு சிறுசேமிப்பு

Added : ஆக 28, 2017
Advertisement
சிறப்பான வாழ்வுக்கு சிறுசேமிப்பு

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு; சிறு துளி பெரு வெள்ளம் என பெரியவர்கள்
கூறுவது உண்டு. சிறுக சிறுக சேமிக்கும் பணம் ஒரு நாள் பெரும் தொகையாக அதிகரித்து குடும்ப அத்தியாவசிய தேவைக்கு உதவும் வகையில் அமைவதை குடும்பத்தினர் கண்கூடாக
பார்த்திருக்கலாம். அந்தளவுக்கு நம் வருவாயில் குறிப்பிட்ட ஒரு பகுதியை சேமிக்க தெரிந்திருக்க வேண்டும். இ வாலட், நெட் பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டு போன்ற இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் இக்கால கட்டத்திலும் மாணவர்களை சிறு
சேமிப்பில் ஈடுபடுத்துவது அவசியம். இந்திய பொருளாதாரத்தின் நிலைத்தன்மை மற்றும் பண்பாடு, கலாசாரம் அடிப்படையில் சேமிப்பு சார்ந்த கட்டமைப்பாக இருக்கிறது. இந்திய வங்கிகள் திவாலாகாமல் இருக்க சேமிப்பும் முக்கிய காரணமாகும்.
கடந்தாண்டு நவம்பரில் உயர்மதிப்பு மிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய
அரசு அறிவித்தது. அந்த காலக் கட்டத்தில் அனைவரும் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியுற்றனர். கையிலிருந்த செல்லத்தக்க நோட்டுகளைசெலவழித்து விட்டு தவித்தவர்கள் பலர். சில குடும்பங்களில் சேர்த்து வைத்திருந்த உண்டியல்களில் இருந்து பணத்தை எடுத்து செலவை சமாளித்தனர். இது சிறுசேமிப்பின் அவசியத்தை அனைவரும் உணர செய்தது.

மாணவர்களுக்கு ஊக்குவிப்பு : சிறு சேமிப்பு திட்டங்களில்ஒன்றிரண்டை தவிர, பெரும்பான்மை திட்டங்கள் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக சேமிப்பதாக உள்ளன. குழந்தைகள்
குறிப்பாக மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை பள்ளிகளே ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களிடம் எப்படி அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. சேமிப்பு பழக்கம் அவர்களிடம் எவ்வாறு உள்ளது என சில மாணவர்களிடம் விசாரித்த போது, கடைகளில் பொருட்கள் வாங்க பெற்றோர் அனுப்பும் போது அதில் பணம் எடுத்து கொள்வதாகவும், சிலர் வீடுகளில் உள்ள பேப்பர் போன்ற
பொருட்களை கொடுத்து பணம் பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

'சஞ்சாயிகா' திட்டம் : பள்ளிகளில் மாணவர்கள் சேமிக்க 'சஞ்சாயிகா' திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாணவர்கள் சேமிக்கும் பணத்திற்கு வட்டியும் உண்டு. யார் அதிகம் பணம்
சேமிப்பது என ஆரோக்கியமான போட்டிகள் நடக்கும். மாணவர்கள் தங்கள் சேமிக்கும் பணத்தில்
அவர்களுக்கு தேவையான கடிகாரம், புத்தகம், மிதிவண்டி போன்றவைகளை வாங்கி
கொள்ளலாம். ஆனால் என்ன காரணத்தினாலோ இத்திட்டம் முடங்கி விட்டது.
மாணவர்களிடம் சேமிப்பு வழக்கத்தை துாண்டும் வகையில் உண்டியல்களும் வித்தியாசமான வடிவங்களில் வெளிவந்தன. குழந்தைகள் அத்தகையஉண்டியல்களை விரும்பி வாங்கி சேமிப்பர். உண்டியல்களின் சிறப்பு அம்சம் என்றால், திறந்து பார்க்க முடியாது; உடைத்து தான் பார்க்க முடியும். குழந்தைகள் யார் உண்டியலில் அதிக பணம் சேமிப்பது என போட்டியே நடத்துவர்.

திருக்குறளில் சிக்கனம் : சிக்கனம் குறித்து திருவள்ளுவரும் குறிப்பிட தவறவில்லை.
'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல்
இல்லாகித் தோன்றாக் கெடும்'
வரவுக்குள் செலவை அடக்கி வாழாதான் வாழ்க்கை
செழிப்புடையது போலத் தோன்றி பின்னர் அழிந்து விடும்.
'ஆகாறு அளவு இட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
வருவாய் சிறிதளவாக இருப்பது கேடு ஆகாது. செலவு அகலமாக இருக்க கூடாது என்பது
தெரிந்திருக்கலாம்.

மாணவர்களின் சேமிப்பு : பழக்கத்தை பள்ளி நிர்வாகங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் போதே ஒவ்வொரு மாணவருக்கும் சிறுசேமிப்பு கணக்கை துவங்க பள்ளிகள் வழிவகுக்க வேண்டும். சிறுசேமிப்பின் அவசியத்தை உணர்த்தி நேர்வழியில் சேமிக்க துாண்டலாம். மாணவர்கள் சேமிக்கும் தொகை அவர்களின் குடும்ப வருமான சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபடலாம். ஆனால் சேமிக்கும் எண்ணம் எல்லோரிடமும் உருவாகும்.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் சேமித்தவுடன் அப்பணத்தை மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியே செல்லும் போது, அந்த சிறுசேமிப்பு கணக்குகளை நிரந்த வைப்பாக மாற்றி கொடுக்கலாம். மாணவர்களை ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த சேமிப்பு பணம் அவர்களது எதிர்கால வாழ்விற்கு பயன்படும். சிறுசேமிப்பை ஊக்குவிக்க அரசு மாணவர்களுக்கு என சிறப்பு பரிசு திட்டத்தை வகுத்து ஊக்கப்படுத்தலாம். மாணவர்களது சேமிப்பு தொகை எந்தபாதிப்பிற்கும் ஆளாகாத வகையில் அரசு திட்டம் வகுக்க வேண்டும். இன்றைய சேமிப்பாளர்கள் நாளைய சிறந்த முதலீட்டாளர்
களாக வருவதுடன், ஒரு நல்ல சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவர்களாக உருவாவர் என்பது நிச்சயம். புரிய வைக்க வேண்டும் குழந்தைகளிடம் பணத்தை பற்றிய புரிதலையும், சிறுசேமிப்பின்அவசியத்தையும் சிக்கனத்தையும் விவரிக்க வேண்டும். தேனீ, குருவி, எறும்பு போன்ற உயிரினங்கள் சிறுசேமிப்பின் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன. ஒரு மழை காலத்தில் சில்வண்டு ஒன்று இரை தேடி அலைந்தது. மழையால் இரை கிடைக்கவில்லை. எறும்பு புற்று ஒன்று அருகே நிறைய தானியங்கள் இருப்பதை கண்டு வியந்தது. தனக்கும் தானியங்கள் தரும்படி எறும்புகளிடம் சில்வண்டு வினவியது. வெயில் காலத்தில் தங்கள் எதிர்காலத்திற்கு
தேவையான தானியங்களை சேமித்து மழை காலங்களில் பயன்படுத்தி கொள்வதாக கூறிய எறும்புகள், அதற்கும் தந்தன. எறும்புகளை போல சேமிக்காமல் இருந்ததை நினைத்து வருந்திய சில்வண்டு அதற்கு பிறகு சேமிக்க துவங்கியதாக கிராமங்களில் பெரியவர்கள் கதை கூறுவதுண்டு.

சிக்கனம்-கஞ்சத்தனம் : சேமிப்பிற்கு சிக்கனமாக இருத்தல் அவசியம். சிக்கனமாக இருப்பதாக நினைத்து கஞ்சத் தனமாக இருக்க கூடாது.ஆடம்பரம், சிக்கனம், கஞ்சத்தனம் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. ஒருவர் உணவு விடுதிக்கு சென்று உணவு எடுத்து கொண்டால்
ஆடம்பரம். வீட்டில் உணவு சமைத்து சாப்பிட்டால் அது சிக்கனம். பணமிருந்தும் உணவு எடுக்காமல் ஒரு வேளை பட்டினியாக இருந்து பணத்தை செலவு செய்யாமல் பசியுடன் இருப்பது கஞ்சத்தனம்.

ஒப்பிடல் கூடாது : எந்த ஒரு செயலுக்கும்ஒருவர், மற்றொரு வருடைய வாழ்க்கை முறையை ஒப்பிட்டு கொண்டிருந்தால் சேமிக்க முடியாது. தாங்கள் ஈட்டிய வருவாயில் 10
சதவீதத்தை கண்டிப்பாக சேமித்தல் வேண்டும். சேமிப்பை ஓர் செலவாக கருதி சேமிக்க வேண்டும். வீட்டுக்குள் வரவு, செலவு திட்டம் வகுக்க வேண்டும். கடைக்கு செல்லும் போது என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற பட்டியலுடன் செல்ல வேண்டும். பொருட்களின் விலை ஏறும் போது அப்பொருட்கள் வாங்குவதை அப்போதைக்கு தள்ளிபோடலாம். பொருட்களின் விலை இறங்கும் போது அப்பொருட்களை கூடுதலாக வாங்கி வைக்கலாம்.

முதலீடு அவசியம் : சேமித்தால் மட்டும் இன்றைய காலகட்டத்திற்கு போதாது. சேமித்த பணத்தை தகுந்த முதலீடு செய்வது மிக அவசியம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு விவசாயி தன் வீட்டில் தானிய களஞ்சியத்தில் இரு மூடைகள் நெல்மணிகள் வைத்திருப்பது சேமிப்பு. அதே விவசாயி நெல்மணிகளின் ஒரு பகுதியை தன் வயலில் விதைத்து விவசாயம் செய்து விளைச்சலை எடுப்பது முதலீடு. பணத்தை சேமித்து அதை ஒரேயிடத்தில் வைத்திருத்தல் புத்தி
சாலித்தனம் ஆகாது. அப்பணத்தை பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதே சிறந்தது. அதன் மூலம் அரசுக்கும் ஒரு வகையில் நம் பணம் பயன்படுகிறது. முதிர்வு காலத்தில் வட்டியுடன் நம் பணம் நமக்கு கிடைக்கிறது. இதனால் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும் என்பதை மறுக்க முடியுமா? எனவே இன்றிலிருந்து சேமிக்க துவங்குவோம்!

-சி.பிருந்தா சுந்தரி
முதுகலை ஆசிரியை
ஆயிர வைசியமேல்நிலைப் பள்ளி, மதுரை
brindhapgasst@gmail.comவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X