பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியிலும் விவசாயம்; இயற்கையால் சாத்தியம்!

Added : செப் 01, 2017
Share
Advertisement

வறட்சியால் விவசாயிகள் நிலைப் பயிர்களைக்கூட காப்பாற்ற முடியாமல் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாறிவரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இயற்கை விவசாயத்தால் தென்னை மட்டுமின்றி ஊடுபயிர் சாகுபடி செய்து ஆனைமலை பகுதியில் முன்னோடியாக திகழ்கிறார் பட்டயப்படிப்பு முடித்த விவசாயி.ஆனைமலை அடுத்த சின்னப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர், பொம்முராஜ், 46. எலக்ட்ரிக்கல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டயப்படிப்பு படித்துள்ளார். இவர், தனது நான்கு ஏக்கர் தென்னந்தோப்பில் இயற்கை உரம் தயாரித்தும், மூடாக்கு முறையை பின்பற்றியும் வறட்சியிலும் செழிப்பாக விவசாயம் செய்கிறார். மேலும், தென்னை மரங்களுக்கு இடையில் வாழை, முருங்கை, கிளைரிசிட்டியா, சோளம், பாசிப்பயறு, எள், உளுந்து மற்றும் குதிரைவாலி உள்ளிட்ட ஊடுபயிர்கள் சாகுபடி செய்து சாதனை படைக்கிறார்.இயற்கை விவசாயம் குறித்து முன்னோடி விவசாயி பொம்முராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டது:எனது தந்தை மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்து வந்தார். பட்டயப்படிப்பு முடித்ததும் சில ஆண்டுகள் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றினேன். எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகரித்ததால், 2000ல் விவசாயத்தில் ஈடுபட்டேன். பழைய தோட்டம் அருகில் நான்கு ஏக்கரில், மரவள்ளி சாகுபடி செய்துவந்தேன். 2003 வரை ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டேன்.இயற்கை விவசாயம்2003ம் ஆண்டு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் எப்படி கட்டுபடுத்த வேண்டும் என நம்மாழ்வார் கற்றுக்கொடுத்தார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகரித்ததால் அதை கற்றுக்கொள்ள இயற்கை விவசாயம் சார்ந்த புத்தகங்களை படிக்கத் துவங்கினேன். இயற்கை விவசாயம் குறித்து சுபாஷ்பாலேகரிடமும் பயிற்சி பெற்ற அனுபவம் உள்ளது. 2003ல் இருந்து ரசாயனத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட துவங்கி, 2011ல் நாட்டு ரக தென்னைகளை தோப்பில் நடவு செய்தேன்.மூடாக்குதோப்பில் தென்னை மரங்களின் ஓலை உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதில்லை, அனைத்தையும் தென்னை மரங்களுக்கு இடையில் அப்படியே போட்டுள்ளேன். இதனால், தென்னைக் கழிவுகள் மக்கிப்போய் இயற்கை உரமாக மாறுகிறது. மூடாக்கு முறையில் கழிவுகள் மண்ணில் போர்வை போல் இருப்பதால் சூரிய ஒளிபடாமல் ஈரப்பதம் மற்றும் நுண்ணுயிர்கள் காக்கப்படுகிறது. மேலும், கழிவுகள் மக்கிப்போய் சிறந்த மண்புழு உரமாக மாறி மண்புழுக்கள் அதிகரிக்கச் செய்கிறது.ஜீவாமிர்தம்தென்னையை வறட்சியிலும் காப்பாற்ற, 10 லிட்டர் கோமயம், 10 கிலோ சாணம், ஒரு கிலோ பயறு மாவு (பாசிப்பயறு அல்லது தட்டைப்பயறு), ஒரு கிலோ ரசாயனம் கலக்காத கரும்பு சர்க்கரை மற்றும், 200 லிட்டர் தண்ணீர். இவற்றை ஒன்றாக பிளாஸ்டிக் பேரலில் கலந்து, பேரலை துணியால் கட்டி, 48 மணி நேரம் சூரிய ஒளி படாமல் நிழலில் வைத்து, காலை மற்றும் மாலையில் கடிகாரமுறையில் ஒரு நிமிடம் கலக்கினால் ஜீவாமிர்தம் தயாராகும். ஜீவாமிர்தத்தை ஒரு மரத்துக்கு நான்கு லிட்டர் வீதம், 15 நாட்களுக்கு ஒரு முறை உரமாக பயன்படுத்துகிறேன். இதை ஏழு நாட்களுக்குள் பயன்படுத்துவது சிறந்தது. ஜீவாமிர்தம் தென்னை மரத்துக்கு உரமாக பயன்படுத்துவது மட்டுமின்றி ஊடுபயிர்களுக்கும் தெளிப்பான் மூலம் பயன்படுத்தலாம்.இனக்கவர்ச்சிஇரண்டு லிட்டர் இளநீரை இரண்டு நாட்களுக்கு புளிக்க வைத்து, ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட மூடியுள்ள பக்கெட்டின் மேல் பகுதியிலிருந்து இரண்டு அங்குலம் கீழ் பகுதியில் இடம் விட்டு, 8 மி.மீ., அளவுக்கு நான்கு துளையிட வேண்டும். இந்த பக்கெட்டில் இளநீரை ஊற்றி அறுக்கப்பட்ட தென்னை மட்டையை சிறிதளவு இளநீரில் போட வேண்டும். இதை தோப்பின் ஓரத்தில் ஒரு ஏக்கருக்கு நான்கு பக்கெட்டுகளாக வைத்து சிகப்புகூன் வண்டுகளை கட்டுப்படுத்தலாம். தோப்பின் மையப் பகுதியில் வைத்தால் அருகிலுள்ள தோப்பிலுள்ள சிகப்புகூன்வண்டுகள் நமது தோப்பினுள் வந்துவிடும்.ஊடுபயிர்தென்னையிடையே பப்பாளி, முருங்கை, வாழை மற்றும் கிளைரிசிடியா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பப்பாளி மரத்தின் வேர் மண்ணில் பத்து அடிக்கும் கீழுள்ள நீரை மேல்மட்டத்துக்கு எடுத்து வரும் அதை தென்னை மரத்தின் வேர் பயன்படுத்திக் கொண்டு நீர் தேவையை குறைக்கும். தோப்பில் சில தென்னை மரங்களுக்கு அருகில் கற்பூரவள்ளியை நைட்ரஜன் பயன்பாட்டுக்காக வளர்க்கப்படுகிறது.அதேபோல் சோளத்துக்கு நைட்ரஜன் பயன்பாட்டுக்காக நரிப்பயறு வளர்க்கப்படுகிறது. நரிப்பயறு வளர்ப்பதால் சோளத்துக்கு யூரியா பயன்படுத்துவதை தவிர்க்கலாம். வாழை, முருங்கை மற்றும் பப்பாளி உள்ளிட்வை ஊடுபயிர்களாக வளர்ப்பதால் அதன் கழிவுகள் உரமாவதுடன், வருமானமும் கிடைக்கிறது.இணை, துணை பயிர்விவசாயிகள் ஊடுபயிரை சாகுபடி செய்யும் முன் இணை மற்றும் துணை பயிர்களை கற்றுக்கொள்ள வேண்டும். இணை பயிர் என்பது ஒரு பயிரின் வளர்ச்சியை தடுக்காமல், வளத்தை எடுக்காமல் வாழும் பயிர். துணை பயிர் என்பது பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் தன்மையுடைய பயிர். எடுத்துக்காட்டாக ஆமணக்கு, சூரியகாந்தி மற்றும் செண்டுமல்லி உள்ளிட்டவை நன்மை செய்யும் பூச்சிகளை அதிகளவில் கவர்ந்து இழுப்பதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சியை கட்டுப்படுத்த முடியும். பயிர்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரத்தை பயன்படுத்துவதைவிட, இணை மற்றும் துணை பயிர்களை வளர்த்து செலவின்றி இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.எருக்குழியால் ஆபத்துதினமும் வீணாகும் மாட்டு சாணத்தை விவசாயிகள் ஒரு இடத்தில் சேமித்து எருக்குழி அமைத்து மக்க வைத்து உரமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், எருக்குழியில் சாணம் சேமித்து வைக்கப்படுவதால், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகள் அதிகரிக்கும். வீணாகும் மாட்டு சாணத்தை மக்க வைக்காமல் தண்ணீருடன் கலந்து தென்னை மரங்களுக்கு கரைசலாக ஊற்றப்படுகிறது. இது தென்னைக்கு சிறந்த உரமாக பயன்படுகிறது. இவ்வாறு, இயற்கை உரம், பயிர் சாகுபடி குறித்து தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X