தமிழ் என் செல்லப்பெண் - கணினி தமிழறிஞர் சுகந்தி

Added : செப் 04, 2017 | கருத்துகள் (6)
Share
Advertisement
தமிழ் என் செல்லப்பெண் - கணினி தமிழறிஞர் சுகந்தி

சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் படித்து வளர்ந்தவர்; திருமணமாகி, குடும்பத்தலைவியாகி அமெரிக்காவில் வசித்த போதும், தமிழின் மீது அளவற்ற பாசம் கொண்டவர். அங்கு தமிழின் பெருமையை கணினி வழியாக பரப்புகிறார்; நிறைந்த தமிழறிஞர், மூன்று புத்தகங்கள் எழுதியவர்- என சில வாக்கியங்களோடு மட்டும் முன்னுரை எழுதப்பட வேண்டிய சாதனையாளர் அல்ல சுகந்தி.

அப்பா ராதாகிருஷ்ணன் அரசு ஊழியர். மதுரையில் பணிபுரிந்த போது, சுகந்தியின் பள்ளி நாட்கள் இங்கேயே கழிந்தது. நிர்மலா பள்ளியில் படிக்கும் போதே, தமிழ் படிப்பதில் அத்தனை ஆர்வம். ஓய்வு நேரங்களில் மதுரை மைய நுாலகத்தில் அமர்ந்து அத்தனை புத்தகங்களையும் படித்தார். பின் சேலத்தில் சட்டக்கல்லுாரியில் படிப்பு. படிப்பு நிறைவு பெறும் முன்பே திருமணம். கணவர் டாக்டர் வெங்கடேஷிற்கு அமெரிக்காவில் வேலை. சுகந்தியும் அமெரிக்கா சென்றார், பட்டங்கள் ஏதும் பெறாமல்!

ஒரு குடும்பத்தலைவியாகவே அங்கே அவர் முடங்கி விடவில்லை. விட்டுப்போன சட்டப்படிப்பை தொடர்ந்தார். பொறியியல் தொழில் நுட்பம்(எம்.எஸ்.,) பயின்றார். ஹாரிஸ்பக் பல்கலையில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவையெல்லாம், தன் சாதனை என்று சுகந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. 'நான் இந்த நிலைக்கு உயர தமிழ் தான் காரணம்,' என்கிறார். எப்படி?
அவரே கூறுகிறார்...

மதுரையில் பள்ளி படிப்பின் போது அப்பாவின் கண்டிப்பு ஒரே விஷயம் தான். 'தினமும் தினமலர் நாளிதழ் படி. ஒரு ஆங்கில நாளிதழை படி'. ஐந்தாம் வகுப்பில் இருந்தே, தினமலர் நாளிதழை படிப்பேன். படிக்க, படிக்க தமிழ் மீது அலாதியான ஆர்வம் ஏற்பட்டது.
திருமணமாகி அமெரிக்கா வந்ததும், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. என் தமிழில் படிக்க, எனக்கு ஏதும் கிடைக்கவில்லை. மூச்சு முட்டியது போன்ற உணர்வு. கணினியில் தமிழ் பயன்பாடு இருக்கிறதா எனத் தேட ஆரம்பித்தேன்.
அமெரிக்காவில் தமிழ் படிக்க விரும்புபவர்களுக்கு, கணினி மூலம் பாடம் நடத்தினால் என்ன என்று தோன்றியது. அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினேன்.'தமிழ் அன்லிமிடெட்' (www.tamilunltd.com) என்ற தமிழ்க்கல்வி நிலையம் இணையதளத்தை நானே வடிவமைத்தேன். வெப்டிசைனராக, ஆர்ட்டிஸ்டாக, கன்டென்ட் டெவலப்பராக மாறி, ஆங்கிலம் வழியாக தமிழை பயிற்றுவிக்கும் வழிமுறைகளை உருவாக்கினேன். தமிழ் அநிதம் என்று பெயரிட்டேன். தமிழ் இலக்கணம், ஒலிவடிவம், பேச்சு, உச்சரிப்பு என அத்தனை விஷயங்களையும் இணையத்தில் இணைத்தேன்.

தமிழே தெரியாதவர்களும், 16 வாரங்களில் அடிப்படை தமிழை கற்கும் விதத்தில் வடிவமைத்தேன்.அமெரிக்காவில் பிறந்து வளரும் தமிழ் குடும்பங்களுக்கு, தமிழ் கற்க இந்த இணையதளம் பேருதவியாக இருக்கிறது. தென்ஆப்ரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தமிழாசிரியர்களும் இதனை பயன்படுத்துகிறார்கள். இதில் வருமானம் பார்ப்பது என் நோக்கம் அல்ல; தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே லட்சியம்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள், கைக்குழந்தையாக இருக்கும் போது, மடியில் வைத்து தமிழ் சொல்லிக்கொடுத்தேன். வீட்டில் இப்போதும், கணவரும், குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசினாலும், புரியாதது போன்று இருப்பேன். அவர்கள் 'அம்மாவுக்கு, அமெரிக்க ஆங்கிலம் புரியவில்லை' என்று நினைப்பார்கள். பிறகு தமிழில் பேசுவார்கள்; அதற்கு பதிலளிப்பேன். ஏனென்றால் தமிழை, என் வீட்டில் இருந்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன்.

தமிழ் மற்றவர்களுக்கு மொழியாக இருக்கலாம். எனக்கு என் செல்லக் குழந்தை!தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்பது எல்லாம் தவறு. தமிழ் கணினி மென்பொருட்களின் தேவையும், தமிழ் இணைய பயன்பாடும் இன்று அதிகம். உலகில் பல நாடுகளில் ஆங்கிலம் இல்லை. ஆனால் எல்லா நாடுகளிலும், எங்காவது சில தமிழர்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் தமிழாசிரியர்கள் நிறைய தேவைப்படுகிறார்கள். நீங்கள் படித்த தமிழ் நிச்சயம் சோறு போடும்.

சிறுகதை தொகுப்பு, நாவல் என மூன்று புத்தகம் எழுதியுள்ளேன். என் புது முயற்சியாக, முருகனின் அறுபடை வீடுகளையும், ஐந்திணையையும் இணைத்து 'படப்புத்தகம்' உருவாக்கி வருகிறேன். அதற்கான படங்களை நானே வரைந்து, படத்திற்கான விளக்கத்தை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ், பிரெஞ்ச் மொழியில் தர உள்ளேன்.

நமது பண்பாடு, மொழியை, தமிழ் தெரியாத இளம் தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதே இந்த புத்தகத்தின் நோக்கம்.இப்படி என்னை, நாளும் இயக்கி கொண்டிருக்கிறது என் தமிழ் என்று பெருமிதப் படுகிறார் சுகந்தி.கணினியோடு வாழும் இந்த தலைமுறைக்கும், கணினி கட்டளைப்படி இயங்க போகும் அடுத்த தலை முறைக்கும், தேமதுர தமிழை கொண்டு செல்லும் சுகந்தியை வாழ்த்துவோம்! இதனால் நம் தமிழும் தலைமுறை தாண்டி வாழும். suganthi1068@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MaRan - chennai,இந்தியா
13-செப்-201712:44:50 IST Report Abuse
MaRan மிக சிறந்த தொண்டு என்று தான் சொல்ல வேண்டும் ,, நான் கூட அயல்நாட்டில் வசிக்கிறேன்,, என் மகளுக்கு ஐந்து வயதாகிறது,, அவளுக்கு தமிழ் வாசிக்க தெரியவில்லை அதை எப்படி சொல்லி கொடுப்பது என்றும் புரியவில்லை,, நான் உங்கள் இணையத்தை பார்க்கிறேன்,, நன்றி,
Rate this:
Share this comment
Cancel
நிலா - மதுரை,இந்தியா
10-செப்-201706:52:39 IST Report Abuse
நிலா தாய் போன்ற: தமிழழை பாதுகாக்கும் தங்களுக்கு வாழ்த்துகள் தங்கள் பணி தொடர்க
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
08-செப்-201708:58:39 IST Report Abuse
Meenu தமிழ்ப் பணி தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Suganthi Nadar - Mechanicsburg,யூ.எஸ்.ஏ
09-செப்-201702:15:48 IST Report Abuse
Suganthi Nadarநன்றி ஐயா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X