இணையதளங்களும், இளையதலைமுறைகளும்

Added : செப் 06, 2017
Advertisement

மதுரையில் கல்லுாரி மாணவர் விக்னேஷ் 'புளூவேல்' விளையாட்டு கட்டளைகளை ஏற்று
தற்கொலை செய்துள்ள நிகழ்வை ஒரு தனிப்பட்ட சம்பவமாக பார்க்க இயலாது. பள்ளி, கல்லுாரி களில் பயிலும் மாணவர்களின் பெற்றோரின் நெஞ்சத்தை பதைக்க செய்துள்ளது
இச்சம்பவம். உயர்நீதிமன்றம் மதுரை கிளை இதை தானாக முன்வந்து பொது நல வழக்காக
விசாரணைக்கு எடுத்து கொண்டு உள்ளது.

மகாராஷ்டிரா, டில்லி, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஒரு உயிரை
இழந்துள்ளோம். இறந்த அனைவருமே இளைஞர்கள். குறிப்பாக மாணவர்கள்.
ரஷ்யாவில் மனநல கல்வி கல்லுாரியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட, 22 வயது மாணவர் பிலிப் புடேகின் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த விபரீத விளையாட்டு இன்று உலகத்தின் பல பாகங்களிலும் பரவிஉள்ளது. காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பிலிப், தான் இதுவரை 16 மாணவிகளின் மரணத்திற்கு காரணமாக இருந்தாக ஒப்புக் கொண்டுள்ளார்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சரியான வழிகாட்டுதல் இல்லாதவர்கள்,
தனிமையை நாடுபவர்கள், பிரச்னைகளை சந்திக்க இயலாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மேலும் தனிமைப்படுத்தி இறுதியாக தற்கொலை செய்யத் துாண்டுவது இந்த கொலைக் கூட்டத்தின் நோக்கம்.

உயிர்க்கொல்லி விளையாட்டு : 'புளூவேல்' விளையாட்டு என்பது ஒரு 'வீடியோ கேம்' அல்ல. பிற விளையாட்டு செயலிகள் போன்று, அலைபேசி மூலம் பதிவிறக்கம் செய்து
விளையாடும் விளையாட்டு அல்ல. கூகுள், யாஹூ போன்ற வலைதளங்கள் மூலம்
விளையாடுவது அல்ல. இந்த கொடூரமான விளையாட்டு, வாட்ஸ் ஆப், முகநுால், டுவிட்டர் போன்ற சமுக வலைதளங்களில் செயல்படும் ரகசிய குழுக்களில் உள்ள நபர்கள் மூலம் நேரடியாக தகவல் பரிமாற்றம் செய்து விளையாடுவதாகும். சமூக வளைதளம் மூலம் தொடர்பை
ஏற்படுத்திய பின், கண்ணுக்கு தெரியாத நபரால் தொடர் கட்டளைகள் 50 நாட்களுக்கு இடப்படும். இந்த உயிர்க் கொல்லி விளையாட்டில் பங்கெடுக்கும் நபர், அது குறித்து பொதுவெளியில் தெரிவிக்க கூடாது.

ரகசிய தொடர்பில் சிக்கிய இளைஞர்களுக்கு தினம்தோறும் கட்டளைகள் பிறப்பிக்கப்படும். 50 நாட்கள் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக செய்ய துாண்டிவிடப்படுவர். நள்ளிரவில் மனநிலையை பாதிக்கக் கூடிய திகில் படங்கள் பார்க்க கூறுவது, உடலில் காயங்களை
ஏற்படுத்திக் கொள்வது, கைகளில் நீல திமிங்கலங்களின் படங்களை கூரிய ஆயுதத்தால் வரைவது போன்ற பல கட்டளைகள் இடப்படும். இடையில் விலக நினைப்பவர்களை மிரட்டி பணிய வைப்பதும் நடக்கின்றது.ஓவ்வொரு நாளும் நிறைவேற்றப்பட்ட கட்டளைகளை படம் எடுத்து அனுப்பவேண்டும். 49 நாட்களில் பல்வேறு மனஉளைச்சலுக்கு உள்ளாகும் போட்டியாளரை, மூளைச் சலவை செய்து இறுதியாக 50-வது கட்டளையாக தற்கொலை செய்யத் துாண்டுவது இவ்விளையாட்டின் விதி.'சைக்கோ' மனிதர்கள் சிலரால் சமானிய மனிதர்களுக்கு
வைக்கப்படும் போட்டியே இந்த விபரீத விளையாட்டு. தகவல் தொழில்நுட்பத்தை பயன்
படுத்தி நடத்தப்படும் இதுபோன்ற குற்றங்கள் 'சைபர் குற்றங்கள்' எனப்படும்.

'புளூவேல்' விளையாட்டு என்பதை விட 'புளூவேல் குற்றம்' என்பது சட்டப்படி சரி. இளம் தளிர்களின் மனதை நஞ்சாக்கி உயிர்பறிக்கும் கூட்டத்தை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மக்கள் நல அரசுகளின் தலையாய கடமை.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு : மும்பை, டில்லியில் நடந்த மாணவர்கள் தற்கொலையை தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள், யாஹூ போன்ற தேடுதல்
வலைதளங்கள் இதுபோன்ற விளையாட்டுகள் தொடர்பான தகவல்களை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துஉள்ளது. டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் சமூக வலைதளங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் காவல் துறையினர் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு நபரை தற்கொலைக்கு துாண்டுவது, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 306-ன்கீழ் தண்டனைக்குரிய குற்றம். குற்றவாளிக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத்தண்டனை வரை வழங்கலாம். தகவல் தொழில் நுட்பச்சட்டத்தின் கீழும் தண்டிக்க இயலும். ஆனால்
இக்குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க நடைமுறை சாத்தியக் கூறுகள் குறைவு என்றே கூறலாம்.உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, கட்டளைகளை பிறப்பித்து
தற்கொலைக்கு துாண்டும் கயவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவது எளிதான காரியம் அல்ல. நமது காவல்துறைக்கு அடிப்படை வசதியின்மையும், போதிய பயிற்சி இன்மையும், எல்லை கடந்து குற்றவாளிகள் செயல்படுவதும் அடிப்படை காரணம்.
வளர்ச்சியை சரியாக பயன்படுத்துகிறோமா தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாக
பயன்படுத்தாத பொதுமக்களை கொண்ட நாடுகளின் வரிசையில், நாம் முன்னணியில் உள்ளோம் என்பது கசப்பான உண்மை. உலகிலேயே 'செல்பி' எடுக்கும் போது இறந்த நபர்களின்
எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கடந்த 2014-16 காலகட்டத்திற்குள் உலகில் நடந்த 'செல்பி' இறப்பில் இந்தியாவில் மட்டும் 60 சதவீதம் நடைபெற்றுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கார்னிஜி மெலன் பல்கலை மற்றும் டில்லியில் இயங்கும் இந்திரபிரசாத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வுகளில், இரண்டு ஆண்டுகளில் உலக முழுவதும் நிகழ்ந்த 127 'செல்பி' மரணத்தில் இந்தியாவில் மட்டும் 76 மரணம் நிகழ்ந்துள்ளது. இதில் நாம் 'செல்பி' என்னும் தொழில்நுட்ப வளர்ச்சியை குறை காண இயலாது. ஆனால் அதை எதற்கு, எப்போது, எப்படி, பயன்படுத்தவேண்டும் என்ற பயிற்சி இல்லாமையும், விழிப்புணர்வு இல்லாமையும் மரணங்களுக்கு காரணம். ஆகவே இந்த பிரச்னை வந்த பிறகு வைத்தியம்
பார்ப்பதற்கு பதில், வருமுன் காப்போம் என பெற்றோர்கள் செயல்படுவதே எளிய தீர்வு.
கற்று கொடுக்க தவறியதால் விபரீதம் 'புளூவேல்' மற்றும் 'செல்பி' சாவுகள் தொழில்நுட்ப
வளர்ச்சியை முறையாக பயன்படுத்த இளைய தலைமுறைக்கு நாம் கற்றுக் கொடுக்க
தவறியதால் ஏற்பட்ட விபரீதம். ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் போன்ற நவீன அறிவியல் வளர்ச்சியை முற்றிலும் ஒதுக்கி வைத்து விட்டு இளைய தலைமுறை இயங்க இயலாது. அதே நேரம்
ஆண்ட்ராய்டு போன் மற்றும் இணையதளங்களை இளையதலைமுறை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று கற்பிக்க நாம் தவறியுள்ளதே, இப்பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம்.பெற்றோர் விழித்தெழ வேண்டிய தருணம் வந்து விட்டது. குழந்தைகளின்
தேவையறிந்து வாங்கி கொடுப்பதுடன், அவர்கள் அதை சரியாக பயன்படுத்துகின்றனரா என்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பெற்றோரின் கடமை : அலைபேசி, கம்ப்யூட்டர் போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்களை தனி அறையில் அல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் பொது அறையில் பயன்படுத்த அனுமதிக்கலாம். இது போன்று ஆபத்துகளை குழந்தைகளிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதை விட, தேவைகளை கண்டறிந்து அதை
முழுமையாக நிறைவேற்றுவது பெற்றோர்களாகிய நம் கடமை. அலைபேசியில் மணிக்
கணக்கில் காலத்தை விரயமாக்கும் குழந்தைகளை கண்டறிந்து, ஆலோசனை வழங்கி நேர்
வழிப்படுத்த வேண்டும். இது போன்ற ஆபத்தான, முட்டாள்தனமான விளையாட்டுகளை புறந்தள்ள விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். இது போன்ற விளையாட்டில் சிக்கி இருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் அடையாளங்கண்டு மனநலமருத்துவரிடமோ, குழந்தைகள் நல ஆலோசகர்களிடமோ அழைத்து செல்ல தயங்க கூடாது.

தேவை சமூக விழிப்புணர்வு : பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக அயராது உழைக்கும் பெற்றோர்கள், தினமும் அரைமணி நேரமாவது அவர் களுடன் உரையாடுவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற பிரச்னைகளுக்கு சட்டமும், அரசும் மட்டுமே தீர்வு காண
இயலாது. சமூக விழிப்புணர்வு என்ற அறிவாயுதத்தால் மட்டுமே தீர்வு காண இயலும். பாலோடு கலந்த நீரில் உள்ள பாலை மட்டுமே பருகும் அன்னப்பறவை போல, சமூக வலைதளங்களில் உள்ள தீயவற்றை அகற்றி, நல்ல விஷயங்களை தேர்வு செய்து பயன்படுத்தும் விழிப்புணர்வை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்துவதே இப்பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்.

-ஆர்.காந்தி
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மதுரை
98421 55509

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X