பாட்னா :"பா.ஜ., ஆளும் மாநிலங்களைப் பொருத்தவரையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது' என்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ., செயற்குழு மாநாட்டில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சி பற்றிய தீர்மானம் கொண்டு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அதுகுறித்துப் பேசியதாவது:மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் பற்றி சர்க்காரியா கமிஷனில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.குறிப்பாக, கவர்னர் மற்றும் மாநிலத் தலைமை நீதிபதி நியமனம் குறித்து பா.ஜ., ஆளும் மாநிலங்களிடம் மத்திய அரசு கலந்து பேசுவதில்லை. ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இவ்விஷயத்தில் சர்க்காரியா கமிஷன் பரிந்துரைப்படி, மாநில அரசுகளைக் கலந்து பேசியபின்பே நியமனங்கள் நடந்தன.குஜராத் சட்டசபையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்பும், அவை கவர்னர் அல்லது மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து விடும்.பா.ஜ., ஆளும் மாநிலங்களிடம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடந்து கொள்கிறது.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
போபால் விஷவாயு வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில், "ஓர் அமெரிக்கர் அல்லது வேறு எந்த நாட்டுக் குடிமகனையும் ஒப்பிடுகையில், இந்தியக் குடிமகனின் உயிர் ஒன்றும் மலிவானதல்ல. போபால் வழக்கில் வெளியான தீர்ப்பு, அந்தக் கொடூரத்தால் பாதிக்கப்பட்டு உயிர்வாழ்ந்து கொண்டிருப்பவர்களை சிக்கலில் ஆழ்த்தியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் என்ன நீதி வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனரோ அதைத் தர வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ஜ., பொதுச் செயலர் ஆனந்த் குமார் கொண்டு வந்த தீர்மானத்தில், ஆளும் கட்சிக்கு சாதகமாக சி.பி.ஐ., பயன்படுத்துவது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு எதிரான வழக்குகளையும் சி.பி.ஐ., நீர்த்துப் போகச் செய்து விட்டது' என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் நிறைவுரையாற்றிய மூத்த தலைவர் அத்வானி, "சீனா, பாகிஸ்தான் எல்லை தாவா விஷயங்களில் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு பொறுப்பற்று நடந்து கொள்கிறது' என்று குற்றம்சாட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE