மாறுகிறதா மகளிர் மன நிலை?| Dinamalar

மாறுகிறதா மகளிர் மன நிலை?

Added : செப் 09, 2017
 மாறுகிறதா மகளிர் மன நிலை?பெண்கள், இறைவனின் அற்புதப் படைப்பு. பெண் இன்றி, எந்த ஒரு ஆணும், தன் வாழ்க்கையை நிறைவு செய்ய முடியாது. அந்த அளவுக்கு, பெண்களிடம் பொறுமை, அன்பு, காதல், வலிமை, நேர்மை, நல்லெண்ணம், மகிழ்ச்சி, இன்பம் உள்ளது.ஆண்களை விட, அதிக நல்ல இயல்புகள், குணங்கள், தோற்றம், பொலிவு, அழகு பெண்களிடம் அதிகம். அதனால் தான், அந்த காலம் முதல், இந்த காலம் வரை, கவிஞர்களின் புகழ்ச்சிக்கும், ஆண்களின் போற்றுதலுக்கும் பெண்கள் ஆளாகின்றனர்.ஆனால், சமீபகாலமாக, பெண்கள் மன நிலையில் மாற்றம் தென்படுகிறது. மாறி விட்டார்களா பெண்கள்... என, எண்ணத் தோன்றும் வகையில், அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.காலச் சூழ்நிலைகளால், பெண்களின் மனநிலை, சமீபகாலமாக மாறியிருந்தாலும், அதை இப்போதே மறந்து, பெண்கள் தங்களின் உயரிய பெண்மை பண்புகளுடன் விளங்க வேண்டும் என, வலியுறுத்தியே, இந்த கட்டுரையை, போலீஸ் அதிகாரியாக இருந்த நான் சமர்ப்பிக்கிறேன்.என் பணிக் காலத்தில், பலதரப்பட்ட பெண்களை சந்தித்துள்ளேன். அவர்கள் எல்லாரிடமும் மேலோங்கியிருந்த, இப்போதும் மேலோங்கியிருக்கும் நல்ல குணங்கள், இன்னும் வளர வேண்டும் என, வலியுறுத்தியே, இந்த கட்டுரையை வடிக்கிறேன்.பெண்களின் மன நிலை மாறுவதற்கு, பல விதமான காரணங்கள் இருக்கின்றன. கீழே குறிப்பிடும் அம்சங்களால் தான், பெண்களின் இயல்பில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், அவை மாற்றப்பட வேண்டும்...சுயக்கட்டுப்பாடு இல்லாத, கட்டுப்படுத்தி கொள்ளத் தெரியாத ஆண்களின் பாலியல் தாக்குதலுக்கு பலியாகும் பெண்களின் அவலம் பற்றி, செய்திகள் வெளியாகாத நாளே இல்லை.அது போல, கணவனை கைவிட்டு, பிற ஆணுடன் ஓடும் பெண்கள், கூலிப்படையின் உதவியோடு, கணவரை கொலை செய்யும் பெண்கள் போன்றோரையும் செய்தித் தாள்களில், சமூகத்தில் பார்க்க முடிகிறது.'அன்பு செலுத்துவதிலும், பழி வாங்குவதிலும் பெண்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கின்றனர்' என, ஓர் அறிஞர் சொன்னதை, இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.தான் அன்பு செலுத்தும் ஆண், பிறரால் பங்கு போடுவதை பெண்கள் விரும்புவதே இல்லை. இது, இயற்கை அவர்களுக்கு கொடுத்த வரம். அந்த இயல்பு தான், அவர்களை ஒரு குடும்பத் தலைவியாக இருந்து, கணவனையும், குழந்தைகளையும், பராமரிக்கும் மன பக்குவத்தையும், பொறுமையையும் கொடுக்கிறது.கடவுளின் பெருமைப்படத்தக்க படைப்பு தான் பெண். எல்லா இடத்திலும், தான் இருக்க முடியாது என்பதால் தான், தாயை படைத்தார் இறைவன்.ஆண் உட்பட, எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல... தொடர்ந்து, ஆறு நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார், கடவுள்.இதை பார்த்து கொண்டிருந்த தேவதை, 'ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நாட்கள்...' என்றது.அதற்கு கடவுள், 'இந்த படைப்புக்குள், நான் நிறைய நல்ல அம்சங்களை சேர்க்க வேண்டும். இந்த பெண் படைப்பு, பிடித்தது, பிடிக்காதது என, எதையும் பிரிக்காமல், கிடைப்பதை சாப்பிட வேண்டும்.'அடம் பிடிக்கும் குழந்தையை, வினாடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரை, எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்.'அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும், அவளே அவளை குணப்படுத்தி, ஒரு நாளைக்கு, 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது, அத்தனையும் செய்ய, அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்' என்றார்.'அத்தனைக்கும் இரண்டே கைகள் போதுமா கடவுளே...' என, தேவதை ஆச்சரியத்துடன் கேட்டது. ஆர்வத்துடன் லேசாக, படைப்பில் இருந்த அந்த பெண்ணை தொட்டு பார்த்தது.'ஏராளமான கடினமான பணிகளை கொடுத்துள்ளீர்கள், இந்த பெண்ணுக்கு, ஆனால், இவ்வளவு மென்மையாக படைத்திருக்கிறீர்களே...' என்றது, தேவதை.'இவள் உடலளவில் மென்மையானவள்; ஆனால், மனதளவில் பலமானவள். அதனால், எல்லா பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அதுமட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். துன்பம், அன்பு, கோபம் என, எல்லா உணர்வுகளையும், அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்' என்றார், கடவுள்.'கோபம் வந்தாலும், அதை சிரிப்பால் உணர்த்தும் தன்மை, இந்த படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாக்கப்படும் விஷயத்துக்காக, போராடி ஜெயிப்பாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், அன்பை மட்டுமே கொட்டுவாள்' என்றார்.இது, கற்பனையாக இருந்தாலும், உண்மையில், பெண்களின் இயல்பு இது தான். ஆனால், சமீபகாலமாக மாற்றம். ஏன்?ஒரு ஆணை, பெண் பார்த்தவுடனும் பிடித்துவிடக் கூடாது; பார்க்க பார்க்கவும் பிடித்துவிடக் கூடாது. அப்போது தான், அந்த பெண், தன்னை பாதுகாப்பாக வைத்திருப்பதாக அர்த்தம்.ஒரு ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் உள்ள ஆசை, ஈர்ப்பு, இயற்கை வகுத்த நியதி; இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. ஆண், 'அந்த' ஆசையை தன் கட்டுப்பாட்டில் வைத்து, வரம்பு மீறாமல் இருக்கும் வரை மனிதன்; வரம்பு மீறினால் மிருகம்.எந்த மனிதன், எந்த நேரத்தில் மிருகமாக மாறுவான் என்பதை, முன்னதாகவே தெரிந்து கொள்ளும் சக்தி யாருக்கும் இல்லை.உலகின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவரும், ஊரறிந்த ஆன்மிகவாதியும் கூட, இந்த உந்துதலுக்கு தப்பவில்லை என்பதை, இந்த சமுதாயம் கண்கூடாக கண்டுள்ளது.இந்த விஷயத்தில், பெண் முதலில் தோற்றுப் போகக் கூடாது; ஆணும், கட்டுப்பாட்டிலிருந்து தவறக் கூடாது.திருமணம் என்ற பந்தத்தில், சில பெண்களுக்கு ஏற்படும் சோதனை, அவர்களின் இயல்பை மாற்றி விடுகிறது. ஒரு பெண், ஆணிடம் தன் வாழ்க்கையை நம்பி ஒப்படைப்பதற்கு முன், பல விஷயங்கள் ஆராயப்பட வேண்டும்.அதைத் தான், பெண்ணின் பெற்றோர் தங்கள் பொறுப்பில் எடுத்து கொள்கின்றனர். ஆனால், அதில் வரதட்சணை என்ற வக்கிரம் புகுந்து விட்டதால், அதன் தரம் தாழ்ந்துவிட்டது.ஆனால், பெற்றோர் இல்லாத பெண்களின் நிலை... எண்ணிப் பார்க்கவே கடினமாக இருக்கிறது.மணமான பெண்களுக்கு, பெரும்பாலும் ஏற்படும் தொல்லைகளுக்கு, மற்றொரு பெண் தான் காரணமாக இருக்கிறார். அது, மாமியாராக இருக்கலாம்; மைத்துனி அல்லது நாத்தனாராக இருக்கலாம் அல்லது கணவனின் வாழ்க்கையை பங்கு போட முயலும், மற்றொரு பெண்ணாக இருக்கலாம்.பல குடும்பங்களில், மணமக்கள் பெற்றோரின் முரட்டு பிடிவாதமும், வீண் ஜம்பமுமே, பிரிவுக்கு காரணமாகி விடுகிறது. நம் குழந்தைகள், நம்மால் இந்த உலகுக்கு வந்தவர்களே தவிர, நமக்கு சொந்தமானவர்கள் இல்லை.எப்படிப்பட்ட நெருக்கமான தம்பதியாக இருந்தாலும் கூட, சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது, சாதாரணமானது தான். அது, குறுகிய காலத்திலேயே, தானாகவே மறைந்து விடும் தன்மையுடையதாகவே இருக்கும்.அத்தகைய சமயங்களில், ஊதிப் பெரிதாக்கும் உபத்திரவத்தை, பெரியவர்கள் செய்யக் கூடாது.திருமணமாகி, கணவன் வீட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மருமகள், ஒருவித அச்சத்தோடு தான், அந்த வீட்டினுள் நுழைகிறாள். அந்த அச்சத்தைப் போக்கும் மிகப்பெரிய பொறுப்பு, அந்த வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது.அன்பான மனைவி, அமைதியாக வடிக்கும் ஒரு துளி கண்ணீரில், கணவன் கசங்கிப் போய் விடுவான். அவளுடைய வாடிய முகம் ஒன்று போதும், அவனுடைய அன்றைய செயல்திறனை முடக்கிப் போட.ஆற்றல்மிக்க மனைவி அதிகம் பேசுவதுமில்லை; அஞ்சி நடுங்குவதுமில்லை. அன்பான, அமைதியான, அறிவாற்றல் மிக்க தன் சொற்களால், கணவனை ஆட்கொண்டு விடுவாள்.ஒரு ஆண், தன் பெற்றோருக்கும், உடன் பிறந்தோருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை, அவனுடைய மனைவி தன் பொறுப்பில் ஏற்று, செய்யத் துவங்கி விட்டால், கணவனின் இதயத்தில் மிக வலுவான இடத்தை பிடித்து விடலாம்.அப்படிப்பட்ட மனைவியிடம், ஒரு கணவன் அடிமையாக இருப்பதை கேவலமாக நினைப்பதுமில்லை. ஆணின் வெற்றிக்கு பின்னால், ஒரு பெண் இருப்பதாக சொல்வது, இத்தகைய பெண்களை தான்.'உங்கள் தொடர்புடைய பிரச்னையில், உங்களால் தீர்வு காண முடியவில்லை என்றால், நீங்கள் தான் பிரச்னை' என, பிரபல அறிஞர் ஒருவர் குறிப்பிடுகிறார்.சுவையான பழத்தில், வண்டு புகுந்து விடுவதற்கு, பழத்தை குற்றம் சொல்ல முடியாது. ஆனாலும், பழம் பழுது பட்டு போகிறதல்லவா... குற்றம் செய்தவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை, பாதிக்கப்பட்ட பெண்ணின் களங்கத்தையும், துன்பத்தையும் துடைத்துவிடப் போவதில்லை.உணர்ச்சியின் உந்துதலால், விளைவை பற்றி சிறிதும் சிந்திக்காமல் செய்யும் பாலியல் குற்றங்களை, தண்டனையின் கடுமையால் ஒழிக்க முடியாது. பெண்களின் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு, ஆணின் மிருக வெறியும், சமூக பொறுப்பின்மையும் தான் காரணம்.எனினும், அதிலிருந்து தங்களை காத்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்களும், தங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், கோடிக்கணக்கான ஆண்களும், இந்த சமுதாயத்தில் தான் இருக்கின்றனர்.தங்களை காத்துக் கொள்ளத் தவறிய பெண்களும், கட்டுப்படுத்திக் கொள்ளத் தவறிய ஆண்களும் தான், இந்த சமுதாயத்தை, ஒரு பாதுகாப்பற்ற சமுதாயமாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள், தங்களை திருத்தி கொண்டால் போதும்; இந்த சமுதாயம், பாதுகாப்பானதாக ஆகி விடும்.'உலகின் மிகச்சிறந்த சீர்திருத்தவாதி யார் தெரியுமா... தன்னைத்தானே திருத்தி கொண்டவன் தான். உலகம் திருந்த வேண்டுமா... உன்னை நீ திருத்திக் கொள். அடுத்த நிமிடம், ஒரு அயோக்கியன் எண்ணிக்கை குறைந்திருக்கும்!'இது, ஆங்கில கவிஞன் ஷேக்ஸ்பியர் கருத்து. எனவே, பெண்களே... உங்களின் இயல்பான மன நிலையை, எந்த சூழ்நிலையிலும் கைவிட வேண்டாம். கைவிட்டதாக கருதினால், மீண்டும் கைப்பற்றி கொள்ளுங்கள். ஏனெனில், உலகம் உங்களால் தான்!இ - மெயில்:spkaruna@gmail.com - மா.கருணாநிதி- - காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு),சமூக ஆர்வலர்We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X