பெரம்பலுார்: அரியலுாரைச் சேர்ந்த, 85 வயது முதியவர், 20 ஆண்டுகளாக கோவில்கள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, பசுமை காப்பாளராக திகழ்ந்து வருகிறார்.
சுற்றுச் சூழலை பாதுகாக்க, மழை பொழிவை அதிகரிக்க, சில ஆண்டுகளாக மரம் வளர்ப்பில் அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், எதிர்காலத்தில் மரங்களின் சேவை, நமக்கு தேவை என்பதை முன்கூட்டியே யோசித்து ஏழை முதியவர் ஒருவர், 20 ஆண்டுகளாக மரக்கன்றுகளை பல இடங்களில் நட்டு, வளர்த்து வருகிறார்.
அரியலுார் மாவட்டம், திருமானுார் அருகே கள்ளூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர், 20 ஆண்டு களாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அரசு துறை அலுவலக வளாகங்கள், பள்ளிகள், சாலையோரங்கள், கோவில் வளாகம் என, பல இடங்களில் பலவகையான மரக்கன்றுகளை நட்டு, சமூக பணியாற்றி வருகிறார்.
இப்படியாக கருப்பையா, இதுவரை, இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளார். தன் வீட்டு தோட்டத்தில் வேம்பு, புங்கன், வாகை, பூவரசு, புளியங்கன்று என, பலவகையான மரக்கன்றுகளை, 2 முதல், 3 அடி வளர்த்து பின், மேற்கண்ட இடங்களில் நட்டு, பராமரிக்கிறார்.
தினமும் அதிகாலை, 5:00 மணிக்கெல்லாம், ஒரு மஞ்சள் பையில் மரக்கன்றுகளுடன், ஏதாவது ஒரு ஊரில் நட்டு, அருகில் இருப்பவர்களிடம் தண்ணீர் ஊற்றி பராமரிக்குமாறு, சொல்லி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். எங்கு சென்றாலும் மதியம் வீட்டுக்கு வந்து, தன் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வார். இந்த பணியில், அவரது மகனும் உதவியாக இருந்து வருகிறார்.
வெளிமாவட்டங்களுக்கும் சென்று வந்த கருப்பையா, தற்போது வயது முதிர்வின் காரணமாக, அரியலுார் மாவட்டப் பகுதிகளில் மட்டும், மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
கருப்பையா கூறியதாவது: மனிதன், தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என இருக்காமல், சமூகத்தின் மீது சிறிதேனும் அக்கறை கொள்ள வேண்டும்.சமுதாயத்துக்காக, ஏதாவது செய்ய வேண்டும். 20 ஆண்டு களாக, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறேன். இதனால், இயற்கையை பாதுகாக்க முடியும் என நம்புகிறேன்.
இதற்காக, விதைகளை தரம் பிரித்து, உலர்த்தி, முளைக்க வைக்கிறேன். இன்று மரம் வளர்ப்பில் காட்டும் அக்கறையை, 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசும், மக்களும் காட்டியிருந்தால், இன்று தமிழகம் வறட்சியிலிருந்து மீண்டிருக்கும்.பெரம்பலுார் கலெக்டராக இருந்த தாரேஷ்அஹமது உட்பட பல கலெக்டர்களிடம் பாராட்டும், சான்றிதழும் பெற்றுள்ளேன்.
சாகும் வரை இந்த சமூகப் பணியை செய்வேன். இதற்காக, யாரிடமும் ஒரு பைசா வாங்க மாட்டேன். அப்படி வாங்குவது கூலிக்கு வேலை செய்வது போலாகும்; சமூக பணியாகாது. நான் கன்றுகளாக நட்டு, பெரிதாக வளர்ந்த மரங்களை மீண்டும் பார்க்கையில், எனக்குள் எல்லையில்லா மகிழ்ச்சி பிறக்கும். அதையே பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE