புதிதாய் பிறந்து வா பாரதி! | Dinamalar

புதிதாய் பிறந்து வா பாரதி!

Added : செப் 11, 2017

'எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவமெல்லாம்
பரிதி முன் பனி போல
நண்ணிய நின்முன்
இங்கு நசுத்திடல்
வேண்டும் அன்னாய்'

என்று நல்லவற்றையே வேண்டி, நல்லதையே சிந்தித்த எட்டயபுரத்துக் கவிஞன் பாரதியின் நினைவு நாள் நேற்று. ஆனால் அந்தக் கவியின் நினைவுகள் இல்லாத நாள் என்று?
இருந்த போது இறந்து பார் இறந்த பின்னும் இருந்து பார் என்று கூறுவதுண்டு. இறந்த பின்னும் வாழ்வாங்கு வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறான் முண்டாசுக் கவிஞன் பாரதி பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடச் செய்த மகா கவிஞன். "நான் நிரந்தர
மானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" எனச் சொன்ன கண்ணதாசனின் கால வரிகளை கொஞ்சம் கடன் வாங்கிக் கொள்ளலாம் நம் பாரதிக்கான வார்த்தைகளுக்காக.

பாரதி குரல் : அன்னியரால் அடிமைப் பட்டு கிடந்த வேளையில், அன்னிய மொழியால் மயங்கிக் கிடந்த நேரத்திலே, திக்கெங்கும் கொட்டு முரசே என்று ஓங்கி ஒலித்த குரல் பாரதியினுடையது. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' என்று கம்பீரமாக
கர்ஜித்தது அந்தக் கவியின் குரல். அந்த ஞானக் கவிஞனுக்கு எட்டு மொழிகள் தெரிந்திருக்கிறது.
அதனாலே தான் அவரால் தைரியமாக 'யாமறிந்த மொழிகளிலே' என்று கூற முடிந்தது.
ஆமாம் பாரதி யார்? இருபதாம் நுாற்றாண்டின்இனிமையான கவிஞன். சமூக அவலத்தை போக்க கவிதை என்னும் சவுக்கடியை சுழற்றிய வீரன். அடிமை தேசத்தின் அவல நிலையைப் போக்க
அவனியிலே குரல் கொடுத்தவன். மனித நல மருத்துவரானவன். நாட்டுப் பற்றை நயமாக ஊட்டியவன். எழுத்தாளன், பத்திரிகையாளன், புரட்சியாளன், சுதந்திர போராட்ட வீரன், விமர்சகன், இதழியலாளர் என வண்ணக் கலவைகள் கொண்ட ஓவியன். பாரதி யார் என்று
அவனிடம் கேட்டிருந்தால் 'எமக்குத் தொழில் கவிதை!இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்று பயோடேட்டா கொடுத்திருப்பான். அழியாத கல்வெட்டு காலத்தால் அழியாத கல் வெட்டு நம் பாரதி. தன்னம்பிக்கை விதைகளை வீதியெங்கும் அள்ளித் துாவியவன். நம்பிக்கை
யற்று சோர்வுறும் வேளைகளில் எல்லாம் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று சக்தி
கொடுத்தவன் பாரதி. ஏழைக் கவியாய் இருந்த போதிலும் கோழைக் கவியாய் இருக்கவில்லை. ஆக்கப்பூர்வ சிந்தனைகளை அள்ளித் தந்தது பாரதியின் கவிதைகள். வழிபாட்டுக்கு உரிய வராகவும், வழிகாட்டுதலுக்குரியவராகவும் விளங்குகிறான் பாரதி. பாரதியின் எழுதுகோலில் மட்டும் கலை மகள் என்ன மந்திரம் செய்தாள் என்றே தெரியவில்லை. அறிவின் ஊற்றாய் அவனின்
எழுத்துக்கள் மட்டும் தந்திரம் செய்கின்றதே. மீண்டும் பிறந்து வா பாரதி! இந்த தேசத்தைப் பழுது நீக்க புதிதாய்ப் பிறந்து வா பாரதி! காத்திருக்கிறோம்.
'அக்னிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கோர் காட்டிலே
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு. தழல்
வீரத்தில் குஞ்சொன்றும் மூப்பென்றுமுண்டோ?'
இந்த வரிகளுக்குள் உள்ளே
ஓராயிரம் தீப் பந்தங்கள் உள்ளடங்கி
யிருப்பதை அறிவீர்களா?

பாரதியின் இந்தக் கவிதையை பல கோணங்களில் நோக்க முடியும். கனவுகளை அடை காத்து, தக்க தருணத்தில்லட்சிய குஞ்சாய் வெளிப் படுத்த வேண்டும் என்ற சிந்தனையை துாவியவன்.
துணிச்சலை சுமந்தவர் "தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திட வேண்டும்" என்று கூறும் துணிச்சல் பாரதிக்கே உண்டு.

"நாணமும் அச்சமும் நாய்களுக்கே வேண்டும் "என்றும், 'பாதகம் செய்பவரைக் கண்டால் நீபயங் கொள்ளலாகாது பாப்பா! மோதி மிதித்து விடு பாப்பா -அவர்முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!' என்றும் கூறியதின் பொருள் என்ன தெரியுமா? உமிழ்ந்து விடுதலே அவன் வெட்கி தலை குனியச் செய்யும் என்ற சிந்தனை சரியானதன்றோ? ரவுத்திரம் பழகச் சொன்ன பாரதி, ஆண்மை
தவறாதே என்பதையும் ஆணித் தரமாக கூறுகிறான்.பின் வருவதை முன்
வருவதைக் கூறும் தீர்க்கதரிசி அவர். நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று குடு குடுப்பைக்காரனின் மூலம் சேதி சொன்னான். 'காசி நகர்ப் புலவர் பேசும் உரை தான் காஞ்சியிலே கேட்க வழி செய்வோம்' என்று சொன்னதன் எதிரொலியே இன்று எங்கெங்கும் ஓசை எழுப்பும் தொலை பேசி.இங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்தோமோ? கனவு மெய்ப் பட வேண்டும் என்று சொன்ன புதுமைக் கவிஞனின் கனவும் நனவானதே. 'சுதந்திரம் அடையுமுன்பே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று' என்று பாடிய தீர்க்கதரிசியால் சுதந்திரத்தைக் கண்டு ரசிக்க முடியவில்லை. சிங்களத் தீவிற்கோர் பாலம் அமைக்கச் செய்ய கனவு கண்ட புதுமையாளன். காந்த விழியும்,சாந்த மொழியும் அவனது அடையாளங்கள். தன் சீடன் பாரதிதாசனுக்காக தலைப்பாகை அணிந்து எடுத்த புகைப் படமே இன்றளவும் நம் அனைவருக்குமான தோற்றமாக நம் மனதில் பதிந்து விட்டது.
தமிழின் இலக்கணம் தமிழ் பாரதிக்கு கிடைத்த வரம் என்பதை விடதமிழுக்காக கிடைத்த வரம் பாரதி என்பதே பொருத்தமானது. தமிழுக்கே தனி விளக்கம் தந்தவன் பாரதி. கங்கை நதியை எப்படி கமண்டலத்தில் அடக்க முடியாதோ,அது போலத் தான் பாரதி என்னும் காட்டாற்று வெள்ளத்தை சில கவிதைகளால் மட்டுமே அடக்க முடியாது.சுதந்திர தாகத்தையும், தாக்கத்தை யும் விதைத்தவர்களின் பட்டியலில் பாரதியைக் கூறாமல் யாரைக் கூறுவது?
கவிதையால் கயவர்களைகதறி அழச் செய்தவன்.'செந்தமிழ் நாடெனும்
போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே! நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்! முப்பதுகோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்' என்பதின் மூலம் தேச ஒற்றுமையை
வலியுறுத்தியவன். பாரதியின் சிந்தையணுவிலும், ரத்தத்திலும் தேசம் என்னும் பாசம் கலந்தே இருந்தது. அதனால் தான் 'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே' என்று வீர முழக்கமிட முடிந்தது. 'மண்ணில் இன்பங்கள் பெற வேண்டி சுதந்திரத்தின் மாண்பை இழப்பீரோ?'என்ற வரிகள் நம் இந்திய தேசத்தை கூறு போட நினைக்கும் அரசியல் வியாதிகளுக்கு பொருத்தமானதாக இன்றும் பொருந்துகிறது என்றால், பாரதியை மெஞ்ஞானி என்று கூறலாம் தானே!

பெண்களின் காவலன் : கண்ணம்மாவின் காதலன் மட்டும் அல்ல... கண்மணிகளாம் பெண்மணிகளின் காவலனுமானவன். 'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்' என்றுஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்காய் குரல் கொடுத்தவன்.கற்பென்னும் நிலை வந்தால் அதை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவில் வைக்கச் சொன்ன மகான். இன்றைய சூழலைக் கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்தநிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று கொதித்திருப்பான்.மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதரறிவைக் கெடுத்தார் என்று குமைந்திருப்பான். புரட்சிக் கவிதைகளால் பெண்களை புது யுகம் படைக்க வைத்தவர் பாரதி. அதே வேளையில் ஆண் குலத்தையும் கிஞ்சித்தளவும் விட்டுக் கொடுக்க மனமில்லை அந்தக் கவிஞனுக்கு. அதனால் தான் 'எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே 'என்று தந்தையின் மாண்பினையும் சந்தடி சாக்கில் சிந்து பாடி இருக்கிறார்.
மனையறம் 'நின்னையே ரதி என்றுநினைக்கிறேனடி கண்ணம்மா! என்று பாடியவன். 'உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளி மயமானதடி! என்று பாடிய கவிஞன் 'வேரென நீ இருந்தால்
அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் 'என மனையறத்தின் மாண்பினை விளக்கும் பாங்கு அழகானது. 'வயிரமுடைய நெஞ்சு வேணும்இது வாழும் முறைமையடி பாப்பா!' என்ற பாரதியின்
வரிகளை அனிதா படித்திருந்தால் வேடிக்கை மனிதரைப் போல வீழ்ந்திருக்க மாட்டாள்..
புயலெனப் புறப்பட்டிருப்பாள். அறிவைத் திறப்பது மதியாலே என்று உணர்ந்திருப்பாள். தெய்வக் கவிஞன் இன்று இருந்திருந்தால் வாழ்தல் இனிது என்று மருத்துவர் அனிதாவை மறு மலர்ச்சி அடையச் செய்திருப்பான். ஓடி தானடா விளையாடச் சொன்னேன்...புளூவேல் விளையாட்டையா விளையாடச் சொன்னேன் என்று பதை பதைத்திருப்பான்.

மந்திர எழுத்து : ஒளி படைத்த கண்ணினராம் இளைய பாரதத்தைக் காக்க, 39 வயதில் உயிரைப்பறித்த காலனிடம் காலா உனை நான் சிறு புல்லென மிதிக்கிறேன்! என்றன் காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன் என்று அப்ளிகேஷன் போட்டிருப்பான். காலத்தால் அவன் கல்வெட்டானான். நுாற்றாண்டுகள் கடந்த பின்னும் மனிதர்களைப் பாதித்துக் கொண்டே இருக்கிறான்.'எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும்
பார்த்தியா மாடத்தி' என்று கரிசல் குயில் கிருஷ்ண சாமியின் கானம் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

- ம.ஜெயமேரி
ஆசிரியை, ஊ.ஒ.தொ.பள்ளி, க.மடத்துப்பட்டி
விருதுநகர் மாவட்டம்
bharathisanthiya10@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X