எதிர்மறை விமர்சனங்களை எப்படிக் கையாள்வது? | Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

எதிர்மறை விமர்சனங்களை எப்படிக் கையாள்வது?

Added : செப் 13, 2017 | கருத்துகள் (2)
Advertisement
எதிர்மறை விமர்சனங்களை எப்படிக் கையாள்வது?

இந்தவாரம் , எதிர்மறையான விமர்சனங்களை எப்படிக் கையாள்வது என்று சத்குரு விளக்குகிறார். அவதூறுகளை உதறிவிட்டு ஒதுங்குவது தீர்வல்ல என்று விளக்குவதோடு, புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ நம்மை பாதிக்காத நிலையை எப்படி எட்டுவது என்றும் வழிகாட்டியுள்ளார் சத்குரு.

உலகில் நீங்கள் துடிப்பாக செயல்படுபவராக இருந்தால், மக்கள் எல்லாவிதமான விஷயங்களையும் உங்கள்மீது வீசுவார்கள். வாழ்க்கை உங்கள்மீது என்ன வீசுகின்றது என்பதைப் பல சக்திகள் முடிவுசெய்கின்றன. ஆனால் அவற்றை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது நூறுசதம் உங்கள் கைகளில் உள்ளது. அசாத்தியமான சூழ்நிலைகளிலிருந்து மனிதர்கள் மேலெழுந்துள்ளார்கள். நெல்சன் மண்டேலா அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் வாழ்க்கையில் அவர் சந்தித்த விஷயங்களைச் சந்திக்க நேர்ந்திருந்தால் பெரும்பாலானவர்கள் நொறுங்கியிருப்பார்கள். எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்ப்பு சக்திகளையும் எப்படிக் கையாள்வது? அதற்கு 'அசத்தோமா சத்கமய' வேண்டும் - தொடர்ந்து உண்மையை நோக்கி, எது வேலை செய்கிறதோ அதை நோக்கி நகர வேண்டும். நாம் அக்கறையுடன் உருவாக்கிய ஒன்றில் மண்ணள்ளிப்போட முயற்சிப்பவர்கள் யாராவது எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள். கடந்த 27 வருடங்களில் நமக்கு எதிராக மிக மோசமான அவதூறு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. நம் முயற்சிகளைச் சீரழிக்கும் உறுதியுடன் தளராமல் சில சக்திகள் செயல்பட்டுள்ள போதிலும், ஈஷாவை எல்லா நிலைகளிலும் நாம் ஒரு மாபெரும் இயக்கமாக உருவாக்கியிருக்கிறோம். எதிர்மறை சக்திகளை நாம் சரியான முறையில் கையாளவேண்டும். இதைப்பற்றி தத்துவங்கள் சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதிகப்படியான தத்துவங்கள் மக்கள் மனங்களுக்குள் ஊடுருவி விட்டன, போதுமான புத்திசாலித்தனம் இன்னும் வரவில்லை. உயர்-பதவிகளில் இருக்கும் சட்டம்-ஒழுங்கை அமல்படுத்தும் அதிகாரிகள் கூட என்னிடம் இப்படிச் சொல்லியதுண்டு, “சத்குரு, உயர்ந்த மனிதர்கள் அனைவருக்கும் இது நிகழ்ந்திருக்கிறது. ராமனும் கிருஷ்ணனும் இதை எதிர்கொண்டார்கள். நீங்களும் இதைக் கடந்து செல்வீர்கள்!” நான் அதற்கு, “சட்டம் ஒழுங்கை சரிசெய்ய வேண்டிய உங்களிடம் நான் வருவது ராமர், கிருஷ்ணர் அல்லது இயேசு சந்தித்த அவலநிலையைக் கேட்பதற்கல்ல. அதுவே முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டேன்.

துரதிர்ஷ்டவசமாக, நல்லெண்ணம் கொண்டவர்கள் தங்கள் தத்துவங்களுக்குள் சுருண்டு கிடக்கிறார்கள். தீய எண்ணம் கொண்டவர்கள் செயலில் முனைப்பாக இருக்கிறார்கள். இதைத்தான் நம் நாட்டில் நாம் மாற்றவேண்டும். நல்லெண்ணம் கொண்டவர்கள் செயலில் இறங்கவேண்டும். தீய எண்ணம் கொண்டவர்களை, அவர்களுடைய எதிர்மறை உணர்வுகளில் அவர்களையே சுருண்டுவிடச் செய்யவேண்டும். இந்த தேசம் முன்னேறவேண்டும் என்று நாம் விரும்பினால், என்ன வேலை செய்யுமோ அதை நாம் அனைவரும் செய்யவேண்டும். ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் எதிர்ப்புமே நம் தேசத்தில் அதிகமாக இருக்கிறது, ஆக்கப்பூர்வமான செயல் மிகக்குறைவாகவே இருக்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் கொண்ட உணர்வுகளிலிருந்து நாம் இன்னும் மீளாதிருக்கிறோம். நம் தேசம் இயங்குவதை முடக்கும் மனிதர்களை நாம் இன்றும் கௌரவிக்கிறோம். சாலை மறியல், ரயில் மறியல், வேலை நிறுத்தம், கடையடைப்பு, இவையனைத்தும் நம்மை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்தபோது பொருத்தமான செயல்பாடுகளாக இருந்திருக்கலாம். ஆனால் நம் தேசத்தையே இன்று நாம் இயங்கவிடாமல் செய்வதில் என்ன அர்த்தமிருக்கிறது? ஒரு தேசத்தை இயங்கவிடாமல் தடுப்பது ஒருவிதமான திறமை என்றால், ஒரு தேசத்தை இயங்கச்செய்வது என்பது முற்றிலும் மாறுபட்டதொரு திறமை. எந்தவொரு கட்டத்திலும் இந்த தேசத்தில் பிரிவினைவாதத்தை எவராவது ஊக்கப்படுத்தினால், அவர் நம் தேசத்தின் தலைவராக மாறுவதற்கு வாய்ப்பே வழங்கப்படக்கூடாது. மற்றவர்களின் பிரச்சனைகளில் முதலீடு செய்யும் சக்திகள் இருக்கிறார்கள். இது மாறவேண்டும், இந்த தேசத்தில் செய்வதற்கு வேலை இருக்கிறது. முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் மனப்பான்மையை நம்மால் மாற்றமுடிந்தால், நம் தேசத்தில் பல விஷயங்கள் மாறும். இது அதிகாரப்பூர்வமான தலைவர்கள், தொழில் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், மற்றும் பிற தலைவர்களுக்கும் பொருந்தும். இப்படி தலைவர்களில் ஏறக்குறைய பாதிப் பேரை நாம் ஏற்கனவே தொட்டுவிட்டோம். அவர்கள், அவரவர் இருக்கும் இடங்களிலிருந்து ஒரு அமைதியான மாற்றத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த 12 வருடங்களில் இந்தியா நிறையவே மாறிவிட்டது. இந்த மாற்றம் மெதுவாக நடக்கிறது. தனிமனிதர்கள் தாங்கள் பார்த்து, புரிந்துகொண்டு, வாழ்க்கையை உணரும் விதத்தில் மாறும்போது, சமுதாயமும் மாறும்.

நீங்கள் தினமும் குறைந்தது 10 பேரைச் சந்திக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் யாரோ ஒருவரைச் சந்திக்கும்போது, ஒன்று அவர்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம், அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம், அல்லது அவர்களை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே கடந்துபோக அனுமதிக்கலாம். ஒவ்வொரு முறை உங்கள் முன்னால் யாரோ ஒருவர் வரும்போதும், அவர்கள்மீது நேர்மறையான தாக்கம் ஏற்படுத்துவது எப்படி என்று நீங்கள் பார்க்கவேண்டும். அவர்களை இன்னும் கொஞ்சம் சிரிக்க வைக்க முடியுமென்றால், அவர்கள்மீது நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தியுள்ளீர்கள் என்று அர்த்தம். குறைந்தபட்சம் இந்த அளவு நீங்கள் செய்யமுடியும். அவரைத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும், முன்பின் தெரியாதவர் என்றாலும், எதிரி தேசத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரைப் பார்த்து மனமார புன்னகை செய்யமுடியுமா? உங்களை வருத்திக்கொண்டு முகத்தில் ஒரு புன்னகையைக் காட்டுவது பற்றி நான் பேசவில்லை. நெஞ்சில் மகிழ்ச்சியில்லாமல் நாள் முழுக்க புன்னகை செய்திருந்தால் அது உங்களைக் கொன்றுவிடும். உள்ளத்தில் உவகை இருந்தால், இயற்கையாகவே முகத்தில் புன்னகை பூக்கும். நீங்கள் செய்யும் செயல் முக்கியமானது என்று நீங்கள் கருதினால், முதலில் நீங்கள் உங்கள்மீது வேலைசெய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் கணக்கெடுக்கலாமே? சென்ற மாதத்தைவிட இந்த மாதம் நீங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பான மனிதராக இருந்துள்ளீர்களா? இன்னும் கொஞ்சம் ஆனந்தமாக மாறியிருக்கிறீர்களா? விமர்சனங்கள் எப்படியும் உங்களைத் தேடி வரும். புகழாரங்களையும் பாராட்டுகளையும் நீங்கள் கேட்டு ரசித்தால், எதிர்மறை விமர்சனங்களால் பாதிப்புறுவதை நீங்கள் தவிர்க்கமுடியாது. வாழ்க்கைக்குள் ஆழமாக ஊடுருவிப் பார்க்கவேண்டும் என்றால், எவருடைய கருத்தும் உங்களுக்கு எவ்விதத்திலும் அர்த்தப்படக் கூடாது. வேலையும் செயலும் சார்ந்த விஷயங்களில் பிறர் கருத்துக்களை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். நீங்கள் யாராக இருக்கிறீர்கள், என்ன உருவாக்கவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறீர்கள், போன்ற விஷயங்களில் பிறர் கருத்துக்களுக்கு நீங்கள் எந்த மதிப்பும் தரக்கூடாது. இந்த இடத்திற்கு வருவதற்கு உள்நிலையில் போதுமான அளவு வேலை செய்யவேண்டியிருக்கிறது.

பெரும்பாலான மனிதர்கள் பிறர் கருத்துக்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறார்கள். பிறர் உங்களிடம் நீங்கள் எவ்வளவு அற்புதமானவர் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் மேகங்களில் மிதப்பீர்கள், வேறுவிதமாகச் சொன்னால் உடைந்துவிடுவீர்கள் -மேகவெடிப்பு! சமுதாயத்தில் வாழும்போது விமர்சனங்களை அப்படியே உதறிவிட்டுப் போகமுடியாது. அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தீர்வாகாது, அது ஒதுங்கித் தவிர்ப்பதாகிவிடும். உண்மையான பதில் வேண்டும் என்றால், உங்கள்மீது நீங்கள் வேலைசெய்ய வேண்டும். உங்களைச் சுற்றி நிகழும் விஷயங்களைச் சார்ந்திராத ஒரு உள்பரிமாணம் உங்களுக்குள் முதிர்ந்திட வேண்டும். உங்களுக்குள் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டால், பிறர் என்ன சொல்கிறார்கள் என்பது ஒரு பொருட்டாக இருக்காது. சிலர் நீங்கள் அற்புதமானவர் என்பார்கள், சிலர் நீங்கள் கொடூரமானவர் என்பார்கள்; சிலர் நீங்கள் செய்யும் செயல் அற்புதம் என்பார்கள், சிலர் அது பிரயோஜனமற்றது என்பார்கள் -எதுவும் பரவாயில்லை. எனக்கு பின்னால் வருவதைக் காட்டும் கண்ணாடியைப் பார்க்க நேரமிருப்பதில்லை, என் பார்வை எப்போதும் எதிரே வரும் சாலையின்மீது இருக்கிறது. கண்ணாடியில் எவரோ கோபமாக ஜாடை காட்டலாம், எவரோ பாராட்டலாம் -அது ஒரு பொருட்டல்ல. இது வெற்றியை ரசித்து, தோல்வியால் துவளும் நேரமில்லை. இது நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் ஈடுபடுத்தி சிறந்த விஷயங்களை உருவாக்குவதற்கான நேரம்.
மனித வாழ்க்கையே இவ்வளவு தான் -உண்மையில் நமக்கு முக்கியமானது எதுவோ, அதற்காக தொடர்ந்து முனைப்புடன் செயல்படுவது. என்னென்ன நடக்கிறது, நடக்காமல் போகிறது என்பது பல விஷயங்களைச் சார்ந்திருக்கிறது. ஆனால் நீங்கள் உண்மையில் அக்கறை கொண்டுள்ள விஷயத்திற்காக நீங்கள் பாடுபடவில்லை என்றால், அது வீணான வாழ்க்கைதான். நாடகம் துவங்கும்முன் அது சோகக்கதையாகிவிடும். மக்கள் தாங்கள் மதிப்பானதாகக் கருதுவதை செய்யாததாலேயே பல பிரச்சனைகள் எழுகின்றன. நீங்கள் உண்மையாகவே உருவாக்க விழையும் ஒன்றிற்காகப் பாடுபடுகிறீர்கள் என்றால், புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒரு பொருட்டாக இருக்காது. சூழ்நிலைகள் உங்களை பாதிக்காமல் உங்களால் அவற்றை கையாள முடிந்தால், நீங்கள் யாரென்பதைச் சூழ்நிலைகள் முடிவுசெய்யாமல் நீங்கள் சூழ்நிலைகளை முடிவுசெய்கிறீர்கள் என்றால், அதைத்தான் நான் வெற்றி என்பேன். அதற்காகத்தான் நீங்கள் வாழ்க்கையில் பாடுபடவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangaraj - Coimbatore,இந்தியா
14-செப்-201704:25:26 IST Report Abuse
Rangaraj நெல்சன் மண்டோலா பற்றி சாமியார் என்ன தெரிந்திருக்கிறார் அவர் சோதனையில் சிக்கிவேதனை அடைந்தவர் எல்லாவற்றிக்கும் மேலாக இவர் போலில்லாமல் உண்மையானவர் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் வெட்டி ஜபர்தஸ்து இல்லாதவர் இவர் கண்ணதாசன் வரிகளுக்கு பொருத்தமானவர் கண்களில் ஆயிரம் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது உடனிருப்போரையும் கருவறுக்கும் பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் (பைஜாமாவில்) மறைத்தானே இதய போர்வையில் மறைத்தானே நெஞ்சினில் நஞ்சை வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே இவன் நாடகம் என்னசொல்வேன் ஞானத்தங்கமே எவ்வளவு உண்மையான கருத்து
Rate this:
Share this comment
Saravanan - Dammam,சவுதி அரேபியா
18-செப்-201705:36:15 IST Report Abuse
SaravananRangaraj அவர்களே உங்கள் கருத்து மிகவும் நன்று . சதகுரு சொல்வது பொய் என்று சொன்னால், அவர் சொல்வதில் எது பொய் என்று சொல்லவும். ///சிலர் நீங்கள் அற்புதமானவர் என்பார்கள், சிலர் நீங்கள் கொடூரமானவர் என்பார்கள் சிலர் நீங்கள் செய்யும் செயல் அற்புதம் என்பார்கள், சிலர் அது பிரயோஜனமற்றது என்பார்கள் -எதுவும் பரவாயில்லை. எனக்கு பின்னால் வருவதைக் காட்டும் கண்ணாடியைப் பார்க்க நேரமிருப்பதில்லை, என் பார்வை எப்போதும் எதிரே வரும் சாலையின்மீது இருக்கிறது./// என்ன ஒரு அருமையான விளக்கம். எப்பொருள் யார் யார் வாய்........குறளுக்கேற்ப சொல்பவரை விட்டுவிட்டு கருத்தை மட்டும் பார்த்தால் எல்லாம் நன்றே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X