நதிகளைப் போல நாமும் பாதை மாறிவிட்டோமா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

நதிகளைப் போல நாமும் பாதை மாறிவிட்டோமா?

Added : செப் 13, 2017 | கருத்துகள் (6)
நதிகளைப் போல நாமும் பாதை மாறிவிட்டோமா?

நம் நதிகள் வறண்டு பாதை மாற வைத்துவிட்டோம். நாமும் நம் பாதையை மறக்கிறோமா? நம் முழுமுதல் மூலத்தை நாம் கண்டுகொள்வோமா, அல்லது பாதையில் தொலைந்து போவோமா என்ற கேள்வியை நம் சிந்தனைக்கு முன்வைக்கிறார் சத்குரு.

“வீரசைவம்” என்ற வார்த்தைக்கு சிவனின் மிக வீரமான பக்தர் என்று பொருள். வீரசைவர்களின் பாரம்பரியத்தில், மனிதர்களையும் முக்தியையும் குறிக்க எப்போதும் நதிகளையும் சமுத்திரத்தையும் உதாரணமாக பயன்படுத்துகிறார்கள். சிவனை சமுத்திரம் என்று சொல்கிறோம், தனிமனிதர்களை நதிகள் என்று சொல்கிறோம். அவர்கள் சொல்ல முயல்வதெல்லாம், நதிகள் கட்டாயம் சமுத்திரத்தை வந்தடையும் என்பதைத்தான். அது எவ்வளவு தூரம் சுற்றித்திரிந்து வந்துசேர்கிறது என்பதே கேள்வி.

ஆனால், ஒரு தலைமுறையாக, நதிகள் சமுத்திரத்தை அடையத் தேவையில்லை என்பதை நிரூபிப்பது போலவே நாம் நடந்துகொள்கிறோம். அவை வழியிலேயே வறண்டுவிடும் நிலையை உருவாக்குகிறோம். நாம் அப்படிப்பட்ட ஒரு தலைமுறையாக இருக்கிறோம். மனிதர்கள் வாழும் விதத்தின் பிரதிபலிப்பாகவே நதிகள் வறண்டு வருகின்றன. மனிதகுலத்தின் பெரும்பகுதி, அவர்களின் இருப்பின் இயல்பை மறந்து வருவதால்தான் நதிகள் வறண்டு வருகின்றன.

ஒரு காலத்தில், தேசம் முழுவதிலும் கடலை அடையாத நதி ஒன்றே ஒன்றுதான் இருந்தது. ராஜஸ்தானில் இருந்த லவனவதி நதி மட்டுமே பாதையில் பாலைவனத்திலேயே வறண்டுபோகும். ஆனால் இன்று, வருடத்தின் சில பருவங்களில் சமுத்திரத்தை அடையாத சில நதிகளையும், வருடம் முழுவதும் சமுத்திரத்தை அடையாத பல நதிகளையும் நாம் உருவாக்கி விட்டோம். கங்கையும் சிந்து நதியும், பூமியிலேயே மிக மோசமான அபாயத்தில் இருக்கும் நதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

காவிரி நதி 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததில் நாற்பது சதவிகிதம்தான் இப்போது இருக்கிறது. கடந்த கும்பமேளா உஜ்ஜெயினில் நடந்தபோது, க்ஷிப்ரா நதியில் நீரின்றி போனதால், நர்மதா நதியில் இருந்து செயற்கையாக தண்ணீர் பம்ப் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இன்று பல சிறுநதிகள் பெருநதிகளைக்கூட அடைவதில்லை. அவை பாதையிலேயே வறண்டுவிடுகின்றன. அமராவதி போன்ற நதிகள் “நிரந்தரமான” ஜீவநதிகளாக கருதப்படுகின்றன. எல்லாம் பாறைகளாக இருக்கும்போது, அது நிரந்தரமாகத் தானே இருக்கமுடியும் என்றே எண்ணத் தோன்றுகிறது!

இது நம் நதிகளைப் பற்றியது மட்டுமல்ல. இது நாம் இருக்கும் விதம் பற்றியது, நம் முழுமுதல் மூலத்தை நாம் கண்டுகொள்வோமா, அல்லது பாதையில் தொலைந்துபோவோமா? எவ்வளவு காலம் நாம் தொலைந்திருப்போம்? இயற்கையிலிருந்து எவ்வளவு தூரம் நாம் செல்கிறோமோ, அவ்வளவு தூரம் நாம் நம் இயல்பிலிருந்தும் பலவிதங்களில் விலகிச்செல்வோம். இதை மறுமுனையிலிருந்து பார்த்தாலும் பொருந்தும், நம் இயல்பிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறோமோ, அவ்வளவு தூரம் நாம் நம்மைச் சுற்றியுள்ள உயிர்களை உணரமுடியாமல் போய்விடுவோம்.

தண்ணீர் ஒரு வர்த்தகப்பொருள் அல்ல. அது உயிரை உருவாக்கும் மூலப்பொருள். மனித உடல் 72% தண்ணீராக இருக்கிறது. உங்கள் உடல் நீரால் நிறைந்திருக்கிறது. இந்த பூமியில் நாம் மிக நெருக்கமான உறவு பாராட்டும் நீர்நிலைகள் நதிகளே. ஆயிரமாயிரம் வருடங்களாக, இந்நதிகள் நம்மை அரவணைத்து ஊட்டி வளர்த்துள்ளன. நதிகளை நாம் அரவணைத்து ஊட்டி வளர்க்கும் காலம் வந்துவிட்டது.

நம் நதிகளை பாதுகாக்க அவசரத் தேவை இருப்பது குறித்து, நம் தேசத்தில் இருக்கும் அனைவருக்கும் நாம் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும். நதிநீரை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்பதை விடுத்து, நதிகளுக்கு எப்படி புத்துயிரூட்டுவது என்று நாம் பார்க்கவேண்டும்.

நீர் இருப்பதால் மரங்கள் இருக்கின்றன என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படியல்ல, மரங்கள் இருப்பதால்தான் நீர் இருக்கிறது. மரங்கள் இல்லாவிட்டால் சிறிது காலத்திற்குப் பிறகு நதிகள் இல்லாமல் போய்விடும். அரசாங்க நிலம் இருக்குமிடங்களில், மரங்கள் நட்டு காடு வளர்க்கவேண்டும். தனியார் நிலம் இருக்குமிடங்களில், மண்வளத்தை உறிஞ்சும் பயிர்களிலிருந்து மரத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண் காடுகளுக்கு மாறவேண்டும். இது விவசாயிக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார லாபத்தையும் ஈட்டிக் கொடுக்கும். ஐந்து வருடங்களில் அவர்களுடைய வருவாய் இரட்டிப்பாகிவிடும். இதனை பத்திலிருந்து பதினைந்து வருடங்களில் அமல்படுத்தக்கூடிய ஒரு செயல்திட்டமாக நாம் மாற்றிவிட்டால் நம் நதிகளில் குறைந்தது 15 முதல் 20 சதவிகிதம் நீரோட்டம் அதிகரிப்பதை நாம் காணமுடியும்.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X