அப்பா ரியல் ஹீரோ...மகன் காமெடி நாயகன் : கலாய்க்கிறார் 'டார்லிங்' பாலா| Dinamalar

அப்பா ரியல் ஹீரோ...மகன் காமெடி நாயகன் : கலாய்க்கிறார் 'டார்லிங்' பாலா

Added : செப் 13, 2017
அப்பா ரியல் ஹீரோ...மகன் காமெடி நாயகன் : கலாய்க்கிறார் 'டார்லிங்' பாலா

தொலைக்காட்சி சீரியலில் துவங்கி, 'குட்டிப்புலி'யாய் சினிமாவில் நுழைந்து, 'திருடன் போலீஸ்' ஆட்டம் ஆடி, தமிழக மக்களின் மனதில் 'டார்லிங்' ஆக இடம் பிடித்திருக்கும் காமெடி நாயகன். சீரியலில் போட்டி போட்டு வெற்றி பெற்று, சினிமாவில் காமெடியில் கலக்கி கொண்டிருப்பவர். ''உருவ அமைப்பை வைத்து காமெடி செய்வதில் உடன்பாடு இல்லை,'' என கூறும் காமெடி கலக்கல் நாயகன். எவர் பாணியும் இல்லாமல் தனக்கென்று தனிப்பாணியை உருவாக்கி கோலிவுட்டில் சிங்கநடை போடும் 'சிரிப்பு நாயகன்' பாலா உடன் நேர்காணலின் போது எழுந்த சிரிப்பலைகள்...
* நீங்களும் மதுரைக்காரரா?அட ஆமாங்க. நானும் தான். மதுரை பக்கம் சோழவந்தான் தான் நம்மூரு. அப்பா ரங்கநாதன் ரியல் எஸ்டேட் பணி, அம்மா சாந்தி அரசுப்பள்ளி சத்துணவு அமைப்பாளர். படிப்புக்காக பரவைக்கு வந்தோம். பள்ளி, கல்லுாரி எல்லாமே இங்கே தான்.
* நடிப்பு ஆர்வம்?அப்பா ஒரு திவீர சினிமா ரசிகர். ஜாக்கிசான், விஜயகாந்த் படங்களில் வரும் ஆக்ஷனை விரும்பி பார்ப்பார். எல்லா படங்களுக்கும் என்னையும் கூட்டிட்டு போவார். பள்ளி, கல்லுாரியில் ஆண்டு விழா, சுதந்திர தின விழாவில் நடக்கும் டிராமாக்களில் கண்டிப்பாக என்னுடைய பங்களிப்பு இருக்கும். சின்ன வயதிலே எல்லாரையும் கலாய்ச்சுட்டு இருப்பேன். அந்த காமெடி பேச்சு தான் என்னை நடிகனாக்கியது.
* சீரியல் வாய்ப்பு?'கனாக்காணும் காலங்கள்' சீரியலுக்கான ஆடிசன் மதுரையில் நடந்தது. 'இங்க மட்டும் ஓவரா வாய் பேசுற, அங்க போயும் பேசுன்னு' நண்பர்கள் தான் ஆடிசன் போக வச்சாங்க. போகும் போது, விளையாட்டத் தான் போனேன். ஆனால் மேடையில் மற்றவர்கள் வெற்றி பெற, வெறித்தனமாக நடித்ததைப் பார்த்த போது, எனக்குள் நாமும் கண்டிப்பாக வெற்றி பெற்று, பெரிய நடிகனாக வேண்டும் என்ற வெறி வந்தது. அந்த வெறியில் கிடைத்தது தான் 'கனாக்காணும் காலங்கள் கல்லுாரி' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு. சீரியலில் என் முகம் தெரிய காரணமானவர்கள் சீரியல் இயக்குனர்கள் ரமணனும், ஜெரால்டும் தான்.
* நடிகனாக, உங்க காதலும் காரணமா?எப்படிங்க கரெக்டா கேக்குறீங்க. காதலிக்க ஆரம்பிச்சு நாலாவது நாளே நம்மாள வீட்டுக்கு கூட்டுட்டு போனவன் நான். அப்போ காதலி, இப்போ மனைவி. அவங்க தான் எனக்காக அந்த சீரியல் பார்த்து, அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் ரெடி பண்ணி, அப்ளிகேஷன் போட்டாங்க. அதுக்கு அப்புறம் தான் ஆடிஷன்... தேர்வு எல்லாமே. என்னோட முதல் வெற்றிக்கு காரணம் என் மனைவி ஹேமாவதி தான்.
* சீரியல் டூ சினிமா வாய்ப்பு ?சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது, முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தில் காமெடி கேரக்டர் கிடைத்தது. அதன்பின் திருடன் போலீஸ், பண்ணையாரும் பத்மினியும், டார்லிங், கோ -2, கவலை வேண்டாம், ராஜா மந்திரி, அதே கண்கள், புருஸ்லீ, நகர்வலம், தல அஜீத்தின் வேதாளம், மலையாளத்தில் 'கோதா', கூட்டத்தில் ஒருத்தன் என ஓடிக் கொண்டிருக்கிறேன்.
* பார்த்து, ரசித்து, வியக்கும் காமெடி நடிகர்?வடிவேல். இந்தியாவில் தலைசிறந்த பத்து நடிகர்களில் வடிவேலும் ஒருவர். அவர் சிரித்தால், நாமும் சிரிப்போம். அவர் அழுதால் நம் கண்களிலும் கண்ணீர் வரும். 'வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்க... ' போன்ற அவரின் சினிமா பட வசனங்கள் இல்லாமல் தமிழக மக்களுக்கு எந்த ஒரு நாளும் கழியாது.
* காமெடியில் உங்க ஸ்டைல்?ஏய் மண்டையா, சொட்டை தலையா, பன்னி மூஞ்சி வாயா என உருவமைப்பை வைத்து காமெடி செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நம் வீட்டிலும் யாரோ ஒருவர் சொட்டை தலையா இருப்பார். அவர்கள் மனமும் புண்படும் அல்லவா. இதுவரை நடித்துள்ள படங்களில் அப்படி ஏதாவது பேசியிருந்தாலும், இனிவரும் படங்களில் அப்படி நடக்காமல் பார்த்து கொள்வேன்.
* ஹீரோவாக நடிக்கும் ஆசை இருக்கா?கண்டிப்பாக இருக்கு. எல்லாருக்குள்ளும் ஒரு ஹீரோ இருக்கான். அழகர்சாமியின் குதிரை, இம்சை அரசன் 23 ம் புலிகேசி படங்கள் போல, எனக்கேற்ற கதையம்சம் உள்ள படங்கள் கிடைத்தால் ஹீரோவாக நடிப்பேன்.
* ட்ரீம் கேர்ள்?எப்பவுமே அஞ்சலி தாங்க... (என் மனைவிடம் மட்டும் சொல்லிடாதீங்க என சிரிக்கிறார்). தமிழ் எம்.ஏ., படத்தில் இருந்து, அவங்கள ரொம்ப பிடிக்கும். பக்கத்து வீட்டுப் பொண்ணு போல ஒரு தோற்றம். நான் ஹீரோவாக நடித்தால் அவங்க தான் ஹீரோயின் .
* நடித்து வரும் படங்கள்?உள்குத்து, இடம் பொருள் ஏவல், கொடிவீரன், ஆளுக்குப் பாதி, ஏமாளி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X