மக்களாட்சியின் இன்றைய நிலை இன்று சர்வதேச மக்களாட்சி தினம்

Added : செப் 15, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 மக்களாட்சியின் இன்றைய நிலை   இன்று சர்வதேச மக்களாட்சி தினம்

சுதந்திர இந்தியா, நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பின்பற்ற வேண்டும் என தலைவர்கள் விரும்பினர். ''சுதந்திர இந்தியாவில் அனைவரும் சமம். குறிப்பிட்ட வயது வந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை'' என பிரதமர் நேரு கூறியபோது பதறிப்போனார் கவர்னர்
ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன்.

அறநுாறு ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வாக்குரிமை என்பது படிப்படியாகத்தான் கொடுக்கப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பிறகே பெண்களுக்கு
வாக்குரிமை வழங்கப்பட்டது. இந்தியாவில் போதிய கல்வியறிவு இல்லை. அவர்களுக்கு வாக்குரிமையின் மதிப்பு தெரியாது. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை" என்று எச்சரித்தார். பின்னர் "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு" என்ற பெயரினைப் பெற்றது.


ஜனநாயகம் என்ற பதம் மிகவும்


பழமையானதாகும். உலகில் காணப்படும் அரசியல் முறைக் கோட்பாடுகளுள் ஜனநாயகக் கோட்பாடும் ஒன்று. பொதுவாக ஜனநாயகம் என்பது மக்களாட்சியைக் குறிக்கும். மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ்(Kratos)என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ்
என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள்.
மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காரணம், மக்களின் பங்களிப்பு இதில் அதிகம்.

எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆவான் என ஐ.நா. பொதுச்சபைத் தீர்மானத்தில் கூறப்பட்டுஉள்ளது. இது ஜனநாயக ஆட்சிமுறையால் மட்டுமே சாத்தியமாகும்.
பேராசிரியர் சீலி “ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்கமுறைமை. இதில் ஒவ்வொருவரும் இதன் பங்குதாரர்கள்” எனக் கூறுகின்றார். பார்கர் என்பவர் “கலந்துரையாடலிலான அரசாங்க முறை" என்கின்றார் .

"மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ வரையறுத்தார். அரிஸ்டாட்டில் "மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் உங்களுக்காக நடத்தும் ஆட்சி" என்று கூறினார். டைசி என்பவர் "ஜனநாயக முறையில் ஆளும் அதிகாரம் சட்டரீதியாக
சமூகத்திலுள்ள எல்லா அங்கத்தவர்களிடமும் முழுமையாக அளிக்கப்படும்.


ஜனநாயகத்தின் பண்புகள்


ஜனநாயகம் சிறப்பாக இயங்க சில அடிப்படை அம்சங்கள் தேவை. சமத்துவமும் சுதந்திரமும் ஜனநாயகத்தின் முக்கிய அடிப்படைத் தத்துவங்கள். அதாவது, ஜனநாயக அரசாங்கமானது, தன் மக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார வாய்ப்புக்களை சமமாக ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஒரு மனிதன், சட்டத்துக்கு உட்பட்டு, அவனது வளர்ச்சிக்கு அவசியமானது எனக் கருதுபவற்றை மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி செய்வதற்கான உரிமை சுதந்திரமாகும். இதில் அரசியல், பொருளாதார, சமய சுதந்திரம் ஆகியவை அடங்கும். மக்களாட்சியில் கருத்து
சுதந்திரம் ஒவ்வொருக்கும் உண்டு என்பதால் சகிப்புத் தன்மையும் அவசியம். சகிப்புத் தன்மையில்லாவிட்டால் ஜனநாயகம் தோற்றுவிடும். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

மக்களாட்சியில் குறிப்பிட்ட வர்க்கமோ அல்லது வர்க்கங்களோ முதன்மையானதாக கருதப்படுவதில்லை. அதேநேரத்தில், மக்களாட்சி நிர்வாகத்தில் பெரும்பாலானோரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தாக வேண்டும். ஜனநாயகத்தில் இறுதியான அதிகாரம் மக்களிடமே உள்ளது. ரூசோவின் வார்த்தையில் சொல்வதாயின் 'உண்மையான ஜனநாயகம் என்பது மக்களின் குரலே'.


இன்றைய நிலை


"ஜனநாயக நாட்டின் மக்கள், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுப்பர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகவே ஆட்சி செய்ய வேண்டும். இங்கு மக்கள் பிரதிநிதி என்பவர் மக்கள் சேவகரே"... இப்படி, கோட்பாட்டு ரீதியான அழகான விளக்கம் சொல்லப்பட்டாலும் கூட, ஆட்சிக்கு வரும் வரை மக்கள் சேவகர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாறி விடுவதனைக் காண்கிறோம்.

ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சியை “மக்களுடைய, மக்களிலாலான, மக்களுக்கான அரசாங்கம்” என்கிறார். இன்றைக்கு, “மக்களாட்சி என்பது மக்களுக்காக” என்பது எந்த அளவில் சாத்தியமாக இருக்கிறது? கெட்டுப்போக இருக்கும் உணவுத்தானியத்தை உடனடியாக ஏழைகளுக்குப்
பங்கிட்டுக் கொடுக்குமாறு சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் கூறியது.

"உச்சநீதிமன்றம் கருதுவதுபோல் பங்கிட்டு கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. நீதிமன்றங்கள் நிர்வாகத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது” என்றனர் மத்தியில் ஆளுபவர்கள். இன்றைய மக்களாட்சி நிலைக்கு இது ஒரு உதாரணம்.அரசமைப்புச் சட்டத்தில் பெரும்பாலான அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டுவிட்டன. நாளடைவில் மாநிலம் வசம் இருந்த சில அதிகாரங்களும் மத்திய அரசின் கைக்குப் போனது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிலைகுலைக்கும் அதிகாரத்தையும் மைய அரசு கொண்டிருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரும் தருணத்தில், அரசியல் நிர்ணய சபையில் இது தொடர்பான விவாதம் நடந்தபோது "இந்த விதிமுறை தவறாகப் பயன்படுத்தப்படலாம்" என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்தனர். அதற்கு அம்பேத்கர் பதிலளிக்கையில், "இது ஏட்டில் முடங்கிக் கிடக்கும் ஒரு விதிமுறையாக இருக்குமே தவிர நடைமுறையில் பயன்படுத்த வேண்டிய நிலைமை வராது" என்றார். ஆனால் இதுவரை மத்திய அரசுகளால் நுாற்றுக்கு மேற்பட்ட தடவைகள் மாநில அமைச்சரவைகள் நீக்கப்பட்டும் சட்டசபைகள் கலைக்கப்பட்டும் இருக்கின்றன.


ஏற்றத்தாழ்வுகள்


சமுதாயத்தில் உள்ள எல்லாவிதமான ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படும் என்பதில் தொடங்கி, தொழில் வளர்ச்சியும், பொருளாதார வசதிகளும் ஒரு சிலரிடம் குவிந்துவிடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுவரை, பல்வேறு கோட்பாடுகளை மக்களாட்சி மலர்வதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்திருந்தாலும், அவை நிறைவேற்றப்படவில்லை. குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கை நிலை பெரிதாக உயரவில்லை என்பதோடு, இருந்த வசதிகள்கூட நாளுக்கு நாள் சரிந்து வருகின்றன என்பதே நிஜம்.

இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை 1946 டிசம்பர் 9 கூடியது. அப்போது தலைவராக இருந்த டாக்டர் சச்சிதானந்த சின்கா, அமெரிக்க நீதிபதி ஜோசப் ஸ்டாரி என்பவரின் அறிவுரையை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். "உயர்தர மேதைகளின் சீரிய திறமை யினால் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆழ்ந்த லட்சியங்களும் அறிவுகூர்ந்த விதிமுறைகளும் அதில் மிகுதியாக இடம்பெற்று இருக்கலாம்.

ஆனால், ஆட்சியாளர்கள் செய்கிற குற்றங்களினாலும், அரசியல்களத்தில் குவிந்துவிடும் ஊழல் மேடுகளாலும், அதைவிட மக்கள் காட்டுகிற அக்கறையின்மையாலும் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்துக்கு அழிவு ஏற்படலாம். மக்கள்தான் ஒரு மக்களாட்சியின் உண்மையான காப்பாளர் களாக இருக்க முடியும்.

மக்களுடைய முயற்சியால், கடும் உழைப்பால், தன்னலமற்ற போராட்டங்களால் பல நாடுகளில் மக்களாட்சிகள் நிறுவப்பட்டன. ஊழல் நாயகர்களிடம் நாடாளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால், மக்களாட்சியின் கடைசிக் காலம் நெருங்கி விட்டதாக ஆகிவிடும்" என்றார்.


சமுதாய மக்களாட்சி


1949 நவம்பர் 24ம் நாள் முழுமைபெற்ற அரசமைப்பு சட்டத்தை சமர்ப்பித்துப் பேசிய அம்பேத்கர், "இந்தியாவில் அரசியல் மக்களாட்சி வந்துவிட்டது. ஆனால் சமுதாய மக்களாட்சி இங்கு இல்லை. சமுதாய அமைப்பில் சமத்துவமான மக்களாட்சி நிலை இல்லையென்றால் அரசியல் மக்களாட்சி வெகுநாளைக்கு நீடிக்காது. இந்த நாட்டில், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாக்கப்பட்டு விட்டன. அதேபோல் பொருளாதாரத் துறையில் செல்வச்
செழிப்பி ல் வாழ்பவர்களின் உல்லாசபுரியும், ஏழ்மைச் சேற்றில் அழுந்தி உணவில்லாமல்,
உடையில்லாமல் அல்லற்படும் ஏழைகளின் சேரிகளும் அடுத்து அடுத்து இருக்கின்றன. இது சமத்துவமல்ல" என்றார்.

அத்தோடு, "தற்போது வெள்ளையர் அரசாங்கம் வெளியேறிவிட்ட நிலைமையில், நம் மக்களாட்சியின் குறைபாடுகளுக்கு வேறு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது. நம் குறைபாடுகளுக்கு நாமேதான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.." என்று எச்சரித்தார்.

அரசியல் நிர்ணயசபையின் முதல் கூட்டத்தில் தலைவர் சச்சிதானந்த சின்கா கூறிய அறிவுரையையும், அரசியல் நிர்ணயசபையின் கடைசிக் கட்டத்தில் அம்பேத்கர் அளித்த எச்சரிக்கையும் இந்திய மக்களாட்சி நிலைமைக்குப் பொருந்துவதாக இருக்கின்றன. சமத்துவம், சுதந்திரம், வாழ்வுரிமை, மனிதமாண்பு ஆகியவை ஏழையின் வீட்டுப்பக்கமும் எட்டிப்பார்க்கவேண்டும். அப்போதுதான் மக்களாட்சி சிறக்கும்.

-ப. திருமலை

பத்திரிகையாளர்

84281 15522

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
15-செப்-201708:17:36 IST Report Abuse
Darmavan லார்ட் மவுண்ட் பேட்டர்ன் சொன்னது இப்போது பலித்து விட்டது.. இந்த ஆயுதம் படிப்பறிவில்லாத உணர்ச்சி வசப்பட்ட ஜாதி மத வெறியர்கள் கையில் இருக்கிறது. அதனால் நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்....ஊழலும் .திருட்டுத்தனமும் ,பதவி வெறியும் மக்களை வாட்டுகின்றன ..என்று தணியும் இந்த கொடுமை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X