சென்னை: ''அடுத்த வாரத்தில், முதல்வரும், துணை முதல்வரும், வீட்டுக்கு அனுப்பப்படுவர்,'' என, தினகரன் தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. எங்களால் முதல்வரான பழனிசாமி, எங்களை மிரட்டுகிறார். அதர்மம், துரோகம் வென்றதாக சரித்திரம் கிடையாது. ஒரு வாரத்தில், இந்த துரோகத்திற்கு, சட்டசபையில் மூடுவிழா காண்போம்.
தி.மு.க., எங்களது பிரதான எதிர்க்கட்சி. அவர்களுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, எந்த கூட்டணியும் கிடையாது. 'முதல்வர் மீது நம்பிக்கை இல்லை' என, 19 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். தேர்தல் வர வேண்டும் என்பதற்காக, தி.மு.க., நீதிமன்றம் சென்றது. எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு, சட்டசபையை கூட்ட முடிவு செய்திருப்பதை அறிந்து, நீதிமன்றம் சென்றோம்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன், யாரால் எம்.எல்.ஏ.,வானார்; அமைச்சரானார் என்பது, அனைவருக்கும் தெரியும். அவருக்கு பதில் கூறும் தகுதி, எனக்கு இல்லை.
அவர் யாரால் அமைச்சரானார் என்பது, அவரது மனசாட்சிக்கு தெரியும். ஒன்றிய செயலராக இருந்த வைத்திலிங்கம், யாரால் எம்.எல்.ஏ.,வானார்; அமைச்சரானார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வரும், துணை முதல்வரும் சரியான நடிகர்கள். பதவிக்காக, எதையும் சொல்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.