கோவை: கோவையில் ஆட்டோ டிரைவர் 'ஹெல்மெட்' அணியவில்லை என்று, எஸ்.ஐ., அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வாகன சோதனை:
கோவை, ஆலாந்துறையை சேர்ந்தவர் கருணாகரன், 40. இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கடந்த, 13ம் தேதி மாலை சிறுவாணி மெயின் ரோடு, காருண்யா நகர் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காருண்யா நகர் போலீஸ் எஸ்.ஐ., சங்கரநாராயணன், ஆட்டோவை நிறுத்தினார். பின், கருணாகரனிடம் லைசன்ஸ், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார்.
அபராதம்:
அதன்பின், 'ஹெல்மெட்' அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ஆட்டோ டிரைவர் கருணாகரனுக்கு, 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அபராதம் விதிக்கப்பட்ட சார்ஜ் ஷீட், 'வாட்ஸ்அப்' உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆட்டோ டிரைவருக்கு 'வித்-அவுட் ஹெல்மெட்' என கூறி, அபராதம் விதித்தது வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறுதலாக...
கோவை எஸ்.பி., மூர்த்தியிடம் கேட்டபோது, ''சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட எஸ்.ஐ.,யிடம் விசாரிக்கப்பட்டது. ஆட்டோ டிரைவர், சீருடை இல்லாமல் வாகன ஓட்டி வந்துள்ளார். அதற்காகத் தான், 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அதில், 'யூனிபார்ம்' என்பதற்கு பதிலாக, 'ஹெல்மெட்' என்று தவறுதலாக எழுதிவிட்டார். அந்த 'சார்ஜ் ஷீட்' தான் வைரலாகி வருகிறது. 'ஹெல்மெட்' அணியாததற்கு, 100 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும்'' என்றார்.