தமிழக மாணவரை தரம் தாழ்த்தாதீர்!

Added : செப் 16, 2017 | கருத்துகள் (3)
Share
Advertisement
  தமிழக மாணவரை தரம் தாழ்த்தாதீர்!

கடந்த, 2011ல், இந்திய மருத்துவ கவுன்சில் கூடி, மருத்துவப் படிப்பிற்கான பாடத்திட்டத்தை புதுப்பிக்க, 17 ஆண்டுகளுக்கு பின், முடிவு செய்தது. அறிவியல் ஒவ்வொரு நொடியும் புத்துயிர் பெற்றுக் கொண்டிருக்கும், 21ம் நுாற்றாண்டில், உயிரைக் காக்கும் மருத்துவ படிப்பிற்கு, 17 ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாதது, மன்னிக்க முடியாத குற்றம்.
ஜி.எஸ்.டி.,யின் நோக்கம், தேசிய அளவில், ஒரு பொருளுக்கு ஒரே வரி, ஒரே விலை. அது போல, தேசிய அளவில், மருத்துவக் கல்லுாரியில் சேரும் மாணவர்களின் திறன், ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும் என்பதற்காக தான், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான, 'நீட்' நடத்தப்படுகிறது.அந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் தர வரிசைப்படியே, மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்படுவர் என, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சிகளும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த இதர கட்சிகளும், இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பை எதிர்க்கவில்லை.
'நீட்' தேர்வு, 2016ல் நடத்தப்பட்ட போது, 'எங்கள் மாநிலத்திற்கு ஓராண்டு விலக்கு வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, தமிழக அரசு பெற்றது.மிகவும் பின் தங்கிய பீஹார், ஒடிசா மற்றும் உத்தரகண்ட் போன்ற மாநில மாணவர்கள், 'நீட்' தேர்வை தைரியமாக எதிர்கொள்ளும் போது, நம் மாணவர்களால் எழுத முடியாது எனக் கூறி, ஓராண்டு அவகாசம் கேட்ட, தமிழக அரசின் செயல், நம் மாணவர்களுக்கு அவமானம் அல்லவா!
நம் மாணவர்கள், கல்வித் தகுதி அற்றவர்களா... ஆம் எனில், இதற்கு யார் பொறுப்பு?
கடந்த, 2010ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் என, நான்கு பாடத்திட்டங்கள் இருந்தன.ஒவ்வொன்றையும் இயக்க, தனித்தனி அமைப்புகள், இயக்குனர்கள், தனித்தேர்வுகள் இருந்ததை, அன்றைய, தி.மு.க., அரசு ஒருங்கிணைத்து, ஒரே பாடத்திட்டமாக, சமச்சீர் பாடத்திட்டம் என, அறிமுகம் செய்தது.
அந்த திட்டம் பாராட்டக்கூடியது; ஆனால், அதில் தொலைநோக்கு பார்வையில்லை.தமிழக முதல்வராக இருந்த, காமராஜர், 1959ல் போராடி தான், ஐ.ஐ.டி., தொழிற்கல்வி நிறுவனத்தை சென்னைக்கு கொண்டு வந்தார். '500 ஏக்கர் நிலம் வேண்டும்' என, பரிந்துரைக்குழு கேட்ட போது, 'இதோ... ராஜ்பவன் பக்கத்தில், 630 ஏக்கர் இருக்கிறது' என்றார்.
'எங்களுக்கு வற்றாத நீர் வேண்டும்' என, கேட்ட போது, அக்கரையில் இருந்து தனிக்குழாய் போட்டு, தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டார். 'எங்களுக்கு தடங்கல் இல்லா மின்சாரம் வேண்டும்' என, கேட்ட போது, 'தருகிறோம்' என, ஒப்பந்தம்
போட்டுக் கொடுத்தார்.
இத்தனையும் எதற்காக... நம், தமிழக மாணவர்கள், சொந்த மாநிலத்திலேயே, ஐ.ஐ.டி.,யில் படிக்க வேண்டும் என்பதற்காக தானே! ஆனால் நடந்தது என்ன...கடந்த, 20 ஆண்டுகளாக, ஆண்டுக்கு, 2.5 சதவீத தமிழக மாணவர்களே, சென்னை, ஐ.ஐ.டி.,யில் படிக்கின்றனர்.
நம் தமிழகத்தில் நிலவிய, நான்கு விதமான பாடத்திட்டங்களும், தேர்வு மற்றும் மதிப்பீடு முறைகளுமே, இதற்கு காரணங்களாகும்.தமிழக பாடத்திட்டத்தில் படித்து, 2016ம் ஆண்டில், 8.40 லட்சம் பேர், பிளஸ் 2 தேர்வு எழுதியதில், 5.95 லட்சம் பேர், 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.அவர்களில், 3,261 மாணவர்கள், கணிதத்தில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர். இவ்வளவு மதிப்பெண் இருந்தும், 13 மாணவர்களே, சென்னை, ஐ.ஐ.டி.,யில் சேர முடிந்தது. ஏன் என அரசும், கல்வியாளர்களும் சிந்திக்கவில்லை!இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஐ.ஐ.டி., இல்லாத ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, சென்னை, ஐ.ஐ.டி.,யில் ஆண்டுக்கு, 28 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர்.இது எப்படி சாத்தியமானது?படிக்காத மேதை காமராஜர், நம் மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் படிக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில், சென்னைக்கு, ஐ.ஐ.டி.,யை அறிமுகம் செய்தார்.
அது போல, ஆந்திர முதல்வராக இருந்த, என்.டி.ராமராவ், 'எங்கள் மாநிலத்தில் இல்லாவிட்டால் என்ன... சென்னைக்குச் சென்று, ஐ.ஐ.டி.,யில் படிக்க, எங்கள் மாநில மாணவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்' என, ஆராய்ந்தார்.மாநில பாடத்திட்டத்தை, மத்திய, என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்திற்கு இணையாக, 1988ம் ஆண்டே, அதாவது, 19 ஆண்டுகளுக்கு முன்னரே அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்தார்.
இதுவல்லவோ தொலைநோக்கு பார்வை!இதே தொலைநோக்கு பார்வையுடன், 2010 ஆண்டே, சமச்சீர் பாடத்திட்டத்தை, மத்திய, என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்திற்கு இணையாக மாற்றியிருந்தால், நம் மாணவர்களுக்கு இந்த அவமானம் நேர்ந்திருக்காதே!கடந்த, 2010ம் ஆண்டுக்கு முன், 150, சி.பி.எஸ்.இ., பள்ளிகளே தமிழகத்தில் இருந்தன; இப்போது, 750 பள்ளிகள் உள்ளன. இது எப்படி சாத்தியமானது?
சமச்சீர் பாடத்திட்டம் தாழ்ந்தது என, மக்கள் கருதி, எப்போது, சி.பி.எஸ்.இ., பள்ளியை நோக்கி செல்ல ஆரம்பித்தனரோ, அப்போதே, தமிழக அரசு விழித்து, சிந்தித்து, சமச்சீர் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்க வேண்டாமா!பதினான்கு ஆண்டுகள் பழமையான, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றியிருக்க வேண்டாமா... இன்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகளும், அன்றே சத்தம் போட்டு, அரசின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டாமா?கிராமப்புற மாணவர்களுக்கு தீங்கு இழைத்து விட்டனர் என, இன்று கூவும் அனைவரும், ஒன்றை மறந்து விட்டனர். வசதியற்ற கிராமப்புற மாணவர்கள் அதிகம் படிப்பது, அரசு பள்ளிகளில் தான் என்பதை மறந்து விட்டனர்.கடந்த, 20 ஆண்டுகளில் அரசு பள்ளியில் இருந்து, அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்து படித்தவர்கள், வெறும், 0.7 சதவீதத்தினரே. மேலும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் அதற்கும் குறைவே.அதிக பலன் பெற்றதெல்லாம், தனியார் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களே. அப்படியிருக்க, தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை தனிமைப்படுத்துவது எவ்வகையில் நியாயமானதாகும்?அவர்களும் நம் பிள்ளைகள் தானே... வேண்டாம் என்றால், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, தடையில்லா சான்றுகளை ஏன் வழங்கினர்? 'நவோதயா' பள்ளிகளுக்குத் தடை விதித்தது போல, இதற்கும் தடை விதித்திருக்கலாமே!நாங்கள் திறமையற்றவர்கள் அல்ல என, நிரூபிக்கும் வகையில், தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.ஆனால், அகில இந்திய தர வரிசையில் நம் மாணவர்கள் முதல், 250ல் கூட வராதது வேதனைக்குரியது.அரசும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஏற்படுத்திய அத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 3,534 இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 2,224 பேர், படிக்க இடங்களை பெற்றுள்ளனர்.அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை நிச்சயம் கூடும்.ஓராண்டு மட்டுமே நீட்டிப்பது என, உச்ச நீதிமன்றம், 2016ல் உத்தரவு போட்டவுடன், '2017 முதல், 'நீட்' தேர்வு உண்டு' என்பது உறுதியாகி விட்டது. மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய சிறப்பு பயிற்சியை தமிழக அரசு, முன்னரே கொடுத்திருந்தால், இப்போதைய குழப்பமான நிலை ஏற்பட்டிருக்குமா?
'நீட் தேர்வு கூடாது' என, கூறுவோருக்கு ஓர் கேள்வி... அகில இந்திய மருத்துவ கவுன்சில், மருத்துவப் படிப்பிற்கான பாடத்திட்டத்தை, 2016ம் ஆண்டு முதல்
கடினமாக மாற்றி விட்டது.
'நீட்' தேர்வை கூட எழுத முடியாத நம் மாணவர்களால், மருத்துவம் படிக்க இடம் கிடைத்தால், புதிய பாடத்திட்டத்தை எவ்வாறு பயிலுவர்... அவர்களுக்கு என, பழைய பாடத்திட்டம் இருக்க வேண்டுமென போராடுவீரா?அரசு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்காததால், இவ்வாண்டு இரண்டு வகை மாணவர்கள் உருவாகினர். 'நீட்' தேர்வு வராது என நம்பி, பிளஸ் -2 தேர்வுக்கு மட்டுமே சிறப்பாக படித்தவர்கள், ஒரு வகையினர்.'நீட்' தேர்வுக்காக மட்டுமே தன் கவனத்தை முழுமையாக செலுத்தி, பிளஸ்- 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள், இரண்டாவது வகையினர். இந்த இரண்டு பிரிவினரில், ஏதாவது ஒரு பிரிவினர், இந்த ஆண்டு பாதிக்கப்படத் தான் போகின்றனர்.எந்த ஒரு மாற்றம் ஏற்படும் போதும், ஒரு சிலர் பாதிக்கப்படுவது இயற்கையே. ஆனால், தமிழக அரசு, மத்திய அரசு, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், தெரிந்தே இந்த நிலைமையை உருவாக்கி, மாணவச் செல்வங்களை குழப்பி, அவர்களின் கனவுகளை கலைத்து விட்டன.அர்த்தமற்ற போராட்டத்தால், தமிழக மாணவர்கள், பொது போட்டித் தேர்வுக்கு தகுதியற்றவர்கள் என்பதை பறை சாற்றி விட்டோம். இனி நாம் என்ன செய்ய வேண்டும் என, சிந்திக்க வேண்டும்.அவசர அவசரமாக, பாடத்திட்டத்தை மாற்றுவது நல்லதன்று. முதலில் தேர்வு முறையில் மாற்றம் வேண்டும். மாணவன் சிந்தித்து பதிலளிக்கும் திறனை மேம்படுத்தும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.இதற்கு முதலில் தேவை, முறையான பயிற்சி. எல்லாவற்றுக்கும் மேலாக, 'உங்களால் முடியும்' என, மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கை. அரசு மட்டுமின்றி, நாம் அனைவருமே, இதை செய்ய கடமைப்பட்டுள்ளோம். செய்வோமா!
இ மெயில்: atbbose@gmail.com- ஏ.டி.பி.போஸ் -சமூக ஆர்வலர்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
13-நவ-201703:12:23 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே மிக தெளிவான கருத்தை பதிவிட்டுள்ளீர்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-செப்-201707:04:27 IST Report Abuse
spr மிகச் சிறப்பான கருத்துக்கள் சொன்ன விதம், துணிச்சல் பாராட்டுக்குரியது தமிழகத்து இளைஞர்களுக்கு இன்று கசப்பாகத் தோன்றினாலும், நெடுநாளைய பலன் கருத்து ஏற்றுக் கொண்டால் நல்லது இன்று மாணவர்களுக்கு வேண்டுவது அரசியல் விழிப்புணர்வு அதனை அளிக்க ஏற்ற தலைமை இல்லை
Rate this:
Cancel
Radha Ramesh - Manama,பஹ்ரைன்
19-செப்-201701:01:42 IST Report Abuse
Radha Ramesh Nandru சொன்னீர்கள் . புரியுமா? காலம் bhadil சொல்லட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X