அரசியல்வாதிகளே...திருக்குறள் படியுங்கள் : மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்| Dinamalar

அரசியல்வாதிகளே...திருக்குறள் படியுங்கள் : மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்

Added : செப் 17, 2017 | கருத்துகள் (2)
அரசியல்வாதிகளே...திருக்குறள் படியுங்கள் : மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்

உலகப்பொதுமறை திருக்குறளை, ஐ.நா., சபையின் யுனெஸ்கோ அங்கீகரிப்பதற்கான அரிய முயற்சியில் ஈடுபட்டு, உலகெங்கும் திருக்குறள் பெருமையை பரப்பி வருகிறார் இந்திய வம்சாவளி தமிழர் ஆறுமுகம் பரசுராமன். இவர் மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர். உலகிற்கே முன் மாதிரியாக அந்நாட்டு கல்வி முறையை மாற்றிக்காட்டியவர்.ஆரம்ப பள்ளி ஆசிரியர், பின்னர் அரசியல், பதிமூன்று ஆண்டு காலம் அமைச்சர், பின்னர் உலக வங்கி, யுனெஸ்கோவில் இயக்குனர், இப்போது உலகம் முழுக்க பொதுச்சேவை என இந்த 66 வயது மனிதரின் சாதனைகள் எண்ணிலடங்கா!

மொரீஷியசில் தமிழ் பண்பாட்டையும், இந்து கோயில்களையும் கட்டி காப்பவர். மனசு முழுக்க மாரியம்மனை நினைத்து வழிபடும் பக்தர். பழநிக்கும், திருத்தணிக்கும் காவடி எடுத்து வருபவர் என்று, இந்த மனிதநேயரின் மறுபக்கம் வித்தியாசமானது.
மதுரை வந்த இவருடன் ஒரு நேர்காணல்...
* தமிழகத்தில் உங்கள் பூர்வீகம் எது? எனது மூதாதையர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள். பிழைப்பு தேடி 1884ல் மொரீஷியஸ் சென்றவர்கள். வேலையில் உறுதி, விடாமுயற்சி, மனதில் இறைபக்தி கொண்டு வாழ்ந்தவர்கள். மாரியம்மன், முருகன் எங்கள் விருப்ப கடவுள்கள். தமிழகம் விட்டு செல்லும் போதே, பலர் சிறு சுவாமி விக்ரகத்தை எடுத்து சென்றுள்ளனர். அதனை வீட்டுக்கு வீடு கோயில் கட்டி வழிபடுகின்றனர். நாங்கள் ஏழைகள். என் அம்மா பள்ளிக்கூடம் செல்லவில்லை. அப்பா ஆரம்ப கல்வி மட்டுமே. ஆனால் என் அம்மாவால் அந்நாட்டு கல்வி அமைச்சரை உருவாக்க முடிந்தது. என் அம்மாவே என் சக்தி.
* நீங்கள் அங்கு அரசியலில் குதித்தது எப்படி? இப்போது மொரீஷியசில் ஆட்சியில் உள்ள சோஷிலிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவன் நான். பள்ளி ஆசிரியராக இருந்தேன். அந்த அனுபவங்கள் கல்வியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. 31 வயதில் தேர்தலில் போட்டியிட்டேன். ௧௪ ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்தேன்; அதில் 13 ஆண்டுகள் கல்வி, கலாச்சார அமைச்சர்.
* மொரீஷியஸ் கல்வித்திட்டம், யுனெஸ்கோ அங்கீகரித்து முன்மாதிரி ஆனது எப்படி? நான் கல்வி அமைச்சராக 1983ல் பொறுப்பேற்ற போது, கல்விச்சூழல் மோசமாக இருந்தது. நாட்டின் கல்வி கொள்கையும் மோசம். அரசில் நிதி பற்றாக்குறை, ஆசிரியர்களுக்கு சம்பளமில்லை. முதலில் பாடத்திட்டத்தையே மாற்றினேன். 'ஒயிட் காலர்' வேலைக்கு தயாராவதை விட, மாணவனை சுயமாக சிந்தித்து, முன்னேறுபவனாக, மாற்றும் கல்வி முறையை கொண்டுவந்தேன். கல்விக்கான நிதியை குறைக்க கூடாது என அரசில் தீர்மானம் நிறைவேற்றினோம். உலக வங்கியை அணுகி ஒப்பந்தம் செய்து நிதி பெற்றோம். 'பத்தாண்டு செயல்திட்டம்' வடிவமைத்து களத்தில் இறங்கினேன். அப்படி கல்வி சீரமைப்பு செய்ததால், இன்று மொரீஷியசில் 'சைபர் சிட்டி' உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தனிநபர் வருமானம் 10 மடங்கு உயர்ந்துள்ளது. உலக வங்கி, யுனெஸ்கோ எங்கள் கல்வி முறையை பாராட்டி அங்கீகரித்துள்ளது. * தமிழகத்தில் பள்ளி பாடத்திட்ட மறுசீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன. உங்கள் அனுபவத்தை இக்குழுவிடம் பகிர்ந்து கொள்வீர்களா? தமிழக பாடத்திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், நான் விருந்தினராக வந்து எனது கருத்துக்களை முன்வைத்துள்ளேன். அவர்கள் ஆலோசனை கேட்டால் வழங்க தயாராக உள்ளேன்.
* தமிழக பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? எனது வேர்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இங்கு கல்வி சிறக்க வேண்டும் என விரும்புகிறேன். உலகம் எப்படி மாறி வருகிறது என்பதை அறிந்து, தமிழகம் தனது கல்வித்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
* மொரீஷியசில் தமிழர்களே தமிழ் பேசுவது இல்லை என்கிறார்களே?நாங்கள் தமிழை விரும்புகிறோம். எல்லா தமிழர்களும் பேசுவது இல்லை; ஏனெனில் அதற்கான வாய்ப்பு இல்லை. எழுத, படிக்க தெரியும். வேறு எந்த நாட்டிலும் இல்லாதவாறு, பல மொழி பயிற்றுவிக்கும் நாடு மொரீஷியஸ். ஆங்கிலம், அரசு மொழி. கிரியோல் என்பது தாய்மொழி. ஆங்கிலம், பிரெஞ்சு அதிகம் பேசப்படுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, உருது என பல இந்திய மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆரம்ப பள்ளி முதல் பல்கலை வரை தமிழில் படிக்கலாம். * சாதனை அமைச்சரான நீங்கள் அரசியலில் இருந்து விலக காரணம் என்ன? இன்றும் எனது கட்சி தான் ஆட்சியில் உள்ளது. நான் தேர்தலில் தோற்றதே இல்லை. இப்போது நினைத்தாலும் அமைச்சராகலாம். என்றாலும் என் லட்சியம் நிறைவேறி விட்டதால், அரசியலில் ஓய்வு பெற்று விட்டேன். வேறு துறைக்கு செல்வோமே என, பத்தாண்டுகள் யுனெஸ்கோவில் கல்வி இயக்குனராக பணிபுரிந்தேன். ஆப்ரிக்காவில் கல்வி ஆலோசகராக, பாரீசில், யுனெஸ்கோவின் கல்விக்கான செயலராக பணிபுரிந்தேன். இந்தியாவிலும், யுனெஸ்கோ இயக்குனராக இரண்டாண்டுகள் பணிபுரிந்துள்ளேன்.
இப்போது 'குளோபல் ரெயின்போ பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கி, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறேன். மொரீஷியசில் 1100 பேருக்கு, இலவச செயற்கை கால்கள் தந்துள்ளேன். இந்தியாவிலும், எனது சேவையை விரிவுப்படுத்த உள்ளேன்.
* குறிப்பிட்ட காலம் அரசியல் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றுள்ளீர்கள். அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வயது நிர்ணயிக்க வேண்டுமா? அப்படி அரசியல் சட்டத்தில் இல்லை; எனவே கருத்து சொல்ல விரும்பவில்லை. * அரசியல்வாதிகளுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை அரசியல்வாதிகள் அனைவரும் திருக்குறளை முழுமையாக படிக்க வேண்டும். தமிழ் தந்த பெரும் கொடை திருக்குறள். என்னை கவர்ந்த புத்தகம் இது.திருக்குறளை உலகளாவிய தளத்திற்கு எடுத்துச்செல்ல, முதலில் மொரீஷியசில் மாநாடு நடத்தினேன். கடந்த ஆண்டு சர்வதேச மாநாட்டை, தமிழகத்தில் நாகர்கோவிலில் நடத்தினேன். அடுத்த ஆண்டு பிரிட்டனில் நடக்கிறது. 2020ல் பாரீசில் மாநாடு நடத்தி, யுனெஸ்கோவில் திருக்குறளுக்கு நிரந்தர இருக்கை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளேன்.
* அண்மையில் நடிகர் கமலஹாசனை சந்தித்தீர்களே. அரசியலில் இறங்குவது குறித்து ஆலோசனை வழங்கினீர்களா?கமல் எனது 25 ஆண்டுகால நண்பர். சமூக சேவை செய்வதில் விருப்பம் உள்ளவர். அரசியலில் ஈடுபடுவது குறித்து அவர் ஏதும் என்னிடம் கூறவில்லை. இவ்வாறு கூறினார்.கருத்து பரிமாற aparsu@gmail.com
குட்டி நாடு மொரீஷியசை கல்வி வள முன்மாதிரி நாடாக மாற்றிய, ஆறுமுகம் பரசுராமனை, தமிழக பாடத்திட்டக்குழுவில் நிரந்தர கவுரவ ஆலோசகராக அரசு நியமிக்கலாமே. அவரும் உதவ தயாராக இருக்கிறார். செயலர் உதயசந்திரன் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் தமிழக கல்வி திட்டம் மேம்பாடு அடைந்தால், நல்லது தானே!We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X