கவர்மென்ட் நம்பரு... கலெக்ஷனுக்கு பம்பரு!

Added : செப் 18, 2017
Share
Advertisement
கவர்மென்ட் நம்பரு... கலெக்ஷனுக்கு பம்பரு!

காய்ச்சலில் படுத்துக் கிடந்த மித்ராவைப் பார்க்க வந்திருந்தாள் சித்ரா; ஓரளவுக்கு தெம்பாகி, எழுந்து உட்கார்ந்திருந்தாள் மித்ரா.
''என்னடி... எனக்குத் தெரிஞ்சு, இத்தனை நாளா நீ படுக்க மாட்டியே. என்னாச்சு உனக்கு?'' என்று மித்ராவின் தலையை ஆறுதலாய்த் தடவியபடி கேட்டாள் சித்ரா.
''ஆமாக்கா... என்னன்னே தெரியலை; நான் 'டெங்கு'வா இருக்கும்னு பயந்துட்டு இருந்தேன்; ஆனா, இதுவும் கொசுக்கடில வந்த வைரஸ் காய்ச்சல்னு தான் சொல்றாங்க. சிட்டிக்குள்ள எங்கேயுமே கொசு மருந்து, மருந்துக்குக் கூட அடிக்கிறதில்லை; அதுலயும் காசு தான் அடிக்கிறாங்க. அது சரி... ஊருக்குள்ள என்னக்கா விசேஷம்... அந்த லேடி எஸ்.ஐ., - ஏ.சி., மேட்டர் என்னாச்சு?''
என்று ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.
''அது விசாரணை முடிஞ்சிருச்சு. டி.ஜி.பி., அறிக்கை வந்தால் தான், என்ன நடவடிக்கைன்னு தெரியும்கிறாங்க. அநேகமா இங்க இருந்து அவரை தூக்கிருவாங்கன்னு சிட்டி போலீஸ்ல பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''அவரு, மன்னார்குடி கும்பலுக்கு ரொம்ப நெருக்கமானவராச்சே. இன்ஸ்பெக்டரா இருந்து, ஏ.சி.,யா புரமோஷன் கிடைச்சு, டிரான்ஸ்பர் ஆகிப்போன ரெண்டே மாசத்துல, பத்து லட்சத்துக்கு மேல கொடுத்து தான், மறுபடியும் சிட்டிக்கு வந்தார்னு நான் கேள்விப்பட்ருக்கேன்,'' என்றாள் மித்ரா.
''ஓ... அதனால தான், வலுவா காசு வர்ற, 'சென்ட்ரலை' வாங்கிட்டு வந்தாரா; ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துல, இவரு போயி, கூட்டத்தைக் கலைக்க வேண்டிய தேவையே இல்லை; அந்த இடத்துல, அப்பிடி புகுந்து போறதுக்கு என்ன தேவை இருக்குன்னு சோஷியல் மீடியாவுல வெளுத்து வாங்குறாங்க,'' என்றாள் சித்ரா.
மித்ராவின் அம்மா, இருவருக்கும், 'ப்ளாக் டீ'யுடன், கொஞ்சம் பிஸ்கட்களை வைத்து விட்டுப் போனார்.
''அக்கா... பிஸ்கட்டைப் பார்த்தவுடனே, நம்ம கார்ப்பரேஷன்ல இருக்குற, 'டைகர் பிஸ்கட்' இன்ஜினியர் ஞாபகம் வந்துச்சு. மொத்தமா இங்க இருந்து பெட்டியைத் தூக்கி அனுப்பி விட்டாங்களே; குடும்பத்தோட போய், யாரோ ஒரு வி.ஐ.பி., கால்ல விழுந்து, மறுபடியும் இங்க வந்தாரில்லையா. அவருக்கு இப்போ ஒரு மரியாதையும் இல்லியாம். சும்மா வந்து போறாராம். எல்லா, 'பவரும்' நம்ம, 'தூத்துக்குடி ரிடர்ன்' இன்ஜினியர்ட்ட தான் இருக்காம்,'' என்றாள் மித்ரா.
''அவரை மட்டுமில்லை மித்து... அந்த, 'ஸ்மார்ட் சிட்டி'க்கு முக்கியமான, 'போஸ்ட்டிங்'ல போட்ட லேடியை, பல முனைத் தாக்குதல்ல காலி பண்ணுனதும் அதே இன்ஜினியர் தான்னு, அந்த பொண்ணோட அப்பா, பயங்கரமான கோவத்துல இருக்காராம். அவரோட, 'மூவ்' என்ன பண்ணப்போகுதுன்னு தெரியலை,'' என்றாள் சித்ரா.
''நினைச்சே பார்க்க முடியலை... ரெண்டாவது வருஷமா, நம்ம கார்ப்பரேஷனுக்கு, 'ஸ்காட்ச்' பவுண்டேஷன் அவார்டு கிடைச்சிருக்கு. சென்ட்ரல் மினிஸ்டரே, நேரடியா நம்ம கமிஷனரைக் கூப்பிட்டு, வாழ்த்துச் சொன்னாராமே,'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து... அந்த அமைப்பு, ரொம்பவே, 'ஜென்யூனா' தான், 'செலக்ட்' பண்ணுவாங்களாம். நம்ம கார்ப்பரேஷன்ல வித்தியாசமான திட்டங்களைச் செயல் படுத்துறதுக்கு தான், விருது கிடைச்சிருக்காம். மொத்தம் 16 திட்டங்களை அனுப்புனதுல, 10 திட்டங்களை தேர்ந்தெடுத்திருக்காங்க. அதுல, காந்திபுரம் 'டாய்லெட்'டும் ஒண்ணு. அதாவது, தூய்மைக்கு தூய்மை; வருமானத்துக்கு வருமானம்கிற 'கான்செப்ட்'ல ஜெயிச்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''சென்ட்ரல் கவர்மென்ட்டைப் பொறுத்தவரைக்கும், எதையும் 'ஓசி'யா தரக்கூடாதுங்கிறாங்க; நம்மூர்ல குப்பை அள்ளுறதுக்கு, மாசம் 50 ரூபா போடச் சொல்லி, சென்ட்ரல் கவர்மென்ட்ல பிரஷர் தர்றாங்களாம். இங்க என்னடான்னா, மாசத்துக்கு 10 ரூபா குப்பை வரி போட்டதுக்கே பல பேரு போராட்டம் நடத்த ஆரம்பிச்சிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
''அவுங்க போராடுறாங்க... ஆனா, இந்த கவர்மென்ட்ல எத்தனை போராட்டம் நடந்தாலும் ஒண்ணும் ஆகாதுன்னு தெரிஞ்சே, மக்களே தானா வரி கட்ட ஆரம்பிச்சிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
''நம்மூர்ல நாலு மண்டலத்துலயும் ஓரளவுக்கு வரி வசூலாயிருதாம். ஆனா, 'சவுத் ஜோன்'ல மட்டும், வரி, கூடுதல் டெபாஸிட் கேட்டுப் போனா, 'அண்ணனுக்கு போன் பண்ணவா'ன்னு கேட்டு மெரட்டுறாங்களாமே. கார்ப்பரேஷன் ஆபீசர்க புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.
''அங்க மட்டுமில்லை... எல்லா ஏ.ஆர்.ஓ.,க்களுமே கார்ப்பரேஷன் ரெவின்யூ ஆபீசர் மேல செம்ம கடுப்புல இருக்காங்க. இவரோட கெடு பிடி ஒரு பக்கம், மக்கள் எதிர்ப்பு மறுபக்கம்னு, இந்த வேலையே வேண்டாம்னு ஓடுற கண்டிஷன்ல பல பேரு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
பேசிக்கொண்டே 'டிவி'யைப் போட்டு, ஒவ்வொன்றாய் மாற்ற ஆரம்பித்தாள் மித்ரா.
''மித்து... எம்.எல்.ஏ., கார்த்திக்குக்கு 'ஆக்சிடெண்ட்' ஆச்சே தெரியுமா... அந்த இடத்துல இதோட, ஏகப்பட்ட விபத்து நடந்திருச்சு. ஒரு குழந்தை கூட இறந்திருச்சு. பெர்க்ஸ் ஸ்கூல்ல இருந்து, திருச்சி ரோட்டுக்கு திரும்புறதுக்காக அந்த இடத்துல ஒரு 'கேப்' விட்டுருக்காங்க. அதை மூடிட்டு, 'லெப்ட்'ல போய், சிங்காநல்லுார் குளத்துகிட்ட திரும்புறது மாதிரிச் செய்யணும்னு மக்கள் எல்லாரும் கேக்குறாங்க,'' என்றாள் சித்ரா.
''அதை செய்யுறதுல போலீசுக்கு என்ன பிரச்னை?'' என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் மித்ரா.
''துட்டு தான் பிரச்னை... அங்க இருக்குற சில அபார்ட்மென்ட் காரங்களுக்காகத்தான் அந்த 'கேப்'பை போலீஸ் விட்டு வச்சதா சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.
''நம்ம ஊருல எது எதுல காசு பாக்குறதுன்னு வரைமுறையே இல்லாமப் போச்சு... போன வாரம் தான் பேசுனோம். ஜெயில்ல மாசத்துக்கு ரெண்டு கைதிங்க சாவுறாங்கன்னு. இந்த மாசம், 13 நாள்ல நாலு பேரு இறந்திருக்காங்க. அத்தனைக்கும் காரணம், சாப்பாட்டுல நடக்குற ஊழல் தான்னு சொல்றாங்க,'' என்று வருத்தப்பட்டாள் மித்ரா.
''ஜெயிலு, ஜி.எச்., இந்த மாதிரி இடத்துல ஊழல் பண்றது, உசுரோட விளையாடுறது தான்,'' என்றாள் சித்ரா.
''ஜி.எச்.,ன்னதும் ஞாபகம் வந்துச்சு. அங்க, 'டீச்சர்ஸ் டே' அன்னிக்கு, ஆர்த்தோ டிபார்ட்மென்ட்ல ஒரு, 'டெமோ' பண்ணிருக்காங்க. அந்த நிகழ்ச்சியில, சி.எம்.சி., ஆசிரியர்களை எல்லாம், ஊழியர் சங்கம் சார்புல கவுரவிச்சு, கடைசியில அந்த சங்கத்துக்காரங்க, அவுங்க விழா மாதிரி மாத்திட்டாங்களாம். விழாவுல அவுங்களுக்கு அவுங்களே பாராட்டிக்கிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''நம்மூரு, 'மாஜி' திமுக அமைச்சர்ட்ட பி.ஏ.,வா இருந்த ஒருத்தரு இருக்காரு. தனக்குத்தானே போஸ்டர் ஒட்டிக்கிறதுல அவரு தான் ராஜாவாமே,'' என்றாள் சித்ரா.
'டிவி'யில், 'தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா திருதிருதிருன்னு முழிக்கையிலே' என்று பாடிக்கொண்டிருந்தார் ஜோதிகா. மித்ரா அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...
''மித்து... போன வாரம், விளாங்குறிச்சில இருக்கற ஒரு டாஸ்மாக் கடைல, திடீர்னு தணிக்கை நடந்துச்சு. 21 லட்சம் ரூபா கையாடல் நடந்துருக்கிறத கண்டுபிடிச்சு, அஞ்சு பேரை சஸ்பெண்ட் பண்ணுனாங்களே.''
''ஆமா... நல்லா ஞாபகம் இருக்கே.''
''இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ள பணத்தை திருப்பி கட்டலேன்னா, 'கையாடல் செஞ்ச அமவுண்ட்ல அம்பது சதவீதம் பைன் கட்டணும்னு' சொல்லிருக்காங்க. என்ன 'சர்பிரைஸ்' தெரியுமா... மறுநாள் மூணு மணிக்குளள, 'டான்'னு 21 லட்சம் ரூபாயை கட்டிட்டாங்களாம். மாசம் எட்டாயிரம் ரூபா சம்பளம் வாங்குற ஊழியர்களுக்கு எப்பிடி பணம் வந்துச்சுன்னு தெரியலை. அதுல அணி மாறுன எம்.எல்.ஏ.,வோட பினாமியா இருக்குற பி.ஏ.,
ஒருத்தராம்.''
''இதெல்லாம் ஐ.டி.,யில விசாரிக்க மாட்டாங்களா?'' என்று கேட்டுக் கொண்டே, 'டிவி' சேனலை மித்ரா மாற்ற, 'மனோகரா' சிவாஜி, கர்ஜித்துக் கொண்டிருந்தார். அவளே தொடர்ந்தாள்...
''அக்கா... நம்மூரு நடுவால இருக்குற ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல, ஒண்ணுல இருந்து பத்தாயிரம் நம்பர் வரைக்கும் புது சீரியல் ஆரம்பிச்சதுல, நுாறு நம்பர் பேன்ஸி நம்பர் வந்திருக்காம். அதுல, 1-9, 100, 200, 300ன்னு நிறைய கவர்மென்ட் நம்பர் வந்திருக்கு. அதுல அவுங்க எடுத்தது போக மீதி நம்பரு, ஆர்.டி.ஓ., கைக்கு வந்துருச்சாம். அதை வச்சு, அவரு செம்ம காசு பார்த்துட்டு இருக்காராம்.''
''இங்க இப்பிடியா... வடக்கால இருக்குற ஆர்.டி.ஓ., பெருசாக் கிடைக்கும்ணு, அரை 'சி' கொடுத்து வந்துட்டு, சரியா வசூல் இல்லைன்னு தெரிஞ்சு, எல்லாரையும் தாறுமாறா திட்றாராம். அதனால கடுப்பான ஊழியர்கள் எல்லாம், அவருக்கு எதிரா திடீர்னு ஒரு நாள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்போறாங்களாம்,'' என்ற சித்ரா, ''சரி! நீ ரெஸ்ட் எடு; நான் நாளைக்கு வர்றேன்,'' என்று விடை பெற்றாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X