சுருட்டியது "சுனாமி' போல... குவிச்சது "பினாமி' பேர்ல...!

Added : செப் 18, 2017
Advertisement
பல ஆண்டுகளுக்கு பின், அவிநாசியிலுள்ள தாமரைக்குளம் நிரம்பி வழிந்ததை அறிந்த சித்ராவும், மித்ராவும், குளத்துக்கு சென்றனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த தண்ணீரை பார்த்து ஆச்சரியப்பட்டவாறே, லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.சுவாமி தரிசனம் முடித்து, முன் மண்டபத்தில் இருவரும் அமர்ந்தனர். தேங்காயை கொறித்தபடியே, ""புகார் கொடுக்க வர்றவங்களையெல்லாம், புன்னகையுடன்
சுருட்டியது "சுனாமி' போல... குவிச்சது "பினாமி' பேர்ல...!

பல ஆண்டுகளுக்கு பின், அவிநாசியிலுள்ள தாமரைக்குளம் நிரம்பி வழிந்ததை அறிந்த சித்ராவும், மித்ராவும், குளத்துக்கு சென்றனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த தண்ணீரை பார்த்து ஆச்சரியப்பட்டவாறே, லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.
சுவாமி தரிசனம் முடித்து, முன் மண்டபத்தில் இருவரும் அமர்ந்தனர். தேங்காயை கொறித்தபடியே, ""புகார் கொடுக்க வர்றவங்களையெல்லாம், புன்னகையுடன் பேசி அனுப்புற ஆபீசரை தெரியுமா,'' என்று ஆரம்பித்தாள் சித்ரா.
""ஓ, வெரிகுட். யாரு அந்த ஆபீஸர்,'' என்று ஆவலாக கேட்டாள் மித்ரா.
""மாநகராட்சி முதல் மண்டலத்துல இருக்கற ஆபீசரு, ஏதாச்சும் பிரச்னைனு, வார்டில் இருந்து பெட்டிசனோட ஆபீசுக்கு வந்தா, உடனே அசிஸ்டெண்டை கூப்பிட்டு, வந்தவங்களுக்கு டீ கொடுக்கச் சொல்லி உபசரிக்கிறாராம். அப்புறம் தான், என்ன புகார்னு கேட்கறாராம். இதனால, கோபத்தோட புகார் சொல்ல வர்றவங்க கூட, "கூல்' ஆயிடறாங்களாம்,'' என்று விளக்கினாள் சித்ரா.
""அந்த காலத்துல கொடை வள்ளல்களுக்கு பேரும் புகழும் இருந்துச்சு. இப்ப இல்லை,'' என்று மித்ரா சலித்து கொண்டாள்.
"" அப்படியென்ன கொடையாளர்களுக்கு பிரச்னை வருது,'' என்று ஆர்வமானாள் சித்ரா.
""திருப்பூர்ல, ரத்த தானம் செய்யற ஆர்வலர்கள் அதிகம் இருக்காங்க. ஆனா, முகாமில் ரத்த தானம் பெற வரும் போது, தேவையான அளவு ரத்தம் சேகரிக்கும் பைகளை கூட, மருத்துவக்குழு கொண்டு வர்றதில்லையாம். சுதந்திர தினத்தன்னிக்கு நடந்த முகாமில், கொடையாளர் எண்ணிக்கைக்கேற்ப பை கொண்டு வராததால, ரத்த தானம் செய்ய வந்தவங்க, ஏமாற்றத்தோட போயிட்டாங்களாம். அடிக்கடி இப்படித்தான் நடக்கிறதா, தன்னார்வலர்கள் வேதனையோடு புலம்பறாங்க,'' என்றாள் மித்ரா.
""இனிமேலாவது மருத்துவர் குழு, தேவையான அளவு பைகள கொண்டு வர்றாங்களான்னு பார்க்கலாம்,'' என்றாள்..
""பல்லடம் பஸ் ஸ்டாண்டில், அம்மா உணவகத்துக்கு கொடுத்த இணைப்பில் இருந்து, ஓட்டலுக்கு குடிநீர் போன விஷயம் பத்தி பேசினோமில்ல. அதை, இப்ப "கட்' பண்ணிட்டாங்களாம். ஆனா, இது எப்படி "லீக்' ஆச்சுன்னு, ஒரு குரூப் ஆராய்ச்சியில் இறங்கியிருக்காம்,'' என்று சித்ரா சிரித்தாள்.
""சவுத் எம்.எல்.ஏ., ஏன் சத்தமில்லாம இருக்காரு,'' என்று, அரசியலை ஆரம்பித்தாள் மித்ரா.
""தன்னோட பகுதிக்கு, தான் கேட்கறவரை போலீஸ் ஆபீசரா நியமிக்கனும்னு, மேலிடத்துல வேண்டுகோள் விடுத்தாராம். அவர் விருப்பப்படியே போஸ்டிங் கொடுத்ததால, "தங்கத்தை' பார்த்தது போல சந்தோஷத்துல மிதக்கறாராம்,'' என்றாள் சித்ரா.
""சவுத் என்றாலே என்ன ரேஞ்ச் என்பது தெரிய வேண்டாமா,'' என்று சிரித்தாள் மித்ரா.
""சவுத் ஸ்டேஷனில் போலீஸ்காரங்க எல்லாம், இப்போ கொஞ்சம் அடக்கி வாசிக்கறாங்க தெரியுமா,'' என்றாள் சித்ரா.
""ஆமா. கமிஷனர் "கறார்' ஆபீசர்ங்கிறதால, அடக்கித்தானே வாசிக்கணும். ஆனா, "இன்பார்மர்'களோட ஆட்டம் தான் இன்னும் கொறையல. கோல்டன் நகர்ல, போலீஸ் இன்பார்மருன்னு சொல்லி, ஒருத்தர் அட்டகாசம் பண்றாராம். ஏதாவது பிரச்னையை ஏற்படுத்தீட்டு, போலீசை வரவழைப்பேன்னு மிரட்டுறாராம். அவங்க ஏரியாவில், ரெண்டு சின்னப்பசங்களை அடிச்சிருக்கார். இதைப்பத்தி, பேரண்ட்ஸ் கேட்டதற்கு, போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணினா, நானே தூக்கி உள்ளே போட்டுறுவேன்னு, மிரட்டினாராம்,'' என்றாள் மித்ரா.
""அடக்கடவுளே! போலீசே தேவலை போல. மருதமலையில் இருக்கிற மருதாசல மூர்த்திதான், இதுமாதிரிய ஆட்டம் போடறவங்களை கவனிக்கணும்,'' என்ற சித்ரா கன்னத்தில் கைகளால் தட்டி கொண்டே, கோவிலை விட்டு வெளியேறி, வண்டியில் புறப்பட்டனர்.
திருப்பூர் ரோட்டில் இருவரும் சென்று கொண்டிருக்கும் போது, மழைத்துளி விழ ஆரம்பித்தது. அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் ஒதுங்கினர். ""தலைவருங்க இல்லாம, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளோட "வீச்சு' தாங்க முடியல,'' என்ற, மித்ரா யூனியன் ஆபீஸ் விவகாரத்தை துவக்கினாள்.
""அப்படியென்ன வீச்சை காட்டறாங்க,'' என்று சித்ரா கேட்டாள்.
""புதுசா வந்த ஒரு அதிகாரி, ஏற்கனவே, "டார்க்கெட்' வச்சு தொந்தரவு கொடுக்கறார்னு, செக்ரட்ரிகளே புகார் பண்ற அளவுக்கு நெலமை மோசமா இருக்குது, அதே பிரிவுல, தணிக்கை செய்ய வேண்டிய அதிகாரியோட "ரவுண்ட்ஸ்" போறோம்னு சொல்லிட்டு புறப்பட்டு போறாங்க; பஞ்சாயத்துல பார்த்துட்டு, "கட் அண்ட் ரைட்டா' பேசி "மேட்டரை' வாங்கிட்டு வந்திடறாங்க,'' என்றாள் மித்ரா.
""ஓ, இப்படி வேற நடக்குதா,'' என்று சித்ரா வாய் பிளந்தாள்.
""ஆய்வுங்கிற பேர்ல, ஒரு பஞ்சாயத்துக்கு போறதா சொல்லி கிளம்புறாங்க. ஆனா, "பசையா' இருக்கற பஞ்சாயத்துக்கு போய், "மிரட்டல்' தணிக்கையை ஆரம்பிச்சு, "லம்பா' வாங்கிட்டு வந்திடறாங்க. நாங்க எங்கிருந்து கொடுக்கறது? மரத்துலயா காய்க்குதுன்னு, பஞ்சாயத்துகளில், பெரிய பஞ்சாயத்தா இருக்கு. புதுசா வர்ற அதிகாரிகளுக்கு, சம்பாதிச்சு கொடுக்க, "சாரதி'ங்க இருக்காங்க,'' என்று மித்ரா கூறவும், அங்கு வந்தவரை பார்த்து, ""முருகேஷ் அங்கிள்
நல்லாருக்கீங்களா?'' என்றார். அவரும், பதில் சொல்லிவிட்டு, ஸ்கூட்டரில் கிளம்பினார்.
""அதுசரி, வேறென்ன தகவல் இருக்கு,'' என்று, சித்ரா கேட்டாள்.
""டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் வராம தடுக்கறது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரோட பொறுப்பு. ஆனா, அவசர காலத்தில் அவங்க கூட "போன்'ல அவ்வளவு ஈஸியா பேச முடியறதில்லை. காய்ச்சல் பாதிப்பு இருக்கற ஏரியாவில் இருந்து, முகாம் நடத்த சொல்லலாம்னு "மொபைல் போனில் கூப்பிட்டு பார்த்திருக்காங்க. அவரோ, எடுக்கறதே இல்லையாம்,'' என்ற மித்ரா கூற, "" இப்படி "டிடி'யே போன் எடுக்காம இருந்தா எப்படி? ஏதாவது அவசரமான பாதிப்புனா நேர்ல போயா சொல்ல முடியும்,'' என்று சித்ரா கோபத்தோடு கேட்டாள்.
""ஜெயந்தி கலெக்டர் போன பிறகு. இவங்களுக்கு பயம் விட்டுப்போச்சுன்னு, பலரும் பேசிக்கறாங்க,'' என்றாள் மித்ரா.
""சிட்டி போலீஸ் மேட்டர் ஏதாச்சு இருக்கா,'' என்று சித்ரா கேட்டாள்.
""இருக்கே, மாநகரில் இருக்கிற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருத்தர், கணியாம்பூண்டி பக்கம், ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு, வீடு கட்டி வர்றாரு. இதை கேள்விப்பட்ட உயரதிகாரிங்க, அவரை "டிரான்ஸ்பர்' செய்ய முடிவு செஞ்சாங்க; அவரை மட்டும் மாத்தினா கேள்வி கேப்பாங்கன்னு, கூடவே வேறு சிலரையும் மாத்தியிருக்காங்க,'' என்று மித்ரா கூறி முடிப்பதற்குள், ""ஓ...அப்படியா சேதி,'' என்று சித்ரா ஆச்சரியப்பட்டாள்.
""அதுமட்டுமில்ல. வீடு கட்டி வரும் அதிகாரிக்கு, "பினாமி' பேர்ல, நல்லூரில் ஒரு வீடும், புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் போற வழியில், ஒரு பனியன் கம்பெனியும் இருக்காம். நெருப்பில்லாம புகையுமான்னு, காக்கி சட்டைக்காரங்க பேசிக்கறாங்க,'' என்று மித்ரா கூறினாள். அப்போது, பஸ் ஸ்டாப் சுவரில், முரளீதர சுவாமிகளின் சொற்பொழிவு என்று விளம்பரப்படுத்தி இருந்தனர்.
""தொடர் திருட்டில் ஈடுபடற நபர் ஒருத்தர், ஹாயா சுத்தி வர்றதா கேள்விப்பட்டேன். அதுபத்தி ஏதாச்சும் தகவல் இருக்கா,'' என்று சித்ரா, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
""சரியா கேட்ட. அவிநாசியிலுள்ள இலங்கை தமிழர் கேம்ப்பில், ஒருத்தர், அனுப்பர்பாளையம், அவிநாசி போலீஸ் லிமிட்டில் பல இடங்களில் கைவரிசை காட்டியிருக்காரு ஆனாலும், எந்த பயமும் இல்லாம, வெளியே ஜாலியா சுத்திட்டு வர்றாரு. ஸ்டேஷனில் இருக்கற, சில போலீஸ்காரங்களுக்கு, ஒரு பங்கை கொடுத்து, கரெக்ட் பண்ணினதால தான் இந்த தைரியமாம். குண்டாஸ் போட வேண்டிய ஆளை, மாமூல் வாங்கிட்டு ராஜ மரியாதையோட நடத்தலாமான்னு, சிலர் முணுமுணுக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
""டாஸ்மாக் ஊழியர்களும் போலீஸ் மேல புலம்பறாங்க,'' என்று சித்ரா ஆரம்பித்தாள்.
""அவுங்களுக்கு என்ன பிரச்னையாம்,'' என்று மித்ரா கேட்டாள்.
""பார் ஊழியருங்க போலீஸ், "டாஸ்மாக்' அதிகாரிகள்னு, ஆளாளுக்கு மாசம் பொறந்தா மாமூல் கொடுக்கிறதுக்குள்ள விழி பிதுங்குதாம். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், அவரோட டிரைவர், ஐ.எஸ்., போலீஸ்காரங்க, மதுவிலக்கு போலீசுன்னு, மாமூல் லிஸ்ட் நீண்டுகிட்டே போகுதாம். அப்பப்ப உயரதிகாரிகளுக்கு தேவையான சரக்கை வேற வாங்கிட்டு போயிடறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
""வெள்ளக்கோவிலில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடூரமான விஷயம் தெரிஞ்சுதா?'' என்று மித்ரா கூறவும், ""அச்சச்சோ, என்னாச்சு' என்று சித்ரா ஆதங்கப்பட்டாள். ""சங்கீதாங்கிற பெண்ணுக்கு, ஒருத்தன் போனில் அடிக்கடி பேசியிருக்கிறான். இந்த பொண்ணும், பிரண்ட்ஷிப்பா பேசிருக்கு. அதை சாக்கா, வெச்சிட்டு, டார்ச்சர் செஞ்சிருக்கான். ஒரு கட்டத்தில, ஸ்டேஷனில், புகார் கொடுத்திட்டாங்க. போலீஸ் எச்சரிக்கை செஞ்சிட்டு விட்டுட்டாங்களாம்,'' என்று மித்ரா மூச்சு விடாமல் கூறினாள்.
""அப்புறம்,'' என்ற சித்ராவின் கேள்விக்கு, ""அதுக்கப்புறமும் போனில் பேசியிருக்கான். ஆனா, அந்த பொண்ணு பேசலயாம். கோபப்பட்ட அவன், தனியா போன பொண்ணு மேல பெட்ரோல் ஊத்தி பத்த வைச்சுட்டான். ஆஸ்பத்திரியில, சேர்த்தும் ரெண்டு நாளில் இறந்துருச்சு. இப்ப அவன் கம்பி எண்ணுறான்'' என்றாள் மித்ரா.
""இந்த மொபைல் போன் கலாச்சாரம், எங்கே கொண்டு போய் விடுமோன்னு தெரியல. திருப்பூரிலும் இப்படி பல பெண்கள், தெரிஞ்சவன்கிட்ட மணிக்கணக்கா பேசி, சிக்கி ஸ்டேஷன் வரைக்கும் போறாங்களாம். என்ன சொல்லி என்ன பண்ண? இந்த காலத்துல நல்லது சொன்னா யாரு கேட்கறாங்க?'' என்று சித்ரா சலித்து கொண்டாள்.
""மாநகரில் இருக்கிற போலீஸ் ஏ.சி.,க்கள், சில இன்ஸ்பெக்டருங்க, எப்.ஐ.ஆர்., தொடர்பா, நிருபர்கள் கூப்பிட்டா, போன் எடுக்கறதில்லை. அப்புறம் தங்களது டிரைவர்களிடம் மொபைல் போனை கொடுத்து, ஐயா மீட்டிங்கில் இருக்கிறார் என்று, பேச வச்சு, பூசி மொழுகுறாங்க.
மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயமில்லையென்று சொல்லுவாங்க. இவுங்க போன் எடுக்காததை பார்த்த, ஏதோ மறைக்கிறாங்கன்னு தான் தோணுது,'' என்று மித்ரா தன் பங்குக்கு பேச, மழை நின்றது. உடனே, இருவரும். வண்டியில் வீடு நோக்கி புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X