தாய்ப்பாலால் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்| Dinamalar

தாய்ப்பாலால் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்

Added : செப் 22, 2017
தாய்ப்பாலால் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்

தாயிற் சிறந்த கோவிலுமில்லை தாய்ப்பாலுக்கு இணையான உணவுமில்லை' எனக்கூறலாம். தாய்ப்பால் ஒரு வரப்பிரசாதம், விலங்கினம் கூட தாய்ப்பால் ஊட்ட தவறுவதில்லை. பிறந்த சில மணி நேரத்தில் பாலுாட்டும் நிகழ்ச்சி தானாகவே நடந்தேறும். ஆனால், ஆறறிவு உள்ள மானிட பிறவிகளில் சிலர் இதை செய்ய தவறுகின்றனர். தாய்ப்பால் கொடுக்கும் எண்ணத்தை, கர்ப்ப காலத்தில் இருந்தே வளர்த்தால் தான், தாய்ப்பால் சுரக்கும் என்ற நம்பிக்கை பிறக்கும். தாய் பால் சுரக்கவே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள
முடியாது. கர்ப்ப காலத்திலேயே மார்பக காம்புகளை சுத்தம் செய்தால் தான், அடைபட்டுள்ள துவாரங்கள் திறக்கும். குழந்தை பிறந்த பின் மார்பகத்தில் குழந்தையை பால் குடிக்க துாண்ட செய்ய வேண்டும். குழந்தை பிறந்தது முதல் 2 வயது வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குழந்தை வயிறு நிறையும் அளவு தாய்ப்பால் சுரக்கவில்லையே, என வருத்தப்பட வேண்டாம். சிறிதளவாவது குடித்தால் தான் அதன் மூளைக்கான வளர்ச்சி மேம்படும்.

தாய்ப்பாலின் சிறப்பு : கலப்படம் இல்லாதது தாய்ப்பால். எந்நேரமும் குழந்தைக்கு கிடைக்கும். சீரான வெப்பநிலையில் சுத்தமானது. இதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பு ஏற்படும். இவையே குழந்தைக்கான முதல் தடுப்பு மருந்து. மஞ்சளாக சுரக்கும் சீம்பாலில் தான் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இதை தவிர்த்து சர்க்கரை தண்ணீர், தேன் கொடுக்க கூடாது.குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். தாய் சாப்பிடும் அனைத்து சத்துக்களும் குழந்தைகளுக்கும் கிடைக்கும். எனவே தாய்மார்கள் அனைத்து உணவுகளையும் உண்ணவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிடைக்கும் 'லேக்டோ கால்சியம்' மாத்திரை மற்றும் வைட்டமின் 'ஏ' திரவம் தாய், குழந்தைக்கு நல்லது.
தாய்ப்பால் சுரக்க வேண்டுமானால், அவர் சந்தோஷமான மனநிலையில் இருக்கவேண்டும்.
கருவாடு, பூண்டு, காய்கறி, கீரை வகை, முட்டை, பழங்கள், மாமிசம், பால், பால்பொருட்களை
சாப்பிட்டால், தாய்க்கு பால் அதிகம் சுரக்கும். குழந்தை சிறுநீர், மலம் கழிப்பதின் மூலம் அது சீரான பால் குடிக்கிறதா என அறியலாம். பாட்டில் பால் குடித்தால், அடிக்கடி நோய்வாய்ப்படுவர். எதிர்ப்பு சக்தியும் குறையும். குழந்தைகளை சிறிது நேரமாவது தாய்ப்பால் குடிக்க செய்ய
வேண்டும்.பாட்டில் பாலையும் சுகாதாரமாக கொடுக்காவிடில், வயிற்றுப் போக்கு ஏற்படும். பாட்டில், ரப்பர் போன்றவற்றை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு வைக்கவும். குழந்தை பிறந்த ஒரு மணி
நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய் உடலுடன் சிசு உடல் தொடுவதால், இதமான உணர்வு ஏற்படும்.

வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும் : தாய்க்கு முதன்முதலில் சுரப்பது சீம்பால். இதில் வெள்ளை அணுக்கள் அதிகம் கிடைக்கும். குடல் நல்ல முறையில் உருவாகும். தாய்ப்பால் ஊட்டும்முறை தெரியாமல் கொடுத்தால், குழந்தை அழுதுகொண்டே இருக்கும். பிரசவமான 3 நாட்களுக்குள் தாய்ப்பால் சுரக்கவில்லை என்றாலும், சீம்பால் குழந்தையின் தேவையை பூர்த்தி செய்யும்.
பால் குடிக்கும் போது உறிஞ்சும் அசைவு, சத்தம், வேகமான கண் அசைவு, மெதுவாக சப்தமிடல், பெருமூச்சு அசைவுகளை வைத்து பாலுாட்ட வேண்டும். பிறந்த முதல் 7 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 10 முறையாவது தாய்ப்பால் தரவேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தாயின் தோலோடு சிசு உடல் தொடும் நிலையில் இருக்க வேண்டும். அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகள் இரவு, பகல் துாங்கினாலும், விழித்த பின் கட்டாயம் தாய்ப்பால் தரவேண்டும். அதற்கேற்ப தாய்மார்கள் தங்கள் செயல்பாடுகளை அனுசரிக்க வேண்டும். ஒருபக்க மார்பகத்தில் குறைந்தது கால் மணி நேரமாவது பால் தரவேண்டும்.
முதலில் வரும் பாலில் தண்ணீர், சர்க்கரையும் அடுத்ததாக கொழுப்புசத்தும் அதிகம் இருக்கும். அதனால், ஒரு பக்க மார்பகம் மென்மையாக மாறும் வரை கொடுத்து முடித்து, அடுத்த மார்பகத்திற்கு மாற்றி கொடுக்கவேண்டும். பொறுமை, அன்புடன் குழந்தை முகத்தை பார்த்தவாரே பாலுாட்டவும். தாய் நோய்வாய் பட்டிருந்தாலும் பால் கொடுக்கலாம். இரவில் கூட பால் தரலாம்.

தாய்,- குழந்தைக்கு பொருந்திய நிலை : மார்பகத்தை நோக்கி குழந்தையை தாய் அணைத்து பிடிக்கவேண்டும். குழந்தை உடல் வளைந்தோ, முறுக்கியோ இருக்ககூடாது. வாய் நன்கு திறந்திருக்க வேண்டும். குழந்தையின் மூக்கு, தாய் மார்பகத்தை தொட்டு இருக்க வேண்டும்.
இப்படி கொடுத்தால், மார்பு புண், காம்புவெடித்தல் நிகழாது. தாய்ப்பாலுடன், மற்ற பவுடர் பால் கலந்து தரக்கூடாது. மற்ற உணவுகள் கொடுக்க வேண்டியிருந்தால், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். தாய்மார்களுக்கு, குழந்தைக்கு தரும் தாய்ப்பால் போதுமானதாக உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தால், குழந்தைகளின் எடையை பார்க்க வேண்டும். எடை கூடியிருந்தால் போதுமான வளர்ச்சி இருக்கிறது. பிறந்த குழந்தை 3 கிலோ இருந்தால், அடுத்த 6 மாதத்தில் 6 கிலோ, 1 வயதில் 9 கிலோ வரை வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைக்கு போதுமான உணவு கிடைத்துள்ளது என அர்த்தம். மாதந்தோறும் குழந்தையின் எடை கூட வேண்டும். அவ்வாறின்றி குறைய தொடங்கினால், டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையை வைத்து, அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தையின் நிலை குறித்து விளக்கம் அளிப்பர். இதற்காக, ஆண், பெண்ணுக்கென தனித்துவம் பெற்ற அட்டைகள் வழங்கப்படுகிறது. பாலுாட்டும் தாய்மார்கள் அங்கன்வாடி மையங்களில் கொடுக்கப்படும் இணை உணவை நாள்தோறும் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகளவில் சுரக்கும். ஒவ்வொரு தாய்க்கும் நாள் ஒன்றுக்கு 160 கிராம் இணை உணவு வழங்கப்படும்.

பிரிட்ஜில் தாய்ப்பால் வைக்கலாம் : வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைத்து செல்லலாம். அவற்றை அறை வெப்பநிலையில் 8 மணி நேரமும், பிரிட்ஜில் 72 மணி நேரமும் வைக்கலாம். பிரிட்ஜில் வைத்த பாலை குழந்தைக்கு கொடுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வெளியில் எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரில் சிறிதுநேரம் பால் கிண்ணத்தை வைத்திருந்து,
சுத்தமான தேக்கரண்டி மூலம் குழந்தைக்கு தர வேண்டும். அறை வெப்பநிலையில்
வைக்கும்போது ஈ, எறும்பு விழுந்துவிடாமல் பாதுகாக்கவேண்டும். பாட்டிலில் பால் கொடுக்கும் போது வயிற்றில் தொற்று நோய் ஏற்படக்கூடும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கவேண்டும். அதற்கு பின் 7 வது மாதம் முதல் தாய்ப்பாலுடன் கஞ்சி கொடுக்கலாம். குழந்தை விழுங்க கூடிய அளவில் நெகிழ்வு தன்மையுடன் கஞ்சி இருத்தல் அவசியம்.
முதலில் 2 அல்லது 3 தேக்கரண்டி (ஸ்பூன்) அளவில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து, படிப்படியாக அளவை அதிகரிக்கலாம். அங்கன்வாடி மையத்தில் கிடைக்கும் இணைஉணவை 7 ம் மாதம் முதல் கொடுக்கலாம். அனைத்து வகை ஊட்டச்சத்துக்களும்
அடங்கிய உணவுகளை கொடுக்கவேண்டும். அத்துடன் தொடர்ந்து தாய்ப்பாலும், 2 வயது வரை கொடுக்கவேண்டும். தாய்ப் பாலுாட்டுதல் அடுத்த குழந்தை பிறப்பு தள்ளிப்போக ஏதுவாகும். தாய்க்கும், குழந்தைக்கும் உடல், மனவளம் நன்றாக இருக்க உதவுகிறது.

தாய்ப்பாலில் தரமான குழந்தை : தாய், குழந்தைக்கு தொடர்ந்து 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே வழங்கினால், தாய்க்கு மாதவிடாய் ஏற்படுதல் தள்ளிபோவதுடன், அடுத்த கர்ப்பம் ஏற்படுவதை தடுக்கும். மாதவிடாய் நீண்ட நாட்களாக தள்ளிப்போதல் நன்மையாக கருதப்படும். மேலும், அதிக எடையுள்ள பெண்களுக்கு எடை குறைவு நன்மை தரும். அதேநேரம் குழந்தைகள் எடை குறைவது நல்லதல்ல. இதற்காகவே தாய்போதுமான அளவு உணவு உண்பதன் மூலம் எடை குறைப்பை தடுக்கலாம்.தாய்மார்களே, தவறாமல் தாய்ப்பால் கொடுத்து, தரணிக்கு புகழ் சேர்க்கும், தரமான குழந்தைகளை உருவாக்குவோம் என சபதம் ஏற்போம்.

----ஆர். மங்கையர்கரசி
குழந்தைகள் வளர்ச்சி
திட்ட அலுவலர் (ஓய்வு)
காரைக்குடி.
98424 44120.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X