"கல்லா' கட்டும் "கில்லாடி' ஏட்டு "நல்லா தூர்வாரலே' கலெக்டர் குட்டு

Updated : செப் 26, 2017 | Added : செப் 26, 2017
Advertisement
புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், பக்தர்களின் வரிசை, ஆஞ்சநேயர் வால் போல் நீண்டது. சித்ரா, மித்ராவும், வண்டியை பார்க் செய்து, வரிசையில் இணைந்தனர்.""நொய்யல் ஆற்றை பார்த்தாசுத்தம் செஞ்ச மாதிரி தெரியலையே'ன்னு கலெக்டர் கேட்டதும், தொழில்துறையினர் "அப்செட்' ஆகிட்டாங்களாம்,'' என்றுஆரம்பித்தாள் மித்ரா.""பார்த்தா அப்படித்தானே
 "கல்லா' கட்டும் "கில்லாடி' ஏட்டு "நல்லா தூர்வாரலே' கலெக்டர் குட்டு

புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், பக்தர்களின் வரிசை, ஆஞ்சநேயர் வால் போல் நீண்டது. சித்ரா, மித்ராவும், வண்டியை பார்க் செய்து, வரிசையில் இணைந்தனர்.



""நொய்யல் ஆற்றை பார்த்தாசுத்தம் செஞ்ச மாதிரி தெரியலையே'ன்னு கலெக்டர் கேட்டதும், தொழில்துறையினர் "அப்செட்' ஆகிட்டாங்களாம்,'' என்றுஆரம்பித்தாள் மித்ரா.

""பார்த்தா அப்படித்தானே தெரியுது?'' என்றாள் சித்ரா.

""நொய்யல சுத்தம் செய்யறது சம்பந்தமா, கலெக்டர் ஆபீசுல ஆலோசனை நடந்துச்சு. தொழில்துறையினர், மாநகராட்சி அதிகாரிங்க பேசுனாங்க. "ஆறு வருஷமா, நொய்யல நாங்க சுத்தம் செஞ்சுட்டு இருக்கோம்; ஒவ்வொரு சங்கமும், ஒரு கி.மீ., தூரம் சுத்தம் செஞ்சு, சைடுல ரோடு போட்டு கொடுத்தோம்'ன்னு கம்பெனிக்காரங்க சொல்லியிருக்காங்க''

""அப்ப பேசின கலெக்டர், "நொய்யல பார்த்தா சுத்தம் செஞ்ச மாதிரி தெரியலையே. நான் நம்பவே மாட்டேன்னு' மூணு தடவ சொன்னாராம். அப்புறம்தான், "ஒருகரையில இருந்து பார்த்தா, மறுகரை தெரியாத அளவுக்கு, நொய்யலாறு காடு மாதிரி முள் முளைச்சு கிடந்துச்சு. ஆறு பூராமே சாக்கடை தேங்கி நிக்கும். பன்றிகள் மேயும். அதெல்லாம் சுத்தம் செஞ்சு, கரைகளில் கருங்கல் பதிச்சு, "பேபி' வாய்க்கால் போட்டு சரி பண்ணி யிருக்கோம்,'' என்றெல்லாம் சிலர் எடுத்து சொன்னாங்களாம்,'' என்று மித்ரா விளக்கினாள்.

""உண்மைதானே. நொய்யல் ஜீவநதி சங்கம், தொழில்துறையினர், நொய்யலையே சுத்தமாக்கி, வாண வேடிக்கையோட விழா கொண்டாடினாங்களே? மறந்துருச்சா? புதுசா வந்தவங்க ஆற்றை பார்த்தா சுத்தமில்லைனு தானே சொல்வாங்க? மக்களுக்கு தெரியாதா?'' என்றாள் சித்ரா.

""ஆளுங்கட்சியில, வார்டு பிரிக்கற வேலை மும்முரமாக நடக்குதாமா?'' என்று அரசியல் மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

""உங்க, மாமாதான், நிர்வாகியாக இருக்கறதால, உனக்கு எல்லாம் தெரியுமே? விவரமா சொல்லு,'' என்றாள் சித்ரா.

""ஆளுங்கட்சியில ரெண்டு அணி பிரிஞ்சிருந்த போதும், திருப்பூரை பொறுத்த வரை, ஓ.பி.எஸ்., அணிதான் வலுவா இருந்துச்சு. இப்ப ஒரு அணியா சேர்ந்தாலும் கூட, அந்தந்த அணி தலைவர் கூடத்தான் தொடர்பு வச்சிருக்காங்க. ஓ.பி.எஸ்., அணியில இருந்தவங்க, "ஸ்ட்ராங்' ஆகிட்டாங்க.

சென்னைக்கு போயி, தலா, மூணு வார்டு "லிஸ்ட' கொடுத்து, அதுல ஒரு வார்டு வந்தாகணும்னு சொல்லிட்டாங்க,'' ""போன உள்ளாட்சி தேர்தல் நேரத்துல, தாறுமாறா "சீட்' கொடுத்ததால, பாதிக்கப்பட்டவங்க போட்டி களத்துல குதிச்சு பெரிய குளறுபடி ஆகியிருந்துச்சு. மேயர் கனவுல இருக்கற "ஆனந்தமா' இருக்கிற மா.செ., ஒவ்வொருத்தர பார்க்கும் போதும்,""எப்படியாவது மாநகராட்சிய பிடிச்சாகனும்; போன தடவை மாதிரி அதிக வார்டை பிடிச்சாகணும்னு,'' உசுப்பேத்திட்டு இருக்காராம், என மித்ரா நீண்ட "லெக்சர்' அடித்தாள்.

அரை மணி நேரம் ஆகியும், வரிசை மெதுவாக நகர்ந்தது.பக்தர்கள் சிலர் கொடுத்த மோரை குடித்து விட்டு, காத்திருந்தனர்.

""வேலைக்குப் போகாம போராட்டம் நடத்தினவங்களுக்கு சம்பளம் வர்றதை பத்திக் கேட்குறயே. முறைகேட்டுக்கு துணை போகாம நேர்மையாக நடந்த பெண் அதிகாரிக்கு சம்பளம் வராமல் இருக்குதே அதைப் பத்தி தெரியுமா,'' என்றாள் மித்ரா.

""இது என்னா கூத்து. இந்த அநியாயம் எங்கு நடந்தது,'' என்று கேட்டாள் சித்ரா.

""ஒன்றிய ஆபீசுல, துணை பி.டி.ஓ., ரேங்க்ல இருக்கிற ஒரு லேடி ஆபீசர். ரொம்ப "ஸ்டெய்ட் பார்வர்ட்'. இதனால, முறையா இல்லாம உள்ள பைல்களுக்கு "சைன்' போடாம திருப்பி அனுப்பியிருக்காங்க. இதனால், வருத்தப்பட்ட அதிகாரி, மாவட்ட அதிகாரி மூலமா அந்த லேடி ஆபீசரை செக்ஷன் மாற்றி ரெகுலர்ல இருந்து ஸ்கீம்முக்கு மாத்திட்டார். ஆனால், ஒன்பது மாதமாகியும் அவருக்கு சம்பளம் போட உரிய ஆவணங்களை கொடுக்காம வைச்சிருக்காராம்.'' என்றாள் மித்ரா.

""சரி. இவங்க, கலெக்டர் கிட்ட "கம்ப்ளைண்ட்' பண்ண வேண்டியதுதானே,'' என்றாள் சித்ரா.

""துறை ரீதியான அதிகாரியே இதை கண்டுக்காம இருக்கறாராம். அதனால, கலெக்டருகிட்ட போய் எப்படி இதப் பத்தி புகார் சொல்றதுன்னு அந்தம்மா தவிக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

""மொண்டிபாளையம் பெருமாள் கோவிலுக்கு போகணும்''. ""செல்வநாயகி பஸ் மொண்டிபாளையம் வழியாகத்தானே போகுது. அதுல போகலாமே,'' என்று பதிலளித்தாள் சித்ரா.

அப்போது, "முருகனை கும்பிட்டு, முறையிட்ட பேருக்கு,' என்ற ரிங்டோனுடன் மொபைல் போன் சிணுங்கியது. அதை எடுத்து, ""முருகேசன் அங்கிள். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இப்ப வந்துடறேன்,'' பேசி விட்டு தனது கைப்பைக்குள் போனை வைத்தாள் மித்ரா.

""ஏம்பா, கார்ப்ரேஷனை பத்தி ஒரு மேட்டருமே சொல்றதில்லை,'' என்று சித்ரா சலித்து கொண்டதும், ""இருக்கு, ஒரு வாரம்"தூய்மை இந்தியா இயக்கம்,' விழிப்புணர்வு நடந்ததாம். ஆனா, அதுபற்றி பி.ஆர்.ஓ., ஆபீசுக்கே தெரிலையாம். சுகாதாரப்பிரிவு கூட இருக்கிற லடாய்னால எந்த தகவலும் சொல்றதில்லையாம். ரெண்டு பேரையும், கமிஷனர் கூப்பிட்டு, காய்ச்சி எடுத்தாராம். இருந்தாலும், மாற மாட்டேங்கறாங்களாம்,'' என்று மித்ரா படபடவென்று பொரிந்தாள்.

""போன வாரம் "காதல் மன்னன்' இன்ஸ்பெக்டர் பத்தி பேசினோமே. பல போலீசார், "அவரா... இவரா,' என்று பட்டிமன்றே நடக்குதாம்,'' சித்ரா போலீஸ் மேட்டரை ஆரம்பித்ததும், ""அப்போ, எக்கச்சக்கமான காதல் மன்னர்கள் "காக்கி சட்டை' போட்டுட்டு, உலா வர்றாங்கன்னு, சொல்லு,'' என்று மித்ரா கலகலவென சிரித்தாள்.

""கமிஷனர் ஒப்பன் "மைக்'கில், ஏ.சி., இன்ஸ்பெக்டர், என எல்லோரையும், வெளுத்து வாங்குறாராம். வேலை செய்யாதவங்களா திட்டன பரவாயில்லை; வேலை செய்யற ஆட்களையும் திட்டறது சங்கடமாக இருக்குதாம்,'' என்று கமிஷனர் பற்றி கூறிய சித்ரா,

""வடக்கு, தெற்கு ரேஞ்சு எஸ்.ஐ.,க்கள், தங்களோட லிமிட்டில் இருக்குற ஐ.எஸ்., போலீசார் கொடுக்கிற "ரிப்போர்'ட்டை, கமிஷனருக்கு சொல்றதில்லையாம். இன்ஸ்பெக்டர் பத்தி, "ரிப்போர்ட்' கொடுக்கக்கூடாது எஸ்.ஐ.,க்கள் விசுவாசம் காட்டறாங்களாம்,'' என்று கூடுதல் தகவலையும் சொன்னாள்.

""நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன். வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு ஏட்டு, ஓவராக ஆட்டம் போடறாராம். தன்னோட சொந்த மாநில மக்களை மட்டுந்தான் மதிப்பாராம். மற்ற மாவட்டமாக இருந்தா எரிஞ்சு விழுகிறாராம். பெட்டிஷன் கொடுக்க வர்றவங்கிட்ட, பக்கத்தில இருக்கிற டீக்கடையில கணக்கு செட்டில் பண்ண சொல்றது. இதுபோல, பல வேலைகளை செய்து வராரு. இன்ஸ்பெக்டரை பேரை சொல்லிட்டு, சத்தமே இல்லாம, "கல்லா' கட்டுவதில், இந்த ஏட்டு ரொம்ப கில்லாடியாம்,'' என்று மித்ரா கூறி முடிக்கவும், நடிகர் ராஜேஷ் நடித்த படத்தின் பாட்டு, சித்ராவின் மொபைல் போனில் ஒலித்தது.

போன் பேசி விட்டு, ""டிராபிக்கில இருந்து, ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர் ஆன, ரெண்டு எஸ்.ஐ.,யும் "கல்லா' கட்டுறதுல, ரொம்ப குறியாக இருக்காங்களாம். டெய்லி, "பத்து'ன்னு டார்கெட்டோட சின்சியரா (?) வேலை செய்யறாங்களாம். எஸ்.ஐ., ஒருத்தர், பைன் போடுறது ரொம்ப பிடிக்குமாம். அதுவும், 100, 200 எல்லாம் கிடையாது. 5 ஆயிரத்துக்குமேலயாம்,'' என்றாள் சித்ரா.

அப்போது, ஸ்பீக்கரில், "அங்கேரிபாளையம் செந்தில், டவுன்ஹாலை சேர்ந்த மாரியம்மாள் இருவரும், கோவில் ஆபீசுக்கு வரவும்,'' என்று அறிவித்தனர்.

வரிசை நகர்ந்து, ஒரு வழியாக, இருவரும் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு, பிரகாரத்தில் அமர்ந்தனர். ""கோவிலில் கூடுற கூட்டத்தை பயன்படுத்தி, காதல் ஜோடிங்க மணிக்கணக்கா அரட்டை அடிக்கறாங்க தெரியுமா?'' என்று மித்ரா கூறவும்.

""அட.. இப்பெல்லாம், இளசுக, மொபைல் போனிலேயே பேசி முடிச்சுறாங்க. நீ, என்னமோ, புதுசா சொல்றயே,'' என்று சித்ரா சலித்து கொண்டாள்.

""நான் சொல்றது வேற. பூண்டியில ஒதுக்குப்புறமா இருக்கற சிவன் கோவில்ல, காதல் ஜோடிங்க அதிகமா வர்றாங்களாம். அதுவும், நாற்பது வயசுக்கு மேல உள்ள, ஜோடிங்க உட்கார்ந்து, மணிக்கணக்கா பேசுறாங்களாம். இதை பார்த்துட்டு, பக்தர்கள் முகம் சுழிக்கின்றனராம்,'' என்று மித்ரா விளக்கியதும், சித்ரா தலையாட்டி கொண்டே, ""கலி முத்திடுத்து. அவங்கள கேது பகவானே பார்த்துப்பார். நாம கிளம்பலாம் வா,'' என்று இருவரும் பார்க்கிங் நோக்கி நடந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X