பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 13| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 13

Updated : செப் 28, 2017 | Added : செப் 28, 2017
Advertisement
பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 13

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


18. வி.கார்மேகம், தேவகோட்டை. karmegamveeriah@gmail.comபள்ளிகளில் தன்னாட்சி குறித்த தங்களின் கருத்துரு குறித்து என்னுடைய கருத்தினை தெரிவிக்க விளைகிறேன். முன்பெல்லாம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்தவுடன் மேல்நிலைக்கல்வி பயில புகுமுக வகுப்பு அல்லது பட்டயப் படிப்புமுறை பின்பற்றப் பட்டது. அதன்பின் +2 பாடத் திட்டமுறை கொண்டு வரப்பட்டு, +2வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மேல்படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யும் முறை அமலில் உள்ளது. அதன்படி பல கல்வி நிறுவணங்கள் +1 வகுப்பு பாடங்களை நடத்தாமல் +2 பாடங்களை மட்டுமே இரண்டு ஆண்டுகளுக்கு நடத்தி, ரேங்க் பெற்று விட்டதாக விளம்பரப்படுத்தி தங்களது நிறுவனங் களுக்கு பிள்ளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போதைய கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் தனது துறை அதிகாரி களுடன் இணைந்து ரேங்க் முறையை ஒழித்ததோடு +1க்கும் பொதுத்தேர்வு முறையைக் கொண்டு வந்துள்ளார். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். +1ல் பொதுத் தேர்வை முடித்துக் கொண்டு அதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், +2 முழுவதும் நுழைவுத்தேர்வு அதாவது "நீட்" போன்று துறை சார்ந்த படிப்புகள் அனைத்திற்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தலாமே? அதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பணம் கட்டி பயிற்சி வகுப்பில் சேர முடியவில்லை என்ற ஆதங்கமோ, பயிற்சி வகுப்புகள் நடத்துகிறேன் என்று சில டூடோரியல் காலேஜை வைத்துக் கொண்டு லட்சக் கணக்கில் பணம் பறிக்கும் அவலமோ இல்லாமல் செய்யலாமே! முறையான கல்வியைப் பதினோரு ஆண்டுகள் தரும் சுயநிதி நிறுவனங்களும் ஏன் அரசுப் பள்ளிகளும் +2 என்று ஓராண்டை வீணாக்காமல் அதே நேரத்தில் விரும்பிய மேற்படிப்புக்குச் சேரும்போதே அடிப்படை பயிற்சியை மாணவர்களுக்கு தந்து அவர்களை தயார்படுத்தலாமே? நன்றி.. நல்ல தீர்வை எதிர்பார்க்கிறேன்.


தினமலர் விளக்கம்:


+2 பாடத் திட்டத்தில் 'நீட்' போன்ற மற்ற போட்டித் தேர்வுகளுக்குண்டான பாடங்களையும் இணைத்து விட்டால், +2 படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்கள் உட்பட, நல்ல பயன் கிடைக்கும். போட்டித் தேர்விற்குப் பயிற்சி தருகிறோம் என்று சொல்லி, பணம் பண்ணுகிற வாய்ப்பும் இல்லாமல் போய் விடும் என்று தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்த கருத்தை, அரசு நடத்திய கருத்து கேட்கும் கூட்டங்களிலும் சில ஆசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். உண்மையில் சமூகப் பொறுப்புணர்வில், மாணவர்களின் நலனுக்காக சொல்லப்பட்டிருக்கும் இப்பார்வை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அந்த நேரத்தில் இக்கருத்தைச் செயல்படுத்தலில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை கவனித்தாக வேண்டும். கருத்துருவாக்கமும் அதைச் சீராக நடைமுறைப் படுத்தலும் ஒன்று சேர நிகழ்ந்தால் தான், அதற்குரிய முழு பயன் விளையும். + 2 படித்து முடித்த மாணவன் அதன்பின், அவன் தொடர்ந்து படிக்க எத்தனையோ இளங்கலைப் படிப்புகள் இருக்கின்றன.

பொதுவாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் இளங்கலை வகுப்புகள், மற்றும் தொழில் கல்விகள்- மருத்துவம், கணினி, இன்ஜினியரிங் உட்பட இவற்றுடன் தொடர்பான பாடங்கள் தாம் பாடத்திட்டத்தில் அறிமுகம் என்ற அளவில் சேர்க்கப்படும் வாய்ப்பு அதிகம். இதுவே மாணவனுக்கு ஒரு சுமை தான். ஆனால் தவிர்க்க முடியாதது. இவற்றுடன், நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் அவனைத் தயார் பண்ணுவது மிகவும் கஷ்டமான, கடினமான காரியம். ஆகையால் தான் , இந்தச் சூழலைப் பயன்படுத்தி, பயிற்சி வகுப்புகள் நடத்த சில 'டூடோரியல்' கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்புகள் நடத்த தனித்தகுதி பெற்ற ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஒரு பேச்சுக்கு, +2 பாடத் திட்டத்தில் போட்டித் தேர்வுகளை நேர்கொள்ளுமளவிற்கு பாடங்கள் சேர்க்கப் பட்டால், அவற்றிற்கென தனித் தகுதி பெற்ற ஆசிரியர்கள் தேவைப்படலாம். இன்றுள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் தேவைப்படும் ஆசிரியர்கள் எண்ணிக்கை மிகவும் பெரிதாக இருக்கும். இந்தத் தேவையை இன்று நிறைவேற்றும் சூழல் உள்ளதா என்று ஐயம் தோன்றுகிறது. ஏற்கனவே சமூக அங்கீகாரம், மக்கள் அங்கீகாரம் பெற்றுள்ள சில பள்ளிகளில் 'தன்னாட்சி' முறையைக் கொண்டு வருவதன் மூலம், இந்த இன்றியமையாத தேவையை ஓரளவிற்குப் பூர்த்தி செய்ய முடியும். இது நடைமுறை சாத்தியம்.
தன்னாட்சி பள்ளிகளின் செயல்முறை கொஞ்சம் கொஞ்சமாக பரவும்பொழுது, இறுதியில் பெரும்பாலான மாணவர்கள் பயன் பெறலாம்.
ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். எந்த சூழலிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தும் டூடோரியல் கல்லூரிகள் தோன்றத்தான் செய்யும். தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்களுக்கு தரப்படுகின்ற தவிர்க்க முடியாத மதிப்பு இருக்கின்ற வரையில், அதிக மதிப்பெண்களை எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கின்ற வரையில் பயிற்சி வகுப்பு கல்லூரிகள் இருந்தே தீரும். இது சமூகச் சூழ்நிலை. இதனால் நாங்கள் பயிற்சி வகுப்பு கல்லூரிகளை ஊக்குவிக்கிறோம் என்றில்லை. உண்மைச்சூழலை எடுத்து காட்டுகிறோம். இம் மாதிரியான பயிற்சி வகுப்பு கல்லூரிகள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவது உறுதி யாக்கப்படும். பள்ளிகளில் தன்னாட்சி செயல்படுத்தப் பட்டால், இது நமது அசைக்க முடியாத நம்பிக்கை. இறுதியாக, இந்நம்பிக்கை சாத்தியமாக உருப்பெற, சமூகப் பொறுப்புள்ள அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள். நிறுவனங்கள், பெற்றோர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக பயன்பெறும் மாணவர்கள் தரத்திற்கு மதிப்புத் தந்து கல்வியை உயர்த்த வேண்டும். இவர்கள் எல்லோருடைய பங்களிப்பும் அவசியம். அப்பொழுது பள்ளிகளில் தன்னாட்சி மூலம் கல்வித்தரம் உயர்ந்து நம் தமிழக மாணவர்கள் எந்த சூழலிலும் தங்கள் திறமையை நிலை நிறுத்துவார்கள். இந்தக் கல்வித் தருவதை நாம் மேற்கொள்வோமாக.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X