தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் சமூக பணிகள், அரசியல், கல்வி பணி, தொழில் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொண்டவர். இவர் குறித்த 10 முக்கிய அம்சங்கள் வருமாறு;
1. பன்வாரிலால் புரோஹித், 1977 ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.
2. 1978 ம் ஆண்டில், மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் கிழக்கு சட்டசபை தொகுதியில் வெற்ற பெற்றார். 1980 ம் ஆண்டு நாக்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
3. 1982ல் மாநில அமைச்சராக பொறுப்பேற்றார்.
4. பன்வாரிலால் புரோஹித், 1984 முதல் 1989ம் ஆண்டு வரை நாக்பூர் - காம்ப்தீ லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக இருந்தார்.
5. பாதுகாப்பு அமைச்சகத்தின் பார்லிமென்ட் ஆலோசனை குழு உறுப்பினராக இருந்துள்ளார்.
6. பன்வாரிலால், 1996ம் ஆண்டில் மீண்டும் லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். உள்துறை அமைச்சகத்தின் பார்லிமென்ட் ஆலோசனை குழு உறுப்பினராகவும், பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினராகவும், பொதுத்துறை நிறுவனங்களின் குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
7. இவர் முதலில் காங்கிரசில் இருந்தார். பின்னர் பா.ஜ.,வுக்கு மாறினார். இதனால், கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக, 2000 ம் ஆண்டுக்கு பிறகு இவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
8. கடந்த, 2016ம் ஆண்டில் அசாம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். மேகாலயா மாநில கவர்னர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்
9. மகாத்மா காந்தியின் குரு கோபால கிருஷ்ண கோகுலே துவக்கிய, 'ஹிதவாதா' என்ற ஆங்கில நாளிதழை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமை பன்வாரிலாலுக்கு உண்டு.
10.பன்வாரிலால் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் மத்திய பகுதியில் முன்னணி நாளிதழ் என்ற பெயர், 'ஹிதவாதா' நாளிதழுக்கு கிடைத்தது. இதன் தலைமை அலுவலகம் நாக்பூரில் உள்ளது. ஜபல்பூர், ராய்பூர், போபால் ஆகிய நகரங்களில் இருந்தும் இந்த நாளிதழ் வெளியாகிறது.