நஞ்சுகளிலிருந்து பிஞ்சுகளை காப்போம்!

Added : செப் 30, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
  நஞ்சுகளிலிருந்து பிஞ்சுகளை காப்போம்!

நீல நிறம் என்றால், கடல், ஆகாயம் தான், சட்டென்று நினைவுக்கு வரும். கொஞ்சம் பழைய ஆட்களுக்கு, நீலம் என்றால், வெள்ளை சட்டையில் கலந்த வர்ணம், மாம்பழம், பள்ளி சீருடை, சினிமா பாடலில் வந்த, 'நீல நிறம்... வானுக்கும், கடலுக்கும் நீல நிறம்' என்ற வார்த்தைகள் நினைவுக்கு வரும்.
ஆனால், இன்றைய புதிய, இளம், இணையதள தலைமுறையினருக்கு, நீல நிறம் என்றால், அவர்கள் நினைவுக்கு வருவது, நீலப்படம் என அழைக்கப்படும், 'புளூ பிலிம்' என்றாகி விட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை கூட, புளூ பிலிம்களை பார்ப்பது, அந்த படங்களை, 'வீடியோ' கேசட், புத்தகங்களாக வைத்திருப்பது அநாகரிகம், அசிங்கம், ஆபத்தானது என்ற எண்ணம் வலுவாக இருந்தது.
எனினும், ஒரு சிலர், அவ்வப்போது மறைவாக அந்த படங்களை பார்த்து வந்தனர். அந்த அளவுக்குத் தான் அப்போது, வசதி, வாய்ப்பு இருந்தது.
ஆனால், இப்போது, எல்லாமே தலை கீழ், 'சுனாமி' வந்து புரட்டி போட்டது போல ஆகி விட்டது. புளூ பிலிம் ஆபாச வீடியோ படங்கள், இணையத்தில் லட்சக்கணக்கில் உள்ளன. இன்டர்நெட் இணைப்பு, 24 மணி நேரமும் உள்ள, 'ஸ்மார்ட்' போன்கள், பிளஸ் 1 படிக்கும் பையன், பெண்ணின் கைகளில் கூட தாராளமாக புழங்குகின்றன.
சரியான கண்காணிப்பு இல்லாத, பெற்றோரால் அதிக சுதந்திரம் அளிக்கப்படும் பிள்ளைகளின் ஸ்மார்ட் போனில், புளூ பிலிம் வீடியோ கலெக் ஷன்ஸ் உள்ளது. அவர்களின், கம்ப்யூட்டர், பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவற்றில் கூட, 'அந்த' சமாச்சார படங்கள், பதிவிறக்கம் செய்யப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வருகிறது.
பத்தாவது படிக்கும் வரை, வகுப்பில் முதல் மாணவனாக இல்லாவிட்டாலும், நன்றாக படித்தவன், இப்போது, படிப்பில் நாட்டம் இல்லாமல், மதிப்பெண் குறைந்து, வேறு விதமான நண்பர்களின் சேர்க்கையுடன், 'மாறி விட்டான்' என, சில பெற்றோர் கூறுவதை கேட்கிறோம்.
பிறர் தன்னை கவனிக்கின்றனரா என, ஓரக்கண்ணால் பார்த்த படி, ரகசியமாக, மொபைல், கணினி போன்றவற்றை பார்ப்பது; அவற்றில் அதிக நேரம் ஆர்வமாக செலவழிப்பது என, பிள்ளைகள் இருப்பர்.
தங்கள் வாரிசின் போக்கில் மாற்றத்தை உணர்ந்தாலும், அது பற்றி அவனிடம் கேட்க பெற்றோர் தயங்குவர். இன்றைய நிலைமை, அநேகமாக இப்படி தான் உள்ளது.
பெற்றோர் மற்றும் உறவினர்களின் நெருக்கத்திலிருந்து ஒதுங்கி இருப்பது, மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவது, கம்ப்யூட்டரை ரகசியமாக பயன்படுத்துவது போன்றவை, பிள்ளைகளுக்கான அபாய எச்சரிக்கை தான்.
பிள்ளைகள் தனிமையை விரும்புகின்றனர்; ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்பதை அறியும் போது, பெற்றோர் உஷாராக வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என, உணர வேண்டும்.
தாம்பத்திய உறவில் திளைக்கும் தம்பதி பார்த்தால் கூட, சில நாட்களுக்கு மனதை விட்டு அகலாத, 'செக்ஸ்' காட்சிகளை, இளசுகள் பார்த்தால், ஆபத்தில் தான் முடியும் என்பது உறுதி.
அத்தகைய வீடியோக்களை பார்ப்பது, இளம் உள்ளங்களில் விஷத்தை நிறைப்பது போன்றதே. 'ஹார்மோன்' மாறும் தருணத்தில், இளம் உள்ளங்களில் அந்த விஷம் இறங்கினால் கஷ்டம் தான். பக்குவமில்லாத பருவம்; அதனால் ஆபத்தும் அதிகம்.
செக்ஸ் உணர்ச்சிக்கு, பாசம், பந்தம் என, எந்த வித முக்கியத்துவமும் தெரியாது; சுகம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும், செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் வீடியோவை பார்ப்பதால், இளம் மனதில் நஞ்சு கலந்து விடுகிறது.
உடலுறவுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டிய பொருள், பெண் என்ற தவறான எண்ணம் வளர்ந்து விடுகிறது.

சின்னக் குழந்தை, மனநிலை பாதித்தவர், பயந்த குணமுடைய பெண்கள், இவர்களின் கண்ணில் பட்டு விட்டால் அல்லது கையில் சிக்கி விட்டால், பார்த்த வீடியோவில் நடந்ததை, அவர்களிடம் நடத்தினால் என்ன என்ற எண்ணம், இவர்களுக்கு வந்து விடுகிறது.
பச்சிளம் குழந்தைகளை கூட, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பிள்ளைகளை பற்றிய செய்திகளை, பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கிறோம். புளூ பிலிம் வீடியோக்களை அடிக்கடி பார்ப்பதன் விளைவு தான் இது!இது போன்ற காட்சிகள், பிள்ளைகள் மனதில் பதிந்து விட்டால், அது, அவர்களின் செயல்பாட்டையே புரட்டி போட்டு விடும். அத்தகைய வீடியோக்களின் தாக்கம், தலையில் ஏறி விட்டால், அது, பழக்க, வழக்கங்களை மாற்றி விடும்.
வளர்ச்சியின் பாதையில் பக்குவமடைய தயாராகும் குட்டி மூளை, ஆபாச வீடியோவால், அநியாயமாக பாதிப்புக்கு உள்ளாகி விடும்.
எனவே, இத்தகைய பிரச்னையில் சிக்கிய பிள்ளைகளின் பெற்றோர், அவர்களிடம், இது பற்றி தைரியமாக பேச வேண்டும். குற்றவாளியிடம் விசாரணை செய்வது போல செய்யாமல், அன்பாக பேசி, அத்தகைய ஆபாச கசடுகள், பிள்ளையின் கைகளில் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவர்களிடம், ஆரோக்கியமான உடலுறவு பற்றி அறிவுறுத்த வேண்டும். ஆபாச வீடியோக்களை பார்ப்பதால், எப்படி எல்லாம் பாதிப்பு வரும் என, சொல்லித் தர வேண்டும்.அத்தகைய வீடியோக்களை பார்க்க யார் துாண்டினரோ, அத்தகைய நண்பர்களை முற்றிலும் தவிர்த்து விட அறிவுறுத்த வேண்டும். குடி, போதை போன்றவற்றிற்கு, 'நோ' சொல்வது போல, ஆபாச வீடியோ படங்களை பார்ப்பதற்கும், 'நோ' சொல்லி, முகம் திருப்ப, கற்றுத் தர வேண்டும்.
சரி, அது போன்ற வீடியோக்களை பிள்ளைகள் நிறைய பார்த்தாகி விட்டது என்றால், பார்த்த காட்சிகளை செயல்படுத்தி பார்க்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தை மாற்ற, பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.
அத்தகைய நேரத்தில், மொபைல் போன், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டுப்பாடு செய்ய வேண்டும்; கண்காணிப்பை பெற்றோர் தொடர வேண்டும்.
அத்தகைய பிள்ளைகளை, தங்களால் மாற்ற முடியவில்லை என, கருதும் பெற்றோர், மனநல மருத்துவரிடம் அழைத்து செல்வது அவசியம்.பெரிய பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பார்த்தது போல, சிறிய குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் நாம் போக்க வேண்டும். வேகம் என்ற பெயரில், பெற்றோர் மற்றும் பிறரால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்
தவிர்க்கப்பட வேண்டும்.

இரு சக்கர வாகனங்களில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வரும் பெற்றோர், அதிக பொறுப்பு மற்றும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை.குழந்தைகளுடன் வாகனங்களை அவசரம், அவசரமாக, சந்து, பொந்துகளில் ஓட்டுவது; 'சிக்னல்'களை மதிக்காமல், முந்திச் செல்வது; சக வாகன ஓட்டிகளுடன் சண்டையிடுவது; ஆபாசமாக பேசுவது போன்ற தவறுகளை, பெற்றோர் செய்கின்றனர்.
பெற்றோரால், வேன் மற்றும் ஆட்டோக்களில் பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் நிலைமை, இன்னும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது. அதிக குழந்தைகளை அடைத்து செல்வது; அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவது என, பல விபரீதங்களை குழந்தைகள் சந்திக்கின்றன.
பள்ளிக்கு சென்று வந்த வாகனத்தில் அடிபட்டு இறந்த குழந்தைகள் பற்றி, நாளிதழ்களில் படிக்கிறோம். வேனின் பக்கவாட்டில் குழந்தை நிற்பதை கூட கவனிக்காமல், வண்டியை இயக்கிய ஓட்டுனரால், பலியான குழந்தைகள் பட்டியல் நீள்கிறது.
குழந்தைகள் பாதுகாப்பில் இது போன்ற ஆபத்துகளுக்கு காரணம், பிழையா, அறியாமையா, அசட்டுத்தனமா, அஜாக்கிரதையா என்பது
ஆராயப்பட வேண்டும்.
பெண்கள், முதியோர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். பிஞ்சுகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டியது இன்னும்
அவசியமல்லவா!
சொல்லத் தெரியாத வயதில் குழந்தைகளை தண்டிக்கும், நர்சரி பள்ளி ஆசிரியர்கள்; பள்ளியின் கட்டுப்பாடு என்ற பெயரில், குழந்தைகளை தாறுமாறாக அடித்தும், கோபம் அடங்காமல், குழந்தைகளை துாக்கி வீசும் ஆசிரியர்களை, 'வாட்ஸ் ஆப்' மற்றும், 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் பார்க்கிறோம்.
'நல்ல வேளை, இதெல்லாம் நம் குழந்தைகள் இல்லை; நம் ஊரில் இல்லை' என, அமைதி கொள்ள முடியுமா... எங்கு நடந்தாலும், குற்றம், குற்றமே.தாயுடன் படுத்து உறங்கும் குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லை. நகை திருட வந்து, குழந்தையை கொல்லும் மோசமான கயவர்களும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய, மிருக குண கயவர்களும் இந்த சமூகத்தில் வாழத் தானே
செய்கின்றனர்!சில குற்றங்களில், தாய்மார்களின் அஜாக்கிரதையும் வெளிப்படுகிறது. தண்ணீர் நிரப்பின தொட்டி, கொதிக்கும் சாம்பார், ஏரி, குளங்களுக்கு குளிக்கச் செல்லும் போது ஏற்படும் பிஞ்சுகளின் மரணப் பட்டியல், அவற்றை
காட்டுகின்றன.வருங்கால துாண்களான நம் பிள்ளைகளையும், பிஞ்சுகளையும், பாதுகாத்து, அவர்களை நல் வழிப்படுத்த வேண்டிய கட்டாய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது.
இந்த அறப்பணியில், அனைவரும் ஒன்றிணைந்து, போராடி, விடியல் காண வேண்டியது அவசியம்.இ - மெயில்:hema338@gmail.com இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Vadivelu - Mangaf,குவைத்
01-அக்-201714:46:00 IST Report Abuse
M.Vadivelu இதை தடை செய்ய வேண்டியது அரசின் கடமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X