தோல்வியை நேசியுங்கள்!| Dinamalar

தோல்வியை நேசியுங்கள்!

Added : அக் 03, 2017
தோல்வியை நேசியுங்கள்!

மனிதர்கள் வெற்றிகரமான உன்னத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் தோல்விகளை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாது. இந்த உலகத்தில் தோல்விகளே இல்லாத வாழ்க்கையை எவராலும் வாழ்ந்திட முடியுமா? அல்லது தோல்விகளை சந்திக்காதவர்கள் இருக்கத்தான் முடியுமா?தோல்வியை கண்டு மனம் கலங்காதவர்கள் இருந்துவிட முடியாது.
ஏனென்றால் அதுமனதை பாதிக்கும் வாழ்க்கை நிலையாக நாம் எடுத்துக்கொள்வதால். தோல்விகள் நமக்கு அவமானங்களை ஏற்படுத்துகின்றன என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டும் என்றால் நம்மில் பலர் சிறு சிறு தோல்விகளையும் ஏற்கமுடியாத சூழ்நிலையில் நம்மை நாமே காயப்படுத்தி கொள்கிறோம்.தோல்விகளும் வெற்றியை போல் மனிதர்களுக்கு வாழ்க்கையில்அவ்வப்போது ஏற்படும் அனுபவங்கள். தோல்வியை சவால்களாக பாவித்து மனிதர்கள் அதை எதிர்கொண்டு தன்வசப்படுத்தி வெற்றிகண்டு வாழ்வதில்தான் வாழ்க்கையில் சுவாரசியமே அடங்கியுள்ளது.
தோல்விகள் நிரந்தரமில்லை
மனிதர்கள் தோல்வியைநிரந்தரமான வாழ்க்கை நிலை என எடுத்துக்கொள்ளக்கூடாது. தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்து கொள்ளவேண்டும். தோல்விகள் பல நேரங்களில் மனிதர்களை பக்குவப்படுத்தும் வாழ்க்கை அனுபவம் ஆகிறது. தோல்விகள் ஒரு தற்காலிக நிலைமை தான் என்று புரிந்துகொண்டு வாழ்ந்தால், வாழ்க்கை இன்பமயமாக இருக்கும். வாழ்க்கையை நாம் இஷ்டப்பட்ட மாதிரி வாழ்வதற்கு சிறிது கஷ்டப்பட்டாலும் தவறில்லை.வரலாற்றில் ஆயிரக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் தோல்விகளால் பிறந்து காலத்தை கடந்து நிற்கும் வெற்றிகளாக திகழவில்லையா? முன் அனுபவமில்லாது, முன்னோடிகள் இல்லாத நிலையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் வெற்றி பெறவேண்டும் என்று தொடர் முயற்சிகளால் விஞ்ஞானிகள் உழைத்து சாதனைகள் படைக்கவில்லையா? வரலாறு இப்படி இருக்கும் நிலையில், சமூகத்தில் ஏன் தற்காலத்தில் மனிதர்கள் தோல்விகளை தாங்கிக்கொள்ள இயலாத அளவில் மன வருத்தங்களோடு வாழ்கின்றனர்?
தோல்விகள் தரும் அனுபவம்
தோல்விகளை வாய்ப்புகளின் வசந்தமாக நாம் கருதவேண்டும். எந்தவொரு காரியத்திற்காகவும் நாம் தோல்வியடைய நேரிட்டால், தோல்விக்கான காரணத்தைஆராய்வதுதான் நமது முதல் செயலாக இருக்கவேண்டும். அவ்வாறு கண்டுபிடித்த தோல்விக்கான காரணிகளை கலைத்துவிட்டு, மீண்டும் நாம் எண்ணிய காரியங்களில் துணிவுடன் மனம் தளராமல் உழைத்தால் தோல்வியை தவிர்த்து கொள்ளலாம்.
தோல்வியை நமது இந்திய வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு கையாளுகின்றனர் என நான் கண்ட உண்மை சம்பவத்தை இத்தருணத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதள மையத்திற்கு சென்றபொழுது விண்வெளி ஏவுதளத்தில் விஞ் ஞானிகளை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ராக்கெட் அனுப்பப்படும்அனுபவத்தை விவரித்து கொண்டிருந்தார்கள், அப்பொழுது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. ராக்கெட் கடலுக்குள் விழுந்தால் அது தோல்வி தானே என்றுகேட்டோம்? அதற்கு அந்த விஞ்ஞானி பதில் அளித்தது ஆச்சரியத்தை மட்டுமல்ல, ஒரு அற்புத மனோதத்துவ உண்மையை வெளிப்படுத்தியது.அவர் கூறிய பதில் இதுதான். ஒரு ராக்கெட் விண்வெளிக்கு அனுப்புவது என்றால் விண்வெளியில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தி, அது திட்டமிட்டபடி செயல்படும் வண்ணம் திட்டமிடுவோம். ராக்கெட்டை வெவ்வேறு பகுதிகளாக தயாரிப்பதிலிருந்து ஏவுதளத்தில் முழுமையான ராக்கெட்டாக இணைக்கப்பட்டு, செயற்கை கோள் பொருத்தப்பட்டு குறித்த நேரத்தில் செலுத்துவது என பல்வேறு திட்ட இலக்குகளை உள்ளடக்கியதாகும்.
ராக்கெட் கடலுக்குள் விழுவதை நாங்கள் தோல்வி என்று கருதுவது இல்லை. ஏனென்றால் தனது முழு செயல்பாட்டையும் வெளிபடுத்தாமல் கடலுக்குள் விழும் ராக்கெட், அந்த தருணம் வரை பல திட்ட இலக்குகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்து உள்ளது. இதை நாங்கள் ஒரு அனுபவமாகவே எடுத்துக்கொள்வோம். இந்த அனுபவம் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை எங்களுக்கு எடுத்துரைக்கும். அதை நாங்கள் ஆராய்ந்து அந்த தவறு நடக்காவண்ணம் மீண்டும் ஒரு ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு அதில் வெற்றி காண்போம்.
இந்த விளக்கவுரை, மனிதர்கள் தோல்வியை சமூகத்தில் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் என எண்ணுகிறேன். இல்லையென்றால் சந்திராயன் செயற்கைகோள் மூலமாக நிலவை இந்தியாவால் நெருங்கமுடியுமா?தோல்வியை வெல்லுங்கள்தோல்விகள் மனிதர்களுக்கு வாழ்க்கையில் சாதனைகள் பல புரிந்து வெற்றியாளர்களாக திகழ்வதற்கான ஒரு மகத்தான வாய்ப்பு. தோல்வியை கண்டு அச்சப்படாமல், வருத்தப்படாமல் அதை தக்க மனநிலையோடு எதிர்கொண்டு வெல்வதுதான் மனிதர்களுக்கு நிரந்தர மகிழ்ச்சியை அளிக்கமுடியும்.
தோல்வியை எதிர்கொள்வதற்கு எளிய வழிமுறைகளை பின் பற்றலாம். முதலாவதாக, தோல்வி நமக்கு மட்டும்தான் என்று இல்லை, இது எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிக நிலை என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். இரண்டாவதாக, தோல்வி ஏற்படும் சமயத்தில் அதை உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். நமது முயற்சியின்மையினால் அல்லது சூழ்நிலை காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள சிறு தடை என்று புரிந்து கொள்ளவேண்டும். மூன்றாவதாக, தோல்வியினால் வரும் மனக்கவலை மற்றும் அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை விரைவில் வெளியேற்ற பழகி கொள்ளவேண்டும். நான்காவதாக, தோல்வியை சந்திக்கின்ற வேளைகளில் அதை பெரிதுப் படுத்தி நமக்கு மனவருத்தத்தை அளிக்கக்கூடிய நபர்களிடம் இருந்து தள்ளியிருக்கவேண்டும். இறுதியாக, தோல்விக்கான காரணங்கள் நமக்கு வழிகாட்டும் குறிப்புகளாக எண்ணிக்கொண்டு திடமான மனதுடன் மீண்டும் உழைத்து தோல்வியை வெல்லவேண்டும்.
தோல்வி வெற்றிக்கு வித்திடும்!
தோல்விகள் நிலையென நினைத்தால், மனிதர்கள் வாழ்ந்திடமுடியாது. ஒவ்வொரு தோல்வியும் மனிதர்களுக்கு ஏதாவது படிப்பினையோ அல்லது வாழ்க்கை அனுபவத்தையோ அளிக்கும். அதை வெறுத்து ஒதுக்கிவிடாமல் துணிவுடன் எதிர்கொள்வதினால் மனிதர்களின் தனிப்பட்ட முழுஆளுமை வெளிப்படும்.தோல்வி அடைந்துவிடுவோமே என்ற பயத்தினால், பலரும் செயலற்ற அளவில் வாழ்க்கையை கடத்துகின்றனர். தோல்வி தரும் பயத்திற்கு, என்றுமே மனிதன் அடிபணியக்கூடாது; மாறாக தோல்வியினால் ஏற்படும் அனுபவங்களை நமது வாழ்க்கையின் முன்னேற்றப்பாதைக்கு பயன்படுத்திகொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டும்.வாழ்க்கையில் அனுபவங்கள் கற்றுகொடுக்கின்ற பாடம் என்றுமே சிறந்தது.தோல்விகள் நம்மை செதுக்கும் வாழ்க்கை அனுபவமாக ஏற்றுக்கொள்வதற்கு, நாம் தோல்வியை நேசிக்கவேண்டும். தோல்வியை நேசிக்கின்றபோது நமக்கு வாழ்க்கையில் வெற்றி வெகுதுாரமில்லை.
'தோல்வியை கண்டு கலங்காதே மனிதனே!
அது உன்னை பட்டைத்தீட்டும் அனுபவம்தானே.உனக்குள் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்து,துணிவோடு உழைத்திடு, தோல்வியை எதிர்க்கொண்டு.அத்தருணம் தோல்விகள் துாரம் ஓடும் உன்னை கண்டு,வாழ்க்கையில் வெற்றிபெறு; அதுதரும் உற்சாகத்தினை துணைகொண்டு'.--நிக்கோலஸ் பிரான்சிஸ்தன்னம்பிக்கை எழுத்தாளர் மதுரை. 94433 04776We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X