சி.இ.ஓ., ஆபீஸ்ல ஒரு 'பிக்பாஸ்!'

Added : அக் 04, 2017
Share
Advertisement
சி.இ.ஓ., ஆபீஸ்ல ஒரு 'பிக்பாஸ்!'

தீபாவளி பர்ச்சேசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் மித்ரா. அப்போது அவளது போன் சிணுங்கியது. எதிர்முனையில் சித்ரா பேசினாள்.
''எங்கேடி இருக்கே... தீபாவளி பர்ச்சேசுக்கு போறேன். வர்றியா...?
''அதெப்படிக்கா கரெக்டா அடிக்கறே... நானே கூப்பிடணும்னு இருந்தேன். நானும் அதுக்குத்தான் கிளம்பிட்டிருக்கேன். நேரா புரூக்ஸ் வந்துரு... ரைட்டா? என்று கூறி 'கட்' செய்தாள்.
- மித்ரா செல்வதற்கு முன்பே அங்கு வந்து விட்ட சித்ரா, புரூக்ஸ் தரைத்தளத்தில் இருந்த படிகளில் அமர்ந்து, 'வாட்ஸ் ஆப்'ல் மூழ்கியிருந்தாள்.
''பிக் பாஸ் பார்த்தியாக்கா,'' என்று கேட்டபடி அருகில் அமர்ந்தாள் மித்ரா.
''வா... வா. பிக்பாஸ் பார்த்தேன். எந்த வம்புலயும் சிக்காம கூலா இருந்த, கணேஷ் வெங்கட்ராம்தான் 'பிக் பாஸ்'னு நெனச்சிட்டிருந்தாங்க. யூத்லாம் அவருக்குத்தான் ஓட்டு போட்டிருந்தாங்க,'' என்றாள் சித்ரா.
''உனக்கு தெரியுமா... நம்ம சி.இ.ஓ., ஆபீஸ்ல, ஒரு பிக்பாஸ் இருக்காரு. சி.இ.ஓ., இல்லாத நேரத்துல இவரு வச்சதுதான் ஆபீஸ்ல சட்டமாம்,'' என்றாள் மித்ரா.
''நானும் கேள்விப்பட்டேன்... 'நாம எல்லாம் இருக்கறதுனாலதான் இவருக்கு இந்த வேலைங்கறத மறந்துட்டு, நம்மளயே மரியாதை இல்லாம வா, போன்னு நாயை விரட்டற மாதிரி பேசறாரேன்னு டீச்சர்ஸ்லாம் புலம்பறாங்க. அந்த ஆபீஸ் அதிகாரி இதையெல்லாம் கண்டுக்கறதேயில்லையாம்,'' என்றாள் சித்ரா.
அப்போது, ''ரமேஷ்... இரு. டிரெய்ன்ல அடுத்த ரவுண்டு போலாம்,'' என்று ஒரு சிறுவன்
பின்னால் ஓடினார்
அவனது தாய்.
''ரவுண்டுனதும் ஞாபகம் வந்துச்சு. நம்ம மதுக்கரை ஏரியால ராத்திரி, பகல்னு எத்தனை ரவுண்டு வேணும்னாலும், 'சரக்கு' அடிக்கலாமாம். அந்த ஏரியா ஆளுங்கட்சி பிரமுகர் ஒருத்தரோட தயவோட, அவரோட தம்பி, மச்சான்னு குடும்பத்தோட இல்லீகலா சரக்கு விக்கிறதுதான் அவங்க பொழப்பாம்,'' என்று அடுத்த மேட்டருக்கு 'ஜம்ப்' ஆனாள் மித்ரா.
''அப்ப அந்த ஏரியால போலீஸ் ஸ்டேஷனே இல்லையா,'' என்று கேட்டாள் சித்ரா.
''சும்மா பேருக்குதான் அந்த ஸ்டேஷனாம். மூணு நாளைக்கு முன்ன கூட, குவாரி பகுதியில காருல உக்கார்ந்து சரக்கு வித்திட்டிருந்தவங்கள, சிலபேரு பிடிச்சு ஸ்டேஷன்ல ஒப்படைச்சாங்க.''
''வெரிகுட்...
அப்புறம்.''
''அப்புறமென்ன... வழக்கம் போலதான். மாசம் ஒரு லட்சம் ரூபா பக்கத்துல கப்பம் கட்டுறதனால, எப்.ஐ.ஆர்., எதுவும் போடலயாம். சாயங்காலம் அவங்க எல்லாரும் கூலா வெளிய வந்து, பழையபடி பிசினஸ்ல இறங்கிட்டாங்களாம். இதனால, 'காச விட்டெறிஞ்சா, இவங்களோட சொந்த வீட்டையே எழுதிக்குடுத்துருவாங்க'ன்னு வெளியே வந்து போலீஸ்காரங்கள பத்தி அசிங்கமா பேசி சிரிக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''ஒவ்வொரு ஸ்டேஷன்லயும், 'அலெக்ஸ் பாண்டியன்' மாதிரி தங்கமா ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தா நல்லாயிருக்கும்... இல்லே,'' என்று சிரித்தாள் சித்ரா.
''இந்த கிறிஸ்துமசுக்கு நம்ம கிளாஸ்மேட் ஜோசப் வீட்டுக்கு போலாம்னு இருக்கேன்... வர்றியா,'' என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டாள் மித்ரா.
''அதுக்கு இன்னும் நாளிருக்கே... அதை விடு. நம்ம கார்ப்பரேஷன்ல குறிப்பிட்ட சில அதிகாரிங்க மட்டும், 'பசை'யுள்ள பதவியில, ரொம்ப வருஷமா இருக்காங்களாமே...'' என இழுத்தாள் மித்ரா.
''ஊர் உலகத்துல நடக்காத விஷயமா. வருவாய் பிரிவுல அஞ்சு ஏ.ஆர்.ஓ.,க்கள் இருக்காங்க. ரெண்டு பேர் புதுசு; மூணு பேர் எல்லா விஷயத்திலயும் கில்லாடிங்க. இவுங்க ஏரியாவுல, 'கரன்சி' மழை பொழியுது. மேலிடத்துக்கு 'கப்பம்' கட்டிட்டு, நாற்காலில ஒட்டிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
இடைமறித்த மித்ரா, ''ஆமா... போன வாரம் உங்க வீட்டுக்கு மகேசு, நுாறு, தமிழ்வேந்தன்னு மூணு வாலுங்க வந்திருந்தாங்களே... கெளம்பிட்டாங்களா...,'' என கேட்க, அதற்கு சித்ரா, ''தீபாவளி நேரமாச்சே... இருப்பானுங்களா,'' என்றாள்.
''கார்ப்பரேஷன்னு சொான்னவுடனேதான் ஞாபகம் வருது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தி, வரி செலுத்தலாம்னு சொல்லியிருக்காங்க. ஆனா, மாநகராட்சி இணையதளத்தை இன்னும் 'அப்டேட்' பண்ணாம வச்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''அப்டேட் செய்யக்கூடாதுன்னுதான் திட்டம் போட்டு, மாமன்ற கூட்டத்துல நிறைவேத்துற தீர்மானம் எல்லாத்தையும் மறைச்சு வச்சிருக்காங்க... அதெல்லாம் வெளிப்படையா தெரிஞ்சா, கோடி கோடியா அமுக்குற விஷயம் வெளியே தெரிஞ்சு போயிருமே... இது தெரியாம, குப்பை அள்ளுறதையும், கழிவு நீர் உறிஞ்சி எடுக்கறதையும், சில 'வாட்ஸ்ஆப்' குரூப்ல புகழ்ந்து தள்ளுறாங்க,'' என அங்கலாய்த்தாள் மித்ரா.
''உண்மைதான்... தனி அதிகாரி பொறுப்புல, நிர்வாகம் வந்து, ஒரு வருஷமாகப் போகுது. உருப்படியா ஒரு வேலை கூட நடக்கலையே,'' என அலுத்துக் கொண்டாள் சித்ரா.
''கஜானாவை காலி செஞ்சிட்டதா சொல்றாங்களே,'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து, கவுன்சில் பதவி முடியும்போது கிட்டத்தட்ட, 360 கோடி ரூபா 'டிபாசிட்' இருந்துச்சாம். இப்ப, எம்பிளாயீஸ்க்கு சம்பளம் போடக்கூட காசில்லையாம். ஏதேதோ கணக்குப்போட்டு, 100 கோடி ரூபாய் வரப்போகுதுன்னு, காகிதத்துல எழுதி வச்சிருங்காங்க. இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள, கான்ட்ராக்ட்காரங்களுக்கு நிலுவையை 'செட்டில்' பண்ணிருவோம்னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.
''ம்ம்...''
''எப்படியும் உலக வங்கி கடனுதவி கிடைக்கும், ஸ்மார்ட் சிட்டி பணம் வரும்னெல்லாம், கணக்கு போட்டு வச்சிருந்தாங்க. ஆனா, எல்லாம் தப்புக் கணக்காயிருச்சு. உலக வங்கி கிட்டயிருந்து, 250 கோடி ரூபா கடன் வாங்க, சீப் செகரட்டரி சம்மதிக்கலையாம். அதனால, அந்த நிதியும் வரலை,'' என்றாள் சித்ரா.
''ஸ்மார்ட் சிட்டிக்கு வர்ற பணத்தையாவது, சரியா செலவு பண்ணுவாங்களா, இல்லை பொய் கணக்கு காண்பிச்சுருவாங்களா,'' என்றாள் மித்ரா.
''கட்டுமான கான்ட்ராக்டர், ரோடு கான்ட்ராக்டர், தெரு விளக்கு கான்ட்ராக்டர்னு, செட்டில் செய்ய பல கோடி ரூபா தேவைப்படுதாம். சானிட்டரி ஒர்க்ர்சும், தண்ணி திறந்து விடுறவங்களும் சம்பளம் கிடைக்கலைன்னா, போராட்டம் பண்ணப் போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அப்படின்னா சீக்கிரமே நாறப்போகுது நம்ம மாநகராட்சின்னு சொல்லு,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''ஏற்கனவே டெங்கு காய்ச்சலால ஊரே நடுங்கறது போதாதா... வேற ஏதாவது காய்ச்சலும் அட்டாக் பண்ணுச்சுன்னா, ஜனங்க உண்டு இல்லைன்னு பண்ணிருவாங்க,'' என்றாள் சித்ரா.
''டெங்குன்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. நம்ம ஜி.எச்., வண்டவாளம் தண்டவாளத்துல ஏறிருச்சு தெரியுமா?''
''அதுதான் ஊரே தெரிஞ்சதாச்சே... இப்ப புதுசா என்னாச்சு,'' என்றாள் சித்ரா.
''கவர்ன்மென்ட் குடுக்கற நிதியை, எந்தளவுக்கு நல்ல முறையில் பயன்படுத்தியிருக்காங்கனு தெரிஞ்சுக்க, போன வாரம் செயல்திறன் குழு ஒண்ணு, இங்க வந்துச்சு. இந்த குழு முதல் நாள் நடத்துன கலந்தாலோசனை கூட்டத்துல, மருத்துவக் கல்லுாரி ஆஸ்பத்திரி தரப்புல ஆகா ஓகோன்னு தம்பட்டம் அடிச்சாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''தம்பட்டம் அடிக்கதான் ஒண்ணுமே இல்லையே... பேர ரிப்பேர் பண்ண டெங்கு ஒண்ணு போதாதா,'' என்றாள் சித்ரா.
''மேல கேளுக்கா... பொறுமையா கேட்டுக்கிட்டு இருந்த குழு தலைவர் அமுதா, 'இவ்வளவு சிறப்பு இருக்குறதா சொல்றீங்க. அப்பறம் ஏன் உங்க ஆஸ்பத்திரி மேல இவ்வளவு கம்ப்ளையின்ட் வருது. முதல்வர் காப்பீட்டு திட்டத்த முழுசா செயல்படுத்துறதில்லைன்னு, நெறய கம்ப்ளையின்ட் வருதே'ன்னு குறுக்கு கேள்வி கேட்டிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''வெரிகுட்...
அப்புறம்,''
''பல கவர்மென்ட் ஆஸ்பத்திரிகள்ல, 100 அறுவை சிகிச்சைகளுக்கு மேல செய்துட்டுருக்கும் போது, 106 வருஷம் பழமையான இந்த ஆஸ்பத்திரில, ஏன் இப்பதான் அறுவை சிகிச்சைகள் தொடங்கியிருக்குன்னு போட்டு குடைஞ்சிருக்காங்க,''
''அப்புறம்....கேக்க மாட்டங்களா..,''
''பதில் சொல்ல முடியாம ஆஸ்பத்திரி தரப்புல கலந்துக்கிட்ட டாக்டர்கள் திணறிட்டாங்களாம்,'' என்று முடித்தாள் மித்ரா.
தொடர்ந்தாள் சித்ரா. ''இதுமட்டும்தான உனக்கு தெரியும். இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு. அந்த குழு அடுத்த மூணு நாளும் ஆஸ்பத்திரில, ஆய்வு நடத்தியிருக்காங்க. அப்ப காய்ச்சல் வார்டுக்கு போன மருத்துவ கல்வி இயக்குனரக துணை இயக்குனர் சவிதா, ஒரு பேஷன்ட் கிட்ட, 'எதுக்காக அட்மிட் ஆகிருக்கீங்க' ன்னு கேட்டிருக்கார்,''
''அதுக்கு அந்த பேஷன்ட், 'டெங்கு காய்ச்சலுக்குனு' சொல்லிட்டாராம். உடனே ஆஸ்பத்திரி ஸ்டாப் கிட்ட சவிதா கேட்டதுக்கு, 'அவருக்கு காய்ச்சல் மட்டும் தான்'ன்னு சொல்லியிருக்காங்க. கடுப்பான சவிதா, டாக்டர்கள், ஸ்டாப் எல்லாரையும் ஒரு பிடி பிடிச்சாராம். இப்படி நெறைய வார்டுகள்ல, பேஷன்ட்ஸ் மாறி, மாறி புகார் செய்யவும், அந்த அதிகாரி ஏக கடுப்பாயிட்டாராம்,'' என்று முடித்தாள் மித்ரா.
இருவரும் எழுந்து ஒரு ஐஸ்கிரீம் வாங்கி சுவைத்தவாறே, முதல் தளத்துக்கு எஸ்கலேட்டரில் பயணமானார்கள்.
''மித்து... உனக்கு தெரியுமா, நம்மூர் போக்குவரத்து துறை அதிகாரி ஒருத்தர், டபுள் டெக்கர் பத்தாதுன்னு இப்ப டிரிப்பிள் டெக்கருக்கு டிரை பண்றாராம்,'' என்றாள் சித்ரா.
''முருகா... முருகா... கோவை, சென்னைன்னு ரெண்டு ஊர்லயும் இருக்கற 'ஆனந்தமான' பதவி அவருக்கு பத்தலையாமா,'' என்று கேட்டாள் மித்ரா.
''அதான் பாரேன்... இப்ப அவரோட சென்னை ஆபீஸ்ல நிர்வாக பொறுப்புல இருக்கற இன்னொரு ஜே.சி., ரிட்டையர் ஆகிறாராம். அந்த பதவியையும் பிடிக்க, துாண்டில் போட்டிருக்காராம்,'' என்றாள் சித்ரா.
''அவரோட பேராசைக்கு அளவே இல்லையா,'' என்றாள் மித்ரா.
''மேல கேளு... அவரை இப்ப ஆபீஸ்ல பார்க்கறவங்கல்லாம், பூங்கொத்து, ஸ்வீட் இல்லாம சந்திக்கறதில்லையாம்,'' என்று சிரித்தாள் சித்ரா.
- பேசியபடியே இருவரும் அங்கிருந்த ஒரு ரெடிமேடு ஆடை கடைக்குள் நுழைந்தனர். கடை ஊழியர் இருவரையும் வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X