தீவிரமாய் இருப்பதற்கும் பதற்றப்படுவதற்கும் என்ன வித்தியாசம்?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

தீவிரமாய் இருப்பதற்கும் பதற்றப்படுவதற்கும் என்ன வித்தியாசம்?

Added : அக் 04, 2017 | கருத்துகள் (1)
Advertisement
தீவிரமாய் இருப்பதற்கும் பதற்றப்படுவதற்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி: சத்குரு, பதற்றமாக வேலை செய்வதற்கும், தீவிரமாக வேலை செய்வதற்கும் என்ன வித்தியாசம்?
சத்குரு: தீவிரமாய் இருக்க வேண்டுமெனில், நீங்கள் எதையோ செய்யவேண்டும் என்றில்லை. இங்கு நான் இப்போது மிகத் தீவிரமான நிலையில் தான் அமர்ந்திருக்கிறேன். தீவிரமாக இல்லாத நிலையில் என்னை நீங்கள் பார்க்க முடியாது. ஏனெனில், நான் ஓய்வெடுத்தாலும், செயலில் ஈடுபட்டிருந்தாலும், தூங்கினாலும் கூட, அது உச்ச தீவிரத்தில்தான் இருக்கும். இந்தத் தீவிரம் இல்லாமல் நான் எதையுமே செய்வதில்லை. ஏனெனில், வாழ்வென்றாலே தீவிரம் தான். வாழ்வின் தீவிரத்தை இழந்துவிட்டால், அது இறப்பதற்கு சமம்.

உங்கள் உடலிற்குள்ளும், மனதிற்குள்ளும் ஒரு அலுப்பை, சோம்பேறித்தனத்தை நீங்கள் வரவழைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் அடிப்படையில் வாழ்வென்பது தீவிரம் மட்டும்தான். ஒருவேளை சோம்பேறித்தனப்பட்டு, நீங்கள் படுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் இருதயமும், 'சரி, நாமும் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்' என்று இயக்கத்தை நிறுத்தி விட்டால்..? நீங்கள் அதை விரும்புவீர்களா, என்ன? இப்போது புதிதாக, 'எது நடக்கிறதோ அது நடக்கட்டும்' எனும் கொள்கை வலம் வந்துகொண்டிருக்கிறது. உங்கள் உடலும் உங்கள் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்ற எண்ணி, உங்கள் உடலுக்கு எது நடந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டால்… பிறகு உங்கள் கதை முடிந்துபோகும். அடிப்படையில் வாழ்வு என்பது தீவிரம் மட்டும்தான். ஒரு செயலைச் செய்வதற்கு தீவிரம் தேவை. அப்படி செயல் செய்வதற்கான தீவிரத்தை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளத் தெரியவில்லை என்றால் பதட்டத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். பிறகு பதட்டத்திலிருந்து விடுபடுவதற்காக முயற்சிக்கும்போது சோம்பலாகி அல்லது மந்தமாகி விடுகிறீர்கள்.

பதட்டம், மந்தம் இரண்டுமே சரியல்ல. இதுவே நீங்கள் தீவிரமாய் இருந்தால், எதைச் செய்வதானாலும், எளிதாகச் செய்துவிடலாம். தீவிரம் என்பது என் கருத்தல்ல, அது தான் வாழ்வின் வழி. உயிருடன் இருக்கும் எல்லாமே தீவிரமாய் தான் இருக்கிறது. அந்த தீவிரத்தில் கொஞ்சம் சரிவு ஏற்பட்டால், பிறகு மரணம்தான். இக்கிரகமே முழு தீவிரத்தில் தான் இருக்கிறது. அது தீவிரமாக இருப்பதால் அது கஷ்டப்பட்டு செயல்படுகிறது என்றா நினைக்கிறீர்கள்? அது மிகமிக சாதாரணமாகவே இருக்கிறது; ஆனால் அதே நேரத்தில், அது தீவிரமாகவும் இருக்கிறது; ஏனெனில் வாழ்வின் இயல்பே அது தான். தீவிரம் என்பது கோட்பாடோ கொள்கையோ அல்ல. 'இனி மேல் நான் தீவிரமாய் இருக்கப் போகிறேன்!' என்பது போல் அல்ல. உங்கள் முட்டாள்தனத்தை எல்லாம் உதறிவிட்டால், வாழ்க்கையும் அதன்போக்கில் தீவிரமாகத்தான் இருக்கும், நீங்களும் பதற்றத்தை உருவாக்கிக் கொள்ள மாட்டீர்கள்.

மனம் எப்போதும் எண்ண அடைசல்களோடு இரைச்சலாய் இருப்பதால் தான், அதிலிருந்து விடுபட மக்கள் அமைதியை நாடுகிறார்கள். அதேபோல் நீங்களும் பதற்றமின்றி இருந்தால், இயல்பாகவே தீவிரமாகத் தான் இருப்பீர்கள், ஏனெனில் வாழ்வே அப்படித்தான் இருக்கிறது. சோம்பேறித்தனமாய் இருந்துவிட்டு பிறகு அதை ஈடுகட்டவே நீங்கள் இப்போது கஷ்டப்பட்டு செயல் செய்கிறீர்கள். இதுவே செய்யும் செயலில் அதிக ஈடுபாடு இருந்தால், பிறகு அதைக் கஷ்டப்பட்டு செய்யவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஒரு ஜிலேபியை கஷ்டப்பட்டா உண்கிறீர்கள்? நீங்கள் விரும்பாத ஒன்றை, செய்தே ஆக வேண்டும் என்னும் கட்டாயத்தில் இருக்கும்போது, தலையெழுத்தே என அதைக் கஷ்டப்பட்டு செய்வீர்கள். உங்களுக்கு அக்கறை இல்லாத ஒன்றை செய்ய முனைகிறீர்கள், அதனால் தான் அது கடினமாக இருக்கிறது. இதுவே நீங்கள் அக்கறை காட்டும் ஒன்றைச் செய்யும்போது, அதில் தீவிரமாக ஈடுபடுவீர்கள், கஷ்டப்பட்டு அல்ல. உங்கள் வாழ்வை விருப்பத்தோடு வாழ்ந்தால், எல்லா நொடியிலும் தீவிரமாகவே இருப்பீர்கள். இதுவே வாழ்வில் விருப்பமின்றி செயல்பட்டால், சிலநேரம் கடினமாக இருப்பீர்கள், சிலநேரம் சோம்பேறித்தனமாக இருப்பீர்கள். இவ்விரு வழிகளிலும் நீங்கள் துன்புறுவீர்கள். சோம்பேறித்தனமாக இருந்தால், வாழ்வைத் தவறவிடுவீர்கள். கஷ்டப்பட்டு செயல்பட்டாலோ, வாழ்வைத் தவறவும் விடுவீர்கள், சோர்ந்தும் போவீர்கள்.

இப்போது மனிதர்களிடம் இருக்கும் பிரச்சினையே, நான் அவர்களைத் தீவிரமாக இரு என்றால், அவர்கள் பதற்றமாக ஆகிவிடுகிறார்கள். சரி என்று நிதானமாக செயல்படுங்கள் என்று சொன்னால் மந்தத்தனம் வந்து விடுகிறது. முழுத் தீவிரத்தில், ஆனால் அதே நேரத்தில் முழுமையான தளர்வுநிலையில் இருக்க முடியுமென்றால், உங்கள் பயணத்தை நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதன்பிறகு தடைகள் ஏதுமில்லை, அந்த உயிர் தன் வழியை பார்த்துக் கொள்ளும். அந்த உயிருக்கு இனி எவ்வித ஆன்மீகப் பாடங்களும் தேவைப்படாது. உண்மையில், நம்மிடம் எவ்வித பாடங்களும் இல்லை. நம்மிடம் இருப்பதெல்லாம், இந்தத் தீவிரத்தையும், தளர்வு நிலையையும் ஒரே நேரத்தில் ஒருவரின் அமைப்பில் கொண்டு வருவதற்குத் தேவையான வழிமுறைகள் தான். பிறவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம், ஆனால் 'உங்களையே' உங்களுக்கு எப்படி கற்றுக் கொடுப்பது? இது முட்டாள்தனம். இதை நீங்கள் பார்க்க வேண்டும். உங்களுக்கு வாழ வேண்டுமா? வாழ்வது என்றால், சாப்பிடுவது மட்டும் என்று நினைக்காதீர்கள். வாழ்வு என்றால் சாப்பாடு வரும், வேலை வரும், வலி வரும், கழிவுகள் வரும், விழிப்பு வரும், தூக்கம் வரும் எல்லாம் வரும். இதெல்லாவற்றோடும் உங்களுக்கு வாழ விருப்பமா? 'இல்லையில்லை. எனக்கு இது பிடிக்கும், அது பிடிக்காது' என்பதெல்லாம் ஆகாது. இது அப்படி வேலை செய்யாது. 'வாழ்வின் செயல்முறைகள் எதுவாக இருந்தாலும், அது எல்லாவற்றையும் விருப்பத்தோடு ஏற்கிறேன்' இப்படி வாழ்விற்கு முழுமனதாய் விருப்பத்தோடு இருந்தால், நீங்கள் தீவிரமாய் தான் இருப்பீர்கள். ஏதோ ஒன்றிற்கு நீங்கள் முழுவிருப்பத்தோடு இருந்தால், அப்போது நீங்கள் தீவிரமாகவே இருப்பீர்கள். அதில் கஷ்டப்பட்டு செய்வதற்குத் தேவையிருக்காது. அதில் உங்கள் முழுத் திறனிற்கு ஏற்ப நீங்கள் செயல்படுவீர்கள். வாழ்வே அவ்வளவுதான். எப்படியும் உங்கள் திறனுக்கேற்ற படிதானே நீங்கள் செய்ய முடியும்? நீங்கள் வேறொருவர் போல் செயல்பட முடியாது. நீங்கள் தீவிரமாய் இருக்கும்போது, உங்கள் முழுத் திறன் என்னவோ, அந்த அளவிற்கு செயல்படுவீர்கள். அதற்கு மேல் அங்கு செய்வதற்கு எதுவுமில்லை. எனவே அங்கு கடினமாக செய்வதற்கு ஏதுமில்லை.

இக்கணத்தில், உங்களுக்குள் ஏதோ ஒரு இடத்தில், நீங்கள் எப்படியிருக்க வேண்டுமோ அதை விடக் குறைவாகவே நீங்கள் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். இப்படி சோம்பேறித்தனமாய் இருப்பதை மாற்றுவதற்குத் தான், கடினமாக செயல்பட முனைகிறீர்கள். இவ்விரண்டுமே தேவையற்றது. வாழ்க்கைக்கு நூறு சதவிகிதம் விருப்பத்தோடு நீங்கள் இருந்தால், வாழ்வு மிக இனிமையாக மாறிவிடும். வாழ்க்கை இனிமையாக இருக்கும்போது, இயல்பாகவே நீங்கள் மிகத் தீவிரமாக ஆகி விடுவீர்கள். இங்கு வாழ்வை முழுமனதோடு, முழு விருப்பத்தோடு வாழ்கிறீர்கள் என்றால், இதுவே உங்கள் சொர்க்கம். இந்த வாழ்வை விருப்பமின்றி வாழ்கிறீர்கள் என்றால், இது தான் உங்கள் நரகம். உங்கள் காதல் சங்கமம், பாலியல் பலாத்காரம் இவ்விரண்டையும் வித்தியாசப்படுத்துவது கூட விருப்பம் என்னும் உணர்வுதான். விருப்பத்துடன் நடக்கும்போது காதலாகவும் விருப்பமின்றி நடக்கும்போது அது பலாத்காரமாகவும் ஆகிறது. நீங்கள் மிக அழகானது என்று எதை நினைக்கிறீர்களோ அது கூட மிகமிக அருவருப்பானதாக மாறிவிடும், உங்களுக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில். இது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும், வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும், வாழ்வின் ஒவ்வொரு மூச்சிற்கும் கூடப் பொருந்தும். அதை விருப்பத்தோடு செய்தால், அது புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்கும், நீங்களும் இயல்பாகவே தீவிரத்தோடு இருப்பீர்கள். அதையே விருப்பமின்றி செய்தால், அது இழுவையாக, வலி ஏற்படுத்துவதாக இருக்கும். எனவே எதையும் கஷ்டப்பட்டு செய்யவேண்டிய அவசியமில்லை. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உங்களை நீங்கள் தீவிரமாக வைத்துக்கொண்டால், வாழ்க்கை தானாகவே நடக்கும்.வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
12-நவ-201717:45:21 IST Report Abuse
Paranthaman தீவிரமும் பதற்றமும் இரண்டும் ஒரே வழியில் செல்பவை. தீவிரம் ஒரு பொருளை அழிக்க உதவும். பதற்றம் அதற்கு துணை நிற்கும். அவசரத்தில் அண்டாவில் கை நுழைய வில்லை என்று சொல்வதுபோல்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X