நமக்கு தேவை குழந்தை நேயப்பள்ளிகள்| Dinamalar

நமக்கு தேவை குழந்தை நேயப்பள்ளிகள்

Added : அக் 04, 2017 | கருத்துகள் (1)
நமக்கு தேவை குழந்தை நேயப்பள்ளிகள்

பள்ளிகள் தான் சமூக மாற்றத்திற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. தனிமனித நன்னெறியை உயர்த்த பள்ளிகள் முக்கிய பங்காற்றிட வேண்டும். தனி மனிதனின் நன்னெறி குடும்பத்தை உயர்த்தும், குடும்பம் உயர்ந்தால் ஊர் உயரும், ஊர் உயர்ந்தால் நாடு உயரும். நாடு உயர்ந்தால் உலகம் உயரும். இதனையே அவ்வையார் இவ்வாறு கூறுகின்றார்:

“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”

தனிமனித நன்னெறியை வளர்ப்பதற்கான முயற்சிகளை விட பள்ளிகள் குழந்தைகளின் தலைகளைத் திறந்து தகவல்களை நிரப்புவதற்கே முதலிடம் கொடுக்கின்றன. மதிப்பெண்களை இலக்குகளாக வைத்து காலிப்பாத்திரங்களை நிரப்புவது போல் முரட்டுத்தனமாக நிரப்பிக் கொண்டிருக்கின்றன.அதனையே நாமும் விரும்புகின்றோம். உண்மையான கல்வியின் நோக்கத்தை மறந்து உள்ளோம்! நான்கைந்து துறைகளில் டாக்டர் பட்டம் பெற்று மணிக்கணக்கில் சிறந்த சொற்பொழிவாற்றும் மேதாவி மாஸ்டர் வாக்கர் ஆவார். அவர் திடீரென எதையோ இழந்ததுபோல் உணர்ந்தார். நிம்மதியைத் தேடி சொந்தக் கிராமத்துக்கு போனார். அங்கே ஜென் துறவியான அவரது தாத்தா அவரைப் பார்த்து, “ஏம்பா இவ்வளவு வயசாகிப் போச்சே! இப்போதாவது கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாமா? எனக் கேட்டார்.
“தாத்தா! இனி படிக்க ஏதுவும் இல்லை என்னும் அளவுக்கு படித்து விட்டேன். ஆனால், எதுவும் எனக்கு நிம்மதி தருவது போலத் தெரியவில்லை. அதனால்தான் நொந்துபோய் இங்கே வந்திருக்கின்றேன். கற்க ஆரம்பிக்கலாம் என்று நீங்கள் சொல்கிறீர்களே! என்ன பாடத்தைக் கற்பது?” என்றார் வாக்கர்.
ஞானி தாத்தா சொன்னார்: “Learning the unlearning” “கல்லாமையைக் கற்பது”. ஆம்! கற்பது மூளையை நிரப்புவது. கற்றதைக் கற்க மறுப்பது இதயத்தை நிரப்புவது! நாம் செய்ய வேண்டியது குழந்தைகளின் இதயத்தை நிரப்பும் செயலை தான்!

கல்விக்கு எதிரான நடவடிக்கை:

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்கின்றார் திருவள்ளுவர். ஒரு பிறப்பில் கற்றுக் கொள்ளும் நல்லறிவு இனிவரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பளிக்கும் என்பதே இதன் பொருள். இயந்திரம் போல் பாடப் பொருளை குழந்தையின் தலையில் மணிக்கணக்கில் கொட்டி நிரப்புவதா ஏழு பிறவிக்கும் தொடரும்? சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளை அதன் இயல்பில் குறும்புகளுக்கு அனுமதிக்காமல் நல்லொழுக்கம் என்ற பெயரில் கைகட்டி வாய் பொத்தி அமரச் செய்வது சிறந்ததா! “நல்லொழுக்கத்தை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும் என்னும் பெயரில் வெறித்தனமான தண்டனைகளில் இறங்குவதும் மனம் நோகவைப்பதும் கல்வியின் அங்கமல்ல. கல்விக்கு எதிரான நடவடிக்கைகளேஆகும்” என்கிறார் ஜார்ஜ் கோர்டான்.
பள்ளிகளின் தண்டனை பல மாமனிதர்களை விரட்டிய வரலாறுகள் பல உண்டு. அறிவியல் ஆசிரியர் விட்ட அறையினால் கேட்கும் திறனை இழந்த எடிசன், அத்து
மீறலுக்காக கல்விச்சாலைகள் தந்த விநோதத் தண்டனைகளால்
பார்வையே இழந்த மில்டன், நைய புடைக்கப்பட்டதால் நிரந்தர தழும்புகள் ஏற்பட்டு, 'வரிக்குதிரை' எனும் பட்டப்பெயர் பெற்ற கணிதச் சக்கரவர்த்தி காரல் பெடரிக் காஸ், ஆறாம் வகுப்பில் வீட்டுப்பாட பிரச்னைக்காக தாக்குதலில் பள்ளியை துறந்த நமது ஜி.டி. நாயுடு..என பல உதாரணங்கள் இடைநிற்றலுக்கு கொடுக்கலாம்.
எட்டாம் வகுப்பு வரை எந்தக் குழந்தையும் பெயில் கிடையாது என்ற இன்றைய காலக்கட்டத்திலும் எட்டாம் வகுப்பு கூட எட்டாத நிலையில் 42.39% பேர் உள்ளனர். 6 முதல் 14 வரை உள்ள குழந்தைகளில் இன்னும் 80 லட்சம் பேர் மிகப்பெரிய அளவில் பள்ளிக்கு வெளியே உள்ளார்கள்.
வகுப்பறைக்கு வெளியில்
கற்றல் சூழலானது குழந்தைகளின் வாழ்க்கைச் சூழலைக் கவனத்தில் கொண்டு வகுப்பறைக்கு வெளியில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வாழ்க்கைத்திறன்களை வளர்த்தெடுக்க உதவுதல் வேண்டும்.
ஊழல் பெருமளவில் குறைய வேண்டுமானால் படித்தவர்கள் அரசியலில் வரவேண்டும் என்று பேசுகின்றோம். ஆனால் இன்று மக்கள் பிரதிநிதியாக உள்ள பலரும் படித்தவர்களாக உள்ளனர். இருந்தும் என்ன பயன்? ஊழலோ ஆயிரங்கள்.
லஞ்சங்களோ கோடிக்கணக்கில்! குழந்தை நேயத்தை முதன்மைப்படுத்த குழந்தைகளின் உண்மையான வளர்ச்சியை உறுதி செய்ய, உண்மையான கல்வியை வெளிகொண்டுவர பள்ளிகளுக்கு தன்னாட்சி கொடுக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.இன்றைய சூழலில் நமக்கு தேவை குழந்தைநேயப்பள்ளிகள். குழந்தைநேய ஆசிரியர்கள். பள்ளிகளின் கற்றல் எப்படி இருக்க
வேண்டும்? குழந்தைகள் தங்கள் வயது ஒத்தவர்களுடன் இணைந்து கவனித்து, முயற்சித்து, கேள்வி எழுப்பி, விவாதித்து செயல்படும் விதமாகக் கற்றல் இருக்க வேண்டும்.
தங்களைப் பற்றி சிந்தித்து தங்களுள் புதியவற்றை ஆழ்ந்து அறிந்து கொள்ள கற்றல் உதவ வேண்டும். கற்றல் தினசரி வாழ்க்கை முறையோடும், சமூகத்தோடும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் தங்கள் கருத்துகளையும், சிந்தனைகளையும் அனுபவங்களையும் பயமில்லாமல், பதற்றமின்றி சுதந்திரமாக வெளிப்படுத்தவும் பங்கேற்கவும் ஊக்கப்படுத்த கற்றல் உதவ வேண்டும். மாறுபட்ட அல்லது பன்முகப்பண்பாடுகள் மற்றும் சமூகக் கருத்துகளைக்கற்கும் போது கற்பவரின் மன எழுச்சியை சீராகப்பாதுகாக்கும் தன்மை கொண்டதாகக் கற்றல் சூழல் அமைத்தல் வேண்டும். குழந்தைகள் தங்கள் வீட்டுச்சூழலில் இருந்து பள்ளிச் சூழலில் இயல்பாக மாறுவதற்குக் கற்றல் சூழல் உதவ வேண்டும்.

வளராத மனித மனம் : இன்று கணினி இல்லாத வீடு கிடையாது. கையில் அலைபேசி இல்லாத மனிதர்கள் கிடையாது. இதில் குழந்தைகள் விதிவிலக்கல்ல. டெக்னாலஜி வளர்ந்த அளவு மனித மனங்கள் இன்னும் வளர வில்லை. சதா எந்நேரமும் அலைபேசியில் விளையாடும் குழந்தைகளைப் பக்குவப்படுத்த வேண்டியுள்ளது. ஆபத்துகளை உணராமல் கைகளில் அலைபேசிகளை
ஏந்தியப்படி ஆயிரக்கணக்கானோரை அடிமையாக்கி பைத்தியமாக்கும் 'போகிமேன் கோ' மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தற்கொலைக்கு துண்டும் 'புளூ வேல்' போன்ற விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் உண்டு! “உண்மையான ஆசிரியர்கள் புத்தகத்தில் இருந்து பாடம் நடத்துவதில்லை. தங்கள் இதயத்திலிருந்து நடத்துகிறார்கள்” என்கிறார் ஜான்ஹோல்ட். ஆகவே, விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இந்த நுாற்றாண்டில் தேவை -நல்இதயங்களை உருவாக்கும்

நல் ஆசிரியர்களே! நிலையான கல்வி “நிற்கக் கற்றல் சொல்திறம் பாமை” என்கின்றார் அவ்வையார். நிலையான கல்வி கற்றவர் என்பது, சொன்ன சொல் பிறழாதவர் என்பதன் மூலமே வெளிப்படும். ஓட்டுகள் கேட்கும் போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசியல்வாதிகளை உருவாக்கும், உயிர் போகும் நிலையில் கவுண்டரில் பணம் செலுத்தி வர கட்டாயப்படுத்தாமல் உயிரை காப்பாற்ற முனையும் மனித நேய மருத்துவரை உருவாக்கும்,
கற்ற கல்வியின் பயனை மறந்து களிமண் நிலத்தில் இடிந்து விழும் என்று தெரிந்தே பல்லடுக்கு மாடிகட்டி காசு பார்க்கும் நோக்கில் செயல்படாமல், உயிரின் அருமை உணர்ந்து இடியும் கட்டடங்களை கட்ட மறுக்கும் உறுதி கொண்ட மனம் படைத்த இன்ஜினியர்களை உருவாக்கும் பள்ளிக்கூடங்களே இன்றைய தேவை! இவை குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான, சுதந்திரமான,
பாதுகாப்பான, பாகுபாடற்ற, அச்சுறுத்தலற்ற, பங்கேற்பை உறுதி செய்யும் அனைவரையும் உள்ளடங்கிய கல்வி தரும் பள்ளிகளால் மட்டுமே சாத்தியம். அப்பள்ளிகளை உருவாக்க அரசு தவறும் பட்சத்தில், இந்த லட்சியத்துடன் செயல்படும் பள்ளிகளுக்கு தன்னாட்சி அளித்து இதுபோன்ற குழந்தைநேயப்பள்ளிகளை உருவாக்குவதில் தவறு இல்லை. குழந்தைகளின் இதயங்களை நிரப்பும் பள்ளிகளை உருவாக்குவோம்! குழந்தைகளின் இதயங்களுக்கு வலிமை உண்டாக்கும் முன்மாதிரியான ஆசிரியர்களை ஆதரிப்போம்! உண்மையான கல்விக்கு வலிமை சேர்க்கும் திட்டங்களை வளர்த்தெடுப்போம்!

- க.சரவணன்
தலைமையாசிரியர்
டாக்டர் டி. திருஞானம்
துவக்கப் பள்ளி, மதுரை
99441 44263

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X