காரியாபட்டி, குண்டாற்றில் வீணாக சென்ற தண்ணீரை தடுத்து கண்மாய்க்கு கொண்டு சென்று இளைஞர்கள் சபாஷ் பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு பின் கண்மாய்க்கு நீர் வரத்தை கண்ட இளைஞர்களின் முகத்தில் புன்சிரிப்பு ஏற்பட்டது. விவசாயிகள் சபாஷ் என பாராட்டினர்.
காரியாபட்டி வக்கணாங்குண்டில் பொதுப்பணித்துறை கண்மாய் உள்ளது. ஆயிரம் ஏக்கர் வரை பாசன வசதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு மழையின்போதும், குண்டாற்றில் வரும் தண்ணீர் வரத்துக் கால்வாய் மூலம் இந்த கண்மாய்க்கு வந்து சேரும். நிறைந்த பின் இருபோகம் விவசாயம் நடைபெறும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழை இல்லை. ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால், ஆறு பள்ளமாகி வரத்துக் கால்வாய் மேடானது. அவ்வப்போது பெய்யும் மழை நீர் ஆற்றில் வீணாக சென்றது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
விளைநிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வயல்கள் இருக்கும் இடமே தெரியாமல் போயின. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றது. குடிநீர் சுண்ணாம்பு தண்ணீராக மாறி, சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகினர். கால்நடைகள் வளர்க்க முடியவில்லை.
வீணான தண்ணீர்
அத்துடன், நான்கு வழிச்சாலைக்கு கிராவல் மண் எடுக்கப்பட்டதால், கண்மாய் சின்னாபின்னமானது. ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டியதால் மடைகள் சேதமடைந்தன. சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து கண்மாய் இருந்த அடையாளமே இல்லாமல் போனது. விவசாயிகள், வரத்துக்கால்வாயை துார்வாரி, சேதமடைந்த மடைகளை சீரமைத்து, சீமைக்கருவேல மரங்களை அகற்றி விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைத்தனர். எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை.
விவசாயத்தை விட்டு, கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்வதும், குண்டாற்றில் தண்ணீர் வீணாவதும் வாடிக்கையாக இருந்தது.
@Image@மன உறுதி
இந்நிலையில், வக்கணாங்குண்டு இளைஞர்கள் சேர்ந்து கண்மாய்க்கு நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்து, தங்களால் முடிந்த நிதியை அளித்து, மற்றவர்களிடம் நன்கொடை பெற்று ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட முயற்சி மேற்கொண்டனர். அதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்தனர். கலெக்டரிடம் மனு கொடுங்கள். அதற்கு பின் எங்களது ஆதரவை தருகிறோம் என தெரிவித்தனர்.
கலெக்டர் இளைஞர்களுக்கு பச்சை கொடி காட்ட, பொதுப்பணித்துறை அதிகாரிகள், தடுப்பணை கட்ட வேண்டாம், மண் மேடு அமைத்து, நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதே சமயம் மற்ற பகுதிக்கும் தண்ணீர் செல்ல வழி விட வேண்டும் என கூறினர். களத்தில் இறங்கிய இளைஞர்கள் பிசிண்டி அருகே குண்டாற்றின் குறுக்கே மணல் மூடைகளை அடுக்கி, நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் பெய்த மழைக்கு இரண்டு முறை ஆற்றில் தண்ணீர் வந்தது. தடுப்பை உடைத்து சென்றது. இருந்தாலும் இளைஞர்கள் மனம் தளராமல் முயற்சியை கைவிடாமல் சம்பள பணத்தை நிதியாக அளித்து, பலரிடம் நன்கொடை பெற்று மீண்டும் மண் மேடு அமைத்தனர்.
நிரம்பிய கண்மாய்
நேற்று முன் தினம் மதுரை பகுதியில் பெய்த மழைக்கு ஆற்றில் தண்ணீர் வந்தது. 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு, இரவு பகலாக ஆற்றில் தங்கி, மணல் மூடைகளை அடுக்கி, மண்மேடு உடையாத அளவிற்கு பணியாற்றி, இயந்திரம் மூலம் வரத்துக்கால்வாயில் உள்ள மேடுகளை அகற்றி, தண்ணீர் எளிதாக வர வைத்தனர். 20 ஆண்டுகளுக்கு பின் கண்மாய்க்கு தண்ணீர் வந்தடைந்த போது, உழைப்புக்கு கிடைத்த பலனாக அவர்களது முகத்தில் புன்னகை மலர்ந்தது. அரசு செய்யும் என எதிர்பார்த்தால் காலம் தான் வீணாகும். எந்த செயல்பாடுகளும் நடக்காது. இளைஞர்கள் சில விஷயங்களை கையில் எடுத்து செய்தால்தான் நல்லது நடக்கும் என விவசாயிகள் சபாஷ் தெரிவித்தனர்.
முயற்சி
வக்கணாங்குண்டு இளைஞர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் தண்ணீர் பிரச்னையால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்பட்டன. கலெக்டரை சந்தித்தோம். பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதற்கு பின், இளைஞர்கள் ஒன்று கூடி பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினோம். நல்ல விஷயம் தாராளமாக செய்யுங்கள் என தெரிவித்தனர். பல எதிர்ப்புகளும் வந்தன, ஏளனமாக பேசினர்.
எப்படியாவது இந்த முயற்சியை கைவிடக் கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்து, இதுவரை இரண்டு லட்சம் வரை செலவு செய்துள்ளோம். உழைப்புக்கு கிடைத்த பலனாக கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அளவு தண்ணீர் வந்தால் இரண்டு நாளில் கண்மாய் நிறைய வாய்ப்பு இருக்கிறது. தண்ணீர் பிரச்னை தீர்ந்தால் அதுவே எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்' என்றனர். ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பதற்கு இதுவே உதாரணம்.