முதலாளிகள் தொழிலாளர்களுடன் தோழமையாகப் பழகுவது நல்லதா? | Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

முதலாளிகள் தொழிலாளர்களுடன் தோழமையாகப் பழகுவது நல்லதா?

Added : அக் 06, 2017
முதலாளிகள் தொழிலாளர்களுடன் தோழமையாகப் பழகுவது நல்லதா?

கேள்வி: நானும் இரு நண்பர்களும் சேர்ந்து ஒரு பார்ட்னர்ஷிப் கம்பெனி வைத்திருக்கிறோம். என் நண்பர்கள் தங்கள் பதவிகளை மறந்து, தொழிலாளர்களிடம் சகஜமாகப் பழகுகிறார்கள். 'தொழிலாளர்களுக்கு பயம் விட்டுப் போய்விட்டால், நாளைக்கு தோளிலேயே கை போட்டு விடுவார்களே! அப்புறம் எப்படி வேலை நடக்கும்?' என்பதால், நான் மட்டும் தொழிலாளர்களிடம் விறைப்பாகவும், கடினமானவனாகவும் நடந்து கொண்டு வேலை வாங்குகிறேன். இதனால், நண்பர்களுக்கு நல்ல பெயர். கம்பெனி நல்ல முறையில் நடக்கப் பாடுபடும் எனக்குக் கெட்ட பெயர். இது என்ன நியாயம்?

சத்குரு: உண்மையில் மனிதர் எவரையும் கடினமானவர், எளிதானவர் என்று இனம் பிரிக்க முடியாது. சந்தோஷமானவர், சந்தோஷமற்றவர் என்றுதான் வகைப்படுத்த முடியும். நீங்கள் கடினமானவராக நடந்து கொள்கிறீர்கள் என்றால், சந்தோஷமற்று இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்குக் கீழ பணிபுரிபவர்கள் எங்கே உங்கள் தலைமீது ஏறி உட்கார்ந்து விடுவார்களோ என்ற சந்தேகம்தான் உங்களுடைய சந்தோஷத்தைத் தின்று கொண்டு இருக்கிறது.

“நான் முதலாளி, அவன் தொழிலாளி” என்று தேவையில்லாத அடையாளங்களை உருவாக்கிக் கொள்வதால், உள்ளே அகங்காரம்தான் வளர்கிறது. சந்தேகம் பிறக்கிறது, சந்தோஷம் தொலைகிறது. ஒரு குறிப்பிட்ட நபர் சந்தோஷமாக இருக்கும்போது, அவருடன் பணிபுரிவது மிகச் சுலபமாக இருக்கும். அவரே சந்தோஷமற்று இருக்கும் சமயத்தில், அவருடன் இணைந்து செயலாற்றுவது கடினமாகிவிடும். உங்கள் கம்பெனிக்கு லாபம் கிடைத்துக் கொண்டு இருக்கிறது என்றால், பணிபுரிபவர்களுடன் சகஜமாகப் பழகும் உங்கள் நண்பர்கள்தான் அதற்குக் காரணமேயன்றி, கடினமாக நடந்து கொள்ளும் நீங்கள் அல்ல. மற்றவரைச் துச்சமாகப் பார்க்கும் பழக்கத்தை முதலில் விடுங்கள்.

ஒரு காட்டில், நான்கு எறும்புகள் நடந்து போய்க்கொண்டு இருந்தன. எதிரில் ஒரு யானை வந்தது. அதைப் பார்த்ததும், “டேய்! என்னடா இவன் நம் வழியில் வருகிறான்! கொன்று போடலாம் இவனை!” என்று கொதித்தெழுந்தது, ஓர் எறும்பு. இரண்டாவது எறும்பு, “சீச்சீ, சின்னப் பயலாகத் தெரிகிறான். எனவே, கொல்ல வேண்டாம். அவனை நான்கு கால்களையும் உடைத்துப் போடலாம். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும்” என்றது. மூன்றாவது எறும்பு, “அதெல்லாம் எதற்கு? அவனைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு, நாம் பாட்டுக்குப் போய் கொண்டே இருக்கலாம், வாருங்கள்” என்றது. நான்காவது எறும்பு யானையை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இது நியாயமே அல்ல. நாம் நாலு பேர் இருக்கிறோம். அவன் ஒரே ஆள். நாலு பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது நம் வீரத்துக்கும் அழகல்ல. யுத்த தர்மமும் அல்ல! ஆகவே, அவனை மன்னித்து, இப்படி நகர்ந்து வாருங்கள்!” என்றபடி ஒதுங்கிப் போனது.

நாம் நினைப்பதுதான் சரி என்ற அகங்காரம் உள்ளே வந்துவிட்டால், இந்த எறும்புகளைப் போலத்தான் யானைகளைக்கூடத் துச்சமாகப் பார்த்துத் தொலைப்பீர்கள். விளையாட்டோ, வியாபாரமோ, அலுவலகமோ… எந்தத் துறையானாலும், அங்கு பலர் ஒன்று சேர்ந்துதான் செயலாற்ற வேண்டி இருக்கிறது. மொத்தக் குழுவும் முழுத் திறமையுடன் செயல்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு தனி நபரிடமும் அமைதியும், சந்தோஷமும் குடி கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான், மொத்தமாக அந்தச் சூழலில் அமைதியும், மகிழ்ச்சியும் வேரூன்றியிருக்கும். எந்தத் துறையானாலும் போட்டிகள் மிகுந்துவிட்ட இந்த நாளில், எதிர்பாராமல் வந்து தாக்கும் பிரச்சனைகளே பல இருக்கும்போது, சக மனிதர்களையே பிரச்சனையாக்கிக் கொள்வது முட்டாள்தனமல்லவா? சொல்லப்போனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும், நிறுவனத்திலும் அங்கு இருப்பவர்களைக் குறைத்து மதிப்பிடாமல், அவர்களுடைய மேம்பாட்டுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கத் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

நீங்கள் விரும்பியதை அடைய, மற்றவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு அவசியம். எனவே, அவர்கள் உங்களிடம் நேசம் கொள்ளும்படி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறையும், அன்பும் இல்லாது போனால், இது சாத்தியமே இல்லை. அப்படியொரு சூழ்நிலை அமைக்கப்பட்டுவிட்டால், உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் முழுத் திறமையுடன் செயல்படுவார்கள். நீங்கள் அவர்களிடம் கடினமாக நடந்து கொண்டுதான் வேலை வாங்க வேண்டும் என்கிற அவசியமே இருக்காது!!We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X