புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் அருண் ஷோரிக்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, வரும் 21ம் தேதி சி.பி.ஐ., முன் ஆஜராகி, அவர் விளக்கம் அளிக்கவுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து ஆய்வு செய்ய, சிவராஜ் பாட்டீல் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, தனது அறிக்கையை சமீபத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அதில், "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல முறையை பின்பற்றாமல், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கை, ஐ.மு., கூட்டணி அரசு பதவிக் காலத்துக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வந்துள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
தே.ஜ., கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அருண் ஷோரி, இந்த அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவதற்காக இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து அருண் ஷோரியிடம் விசாரிக்க, சி.பி.ஐ., முடிவு செய்தது. விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அருண் ஷோரிக்கு, சி.பி.ஐ., சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அருண் ஷோரி கூறுகையில், "விசாரணைக்காக ஆஜராகும்படி சி.பி.ஐ., சார்பில் எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் கோல்கட்டாவில் சுற்றுப் பயணம் முடித்து விட்டு திரும்புவதற்கு ஒரு வாரமாகும். எனவே, வரும் 21ம் தேதி விசாரணைக்காக சி.பி.ஐ., முன் ஆஜராவேன். அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சில ஆவணங்களை சி.பி.ஐ.,யிடம் தாக்கல் செய்வேன்' என்றார்.
சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறுகையில், "முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 50 உரிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பார்தி, வோடபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் பயன் அடைந்துள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்றன.
இதற்கிடையே, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் ஏற்கனவே அளித்த அறிக்கையில், "தொலைத்தொடர்புத் துறையில் ஈடுபட்டுள்ள ஸ்வான் நிறுவனம், தொழிலதிபர் அனில் அம்பானியின் குழுமத்தைச் சேர்ந்தது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், சி.பி.ஐ.,க்கு இதுகுறித்து கடிதம் ஒன்றை, ஸ்வான் நிறுவனத்தின் புரமோட்டர் ஷாகித் பல்வா எழுதினார்.
அதில், "ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துடன், எங்கள் நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியான தொடர்பு உள்ளது. ஆனால், எங்கள் நிறுவனம் தனியாக இயங்கி வருகிறது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்வான் நிறுவனத்துக்கும், அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.