தமிழகத்தில், அரசியல் சூழ்நிலை சூடுபிடித்திருக்கிறது. காமராஜர், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்ற மிகப்பெரிய தலைவர்கள் மறைந்த போது ஏற்படாத அரசியல் அதிர்வலைகள், முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவால் உருவாகியிருக்கின்றன.
அப்பல்லோ மருத்துவமனையில், 75 நாட்கள், நினைவோடு இருந்தார் என்று சிலரும்; நினைவுடன் இல்லை என்று பலரும்; பார்த்தேன் என்று சிலரும்; பார்க்கவில்லை என்று பலரும், மாறி மாறி இன்று வரை பேசுகிற சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
இறந்த போது விரிந்த புருவங்கள் பல. 'சாகும் வயதில்லை அவருக்கு...' என, ரத்தின சுருக்கமாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சொன்ன அந்த வார்த்தையில் அர்த்தம் உண்டா, இல்லையா என, தெரியவில்லை. ஆனால், ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்க வருமுன் மற்றும் அளிக்கப்பட்ட சிகிச்சை உட்பட விசாரிப்பதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது; மத்திய புலனாய்வு விசாரணை வேண்டுமென்றும், சிலர் கோருகின்றனர்.
கடந்த, 1952ல் விசாரணை ஆணையத்திற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு பின், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல்வேறு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. 1971ல், விரிவான திருத்தங்கள், விதியில் ஏற்படுத்தப்பட்டன. இந்த ஆணையத்திற்கு, நீதிமன்றங்களை போல, விசாரணைக்கு யாரையும் அழைக்கவும், ஆவணங்களை கேட்கவும், குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவும், வழிக்கறிஞர்கள் ஆணையத்தின் முன் ஆஜராகவும் உரிமை உண்டு.
பிரிட்டிஷ் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சட்டம், தேசிய மற்றும் மாநில அளவில், இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது. மத்திய புலனாய்வு விசாரணை எனக் கேட்பவருக்கு, இந்த சட்டத்திலேயே பதிலும் இருக்கிறது. 1971ல் திருத்தப்பட்ட விதியின்படி, இந்த விசாரணை ஆணையம், எந்த அதிகாரிகளையும், மத்திய மற்றும் மாநில புலன் விசாரணை அமைப்புகளையும், குறிப்பாக, மத்திய புலனாய்வு அமைப்பையும் விசாரணைக்கு உபயோகப்படுத்தலாம் என, ஆணையத்திற்கு அதிகாரம் தருகிறது.
ஆகவே, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற ஒரு நபர் ஆணையம், இந்த அதிகாரிகளையும் பயன்படுத்தலாம்.தேசிய அளவில், 'ஹரிதாஸ் முந்துரா' என்ற நிறுவனத்தில், ஆயுள் காப்பீடு கழகம் வாங்கிய பங்குகள் பற்றிய விசாரணை, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சுக்லா தலைமையில் அமைக்கப்பட்டது; அதன் அறிக்கையின் அடிப்படையில், அன்றைய நிதியமைச்சர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்தார்.
சர்தார் பிரதாப் சிங் கைரோனை விசாரிக்க, அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, எஸ்.ஆர்.தாஸ் தலைமையிலான ஆணையம், குற்றங்கள் பற்றிய புலன் விசாரணை செய்வதற்காக, தன்னை நீதிமன்றமாக மாற்றிக் கொண்டது என்பதை பற்றி, பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டன. காஷ்மீர் முன்னாள் முதல்வர், பக் ஷி குலாம் முகமதுவை விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜகோபால் ஐயங்கார் கொண்ட ஆணையம், தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது என, அரசு அறிக்கை தந்தது.
மற்ற ஆணையங்கள் போல, தனி நபர் புகாராக இல்லாமல், அரசே குற்றத்தை சுமத்தியதால், ஆணையத்தின் முன் பூர்வாங்க விசாரணையை அரசு செய்து, அந்த ஆவணங்களை ஆணையத்திற்கு முன் தாக்கல் செய்தது. அதேபோல், ஒடிசா முன்னாள் முதல்வர், பிஜு பட்நாயக், கேரளாவின், இ.கே.இம்பிச்சி பாவா மீது ஒரு நபர் ஆணையம், வங்கத்தில் ஐந்து அமைச்சர்கள் மீது முன்னாள் தலைமை நீதிபதி, கே.என்.வன்ச்சூ தலைமையில், ஒரு நபர் ஆணையம் என, அடுக்கலாம்.
சென்னையில், 1967ல், மாணவர்களுக்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய மோதல் நடந்தது. 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பலருக்கும் அதன் நினைவு இருக்காது. டெம்போ முதல் பேருந்துகள் வரை பயன்படுத்தி, நுாற்றுக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள், சென்னையிலுள்ள கல்லுாரி விடுதிகளை, ஓர் இரவு முழுவதும் தாக்கிய நிகழ்வு அது.
கெல்லீஸ் சட்டக்கல்லுாரி விடுதிக்குள் நுழைந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், ஓர் ஓட்டுனர் கொல்லப்பட்டார். அன்றைய, தி.மு.க., அரசு, நீதிபதி, சோமசுந்தரம் தலைமையில், ஒரு நபர் விசாரணைக்கு ஆணையிட்டது.அதற்கு பின், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் தருவதை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், உதயகுமார் என்ற மாணவர், காவல் துறையினரின் தடியடியில் தண்ணீரில் மூழ்கி இறந்து, பின், அந்த மாணவரின் தந்தையே, மாணவனின் சடலத்தை பார்த்து, 'இவன் என் மகனல்ல...' எனச் சொல்ல வைத்த நிகழ்வு நடந்தது.
நீதிபதி, என்.எஸ்.ராமசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம், 'இறந்தது உதயகுமார் தான்...' என, அறிக்கை தந்தது.
திருநெல்வேலியில், காவல்துறையின் தடியடியில், லுார்து நாதன் என்ற மாணவர், தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி, கோதண்ட ராமராஜா
தலைமையிலான, ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
திருச்சி, கிளைவ் விடுதி மாணவர்கள் அறைக்குள் புகுந்து, காவல் துறை அடித்து துவைத்ததில், கிளைவ் விடுதி முழுவதும், ரத்தக் கரை படிந்தது. மாவட்ட நீதிபதி, ஜான் ஆர்தர் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அறிக்கை தந்தது.
திருப்பரங்குன்றத்தில், அய்யாத்துரை என்ற வழக்கறிஞர், காவல் நிலையத்தின் உள்ளே தாக்கப்பட்டார். இதன் விளைவாக, ஒரு மாத காலம், தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் இயங்காமல் ஸ்தம்பித்தன. அன்றைய முதல்வர், எம்.ஜி. ஆரால், ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, வழக்கறிஞர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், காவல் நிலையத்தில், காவலர்களின் கடமைகளை பற்றியும், ஆணையம் அறிக்கையை
தாக்கல் செய்தது. ஒரு மாத காலம், இந்த விசாரணைக்காக போராடிய வழக்கறிஞர்கள், இந்த அறிக்கையை பற்றி, மீண்டும் கூடி விவாதிக்கவில்லை என்பது, கவலை கொள்ள வேண்டிய விஷயம்.
எம்.ஜி.ஆரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர், கல்யாண சுந்தரமும், அன்றைய, தி.மு.க., முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது கொடுத்த புகாரை விசாரிக்க, நீதிபதி, சர்க்காரியா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
பல புகார்கள் நிராகரிக்கப்பட்டன; பல புகார்கள் உண்மை என நிரூபணமாகி, மேல் நட வடிக்கைக்காக, அரசுக்கு அனுப்பப்பட்டன. ஒரு புகார் ஏற்கனவே, சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்காக பதிவாகி, விசாரணையில் இருந்தது; அதோடு, ஒரு குற்றச்சாட்டை சேர்த்து
விசாரிக்க, நீதிபதி, சர்க்காரியா பரிந்துரைத்தார்.
அதேபோல், கிட்டத்தட்ட தமிழக அரசியலில் இன்று அமைக்கப்பட்டிருக்கிற, மறைந்த முதல்வர் மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை, திருச்செந்துார் சுப்பிரமணியம் பிள்ளை இறப்பை குறித்து, நீதிபதி, பால் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு ஒத்ததாக கருதலாம்.
'சுப்பிரமணியம் பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்...' என, வழக்கு பதிவு செய்யப்பட்டது; ஆனால், 'இது தற்கொலை அல்ல; கொலை...' என, அறிக்கை தாக்கல் செய்தார், நீதிபதி பால்! கிட்டத்திட்ட, இந்த ஆணையத்தின் ஒரு முழுமையான புலன் விசாரணையின் முடிவில், இந்த அறிக்கை தரப்பட்டது.இதேபோல், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல்வேறு ஒரு நபர் ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன; ஆனால், இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளவும், நிராகரிப்பதும், அரசின் முடிவு என்பது, இந்த ஆணையத்தின் பலவீனம்.
ஆகவே, ஒரு நபர் ஆணையம், தன்னால் முடிந்த அளவு
உண்மையை கொண்டு வர முயற்சிக்கும் என்று தான், தேசிய அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்படுகிறது. ஆனால், ஆணையங்களின் முடிவுகளை நிறைவேற்றுவது, அரசியல் மாற்றத்திற்குட்பட்டதாக மாறி வருகிறது என்பது தான் வேதனைக்குரியது.
பெரும்பாலான ஒரு நபர் விசாரணை ஆணையங்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் மற்றும் அரசு மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகள் பற்றியும், காவல் துறை அத்து மீறல்கள் பற்றியும் தான் அமைக்கப்படுகின்றன. ஆகவே தான், திருச்செந்துார் சுப்பிரமணியம் பிள்ளை மரணம் பற்றி, ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையும், தற்போது, நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிற ஒரு நபர் விசாரணை ஆணையமும் வித்தியாசமானவை; தனிச்சிறப்பு வாய்ந்தவை!
மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் வந்த அறிக்கைகள், பேச்சுக்கள், ஊடக விவாதங்கள், இவை அனைத்துமே ஒரு நபர் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால், ஆணையத்தின் அதிகாரத்தை உபயோகிப்பதற்கு, மத்திய மற்றும் மாநில புலன்விசாரணை அமைப்புகளை வைத்து விசாரணை செய்யவும், சாட்சியங்களை சேகரிக்கவும், ஆவணங்களை கையகப்படுத்தவும் சட்டத்தில் இடமிருக்கிறது.
எது எப்படியோ, 50 ஆண்டு காலம் போடப்பட்ட விசாரணை ஆணையங்களின் முடிவு என்னவாயிற்று என, எல்லாரும் மறந்துவிட்ட நிலையில், இந்த ஆணையத்தின் முடிவும் அப்படி ஆகக்கூடாது.
ஏனெனில், இறந்தவர் ஒரு தனி நபர் அல்ல; தமிழகத்தின் முதல்வர் என்பதை, அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். சில நேரங்களில், இந்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை, காலக்கெடுவுக்குள் முடிக்கப்படாமல், நீண்டபடியே போகும். அதுபோல இல்லாமல், விசாரணை ஆணையம், விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும்.முடிவுக்காக காத்திருப்போம்! இ.மெயில்: bsgfirm@gmail.com -- பி.எஸ்.ஞானதேசிகன் -முன்னாள் ராஜ்யசபா, எம்.பி.,
மூத்த வழக்கறிஞர்