பிக்காசோ துாரிகையில் தெறித்த பெண்ணோவியம்... பொன்னிற ஜரிகைகள் நெளியும் காஞ்சியின் பட்டுக் காவியம்... தவழும் தாமிரபரணி தொட்டு தாலாட்டும் தென்றல்... நெல்லையில் இருந்து சென்னை கோடம்பாக்கம் விரைந்த அழகான 'நெல்லை எக்ஸ்பிரஸ்' நடிகை ரம்யா பாண்டியன் பளிச்சென பேசுகிறார்...
* முதல் படமே ஜோக்கரா? முதல் படம் 'டம்மி டப்பாசு', படம் சரியா ஓடலை. அதனால் ரசிகர்களிடம் என்னால பெயர் வாங்க முடியலை. இந்த படத்தில் நடிக்கும் முன்பே 'ஜோக்கர்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டேன்.
* ஜோக்கரில் ரம்யா எப்படி... இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒரு படம் பண்றதா இருந்தாரு, அதுக்காக ஆடிஷன் போனேன். ஆனால், அந்த படம் அவர் பண்ணலை, அதற்கு பின் 'ஜோக்கர்' வாய்ப்பு வந்தது.
* கிராமத்து பெண்ணாக நடித்தது...'ஜோக்கர்' படம் 'ஆடிஷன்'ல ரொம்ப கஷ்டப்பட்டு செலக்ட் ஆனேன். என்னை நம்பி இயக்குனர் ராஜூமுருகன் 'மல்லிகா'ங்குற கேரக்டரை கொடுத்தார். படம் முழுக்க மல்லிகாவை மையமாக கொண்டு கதை நகரும். நான் நெல்லை பொண்ணு தானே கிராமம் ஒன்ணும் புதுசு இல்லை. இந்தப் படம் எனக்கு ஒரு 'ஹேப்பி ஆக்சிடென்ட்'.
* சினிமாவுக்கு முன் நடிப்பு அனுபவம்...ஹூம்ம்... நிறையா இருக்கு. இயக்குனர் மனிரத்தினம் உதவியாளர் இயக்கிய 'மானே தேனே பொன் மானே', அப்புறம் 'அரைகுறைகள்', 'வலையோசை' போன்ற குறும்படங்களில் நடிச்சிருக்கேன்.
* திரை உலகில் ஹீரோயின்...ஹீரோயினும் ஒரு பெண் தானே... வெறும் அழகுப்பொருளா மட்டும் பார்க்கக்கூடாது. அரைச்ச மாவையே அரைக்காமல், ஹீரோயின்களுக்கும் சவாலான கேரக்டர் கொடுக்கலாம், அவங்களுக்கும் எல்லா திறமையும் இருக்கு.
* நீங்கள் விரும்பும் கதைக்களம்? புதுசா ஒரு படம் வரும் போது ஹீரோ யார்ன்னு தான் பார்க்குறாங்க. அது நல்ல விஷயம் தான். ஆனால், யார் ஹீரோயின் என்று ரசிகர்கள் தேடும் அளவுக்கு கதைக்களம் இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
* உங்களை கவர்ந்த ஹீரோ? இன்னிக்கு நடிப்புல கலக்குற விஜய் சேதுபதி தான்... அவர் நடிக்குறதே தெரியாது அந்த அளவுக்கு ரியல் கேரக்டராகவே மாறிவிடுவார்.
* நிறைய படம் பார்ப்பீங்களோ...காலேஜ் படிக்கும் போது நிறைய படம் பார்த்து இருக்கேன். அப்புறம் கொஞ்சம் கேப் விட்டாச்சு. குறும்படம் நடிக்க வந்த பின் தியேட்டர் போற பழக்கம் அதிகமாயிடுச்சு.
* அடுத்து காத்திருக்கும் படங்கள்...இயக்குனர் சமுத்திரக்கனி ஹீரோவா நடிக்கும் 'ஆண் தேவதை' படத்தில் நடிக்கிறேன். கணவன், மனைவியை மையமாக கொண்ட அழகான குடும்பக் கதை.
* திருநெல்வேலி அல்வா! மிஸ் பண்றீங்களா...இல்லை, ஷூட்டிங் இல்லாத டைம் நெல்லைக்கு கிளம்பிடுவேன், குற்றாலம் அருவிக்கு ஒரு விசிட் பண்ணிட்டு இனிக்க, இனிக்க அல்வா சாப்பிட்டு, பெரிய பார்சல் ஒன்ணு வாங்கிட்டு சென்னைக்கு ரிட்டர்ன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE