எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விழிக்குமா அரசு?
தொடரும் பலி; மிரள வைக்கும், 'டெங்கு'
நவம்பரில் பேராபத்து; விழிக்குமா அரசு?
தொடரும் பலி, மிரள வைக்கும், டெங்கு, பேராபத்து, விழிக்குமா அரசு

'தொடரும் உயிர் இழப்புகளால், தமிழக மக்களை அலற வைத்துள்ள டெங்கு, நவம்பரில் மேலும் பேராபத்தை உருவாக்கும்' என, இந்திய பொது சுகாதார சங்கம் எச்சரித்து உள்ளது. சர்வதேச சுகாதார நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்று, தடுப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்துவது அவசியம்; இல்லாவிட்டால் மேலும் உயிர் இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என, எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும், இதுவரை, 12 ஆயிரம் பேர், டெங்கு காய்ச்சலால் பாதித்துள்ளனர்; 35 பேர் பலியாகி உள்ளதாக, தமிழக அரசு, கணக்கு கூறுகிறது. ஆனால், டெங்கு இறப்புகளின் எண்ணிக்கை, 100க்கு மேல் சென்று விட்டது. அதை, காய்ச்சல் மட்டுமின்றி வேறு பாதிப்புகள் இருந்தன எனக்கூறி, அரசு, டெங்கு இறப்பு எண்ணிக்கையை குறைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எச்சரித்தும் பலனில்லை


இந்திய சுகாதார சங்கம், ஜூலையிலே, டெங்கு பாதிப்பை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தது. டெங்கு பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்களின் ஆயுட்காலம், 20 நாட்களில் இருந்து, 40 நாட்களுக்கு மேல் அதிகரித்து விட்டது எனவும், அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அரசு துறைகள் உரிய கவனம் செலுத்தவில்லை. இறப்புகள் அதிகரித்த பின், 'நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்' என, அதிகாரிகள் சுற்றி வருகின்றனர். முன்பே கவனம் செலுத்தி இருந்தால், உயிர் இழப்புகளை தடுத்திருக்கலாம்.
'டெங்கு பாதிப்பு, நம் நாட்டில் மட்டும் இல்லை; உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளது; இறப்புகளும் உள்ளன' என, சமாளிக்கும் நோக்கில் அரசு பேசுவது ஏற்புடையது அல்ல.'அதற்காக, நம் நாட்டிலும், மக்கள் சாக வேண்டுமா என்ன; அடுத்த இறப்பு ஏற்படாது என்ற உத்தரவாதம் அளித்து, ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்வது அவசிய தேவை' என, சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரசியல் குழப்பம்?


தமிழகத்தில், ஜெ., மரணத்திற்கு பின், ஆளுங்கட்சியினரிடையே, அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி நிலவியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், இரட்டை இலை சின்னம் முடக்கம், கட்சியில் பிளவு, பின், இணைப்பு, குட்கா முறைகேடு, அமைச்சர் வீடுகளில், வருமான வரித்துறை அதிரடி சோதனை என, பல்வேறு குழப்பங்கள் நீடித்தன. இதை சரி செய்வதற்கே, ஆட்சியாளர்களுக்கு நேரம் போதவில்லை.
பல மாதங்களாக அரசுப் பணிகள் முடங்கின; உள்ளாட்சிகளும் செயல் இழந்தன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரத் துறை, உள்ளாட்சிகள், வருவாய் துறை, பள்ளிக்கல்வித் துறை, பொது நல அமைப்புகள் என, அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து செய்யப்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், அரசு கவனம் செலுத்த தவறி விட்டது. அதுவே, தற்போதை சிக்கலுக்கு காரணம் என, கூறப்படுகிறது.

உள்ளாட்சிகள் சுணக்கம்


'டெங்கு' உயிர் இழப்புகள் தொடரும் நிலையில், சுகாதாரத் துறை தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், இன்னும் உள்ளாட்சிகள் பெரிதாக கவனம் செலுத்தாமல், அலட்சியம் காட்டி வருகின்றன. சென்னை மாநகராட்சி கூட, போதிய கவனம் செலுத்தாமல் உள்ளது.
'எங்கள் பகுதிக்கு கொசு மருந்து அடித்து, பல மாதம் ஆகிவிட்டது' என, மக்கள் புலம்பும் நிலை தொடர்கிறது. வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே, தரமான கொசு மருந்துகளை அடித்து, 'கடமையை சிறப்பாக செய்து வருகிறோம்' என, உள்ளாட்சிகள் கணக்கு காட்டி வருகின்றன.

நவம்பரில் விபரீதம்


'தற்போது, டெங்கு இறப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நவம்பரில், இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும்; அலட்சியம் காட்டினால்,இறப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும்' என, இந்திய பொது சுகாதார சங்கம் எச்சரித்து உள்ளது.

இது குறித்து, இந்திய பொது சுகாதார சங்கத்தின், தமிழக தலைவர், இளங்கோ கூறியதாவது: தமிழகத்தில், 30 ஆண்டு கால நோய் பாதிப்புகளை ஆய்வு செய்தால், நவம்பரில்தான், டெங்கு தாக்கத்தின் விபரீதம் அதிகமாகி, உயிர் இழப்புகள் அதிகரித்துள்ளன. காரணம், இந்த மாதத்தில், சராசரி வெப்பநிலை குறைந்து, குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டோரின் இறப்புகள் அதிகமாகும்.தமிழகத்தில், தற்போதே டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த மாதங்களில், நிலைமை இன்னும் மோசமாகி விடும். எனவே, அரசு விழிப்போடு செயல்பட வேண்டும்.* கொசுக்களின் வீரியம்அதிகரித்துள்ளதால், வளர்ந்த கொசுக்களை ஒழிக்க புகையாக அடிக்கப்படும், 'பைரிதியமைன்' மருந்து மற்றும் முட்டை நிலை, சிறு கொசுக்களை அழிக்க தெளிக்கப்படும், 'டெமிபாஸ்' மருந்து ஆகியவற்றின் திறன், அதற்கேற்ப உள்ளதா என, ஆய்வு செய்வது அவசியம்.
* இறந்தோரின் விபரங்களை சேகரித்து, காய்ச்சல் முதல், இறப்பு வரையிலான தன்மையை ஆராய வேண்டும். இறப்பு எதனால் ஏற்பட்டது என, தெளிவு பெற்று, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்
* பத்திரிகை, ஊடகங்களில் இறப்பு என, தகவல் வந்தால், அந்த பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்; அந்த இறப்பையும் ஆராய வேண்டும்
* கடந்த, 2006ல், சிக்குன் - குனியா பாதிப்பு வந்தபோது, நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினோம். அப்போது, உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின், அட்லாண்டாவில் உள்ள, சி.டி.சி., எனப்படும், சர்வதேச நோய் தடுப்பு மையத்தின் உதவியை நாடினோம். அவர்கள் வந்து ஆய்வு செய்து கொடுத்த, 'ஐடியா' காரணமாக, மூன்று மாதங்களில், 'சிக்குன்- குனியா'வை கட்டுப்படுத்தினோம். அதுபோல், தற்போது, அந்த நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசர தேவை.இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது காரணம்?

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: உள்ளாட்சிகளில், மக்கள் பிரதிநிதிகளாக வருவோர், கமிஷன் நோக்கில் செயல்பட்டாலும், உள்ளூரில் மக்களை பகைத்து கொள்ள விரும்புவதில்லை. இதனால், சுகாதார பிரச்னை, மழை பாதிப்புகள் என்றால், கவுன்சிலர்களை வீடு தேடிச்சென்று தொல்லை கொடுப்பர்; தட்டிக் கேட்பர். இதனால், கவுன்சிலர்கள் சுகாதார பணிகளில், கவனம் செலுத்துவர்; ஓரளவு பணிகள் நடக்கும்.தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், அதிகாரிகளின் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. அவர்கள், வி.ஐ.பி.,க்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து, வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்துவதால், அடிப்படை சுகாதார பணிகள் முடங்கி உள்ளன. டெங்கு பாதிப்பு அதிகரிக்க, இதுவும் காரணம் என்பதை, தமிழக அரசு உணர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.அதுவரை, சுகாதார பணிகளுக்கென, சிறப்பு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவர்களின் பணிகளை தினசரி அடிப்படையில் கலெக்டர், மாவட்ட செயலர் கண்காணித்தால், ஓரளவு சமாளிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்


ஆடாதோடை பொடி

'டெங்கு' காய்ச்சல் தடுப்புக்கு, நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறை பரிந்துரைத்த சித்தா டாக்டர்கள், தற்போது, 'ஆடாதோடை இலை' பொடியும் சிறந்த மருந்து என, பரிந்துரைத்துள்ளனர்.தமிழகத்தில், 2012ல், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல், அரசு திணறிய நிலையில், 'கவலைப்பட வேண்டாம்;நாங்கள் இருக்கிறோம்' என, சித்தா டாக்டர்கள், சிலமருந்துகளின் பெயர்களைக் கூறி உதவினர்.அவர்கள் பரிந்துரைத்த, நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உதவின.அரசும், சித்த மருத்துவத்தின் பயனை உணர்ந்து, 'நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு சிறந்த மருந்து; மக்கள் பயன்படுத்த வேண்டும்' என, தெருத்தெருவாக விளம்பரம் செய்தது. இதனால், நிலைமை கட்டுக்குள் வந்தது.

Advertisement


தற்போது, டெங்கு காய்ச்சல், மக்களை மிரள வைக்கும் வகையில், சித்தா டாக்டர்கள், ஆடாதோடை இலை பொடி சிறந்த மருந்து, ரத்த தட்டுக்கள் குறையாமல் தடுக்கும் என, பரிந்துரை செய்கின்றனர்.
இது குறித்து, அரசு சித்த மருத்துவக் கல்லுாரி, பயிற்சி மருத்துவர், வீரபாபு கூறியதாவது: டெங்கு இறப்புக்கு, ரத்த தட்டணுக்கள் வேகமாக குறைவது தான், முக்கிய காரணம்.சராசரியாக, 1.5 லட்சம் முதல், நான்கு லட்சம் வரை, தட்டணுக்கள் குறையும். காய்ச்சல் உள்ள ஒரு வாரத்தில், இது, வேகமாக சரிந்து, 50 ஆயிரத்திற்குள் கீழ் குறைந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை, ஈடுகட்ட முடியாமல், அலோபதி டாக்டர்கள் திணறுகின்றனர்.சித்த மருத்துவத்தில், இதற்கு நல்ல தீர்வு உள்ளது; ஆடாதோடை பொடி, நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கிறது.அதனுடன், தேன் கலந்து, அல்வா பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலால் வந்தவர்கள், வயதுக்கேற்ப குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டால், ரத்த தட்டணுக்கள் சடசடவென சரிவது, கட்டுபடுத்தப்படும்.ரத்த தட்டணுக்கள் மெதுவாக சரிந்தாலும், ஆபத்தை ஏற்படுத்தும் நிலை வராது.ஒரு வாரத்தில் காய்ச்சல் நீங்கி, மீண்டும் ரத்த தட்டணுக்கள் அதிகரித்து விடும் என்பதால், உயிர் இழப்புகள் ஏற்படாது. நாட்டு மருந்துக் கடைகளில், ஆடாதோடை மணப்பாகு என்ற பெயரில் கிடைக்கிறது. இதையும், அரசு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

எந்த அளவில்உட்கொள்ளலாம்?

* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கால் டீ ஸ்பூன் அளவில், காலை, மாலை என, இரண்டு வேளை கொடுக்க வேண்டும் * ஐந்து முதல், 10 வயதுக்கு உட்பட்டோர், அரை டீ ஸ்பூன்; அதற்கு மேலான வயதுடையோர், ஒரு டீஸ்பூன் அளவில் எடுத்து கொள்ளலாம் * காய்ச்சல் உள்ள நேரங்களில் மட்டுமல்ல; காய்ச்சல் பாதிப்புள்ள காலங்களில், முன்னெச்சரிக்கையாகவும், இதை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்வது நல்லது.


டெங்குவை குணமாக்கும்'கிவி' விற்பனை ஜோர்!


சேலம், டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு, 'கிவி' பழத்தை தனியார் டாக்டர்கள் பரிந்துரைப்பதால், அதன் விற்பனை ஜோராக நடக்கிறது.தமிழகத்தில், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், தினமும் காய்ச்சலுக்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் ரத்தத்தில், சிவப்பு, வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையை ஈடு கட்ட, மருந்து, மாத்திரைகளுடன் டாக்டர்கள், பழச்சாறு, தண்ணீர் ஆகியவற்றை அதிகமாக கொடுக்கும்படி, அறிவுரை வழங்குகின்றனர்.சேலத்தில் உள்ள சில தனியார் டாக்டர்கள், நியூசிலாந்தில் இருந்து விற்பனைக்கு வரும், 'கிவி' பழத்தை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இதனால், அதன் விற்பனை சூடுபிடித்துள்ளது.டாக்டர்கள் கூறியதாவது:பழங்கள், பொதுவாகவே உடலுக்கு நல்லது. சில பழங்கள், ரத்தத்தில் உடனடியாக அணுக்களை அதிகரிக்க செய்யும்.'கிவி' பழத்தில், நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால், உடலை குளிர்ச்சி அடைய செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை, அதிகரிக்கிறது; அவற்றை பரிந்துரைக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பழ வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'கிவி பழம், நம்மூர் சப்போட்டா போல் இருக்கும். அதை டாக்டர்கள் பரிந்துரைப்பதாக கூறி, அதிகளவில் மக்கள் வாங்கி செல்வதால், விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு பழம், 49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது' என்றனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (6)

G Mahalingam - Delhi,இந்தியா
10-அக்-201713:34:09 IST Report Abuse

G  Mahalingamஅவரவர் வீட்டை மற்றும் தெருவை சுத்தம் செய்தாலே டெங்குவை விரட்டி அடிக்கலாம். அரசால் மட்டும் முடியாது.

Rate this:
Myman - chennai,இந்தியா
10-அக்-201711:43:49 IST Report Abuse

Mymanஇந்த சமயத்தில் பாட்டாசு வெடித்தால் புகை மற்றும் வெப்பம் உருவாகும் அதனால் நாம் இந்த கொசுவை தடுக்க முடியும் என்று ஒரு யோசனை

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
10-அக்-201710:05:42 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இந்த பப்பாளி, நிலவேம்பு, இப்போ கிவி பழம், ஆடாதொடா இலை, நாளைக்கி ஆட்டு தொடையும் சொல்லுவாங்க.. இதெல்லாம் உண்மையிலேயே வேலை செய்யுதுன்னா மரணங்கள் அதிகமானது ஏன்? இறந்தவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் தரப்படவில்லை என்று நினைக்கிறீர்களா? Every fool is consuming that. இவைகள் உண்மையிலேயே மருந்துகள் தான் என்றால் இறந்தவர்கள் உயிர் தப்பித்திருக்க வேண்டுமே? ஏன் அப்படி நடக்கவில்லை.? ஏனென்றால் இவை மருந்துகளே இல்லை..

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
13-அக்-201717:56:33 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)வந்துட்டாரு கீழ்ப்பாக்கத்தில் இருந்து தப்பித்து வந்த மருத்துவர் ...

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X