தோள்கொடுப்பதே ஸ்ரீபதியின் கடமையாகும்...
நாடே போற்றும் வகையில் சென்னையில் நடந்து முடிந்த சுதந்திர தினவிழாவில் இளைஞர் விருது பெற்ற நெல்லை ஸ்ரீபதி தங்கத்தை ஊரே போற்றிக்கொண்டு இருக்கிறது.
காரணம் நிறைய இருக்கிறது கொஞ்சத்தை மட்டும் இங்கே சொல்கிறோம்
திருநெல்வேலி மாவட்டம் வீரவல்லுாரைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி தங்கம் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் அம்மா இல்லை அப்பா உலகநாதன்தான் அவரது உலகம், உலகநாதனுக்கு மகள்தான் உலகம்.
சிறு வயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்ட ஸ்ரீபதி தங்கத்திற்கு அவர் படித்துவரும் நெல்லை காந்திநகர் ராணி அண்ணா பெண்கள் கல்லுாரி நிர்வாகம் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் மேலும் மேலும் சமூக சேவையில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
கல்லுாரியின் நாட்டுநலப்பணித்திட்டம்(என்எஸ்எஸ்)மூலமாக பல்வேறு சமூக பணிகளை செய்துவருகிறார்.நீர் நிலைகளுக்கு ஆபத்தை தரும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று தாமிரபரணி ஆற்றாங்கரை ஒரத்து சீமைக்கருவேல மரங்களை அகற்றியிருக்கிறார், பார்த்தவர்கள் பாராட்டியிருக்கின்றனர்.
கல்லுாரி மாணவியரை திரட்டி கல்லுாரிக்கு வெளியே போலியோ,டெங்கு,கேன்சர் விழிப்புணர்வு பேரணி நடத்துவார், கல்லுாரிக்கு உள்ளே ரத்ததான,கண்தான,சித்த மருத்துவ முகாம் நடத்துவார்.
கல்லுாரியின் செயலாளராகவும் என்எஸ்எஸ் தலைவராகவும் இருப்பதால் நாஞ்சன்குளம் போன்ற கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமத்து மண்வாகிற்கு ஏற்ப மரங்கள் நட்டு வளர்த்து பின் கிராம மக்களிடம் ஒப்படைத்துள்ளார்.
123 பேரில் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டு குளுமாணலியில் நடைபெற்ற பத்து நாள் சிறப்பு முகாமில் பங்கேற்று திரும்பி இருக்கிறார், அங்கு கிடைத்த மலையேற்ற பயிற்சி,மழைவெள்ளத்தில் மக்களை காப்பாற்றுவது எப்படி, அடிபட்டவர்களுக்கு உடனடியாக செய்யவேண்டிய முதலுதவி பயிற்சி போன்றவைகளை சகமாணவியருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
கல்லுாரியில் மூன்றாமண்டு மாணவி என்றாலும் முதலாம் ஆண்டு முதலே பார்வையற்றவர்களுக்கு பாடம் எடுத்து அவர்களுக்கு தேர்வு எழுத உதவும் 'ஸ்கிரைப்பராகவும்' இருந்து வருகிறார்.
உங்கள் வயதையொத்த மாணவியர் பெரும்பாலும் சினிமா, அரட்டை, முகநுால், வாட்ஸ் அப் என்று இருப்பார்களே நீங்கள் எப்படி? என்ற கேள்விக்கு அப்படின்னா? என்ற ரீதியிலேயே பதில் வருகிறது.
இப்படி பொதுத்தொண்டு செய்து கொண்டே இருந்தால் படிப்பு என்னாவது என்று சிலர் கேட்கக்கூடும் அதில் சமரசமே இல்லை எப்போதுமே முதல் வகுப்பு மாணவிதான். இவரது லட்சியமே நன்றாக படித்து கலெக்டராவதுதான்.அது கூட அதிகாரத்திற்காக அல்ல மக்களுக்கு அதிகம் சேவை செய்யமுடியும் என்பதற்காக.
19வயதுதான் என்றாலும் கிராமம் மக்கள் வளர்ச்சி, மரம் வளர்ப்பு, சீமைக்கருவேல மரஒழிப்பு,கல்வி மருத்துவ விழிப்புணர்வு என்று நிறைய பேசுகிறார், கேட்பவர் மனம் நிறைவடைய பேசுகிறார்.
விருது பெற்றதற்கு ஒரு பாராட்டு விழா வரமுடியுமா என்ற போது அதெல்லாம் வேண்டாம் சார் காலேஜ்ல படிக்கிற 4500 மாணவியருக்கும் இலவச மரக்கன்று வழங்கும் விழா வச்சுருக்கோம், நான் வரலைன்னா மரக்கன்னுகளும் வாடிவிடும் பிள்ளைகளும் வாடிருவாங்க எனக்கு அதுதான் முக்கியம் பாராட்டு விழா வேண்டாம் என்று சொல்லி சென்றவர்.
இவ்வளவு செய்தாலும் இது எதையுமே விருதை எதிர்பார்த்து செய்யவில்லை என் ஆத்ம திருப்திக்காக செய்தேன் , எப்படியோ என்னைப்பற்றி விசாரித்து பிறகு சென்னை வரச்சொல்லி சிறந்த இளைஞருக்கான விருதினை கொடுத்து முதல் அமைச்சர் கவுரவித்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் இன்னும் கூடுதலாக உழைக்க உற்சாகமும் கொடுத்துள்ளது என்கின்ற ஸ்ரீபதி தங்கம் உண்மையிலேயே பெண் குலத்தின் சொக்கத்தங்கம்தான்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in