தன் பிரச்னைக்கு தனியாரை காவு வாங்கும் தமிழக அரசு

Updated : பிப் 15, 2011 | Added : பிப் 13, 2011 | கருத்துகள் (24) | |
Advertisement
அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்த பால், அனாவசியப் பொருட்களின் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. ஆவின் நிறுவனத்துக்கு பால் வினியோகிக்கும் விவசாயிகளின் போராட்டம், நேற்று எட்டாவது நாளை எட்டிவிட்டது. ஆனாலும், தமிழக அரசு, அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம்; விலை உயர்த்திக் கொடுப்பது

அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்த பால், அனாவசியப் பொருட்களின் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. ஆவின் நிறுவனத்துக்கு பால் வினியோகிக்கும் விவசாயிகளின் போராட்டம், நேற்று எட்டாவது நாளை எட்டிவிட்டது. ஆனாலும், தமிழக அரசு, அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.


விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம்; விலை உயர்த்திக் கொடுப்பது பற்றி தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கலாம். அவ்வளவு ஏன், "நீங்கள் செய்வது நியாயமா?' என கேள்வி கூட கேட்கலாம். அதைவிடுத்து, தன் பசிக்கு அடுத்தவன் வீட்டுப் பானையை உருட்டுவது போல, ஆவின் பால் வினியோக பாதிப்பைத் தடுக்க, தனியாரின் வயிற்றில் அடிக்கிறது தமிழக அரசு.


இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தனியார் பால் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:என் பெயரை ஏன் வெளியிட விரும்பவில்லை என்பதை முதலில் கூறிவிடுகிறேன். ஆவின் பால் வினியோகம் குறைவுபடாமல் நடப்பதற்காக, தனியார் நிறுவனங்களுக்குச் செல்லும் பாலை தடுத்து நிறுத்தி வருகிறது அரசு. இன்னார், இனியார் என்ற பாகுபாடு இல்லாமல், எங்கு பால் தென்படுகிறதோ அங்கு பறிமுதல் செய்து விடுகிறது.இவ்வாறு பேட்டியோ, அறிக்கையோ கொடுப்பவர்கள் அல்லது சங்கப் பணிகளில் தீவிரமாக இருப்பவர்கள், முதல் குறியாக பலியாக்கப்படுகின்றனர். அதனால் தான், பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்."ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என்பது விவசாயிகள் கோரிக்கை. இதை நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வந்த விவசாயிகள், "ஸ்டிரைக்' செய்யப் போவதாக முன்கூட்டியே எச்சரித்தனர். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத அரசு, 7ம் தேதி முதல் அவர்கள் உண்மையிலேயே பாலை நிறுத்தியதும், அடாவடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பால் உற்பத்தியாளர்களைக் குறிவைத்து, அவர்களுக்குச் செல்லும் பாலை பறிமுதல் செய்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது, நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டருக்கும் குறைவான பால் உற்பத்தி செய்து வரும் நிறுவனங்கள். நேரடியாக அவர்களது குளிரூட்டும் நிலையங்களுக்குச் செல்லும் அதிகாரிகள், அங்குள்ள பாலை அப்படியே, "அபேஸ்' செய்து, ஆவின் நிலையங்களுக்கு அள்ளிச் செல்கின்றனர்.


அதற்கு, சில இடங்களில் அவர்கள் சொல்லும் காரணம், "எம்.எம்.பி.ஓ., பதிவு இல்லை' என்பது. எம்.எம்.பி.ஓ., என்பது, பால் உற்பத்தியாளர்களின் கையாளும் திறனைப் பொறுத்து, பால் மற்றும் பால் பொருட்கள் ஆணையகத்தில் பதிவு செய்து பெறப்படும் சான்றிதழ். நாளொன்றுக்கு பத்தாயிரம் லிட்டருக்கு மேல் கையாளும் பால் உற்பத்தியாளர்கள், சென்னையில் உள்ள இந்த ஆணையரகத்தில் பதிவு செய்ய வேண்டும். 2 லட்சம் லிட்டருக்கு மேல் என்றால், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், 40வது நாளில் தான் அவர்கள் ஏதேனும் குறை கண்டுபிடித்து, விண்ணப்பத்தைத் திருப்பி அனுப்புவர். உடனடியாக அந்தத் தவறைத் திருத்தி மறுவிண்ணப்பம் செய்தால், மேலும் 30, 40 நாட்கள் தாமதித்து, புதிய குற்றம் கண்டுபிடிப்பர். தவறுகள் இருப்பது உண்மையெனில், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக சுட்டிக் காட்ட வேண்டியது தானே.


ஆனால், அவர்களது நோக்கம் குற்றம் காண்பதல்ல; வருவாய் ஈட்டுவது. இப்படியே இழுத்தடித்து, ஆண்டுக்கணக்கில் அனுமதியே தராமல் நிறைய தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு, உற்பத்தியைத் துவக்காமல் இருக்க முடியாதில்லையா? அதனால், விண்ணப்பம் வரும் வரை வழி மேல் விழி வைத்து காத்திருந்து, மறுபக்கம் உற்பத்திப் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். ஈரோட்டில் நேற்று இரவு மூடப்பட்ட ஒரு நிறுவனம், நாலரை ஆண்டுகளாக அனுமதிக்காக காத்திருக்கிறது.இதுநாள் வரை அதை கண்டுகொள்ளாமல் இருந்த அரசு, விவசாயிகளின் வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்களில் கண்ணில் விரல் விட்டு ஆட்டுகிறது. தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட தனியார் பால் குளிரூட்டும் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில், நேற்று வரை 60க்கும் மேற்பட்ட நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. பெரும்பாலானவை அரசு அதிகாரிகளால் மூடப்பட்டவை. மற்றவை, அவர்களின் நெருக்கடி தாங்காமல் தாங்களாகவே மூடப்பட்டவை.


மற்றொரு நிறுவனத்தின் அதிபர் வெளியூர் சென்றிருந்தார். நேற்று இரவோடு இரவாக அவரது மனைவியை தட்டி எழுப்பிய அதிகாரிகள், அவர்களது நிறுவனத்தில் சோதனை என்ற பெயரில் புகுந்து, அங்கு வந்த பாலை பறிமுதல் செய்து, நோட்டீஸ் கொடுத்துச் சென்றுவிட்டனர்.இப்படி, தனியார் நிறுவனங்களுக்கு நெருக்கடி தர அரசு சொல்லும் மற்றொரு காரணம், அங்கு கையாளப்படும் பாலில், நிர்ணயிக்கப்பட்ட தரமில்லை என்பது. ஆனால், அந்தப் பாலைத் தான் அப்படியே எடுத்து, ஆவின் மூலம் வினியோகிக்கிறது அரசு. நாங்கள் வினியோகித்தால் தரம் குறைந்தது; ஆவின் வினியோகித்தால் தரம் நிறைந்ததா?இவ்வாறு அந்த உற்பத்தியாளர் குமுறினார்.


பாவம், அரசு எந்திரத்தின் இரும்புக் கரங்களின் முன்னால், தனியார் எந்திரங்கள் எம்மாத்திரம்!


எப்படி சமாளிக்கிறது அரசு? பால் வினியோகத்தின் மொத்த மார்க்கெட்டில், கிட்டத்தட்ட சரிபாதியை ஆவின் நிறுவனம் வைத்துள்ளது. அவர்களது சப்ளை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தனியாரிடம் பறிமுதல் செய்யும் பாலை பயன்படுத்துகிறது.சில இடங்களில், தனியார் நிறுவனங்களிடம் நேரடியாகக் கேட்டு, அவர்களுக்குப் பணம் கொடுத்து, பால் வாங்குகிறது. எந்தச் சூழ்நிலையிலும் பால் தட்டுப்பாடு வரக்கூடாது என்பதற்காக, இந்தப் பணியில் ஆவின் மேலாண் இயக்குனர்கள், பதிவாளர்கள், கலெக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, அதிக தரம் கொண்ட, "புல் கிரீம் பால்' (6 சதவீத கொழுப்பு) சப்ளையைக் குறைத்து, 4.5 சதவீத கொழுப்பு கொண்ட, "ஸ்டாண்டர்டைஸ்டு' பாலாகவும், 3 சதவீதம் கொழுப்பு கொண்ட, "டோண்டு' பாலாகவும் மாற்றி அனுப்புகிறது. நான்கு லிட்டர், "புல் கிரீம்' பால் தயாரிக்கும் இடத்தில், ஆறு லிட்டர், "ஸ்டாண்டர்டைஸ்டு' பால் தயாரித்து விடலாம்; ஏழு லிட்டர், "டோண்டு' பால் தயாரித்து விடலாம். அவ்வாறு மாற்றம் செய்து, தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது தமிழக அரசு.


விலை அதிகம் கேட்பது ஏன்? தமிழக அரசு சொல்வது போல, கர்நாடக மாநிலத்தைத் தவிர, பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகம் தான். அரசு தருவதை விட, லிட்டருக்கு 50 காசு அதிகமாகக் கொடுத்து தான் தனியாரும் கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால், முன்பை விட, இப்போது பால் உற்பத்திச் செலவு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்குச் சென்று, ஒரு நாளைக்கு 80 ரூபாய் சம்பாதிக்க முடிந்தால், நாள் முழுக்க உழைத்து, பால் உற்பத்தியில் 50 ரூபாய் தான் சம்பாதிக்க முடியும் என்ற நிலை. பால் உற்பத்தியையே பிரதான தொழிலாகக் கொண்டவர்கள் இன்று நொடிக்கும் நிலையில் தான் இருக்கின்றனர். துணைத் தொழிலாகக் கொண்டவர்களும், மிகப் பெரிய நிறுவனங்களும் தான் ஓரளவு சமாளித்து வருகின்றன.


உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், மாட்டுத் தீவனத்துக்கு தடையற்ற ஏற்றுமதி அனுமதி இருப்பதால், இங்கு, அவற்றின் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. தவிர, மருத்துவச் செலவும், பணியாட்களுக்கான கூலியும் அதிகரித்துவிட்டது. இதை அரசு புரிந்துகொள்ள மறுக்கிறது.தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுப்பது மட்டுமின்றி, மருத்துவ உதவி, தடுப்பு மருந்துகள், கடன் வசதி, முன்பணம், நேரடி கவனம் என ஏராளமான வசதிகளை செய்து கொடுக்கின்றன. இவற்றில் சில திட்டங்கள் ஆவின் வசம் இருந்தாலும், நோய்ப்பட்ட மாடு பற்றி தகவல் தெரிவித்து, ஆவின் அதிகாரிகளும், மருத்துவர்களும் வந்து பார்ப்பதற்குள், சம்பந்தப்பட்ட மாடே செத்து போகும் நிலை தான் இருக்கிறது. அமலாக்கத்தில் ஏற்படும் குறைபாடுகளால் பாதிக்கப்படுவது, அப்பாவி விவசாயிகள் தான்.


- நமது நிருபர் குழு-


Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abc - london,யுனைடெட் கிங்டம்
14-பிப்-201122:25:34 IST Report Abuse
abc சும்மா கலர் டிவி கொடுப்பிங்க, கஷ்டப்பட்டு பால் தர்ற விவசாயுக்கு கஷ்ட படுத்துவிங்க . என்னடா கேடு கேட்ட ஆட்சி இது?
Rate this:
Cancel
Rajesh Babu - trichy,இந்தியா
14-பிப்-201121:26:23 IST Report Abuse
Rajesh Babu ஜநாயக நாடு என்னும் நம் நாடு சர்வாதிகாரம் மிக்க நாடாக மாறுகிறது என்பதை இதன் பொருள் ..... வாழ்க ஜனநாயகம்....
Rate this:
Cancel
k.seshadri - chennai,இந்தியா
14-பிப்-201120:28:23 IST Report Abuse
k.seshadri இந்த அரசும் சரி மத்திய அரசும் சரி விவசாயிகளுக்கோ பால் உற்பத்தி செய்கிரவர்களுக்கோ சரியான விலை கொடுப்பதில்லை. விவசாயிகள் தற்கொலை இன்று சர்வ சாதாரணமாக நடக்கிறது. விளை நிலங்கள் கட்டிடங்களாக மாறுகிறது. இந்த நிலை உணவு பற்றாகுறை நிலைக்குத்தான் கொண்டு விடும். விளை உயர்வுக்கு இடை தரகர்களும் பொருளையே பார்க்காத ஆண் லைன் வர்த்தகமும் ஆகும். இது எல்லாம் அரசுக்கும் தெரியும் ஆனால் அவர்கள் கொள்ளை அடிப்பதற்கு இதுதான் சரியாக இருக்கிறது எனவே இதை எல்லாம் பற்றி கவலை பட மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X