பள்ளி கட்டடம் இடிப்பு : மாணவர்கள் தவிப்பு| Dinamalar

பள்ளி கட்டடம் இடிப்பு : மாணவர்கள் தவிப்பு

Added : அக் 24, 2017 | கருத்துகள் (1)
Share

ஹரித்வார்: ஹரித்வாரில் அரசு பள்ளி கட்டடத்தை, அதன் உரிமையாளர் இடித்து விட்டதால், சாலையில் அமர்ந்து, மாணவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரகண்டில், முதல்வர், திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹரித்வாரில், அரசு துவக்கப் பள்ளி ஒன்று, அரசுக்கு சொந்தமான பழமையான கட்டடத்தில் இயங்கி வந்தது.
மழை காலத்தில், பள்ளியில், மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கட்டடத்தை புதுப்பிக்க முடிவு செய்து, அருகில் இருந்த, தனியாருக்கு சொந்தமான கட்டடத்துக்கு, இரண்டு மாதத்துக்கு முன், பள்ளி மாற்றப்பட்டது. இந்நிலையில், தீபாவளிக்காக, பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது, விடுமுறை முடிந்து, பள்ளிக்கு நேற்று முன்தினம், மாணவ - மாணவியர் வந்தனர்; அங்கு கட்டடம் இடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தலைமை ஆசிரியை உட்பட ஆசிரியர், ஆசிரியைகளும், கட்டடம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். விசாரித்தபோது, கட்டடத்தை, அதன் உரிமையளர் இடித்துள்ளது தெரிந்தது.இதையடுத்து, சாலையிலேயே, மாணவ - மாணவியரை அமர வைத்து, ஆசிரியர்கள், பாடம் நடத்தினர். ஆனால், மதிய உணவு தயார் செய்வதற்கு கூட இடம் இல்லாததால், மாணவர்கள் பலர், பட்டினியுடன் படித்தனர்.

இது பற்றி பள்ளி தலைமையாசிரியை, உஷா ராவத் கூறுகையில், ''எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, கட்டடத்தை உரிமையாளர் இடித்துள்ளார்.''இது பற்றி போலீசில் புகார் செய்தோம். ஆனால், போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டடத்தை இடிக்கப் போவதாக, உரிமையாளர் முன்கூட்டியே தெரிவித்திருந்தால், மாற்று ஏற்பாடுகள் செய்திருப்போம்,'' என்றார்.

இது பற்றி ஹரித்வார் கமிஷனர் கூறுகையில், 'கட்டடத்தை இடிக்க அனுமதி கோரி, உரிமையாளர், முறைப்படி மனு தாக்கல் செய்தார். அதனால், பள்ளியை, வேறு கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யும்படி கடிதம் அனுப்பினோம். 'ஆனால், பள்ளி நிர்வாகம் அலட்சியப்படுத்திவிட்டது. மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. வேறு கட்டடத்துக்கு, பள்ளி உடனடியாக மாற்றப்படும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X