எங்கும் இருக்கு டெங்கு!| Dinamalar

எங்கும் இருக்கு டெங்கு!

Added : அக் 26, 2017
எங்கும் இருக்கு டெங்கு!

இன்று எங்கும் டெங்கு பற்றிய பேச்சாகவே உள்ளது. டெங்கு என்பது ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் பரவும் ஒருவித வைரஸ் காய்ச்சல். தொடர் காய்ச்சல், தலைவலி, தோலில் ஏற்படும் சிவப்பு நிற தடிப்புகள் இதற்கான அறிகுறிகள். ஏடிஸ் வகை கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். சுத்தமான நீர் மற்றும் தேங்கிய மழைநீரில் அதிகளவில் பெருகும். எனவே தண்ணீரை தேங்கவிடாமல் தடுப்பது தான் ஒரே தீர்வு.

டெங்கு காய்ச்சல் இந்தியாவிற்குள் திடீரென புகுந்த புதியநோய் இல்லை. இது இந்தியாவில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவதும் அல்ல. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகள் உட்பட 150 நாடுகளில் பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச அரங்கில் டெங்கு பற்றிய ஆராய்ச்சிகள் நடந்தாலும் இந்நோய் பரப்பும் கொசுவை ஒழிக்க முடியவில்லை.

39 கோடி பேர் பாதிப்பு : உலகளவில் ஆண்டுக்கு சராசரியாக 39 கோடி பேர் டெங்குவால் பாதிப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் டெங்குவால் 28 ஆயிரத்து 292 பேர் பாதிப்பும், 110 பேர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டு
தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் சென்ற ஆண்டு அதிக பட்சமாக 1 லட்சத்து 29 ஆயிரத்து 166 பேர் பாதித்ததில் 245 பேர் பலியாகியுள்ளனர். 2012ல்
இந்தியாவில் 50 ஆயிரம் பேர் பாதித்ததில் 242 பேர் பலியாகினர். தமிழகத்தில் 12ஆயிரத்து 826 பேர் பாதித்து, 66 பேர் பலியாகினர்.உலகில் 3,450 கொசு வகைகள் உண்டு. மலேரியா, யானைக்கால் நோய், டெங்கு காய்ச்சல், சிக்குன்_குனியா, ஜப்பான் மூளைக்காய்ச்சல்
போன்ற நோய்களை பரப்பும் அனாபிலிஸ், கியூலெக்ஸ், ஏடிஸ், மன்சோனியா என்ற நான்கு வகை கொசுக்கள் இந்தியாவை அதிகம் ஆக்கிரமித்து சுகாதாரத்துறைக்கு தலைவலியை கொடுத்து வருகிறது. டெங்குவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி என்ற இனம் இந்தியாவில் அதிகம் உள்ளன. இது ஆசியாவின் புலிக்கொசு என அழைக்கப்படும்.

வைரஸ் இனங்கள் : உலகில் அனைத்து பகுதியிலும் நுாற்றுக்கணக்கான வைரஸ்
இனங்கள் பரவியுள்ளன. கிட்டத்தட்ட 20 வைரஸ் நோய்களை
பரவ செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது கொசுக்கள். பொதுவாக மழை காலத்தில் மட்டுமே இக்கொசுக்களின் கும்மாளம் அதிகமாகி நோய் பரவுகிறது என நம்புகிறோம். இது ஓரளவு உண்மை தான். இருப்பினும் குளிர்ந்த வெப்பநிலையில் வைரஸ்களின் பெருக்கம் குறைவாகவே இருக்கும். டெங்கு வைரஸ் பெருக்கமடைய அதிகமான உஷ்ணநிலை தான் சாதகமாக இருக்கும்.
கொசு உற்பத்திக்கு சாதகமான சூழ்நிலைகளை மாற்றுவது, கொசுவின் புழுக்களை அழிப்பது, வளர்ந்த கொசுக்களை கொல்வது என 3 நிலைகளில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்படும். வீட்டை சுற்றி, சாக்கடை மற்றும் மழைநீர் தேங்காமல் பார்ப்பதுதான் ஒரே தீர்வு. லார்வா புழுக்கள், வளர்ந்த கொசுக்களையும் கொல்வதற்கு பல யுக்திகள் கையாளப் படுகின்றன.
கிருமி நாசினியாக பயன்படும் பிளீச்சிங் பவுடர், சோடியம் ைஹப்போ குளோரைட், குளோரமின் ஆகிய 3 கூட்டு வேதிப் பொருளில் உள்ள குளோரின் பவுடர், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கவல்லது.

பிளிச்சிங் பவுடரால் பயனில்லை : சோடியம் ைஹப்போ குளோரைட் எச்.ஐ.வி., வைரஸை எதிர்க்கும் சக்தி கொண்டது. ஆனால், பிளீச்சிங் பவுடரை குடிநீரில் கலப்பதால் டெங்குவை தடுக்க முடியாது. பிளீச்சிங் பவுடரில் உள்ள குளோரின் தண்ணீர் மூலம் பரவக்கூடிய காலரா, வயிற்றுபோக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற வியாதியை ஏற்படுத்தும் நோய்
கிருமியை தான் கொல்லுமே ஒழிய டெங்கு வைரசையோ, ஏடிஸ் கொசுவையோ அவற்றால் தீண்டக்கூட முடியாது. அபேட், குளோர்பைரிபோஸ், பெந்தையான் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் கொசுபுழுக்களை கொல்லும் சக்தி வாய்ந்தது.டி.டி.ட்டி மேலத்தயோன்,
பெர்மெத்ரின், லிண்டேன் போன்ற பூச்சிக்கொல்லிகளை வளர்ந்த கொசுக்களை ஒழிக்க பயன்
படுத்தலாம். மண்ணெண்ணெய், டீசலை தேங்கி நிற்கும் நீரில் தெளித்தால் நீரின் மேல் பரப்பிற்கு வரும் புழுக்களை கொல்லலாம்.நீரில் கரையாத தன்மையை கொண்ட காப்பர் அசிட்டோ
ஆர்செனைட் என்ற மூலப்பொருள் அடங்கிய பாரிஸ்கிரீன் என்ற வேதிப்பொருள் நீரின் மேற்பரப்பை எட்டி பார்க்காத ஏடிஸ் கொசுவின் லார்வா மற்றும் பியூப்பா வகை புழுக்களை
அழிக்கும். கொசுவின் லார்வாக்களை விருப்ப உணவாக கொண்டுஇருக்கும் கம்பூஷியா, லெபிஸ்டர் வகை மீன்களை கொசுக்கள் பெருகும் இடங்களில் வளர்த்து விடுவதும் லார்வா
புழுக்களை அழிக்கும் சிறந்த வழிகளாகும்.

கட்டுப்படுத்த வழி : மரபணு மாற்றம் மூலம் ஆண் கொசுவினை மலட்டுத்தன்மை
உள்ளதாக மாற்றி அதன் இனப் பெருக்க திறனை குறைப்பதன் மூலம் கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை அதன் இனத்தோடு சேர்த்துவிடுவதன் மூலம் அந்த கொசுக்களின் அடுத்த வாரிசுகள் உருவாவதை படிப்படியாக
குறைத்துவிடலாம். கொசுக்களில் நோயை உண்டாக்கும் மெட்டாரிசியம், பூவலேரியா போன்ற பூஞ்சைகள் மற்றும் சில பாக்டீரியாக்களின் மூலம் கொசுவை அழிக்கும் பரிசோதனைகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன.உல்பேக்கியா என்பது கியூலெக்ஸ் கொசுக்கள், வண்ணத்துப் பூச்சி, சிலந்திப்பூச்சி, மூட்டைப்பூச்சி உட்பட 60 வகையான பூச்சி களின் உடலில் இயற்கையாக குடிகொண்டிருக்கும் ஒருவித பாக்டீரியா நுண்கிருமி. 1924ல் உல்பேக் என்ற விஞ்ஞானியால் கண்டறியப்பட்டது. இந்த நுண்கிருமி ஏடிஸ் வகை கொசுக்களின் பரம எதிரி என்பது கண்டறியப் பட்ட பின் டெங்கு ஆராய்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சி
யாளர்கள் கருதுகின்றனர்.இந்த நுண்கிருமிகளை ஏடிஸ் கொசுக்களின் வயிற்றில் செலுத்துவதால் பல்வேறு மாற்றம் நிகழ்வது தெரிய வந்துள்ளது. சாதாரணமாக டெங்கு பாதிப்பிற்கு உள்ளானவரின் ரத்தத்தின் மூலம் கொசுவினால் உறிஞ்சப்படும் வைரஸ் கிருமிகள் கொசுவின்
வயிற்றுப்பகுதியில் பெருக்கமடைகிறது. ஆனால், வைரஸ்களின் இந்த பெருக்கமடையும் தன்மை உல்பேக்கியா பாக்டீரியாவால் தடுக்கப்படுவதால் கொசுக்களின் நோயை பரப்பும் சக்தியும் குறைந்து விடுகிறது. இந்த நுண்கிருமிகளை ஆண் கொசுக்களின் வயிற்றில் செலுத்தும் போது, அதற்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதால் பெண் கொசுக்களுடன் சேர்ந்த இனவிருத்தி
செய்யும் திறனும் குறைந்துவிடுகிறது.அப்படியே புதிய தலைமுறை கொசுக்கள் உற்பத்தியானாலும் அவை வீரியமற்றதாகவே பிறக்கின்றன.பெண் கொசுக்களின் வயிற்றுக்குள்
வளர்க்கப்படும் இக்கிருமிகள், கொசுவின் முட்டையில் இருந்து லார்வா எனும் கொசுவின்
புழுக்களை வெளியேறவிடாமல் சிதைத்து விடுகிறது. இந்த உல்பேக்கியா ஆய்வின் முடிவுகளை பரிசோதிக்கும் முயற்சிகள் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி, வியட்நாம்,
இந்தோனேஷியா, கொலம்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் முழுவீச்சில் நடக்கின்றன.
மருத்துவ ஆராய்ச்சி குறைவுஇலக்கியம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளுக்கான நோபல் பரிசுகளைவென்று சாதிக்கும் நம் அறிவியலாளர்கள், மருத்துவத்திற்கான நோபல் பரிசினை தட்டிக்கொண்டு வரும் வாய்ப்பினை இதுவரை பெறாமல் இருப்பதற்கு மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளில் நம்மவர்களுக்கு உள்ள ஆர்வக்குறைவே காரணம். டெங்குவுக்கு எதிரான போராட்டகளத்தில், நிலவேம்பு என்ற ஒரு துரும்பை மட்டும் வைத்துக்கொண்டு நிராயுதபாணியாக நிற்பதால் தான் வெற்றி என்னும் இலக்கை நோக்கி முன்னேற முடியாமல் தவிக்கிறோம்.

ஈகோ பார்க்காமல் அரசு அதிகாரிகளும், கட்சி பாகுபாடின்றி அரசியல்வாதிகளும், சுயநலமின்றி பொதுமக்களும் இணைந்து டெங்குவை விரட்டும் அரிய முயற்சியில் ஈடுபடுவோம் என சபதம் ஏற்றால் தான் டெங்குவிடமிருந்து விடுபடமுடியும்.

டி.ராஜேந்திரன்
உதவி பேராசிரியர்
வேலம்மாள் மருத்துவ கல்லுாரி
மதுரை. 98421 71411

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X