உங்களது வாழ்க்கைத்துணை உங்கள் வழிக்கு வரவில்லையென்றால் | Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

உங்களது வாழ்க்கைத்துணை உங்கள் வழிக்கு வரவில்லையென்றால்

Added : அக் 27, 2017 | கருத்துகள் (3)
உங்களது வாழ்க்கைத்துணை உங்கள் வழிக்கு வரவில்லையென்றால்

கேள்வி: சத்குரு, இன்னொருவருடன் உள்ள உறவு சரியான புரிதல் அற்ற நிலையில் இருக்கும்போது, அங்கேயே சிக்கிப்போகாமல் ஆன்மீகப் பாதையில் எப்படி முன்னேறுவது?

சத்குரு: ஆன்மீக வளர்ச்சியில்தான் உங்கள் கவனம் உள்ளதென்றால், அப்போது ஒரு பிசாசு உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக இருந்தால், அதுதான் மிகச் சிறந்த விஷயம்! ஆனால் உங்கள் கணவரோ அல்லது மனைவியோ ஆன்மீக வளர்ச்சிக்கானவர்கள் மட்டும் அல்ல. உங்களது குடும்பத்தில் ஒரு இனிமையான வாழ்க்கையும் உங்களுக்கு வேண்டுமென்றால், நீங்கள் விரும்புகின்ற யாரோ ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், இந்தப் பூமியிலுள்ள எந்த ஒரு மனிதரிடமும் ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கும் அல்லவா? நீங்கள் விரும்பாத அந்த விஷயத்தை உங்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், மற்ற விஷயங்களை உங்கள் வாழ்க்கைக்கென்று அனுபவித்துக்கொள்ளுங்கள்.
ஒரு நல்ல குடும்பம் வேண்டும் என்பது உங்களது நோக்கமாக இருந்தால், அப்போது இருவருக்கும் இடையே சிறிது புரிதல் தேவைப்படுகிறது. இல்லையென்றால் அது நிறைவேறாது. முக்கியமாக உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், ஒரு நல்ல உறவுநிலை கட்டாயம் தேவை. இல்லையென்றால், வந்திருக்கின்ற புதிய உயிருக்கு நீங்கள் தவறிழைத்து விடுவீர்கள். அதைச் செய்வதற்கு ஒருவருக்கும் எந்த உரிமையும் இல்லை. ஆனால் மக்கள் அதைச் செய்துகொண்டு தான் இருக்கின்றனர். நீங்கள் உங்களுக்கு எவ்வளவு துன்பத்தை வேண்டுமானாலும் உண்டாக்கிக் கொள்ளலாம், அது உங்கள் விருப்பம். ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் இளம் உயிருக்குப் பாதகமாக நீங்கள் எதுவும் செய்யமுடியாது. இருப்பினும் இப்போது அது பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. ஏனென்றால் இனப்பெருக்கம் அவ்வளவு எளிதாக நிகழ்கிறது. இனப்பெருக்கச் செயல் என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அப்போது, உண்மையாகவே விருப்பம் உள்ளவர்கள் மட்டும் அதை நாடிச் சென்றிருப்பார்கள். அது அவ்வளவு எளிதாகவும், நிர்பந்தப்படுத்தும் செயலாகவும் இருப்பதால்தான், மிக எளிமையாக நிகழ்ந்துவிடுகிறது. ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை உங்களுக்கு வேண்டும் என்றால், உங்களுக்குள் ஒரு புரிதல் வேண்டும். புரிதல் என்னும்போது, குறைந்தபட்சம் சில விஷயங்களிலாவது நீங்கள் கருத்தொற்றுமையுடன் இருக்கிறீர்கள் என்பது பொருள். நீங்கள் தேடுவது ஆன்மீகத்தன்மையான ஒரு வாழ்க்கை என்றால், துணைவரோ அல்லது துணைவியோ எந்தவிதமான நபராக இருக்கிறார் என்பது ஒரு பொருட்டல்ல. ஆன்மீக வளர்ச்சியில் தான் உங்கள் கவனம் குவிந்திருக்கிறது என்றால், நீங்கள் ஒவ்வொன்றையும் உங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். ஆனால் பொதுவாக உங்கள் கவனம் இரண்டு வழிகளில் உள்ளது. உங்களுக்கு அதில் சிறிதளவு வேண்டும், இதில் சிறிதளவு வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அது ஒரு கலவையான வாழ்க்கைப் பயணம். ஆகவே சிறிது சிக்கலாக இருக்கிறது. ஒரு புரிதலை உருவாக்கி வளர்ப்பதற்கு முயற்சி தேவைப்படுகிறது, சமரசம் செய்துகொள்ளுதல் அவசியமாகிறது, அன்பு, சகிப்புத் தன்மையுடன் பொறுமையும் தேவைப்படுகிறது.
உறுதுணையாகவும், ஆதரவாகவும் இல்லாத ஒருவருடன், ஒரு புரிதலான இணக்கத்தை உருவாக்க நீங்கள் விரும்பினால், அதேநேரம் அவரது வழியில் உங்களுக்குச் செல்ல விருப்பமில்லை என்ற நிலையில், அதற்கு அளவற்ற பொறுமை, சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. நீங்கள் நேசிக்கும் மக்கள் அவ்வளவு இலேசுப்பட்டவர்கள் அல்ல. ஆகவே, நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்கள் இருப்பின் தன்மையால், தங்களையறியாமல் உங்களை நோக்கி அவர்கள் திரும்பும் அளவுக்கு, நீங்கள் உங்களையே மாற்றமடையச் செய்யமுடியும். இதுதான் ஒரே வழி. சில நாட்களுக்கு முன்பு, நான் வெளியில் இருந்த நேரம், மழை பெய்யத் தொடங்கியது. நான் சில அழைப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால், எனது இரண்டு கைப்பேசிகளையும் கொண்டு சென்றிருந்தேன். ஒரு கைப்பேசி இந்தியாவிலிருந்து வரும் அழைப்புகளுக்கானது. மற்றொன்று வெளிதேச அழைப்புகளுக்கானது. ஒன்றை மேல்சட்டை பாக்கெட்டிலும், இன்னொன்றை கால்சட்டை பாக்கெட்டிலும் வைத்திருந்ததால் இரண்டுமே மழையில் ஈரமாகி பிறகு மின் இணைப்பு கொடுத்ததும் அவை கருகிவிட்டன.
அப்போது என்னுடன் இருந்தவர்கள், “சத்குரு, ஏன் இரண்டு கைப்பேசிகளை வைத்திருக்கிறீர்கள்? இப்போது, ஒரே கைப்பேசியில் இரண்டு சிம்கார்டு வைத்துக் கொள்ளலாம். இது ஒரு சீனத் தயாரிப்பு மாடல். இதை நீங்கள் ஒருவிதமாகப் பிடித்தால், நீங்கள் இந்திய சிம்கார்டில் பேசமுடியும். அதை அப்படியே திருப்பினால், வேறு சிம்கார்டில் பேசமுடியும். நீங்கள் எந்த பொத்தானையும் அழுத்த வேண்டாம். மாற்றிப் பிடித்தால் போதுமானது” என்று கூறிக்கொண்டிருந்தனர். எனக்கு அப்படிப்பட்ட கைப்பேசி கிடைக்கவில்லை. ஆனால் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் நீங்கள் உங்களோடு அழைத்துச்செல்ல விரும்பினால், நீங்கள் இந்தக் கைபேசிபோல் ஆகவேண்டும். நீங்கள் தனித்து நடக்க விரும்பினால், அது மிகவும் எளிது. உங்களுடன் சிலரையும் அழைத்துச் செல்ல விரும்பினால், அப்போது அதற்கு கணிசமான அளவுக்கு முயற்சி தேவைப்படுகிறது. கௌதமரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது, “பாதையில் தனித்து நடப்பது மேலானதா அல்லது ஒரு துணையுடன் நடக்கலாமா?” “ஒரு முட்டாளுடன் நடப்பதைவிட தனித்து நடப்பது மேலானது” என்றார் அவர். ஏனென்றால், அவ்வளவு சக்தியையும், நேரத்தையும் நீங்கள் அதற்கான விலையாகத் தர வேண்டியிருக்கும். மேலும் ஒருவேளை அவர்கள் உங்களைவிட உறுதியான நிலையில் இருந்தால், நீங்கள் உங்கள் வழிக்கு அவர்களை இழுப்பதற்குப் பதிலாக, அவர்கள் தங்களது வழிக்கு உங்களை இழுத்துவிடுவார்கள். எப்படி வேண்டுமானாலும் நடக்கமுடியும்.
இதுதான் ஒரே வழி. கௌதமரைப் போல் நான் கூறமாட்டேன். நான் கூறுவதெல்லாம் இதுதான். ஆன்மீக செயல்முறையைப் பொறுத்தவரை நீங்கள் எப்படியும் தனியாகத்தான் இருக்கிறீர்கள். உங்களுடன் யாரும் கூட்டு கிடையாது. உடல் மற்றும் பொருள் தன்மை கொண்டதைத்தான் உங்களால் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நீங்கள் இந்த பூமிக்கு தனியாகத்தான் வந்தீர்கள், மீண்டும் இங்கிருந்து தனியாகத்தான் போகப்போகிறீர்கள். நீங்கள் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றாகப் பிறந்திருந்தாலும் கூட அப்போதும் நீங்கள் தனியாகத்தான் போகப் போகிறீர்கள். உயிர் என்று வரும்போது, எப்படியும் நீங்கள் தனியாகத்தான் பயணிக்கிறீர்கள். அதை உங்களது உடல்ரீதியான, மனரீதியான மற்றும் சமூகச் சூழல்களுடன் குழப்பிக்கொள்ளாதீர்கள். உள்நிலையின் அந்தப் பகுதியை நீங்கள் சிறப்பாகக் கையாளுங்கள். வாழ்வின் பொருள்தன்மையான பகுதியை, உங்களது திறமைக்கேற்றவாறு கையாளுங்கள். நீங்கள் எதில் திறனுடன் இருக்கிறீர்கள் என்பதையும் எதில் திறனற்று இருக்கிறீர்கள் என்பதையும் பார்க்க வேண்டும். உங்களது துணை உங்கள் வழிக்கு வந்தால், அது அற்புதமானது. வரவில்லையென்றாலும் பரவாயில்லை. அவர்களைக் குறைகூற வேண்டாம். அதற்காக, நீங்கள் அவர்கள் வழியில் போக வேண்டியதும் கிடையாது. வெவ்வேறு மக்களுக்கும், வெவ்வேறுவிதமான உந்துசக்தி தேவைப்படுகிறது. விவேகத்துடன் இருப்பவர்கள் அடுத்தவரைப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றனர். அவ்வளவு அறிவு இல்லையென்றால் வாழ்க்கையில் அடிபட்டுக் கற்றுக் கொள்கின்றனர். உங்கள் வாழ்க்கையின் ஆன்மீகப் பகுதியை நூறு சதவிகிதம் சரியாகக் கையாள்வதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் பொருள்ரீதியான பகுதி ஒருபோதும் நூறு சதவிகிதம் சரியாக இருக்காது, அப்படி ஒருக்காலும் நிகழமுடியாது. மிகச் சரியான குடும்பம் என்று ஒரு குடும்பத்தையாவது சொல்ல முடியுமா? ஆகச் சிறந்த வியாபாரம் என்று ஏதாவது ஒரு வியாபாரத்தையாவது சொல்லமுடியுமா? அப்படி ஒன்று இல்லவே இல்லை, அதைத் தேடாதீர்கள். அப்படிப்பட்டவைகளைத் தேடினால் உங்கள் வாழ்க்கை வீணாகிவிடும். அதுபோன்ற வாழ்க்கை கற்பனையில்தான் நடக்கும். நீங்கள் எந்த அளவுக்குத் திறமையுடன் கையாள முடியுமோ, அந்த அளவுக்கே எவையும் உங்களுக்கு நிகழ்கின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X