சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

பணம் வளர்ப்பா? குழந்தை வளர்ப்பா..?

Added : அக் 27, 2017
Advertisement
பணம் வளர்ப்பா? குழந்தை வளர்ப்பா..?

கேள்வி: எனக்கு ஒரே மகன், 16 வயது. அவனுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு என்று எப்போதுமே தாராளமாக பாக்கெட் மணி தருவேன். ஆனால் கையில் பணம் புரள்வதால், சில தீய பழக்கங்களுக்கு அவன் அடிமையாவதாகத் தெரிகிறது. அவனைக் கூப்பிட்டுக் கண்டிக்கவா? அல்லது எதுவும் சொல்லாமல், பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டால், அவன் திருந்திவிடுவானா?

சத்குரு: “படிக்கும் வயதில் இருக்கும் மகனுக்குப் புத்தகங்கள் போன்றவை வாங்குவதற்குத் தேவையான அளவு கையில் பணம் இருந்தால் போதும் அல்லவா? அளவுக்கு அதிகமாக எதற்காகப் பணம் தருகிறீர்கள்? பணம் இல்லாத மற்ற நண்பர்களுக்கு மத்தியில் அவன் செல்வந்தக் குடும்பத்திலிருந்து வருபவன் என்று காட்டிக்கொண்டால், உங்களுக்குப் பெருமை என்றா? அல்லது பணம் கொடுத்தால், அவன் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துவான் என்றா? அல்லது அவனோடு செலவு செய்ய உங்களுக்கு நேரம் இல்லை என்பதால் பணத்தைக் கொடுத்து கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

சிறு வயதில்தான் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் மற்றவர்களுடன் சகஜமாகப் பழகமுடியும். வளர வளர, ஒவ்வொரு மனிதனும் தனக்கான கூடு ஒன்றைக் கட்டிக்கொண்டு மற்றவர்களிடம் இருந்து பெருமளவு விலகிப் போய்விடுகிறான். உங்கள் மகன் மிக வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கலாம். சரியாகப் படிக்காவிட்டாலும், ஒரே வாரிசாக உங்களுக்குப் பின் சமூகத்தில் அவன் பணக்காரனாக வாழ முடியலாம். ஆனால் கற்கும் காலத்திலாவது மனதில் ஏற்றத்தாழ்வு இல்லாமல், மற்றவர்களுக்குச் சமமாக வாழட்டும். அவனிடம் நிறைய பணம் கொடுத்தீர்களே, 'உன் நண்பர்களில் யாருக்காவது புத்தகம் வாங்க முடியாதிருந்தால், வாங்கிக்கொடு' என்று சொன்னீர்களா? அல்லது, 'பணம் கட்ட முடியாத ஏழை மாணவருக்கு உதவி செய்' என்று சொன்னீர்களா? அப்படி எதுவும் வழிகாட்டாமல், பணத்தை மட்டும் கொட்டிக் கொடுத்தது நீங்கள் செய்த மாபெரும் தவறு. பொதுவாகப் பணம் வந்து சேர்ந்துவிட்டால், யாரோடும் கூடி வாழமுடிவது இல்லை. மற்றவர்களுடன் அனுசரித்துப் போக முடிவதில்லை. தனக்கெனத் தனித்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற முனைப்பில், மற்றவர்கள் போல் இயல்பாக வாழ முடிவதில்லை. பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் மகன் வேறு என்ன செய்வான் என்று எதிர்பார்த்தீர்கள்? ஆசைப்பட்டதை வாங்கிச் சாப்பிடுவான். அதற்குமேலும் பணம் புரண்டால், மதுக்கடைக்குப் போவான். அப்படியும் பணம் மிச்சம் இருந்தால், அது போகக்கூடாத இடத்திற்கெல்லாம் போகத் தூண்டும். பணம் இருந்தால், அது உங்கள் வாழும் திறனை உயர்த்த வேண்டும். ஆனால் அதற்கு நேரெதிராக அல்லவா நடக்கிறது? பணக்காரர்களில் பலர் தவறான உணவுப் பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். உடல் பருத்து ஆரோக்கியம் இழக்கிறார்கள். உடல் உறுப்புகளை முறையாகப் பயன்படுத்தாமல், உபயோகம் அற்றவர்களாகி விடுகிறார்கள். பணம் அவர்களைப் பலவிதங்களில் முடமாக்கிவிடுகிறது. இந்தப் பூமியில் வாழும் திறமையே அவர்களுக்குக் குறைந்துபோகிறது.

மகனைச் சரியாக வழிநடத்த நேரம் செலவிட முடியாமல், பணத்தைக் கொடுத்து அதைச் சரிக்கட்டலாம் என்று நினைத்தீர்களா? பெற்றவர் அன்புக்கு பணம் ஒருபோதும் மாற்றீடு ஆகாது. ஒரு குழந்தை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தது. 'கடவுளே, திருக்குறளை எழுதியது பாரதியாராக இருக்கட்டும்'. இதைக் கேட்டு அதன் அம்மா பிரமித்தாள். 'என்ன பேத்தல் இது? திருக்குறளை எழுதியது பாரதியார் என்று எதற்காக மாற்ற வேண்டும்?' 'அப்படித்தான் பரீட்சையில் எழுதி இருக்கிறேன் அம்மா'. இப்படி எல்லாவற்றையும் கடவுள் வந்து திருத்தித் தருவார் என்று செயல்பட்டீர்களா? சரி, நடந்தது நடந்துவிட்டது. இப்போது என்ன பண்ணலாம்? சட்டெனப் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டால், அது வேறுவிதமாகத் திரும்பக்கூடும். வலியவனாக இருந்தால், அடித்துப் பிடுங்கப் பார்ப்பான். பலமற்றவனாக இருந்தால் திருடப் பார்ப்பான். பணத்தைக் குறைத்துக் கொடுத்தால், மலிவான சிகரெட்களையும் தரமற்ற மதுவையும் நாடிப் போவான். குழந்தை வளர்ப்பு என்பது பொருளாதாரக் கணக்குகளுக்குள் அடங்காது. பணத்தை விட்டெறிவதும், அதை நிறுத்திவிடுவதும் பயன் தராது. அதைவிடக் கூடுதலான ஈடுபாடு அவசியமாகிறது. பெற்றவராக உங்கள் மகனை அணுகாமல், அவன் உங்கள்மீது பூரண நம்பிக்கை வைக்கும் அளவு நட்பு காட்டுங்கள். அவனுடன் நீங்கள் இரண்டு அடி எடுத்துவைத்தால்தான், அவன் உங்களுடன் ஓரடியாவது எடுத்துவைப்பான். அவனுடன் நிறைய நேரம் செலவு செய்து அவனை உங்கள் பக்கம் திருப்புங்கள்.”

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X