காவல் தெய்வங்களை போற்றுவோம்| Dinamalar

காவல் தெய்வங்களை போற்றுவோம்

Added : நவ 03, 2017 | கருத்துகள் (1)
Share
காவல் தெய்வங்களை போற்றுவோம்

'வகுத்தான் வகுத்த வகை அல்லால் தேடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது'

வாழ்வின் எல்லையை வகுப்பவன் இறைவன். மண்ணின் எல்லையை பிரிப்பவன் மனிதன்.
மனிதன் அன்று முதல் இன்று வரை நிலத்தின் வரையறை அல்லது பகிர்வை தானே
உருவாக்கினான். எல்லையிலா உலகில் எல்லைகளை வகுத்த மனிதன், எல்லை தெய்வங்
களையும் வடிவமைத்தான். வெட்டவெளியில் இயற்கையுடன் இயைந்து, கூரையின்றி காண்பவர் மிரளும் வகையில் நிமிர்ந்து நிற்கும் எல்லை தெய்வங்களை உருவாக்கினான்.
அத்தெய்வம் தீயவற்றை ஒதுக்கி, பாதுகாக்கும் காவலனாய், வழிகாட்டும் தெய்வமாய் துணை
நிற்கும் என்று நம்பிக்கையுடன் இன்றும் மக்கள் வழிபடுகிறார்கள். அனைத்து நிகழ்வுகளுக்கும் நீதியை நிலைநாட்டும் காவல் தெய்வமாய் காண்கின்றனர். போருக்கு புறப்படும் மன்னரும், வீரர்களும் தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் எல்லை தெய்வம் உறுதுணையாய் இருக்க
வேண்டும் என வேண்டி நம்பிக்கையுடன் வணங்கி செல்வர்.அந்நியரின் படையெடுப்புக்கு பிறகு எல்லைகளை இழந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர்களே எல்லை தெய்வங்களாக மாறினார்கள்.

'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்: என்று முடியும் எங்கள் அடிமையின் மோகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரை கண்ணீராற் காத்தோம். கருகத் திருவுளமோ மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும், நுாலோர்கள் செக்கடியில் நோவதுவுங்
காண்கிலையோ' என சுதந்திர இந்தியாவின் எல்லையைக் காண நெஞ்சில் உரத்துடன், யாவர்
களுக்கும் அஞ்சாத வீரத்தோடு, வேகத்தோடு, விவேகத்தோடு, தேசப்பற்றோடு, பாரதியார்
பாடினார்.அந்நியரின் ஆட்சியின் போது எல்லையை மீட்க எண்ணற்ற சுதந்திர வீரர்கள் போராடினர். அச்சமயத்தில் வ.உ.சிதம்பரம் வாங்கிய சுதேசி கப்பலை, ஆங்கிலேயர்கள் விலைக்கு கேட்ட போது, கப்பல் நடுக்கடலில் துருப்பிடித்து அழிந்தாலும் கொடுக்க முடியாது என்று மறுத்த செக்கிழுத்த செம்மலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட கனலை உருவாக்கினார் என்ற காரணத்திற்காக, சிறையில் அடைக்கப்பட்ட சுப்பிர மணிய சிவா உடம்பு எல்லாம் அழுகி, தொழுநோயாளியாக உருமாறி வெளியில் வந்தார். எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் தம் சொந்த மண்ணையும், மனிதர்களையும் மீண்டும் காண முடியாதபடி நாடு கடத்தப்பட்டனர். தாய் மண்ணுக்காக உயிர் ஈன்ற சுதந்திர வீரர்களின் கண்ணீரும், செந்நீரும் தான் இந்தியா எனும் நம் தாய்நாட்டை உருவாக்கி அதற்கு எல்லையை வகுத்தது.

திறமைசாலி வீரர்கள் : கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின் கைகட்டி பிழைப்பாரோ? என்று துன்பத்தில் தோய்ந்த மகாகவியின் பாடல், சுதந்திரம் பெற்ற பின் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று களியாட்டமாக மாறுகிறது.
அன்று ஆனந்தமாய் பெற்றுத் தந்த சுதந்திரத்தை இன்று பேணி பாதுகாப்பது முப்படை வீரர்கள். சவாலும் உடைய இந்திய எல்லையை எளிதாக சமாளிப்பவர்கள். நம் ராணுவ வீரர்கள்.
நேபாளத்துடன், உத்தர்கண்ட், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், சிக்கிம்,
வங்கதேசத்தோடு மணிப்பூர், மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, மிசோரம்,
பூடானுடன் அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம்,
சிக்கிம், மியான்மருடன் நாகலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாசல பிரதேசம், சீனாவுடன் ஜம்மு, உத்தர்கண்ட், இமாச்சல பிரதேசம், அருணாசல பிரதேசம், காஷ்மீர்,
சிக்கிம் மற்றும் பாகிஸ்தானுடன் ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் என இந்தியா பல நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த எல்லை சவால் இந்தியாவிற்கு நிலப்பகுதியில் மட்டுமல்ல. கடல் பகுதியிலும் உள்ளது.இந்தியாவின் எல்லைப்பகுதி பாலைவனத்தாலும், மலையாலும், காடுகளாலும், கடலாலும், நதிகளாலும், சூழப்பட்டுள்ளமையால் வறட்சி, வெள்ளம் என முரண்பாடான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.எல்லைப்பகுதியில் பல இடங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கிடையாது. எல்லையில் சில பகுதிகள் கடுமையான தட்பவெப்ப நிலையும், நில அமைப்பும் உடையது. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே என மகாகவி பாரதி பாடிய கூற்றின்படி
சவாலையும், சாதகமாக்கி கொள்ளும் திறமைசாலிகள் இந்திய வீரர்கள்.உயரம் 21, 147 அடி , மைனஸ் 53 டிகிரி செல்சியஸ் குளிர், பனிப்புயல், நிறைந்த பகுதியே சியாச்சின். கால்களையே அழுக வைக்கும் குளிர்உடையது. மனிதர்களே நடமாட முடியாத அவ்விடத்தில் தாய் மண்ணை காக்க, கண் அயராது, விழித்திருந்து, காவல் காப்பது, நம் இந்திய வீரர்கள். காலணிகளையும் கடந்து வெம்மையை கடத்தும் மணல் புயல்களிலும் அதனால் வீசி எறியப்படும் மணல் குவியல்களிலும் கால் நோக நின்று காப்பவர்கள் நம் வீரர்கள். சூரிய ஒளியின் அடையாளமே தெரியாத அடர்ந்த காடுகளில், காட்டாற்று வெள்ளத்தோடு, உருண்டு வரும் பாறைகளோடு, மேடு, பள்ளங்களுடன், மிருகங்களுடன் ரத்தத்தை குடிக்கும் விஷப்பூச்சிகளோடு, அல்லும் பகலும் விழித்திருந்து நம்மை அமைதியாக உறங்க வைப்பது எல்லை வீரர்கள்.

செயலும், சவாலும்: ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது தோள்வரை ஓடும் தண்ணீரில் கனத்த உடைகளுடன் கையில் துப்பாக்கி ஏந்தி செல்லும் வீரர்களின் தன்னம்பிக்கையும், தாய்நாட்டின் பெருமையை காப்பாற்றும் பண்பும் நினைக்கும் போது, பெருமிதத்தில் கண்களை பனிக்கிறது. மேற்கு எல்லையில் கட்ச் பகுதியில் கடல் கழிவுகளால் உண்டான சேறும், சகதியும் நிறைந்த பகுதிகளில், மூழ்கி விடாமல் இருக்க, கயிற்றால், ஒருவரோடு ஒருவர் பிணைத்து கொண்டு நடந்து செல்வது மிகக் கடினமான செயலும் சவாலும் ஆகும். அப்பகுதியில் பாம்பு களும், பூச்சிகளும், வீரர்களின் மேல் ஊர்ந்து செல்லும். தகவல் தொடர்பே இல்லாது, தனித்து விடப்பட்ட பகுதிகளிலும், தாய் மண்ணின் வாசத்தையும், நேசத்தையும்
மனதில் ஏற்று நெஞ்சில் வீரமும் எவருக்கும் அஞ்சாத தன்மையும், கைகளில் உரமும், சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு திறம்பட இந்திய மண்ணை காக்கும் வீரர்களே நம் எல்லை தெய்வங்கள், சொந்த பந்தங்களை விட்டு, இந்திய மக்களை சொந்தமாக்கி கொண்ட வீரர்கள் தான் நாம் காணும் விழியெதிர் தெய்வங்கள்.எந்நேரமும், எப்படிப்பட்ட சூழலிலும், அவர்களது இன்ப, துன்பங்களை தள்ளி வைத்து விழிப்புடன் இருப்பதால் தான் நாம் அமைதியான சூழலில் வாழ்ந்து வருகிறோம்.

மனதில் உறுதி வேண்டும் : உடல் வலிமை வீரர்களுக்கு எவ்வளவு தேவையானதோ, அதைப் போன்று மனவலிமையும் மிக முக்கியம். எல்லையோரப் பகுதிகளில் சில இடங்களில் மனிதர்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள் என எதையும் காணாது, விண்ணையும், மண்ணையும் மட்டுமே பார்த்திருப்பார்கள். அச்சூழ்நிலையில் வெறுமையும், தனிமையும்
மட்டுமே மிஞ்சும். மன உறுதியோடு தாய்மண்ணுக்காக அனைத்தையும் துறந்து எல்லைக்
காவலாக இருக்கும் வீரர்களே நமக்கு காவல் தெய்வங்கள்.
போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் விளங்க
வைத்தேனே
என திருமந்திரம் இறைவனை போற்றுவது போல, மண்ணைக் காக்க, அனைத்தையும் மறந்து
இந்தியாவை மட்டுமே மனதில் சுமக்கும் வீரத்திருமகன்களை
போற்றுவோம்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்ற வானிலும் நனி சிறந்தனவே

-முனைவர் ச.சுடர்க்கொடி
காரைக்குடி.
94433 63865

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X