வாழப்பாடி:
பெலாப்பாடியில், கற்கால கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி அருகே,
பெலாப்பாடி மலையில், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வெங்கடேசன்
உள்ளிட்ட குழுவினர், களஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பழமையான ஈஸ்வரன்
கோவிலில், இரு நந்தி சிலைகள், ஒரு பிள்ளையார் சிலைகளுக்கு நடுவே, 100க்கும்
மேற்பட்ட கைக்கோடாரி வகையைச் சேர்ந்த, புதிய கற்கால கருவிகளை வைத்து,
மக்கள் வழிபட்டு வந்ததை கண்டறிந்தனர்.
இதுகுறித்து, அம்மையத்தினர் கூறியதாவது: பழங்காலத்தில், நாடோடியாக வாழ்ந்தவர்கள் வேட்டையாட, ஒழுங்கற்ற நிலையில் இருந்த கற்கருவிகளை தேய்த்து, வழவழப்பாக மெருகூட்டி பயன்படுத்திய காலமே புதிய கற்காலம் என்றும், அப்போது பயன்படுத்திய கருவிகளை, புதிய கற்கால கருவிகள் என, வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். வாழப்பாடி அருகே, அருநூற்றுமலை மற்றும் கல்வராயன் மலைப்பகுதிகளில், கி.மு., 2000 ஆண்டு வரை புதிய கற்காலம் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏராளமான கிராமங்களில், நீர்நிலைகளில் சிதறிக்கிடந்த பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய, புதிய கற்கால கருவிகளை சேகரித்து, கோவில்களில் வைத்து மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். பெலாப்பாடியில் கண்டுபிடிக்கப்பட்டது, புதிய கற்கால கருவியின் சிறு கைக்கோடாரி வகையைச் சேர்ந்தது. ஒருபுறம் கூராகவும், மறுபுறம் தட்டையாகவும் உள்ளது. கூர்முனை குத்தி கிழிக்கவும், தட்டை பகுதி வெட்டவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.