தர்மபுரி:
''முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி, பொங்கல் வரை நீடிக்காது,'' என,
தர்மபுரியில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், தினகரன் பேசினார்.
அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், தர்மபுரியில், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா மற்றும் அ.தி.மு.க., 46ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், தினகரன் பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின், பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. ஆனால், அவரையும், என்னையும் புறக்கணித்து விட்டு, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுகிறார். தனக்கு முதல்வர் பதவி இல்லை என்றவுடன், ஆட்சியை கலைக்க முயன்றதோடு, கட்சியும், சின்னமும் முடங்க காரணமாக இருந்தவர் பன்னீர்செல்வம். பழனிசாமியின் ஆட்சியை, மக்கள் தொடர விடப்போவதில்லை. பொங்கலுக்கு முன்னதாக, இந்த ஆட்சி வீட்டுக்கு செல்ல இருக்கிறது. துரோகம் வென்றதாக வரலாறு இல்லை. இந்த அரசு முடங்கிக் கிடக்கிறது. ஏரி, குளங்களை தூர் வருகிறோம் என கூறிவிட்டு, இவர்கள் கஜானாவை தூர்வாரிக் கொண்டிருக்கின்றனர். இதனால், சென்னை உட்பட பல மாவட்டங்கள் இன்று தண்ணீரில் மிதக்கிறது. எங்கள் மீது, பழனிசாமி அரசு பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகிறது. நான் வீட்டுக்கு சென்ற பின், தர்மபுரியிலும் என் மீதும், இங்குள்ள நிர்வாகிகள் மீதும் வழக்கு போடலாம். இரட்டை இலை சின்னம், விரைவில் நம்மிடம் வரப்போகிறது. ஆட்சி நம்மிடம் வந்த பின், அவர்கள் அரசியலில் இருக்க முடியாது. நீதிமன்ற படிகளில் தான் காத்திருக்க வேண்டும். இன்றைய அமைச்சர்கள், நடிகர் வடிவேலுவின் காமெடிகளை மிஞ்சும் அளவுக்கு, மேடைகளில் கோமாளித்தனங்களை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.